ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Monday, December 21, 2015

[ரஹீக் 027]- குழுக்கள்

குழுக்கள்

வரலாற்று ஆசிரியர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் இக்கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தன என குறிப்பிட்டுள்ளனர். எனினும், அவை அனைத்தையும் முழுவதுமாக இங்குக் குறிப்பிடுவது முடியாத காரியம். அதனை விரிவாகக் கூறுவதில் பெரிய பலன் ஏதுமில்லை என்பதால் அவற்றில் முக்கியமான குழுக்களின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம். பெரும்பாலான சமூகத்தார் மக்கா வெற்றிக்குப் பின்புதான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தனர். என்றாலும், மக்கா வெற்றிக்கு முன்பும் குழுக்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1) அப்துல் கைஸ் குழு

இக்குழுவினர் இரு பிரிவினராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளனர். ஒரு பிரிவினர் ஹிஜ்ரி 5 அல்லது அதற்கு முன்பு மதீனா வந்தனர். இவர்களில் முன்கித் இப்னு ஹய்யான் என்பவர் வியாபார நிமித்தமாக மதீனா வந்து போய் கொண்டிருந்தார். நபி (ஸல்) மக்காவிலிருந்த மதீனா ஹிஜ்ரா செய்த பின்பு வியாபார வேலையாக மதீனா வந்த முன்கித் நபி (ஸல்) வருகையை அறிந்து அவர்களிடம் சென்று இஸ்லாமைத் தழுவினார். பின்னர் தமது சமூகத்தாருக்காக நபி (ஸல்) தந்த கடிதத்தை எடுத்துச் சென்று தன் சமூகத்தாரிடம் கொடுக்கவே, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். பதிமூன்று அல்லது பதிநான்கு பேர் கொண்ட ஒரு குழுவுடன் மகத்துவமிக்க மாதங்களின் ஒரு மாதத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்பொழுது ஈமான் மற்றும் குடிபானங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு சென்றனர். இக்கூட்டத்தில் வயது முதிர்ந்த 'அஷஜ் அஸ்ரீ' என்பவரைப் பார்த்து ''உங்களிடம் இரண்டு பண்புகள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ் விரும்புகின்றான். 1) சகிப்புத் தன்மை, 2) நிதானம்'' என நபி (ஸல்) கூறினார்கள்.

இரண்டாவது குழு இக்காலக் கட்டத்தில் வந்தது. இதில் நாற்பது பேர்கள் இருந்தனர். ஜாரூத் இப்னு அலா அப்தீ என்ற கிறிஸ்தவரும் இருந்தார். இவரும் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாகத் திகழ்ந்தார். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

2) தவ்ஸ் குழுவினர்

இவர்கள் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மதீனா வந்த நேரத்தில் நபி (ஸல்) கைபர் போருக்குச் சென்றிருந்தார்கள். நபி (ஸல்) மக்காவில் இருந்த போதே தவ்ஸ் சமூகத்தைச் சார்ந்த 'துஃபைல் இப்னு அம்ர்' என்பவர் இஸ்லாமை ஏற்ற சம்பவத்தை முன்னரே கூறியிருக்கிறோம். இவர் மக்காவிலிருந்து சென்றபோது தனது சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைத்தார். அவர்கள் ஏற்கத் தயங்கினர். இதனால் கோபத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்த இவர் ''அல்லாஹ்வின் தூதரே! தவ்ஸ் சமூகத்தாரைச் சபித்து விடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) ''அல்லாஹ்வே! தவ்ஸ் சமூகத்தாருக்கு நேர்வழி காட்டு'' என துஆச் செய்தார்கள். தனது சமூகத்தாரிடம் திரும்பி வந்து மீண்டும் இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூறவே அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் அவர் எழுபது, எண்பது குடும்பங்களை அழைத்துக் கொண்டு மதீனா வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து கைபர் சென்றிருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க இவரும் கைபர் சென்று விட்டார்.

3) ஃபர்வா இப்னு அம்ருடைய தூதர்

ஃபர்வா' மிகச் சிறந்த போர் தளபதியாக விளங்கினார். அவர் ரோம் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த அரபியர்களுக்கு ஆளுநராக இருந்தார். அவரது முக்கியத் தலம் 'மஆன்' மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஷாம் நாட்டுப் பகுதிகளாகும். ஹிஜ்ரி 8, முஃதா போரில் முஸ்லிம்கள் ரோமர்களை எதிர்த்துத் துணிவுடன் போராடினர். முஸ்லிம்களின் இந்த வீர தீரத்தையும் மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமடைந்து இஸ்லாமால் அவர் கவரப்பட்டார். தான் முஸ்லிமானதைத் தெரிவிப்பதற்காக ஒரு தூதரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒரு கோவேறு கழுதையையும் அனுப்பி வைத்தார். இவர் முஸ்லிமான செய்தி கேட்ட ரோமர்கள் அவரைச் சிறையிலடைத்து துன்புறுத்தி, ''மார்க்கமா? அல்லது மரணமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்!'' என்றனர். அவரோ மார்க்கத்தை தேர்ந்தெடுத்தார். ஃபலஸ்தீனில் 'அஃபரா' என்ற கிணற்றுக்கருகே ரோமர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து தலையைக் கொய்தனர். (ஜாதுல் மஆது)
4) சுதா குழுவினர்

ஹிஜ்ரி 8ல் ஜிஃரானாவிலிருந்து (ஹுனைன் போர் முடிந்து) நபி (ஸல்) மதீனா திரும்பியபின் இக்குழுவினர் வந்தனர். இதன் விவரமாவது: யமன் தேசத்தில் சுதா கிளையினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லுமாறு நபி (ஸல்) நானூறு வீரர்களை அனுப்பினார்கள். இவர்கள் 'கனாத்' பள்ளத்தாக்குடைய முற்பகுதியில் தங்கினர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த சுதா சமூகத்தைச் சார்ந்த ஜியாத் இப்னு ஹாரிஸ் என்பவர், நபி (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்குப் பின்னால் இருக்கும் எனது சமூகத்தார் சார்பாக வந்துள்ளேன். நான் எம் சமூகத்தாருக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தங்களுடைய படையைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

நபி (ஸல்) தங்களது படையை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஜியாத் தமது சமூகத்தாரிடம் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு ஆர்வமூட்டினார். அவர்களில் பதினைந்து நபர்கள் தயாராகி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க மதீனா வந்தனர். நபி (ஸல்) அம்மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூற, அவர்கள் முஸ்லிம்களாயினர். அதன் பின் தமது சமூகத்தாரிடம் வந்து இஸ்லாமிய அழைப்புப் பணி மேற்கொண்டதால் அம்மக்களில் பலர் முஸ்லிம்களாயினர். நபி (ஸல்) இறுதி ஹஜ்ஜுக்காக வந்தபோது அவர்களில் நூறு பேர்கள் நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டனர்.

5) கஅப் இப்னு ஜுஹைர் வருகை

அரபியரின் பிரபலமான கவிக் குடும்பத்தில் பிறந்தவரான இவரும் புகழ்பெற்ற கவிஞராகத் திகழ்ந்தார். இவர் நபி (ஸல்) அவர்களைத் தன் கவிகள் மூலம் காயப்படுத்திக் கொண்டிருந்தார். நபி (ஸல்) ஹிஜ்ரி 8ல், தாயிஃப் போர் முடிந்து மதீனா திரும்பியபின் கஅப் இப்னு ஜுஹைருக்கு அவரது சகோதரர் ஃபுஜைர் இப்னு ஜுஹைர் கடிதம் ஒன்று எழுதினார். அதில், ''தன்னை இகழ்ந்து கவிபாடி நோவினை தந்த பலரை மக்காவில் நபி (ஸல்) கொன்று விட்டார்கள். நபியவர்களை இகழ்ந்து வந்த குறைஷிகளில் பலர், தப்பித்தோம்! பிழைத்தோம்! என பல இடங்களுக்கு வெருண்டோடினர். உனக்கு உயிர் மேல் ஆசையிருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உடனே செல்! மன்னிப்புக் கோரி வருபவரை நபி (ஸல்) கொல்ல மாட்டார்கள். அவ்வாறில்லையெனில் நீ பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடு!'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கஅப் பதில் எழுத, அதற்கு அவரது சகோதரர் பதில் தர இவ்வாறு கடிதத் தொடர்பு இருந்து கொண்டிருந்தது. கஅப் தனது சகோதரன் கடிதங்களால் நெருக்கடியை உணர்ந்தார். அவருக்கு உயிர் மீது பயம் வந்தது. உடனே மதீனா சென்று ஜுஹைனா கிளையிலுள்ள ஒருவரிடம் விருந்தாளியாகத் தங்கினார். அவருடன் சென்று ஸுப்ஹ் தொழுகையை நிறைவேற்றிய பின் அவரது ஆலோசனைக்கிணங்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றமர்ந்து தனது கரத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்துடன் வைத்துப் பேசினார்.

நபி (ஸல்) அவர்களுக்கு இவர் யார் என்பது தெரியாது. ''அல்லாஹ்வின் தூதரே! கஅப் இப்னு ஜுபைர் உங்களிடம் பாதுகாப்புத் தேடி வந்துள்ளார். அவர் தனது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புக்கோரி இஸ்லாமையும் ஏற்றுக் கொண்டு விட்டார். நான் அவரை அழைத்து வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?'' என்று கேட்டார். நபி (ஸல்) ''ஆம்! தாராளமாக ஏற்றுக் கொள்வேன்'' என்றார்கள் ''அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அந்த கஅப்'' என்று கூறினார். கூறியதுதான் தாமதம். அவர்மீது வேகமாகப் பாய்ந்து அவரைப் பிடித்துக் கொண்டு ''அல்லாஹ்வின் தூதரே! ஆணையிடுங்கள். இவன் தலையைக் கொய்து விடுகிறேன்'' என்று அன்சாரிகளில் ஒருவர் கூறினார். ஆனால் நபி (ஸல்), ''நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம். அவரை விட்டு விடுங்கள். அவர் திருந்தி, தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு வந்துள்ளார்'' எனக் கூறினார்கள். அதனால் மனங்குளிர்ந்த கஅப் நபி (ஸல்) அவர்களுக்கு முன் சில கவிதைகளைப் படித்தார்.

சுஆது பிரிந்து விட்டாள்.

இன்னும் என்னுள்ளம் நிலை குலைந்து

சுய நினைவிழந்து கைதியாய் அவள் பின் அலைகிறது.

இதைக் காப்பாற்ற முடியவில்லையே!

என்று ஆரம்பித்து,

அல்லாஹ்வின் தூதர் என்னை எச்சரித்தார்கள் என

எனக்குத் தகவல் வந்தது. அல்லாஹ்வின் தூதரிடம்

மன்னிப்பை நான் விரும்புகிறேன்.

சற்று நில்லுங்கள்! நல்லுரைகளும் விளக்கங்களும்

நிறைந்த குர்ஆன் எனும் வெகுமதியை வழங்கியவன்

உங்களுக்கு நல்வழி காட்டியுள்ளான்.

கோள் மூட்டுவோர் பேச்சால் என்னை நீங்கள்

தண்டித்து விடாதீர்கள். என்னைப் பற்றி பலவாறு

பேச்சுகள் இருப்பினும் நான் எக்குற்றமும் புரியவில்லை.

நான் இருக்கும் இவ்விடத்தில் யானை இருந்து

நான் பார்ப்பதையும் கேட்பதையும் அது கேட்டால் நடுநடுங்கிவிடும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் அதற்கு அனுமதி அருளினாலேயன்றி...

பழிவாங்கும் ஆற்றலுள்ளவரின் கையில்

என் கையை வைத்து விட்டேன்.

இனி நான் அவரிடம் சண்டையிடேன்.

அவர் கூற்றை முழுமையாக ஏற்பேன்

'உன்னைப் பற்றி பல தகவல்கள் வந்துள்ளன,

நீ விசாரணைக்குரியவன்' எனக் கூறக் கேட்டேன்.

பல சிங்கக் காடுகளை அடுத்துள்ள 'அஸ்ஸர்'

என்ற பள்ளத்தாக்கின் அடர்ந்த காடுகளில்

குகை கொண்ட சிங்கத்தை அஞ்சுவதை விட

நான் நபியுடன் பேசும்போது அவரை அஞ்சுகிறேன்.

நிச்சயம் நபி ஒளிமயமானவரே!

அவரால் நாமும் ஒளி பெறலாம்.

அல்லாஹ்வின் வாட்களிலே

உருவப்பட்ட இந்திய வாட்களைப் போல் நபி மிளிர்கிறார்கள்.

தனது கவியில் முஹாஜிர்களையும் கஅப் புகழ்ந்தார். ஏனெனில், குறைஷிகளில் அனைவரும் கஅபைப் பற்றி நல்லதையே கூறி வந்தனர். தன்னைக் கொல்ல வந்த அன்சாரிகளைப் பற்றி சற்று குத்தலாகக் கவி படித்தார். அன்சாரிகளைப் பற்றி அவர் கூறியதாவது:

ஈட்டிகள் காவலுடன் அழகு.

ஆண் ஒட்டகங்கள் நடப்பது போல்

(குறைஷிகள்) நடைபோடுகின்றனர்.

கருங்குட்டையர்களோ பயந்து விரண்டோடினர்.

(இது மதீனாவாசிகளைக் குறித்து கேலி செய்தது.)

ஆனால், இஸ்லாமைத் தழுவி மார்க்கத்தில் உறுதியானவுடன் அன்சாரிகளின் சிறப்புகளையும் உயர்வுகளையும் தெரிந்து கொண்டு, தான் செய்த தவறுக்காக வருந்தினார். தான் அவர்களை இகழ்ந்து படித்ததை நிவர்த்தி செய்வதற்காக அவர்களைப் புகழ்ந்து கவிதை கூறினார்.

''சிறந்த வாழ்க்கையை விரும்புவோர் என்றும்

நல்லோர் அன்சாரிகளுடன் சேரட்டும்!

அவர்கள் வாழையடி வாழையாக

நற்பண்புகளுக்கு வாரிசுகள்

சான்றோர்கள் யாரெனில்

சான்றோர்களின் மைந்தர்களே!''

6) உத்ரா குழுவினர்

இச்சமூகத்தைச் சார்ந்த 12 பேர்கள் ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். ஹம்ஜா இப்னு நுஃமான் என்பவரும் அவர்களில் ஒருவர். தாங்கள் யார் என அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ''நாங்கள் உத்ரா சமூகத்தவர். குஸையின் தாய்வழிச் சகோதரர்கள். குஜாஆ மற்றும் பக்கர் வமிசத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதில் குஸைக்கு உதவி செய்தவர்கள். எங்களுக்கு உங்களுடன் உறவும் ரத்தபந்தமும் இருக்கின்றன'' என பதில் கூறினர். மிக்க கண்ணியத்துடன் அவர்களை நபி (ஸல்) அவர்கள் வரவேற்று அதிவிரைவில் ஷாம் நாடு வெற்றி கொள்ளப்படும் என்ற நற்செய்தியையும், குறிகேட்கக் கூடாது, அறியாமைக்கால வழக்கப்படி அறுத்துப் பலியிடக் கூடாது என்றும் கூறினார்கள். அவர்களும் இஸ்லாமை மனமுவந்து ஏற்று பல நாட்கள் தங்கியிருந்து பின்னர் தங்களது ஊர்களுக்குத் திரும்பினர்.

7) பலிய் குழுவினர்

இக்குழுவினர் ஹிஜ்ரி 9ல், ரபீஉல் அவ்வல் மாதம் மதீனா வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். இவர்களின் தலைவர் அபூ ழுபைப் நபி (ஸல்) அவர்களிடம் ''விருந்தோம்பல் செய்வதற்கு (நன்மை) நற்கூலி கிடைக்குமா?'' என வினவினார். ''ஆம்! செல்வந்தர்களாயினும் அல்லது ஏழைகளாயினும் சரியே! நீங்கள் புரியும் ஒவ்வொரு நற்காரியங்களும் நன்மை தரக் கூடியதே'' என பதிலளித்தார்கள். ''விருந்தோம்பலின் கால அளவு எவ்வளவு?'' என அபூழுபைப் கேட்ட போது ''மூன்று நாட்கள்'' என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் ''வழிதவறி வந்துவிட்ட ஆடுகளைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார். ''அது உமக்கு அல்லது உனது சகோதரருக்கு அல்லது ஓநாய்க்கு'' என பதில் கூறினார்கள். வழிதவறிய ஒட்டகங்களைப் பற்றி கேட்க ''அதைப் பற்றி உனக்கென்ன கவலை. அது அவருடைய எஜமானனைத் தேடிச் சென்று விடும் அல்லது அதன் சொந்தக்காரர் அதனை தேடிக் கொள்வார்'' என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.

8) ஸகீஃப் குழுவினர்

இவர்கள் ஹிஜ்ரி 9, ரமழான் மாதம் வந்தனர். ஹிஜ்ரி 8ல், துல்கஅதா மாதம் நபி (ஸல்) தாயிஃப் போர் முடிந்து மதீனா திரும்பும் வழியில் இவர்களின் தலைவர் உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். தான் தலைவர் என்பதாலும், தனது பேச்சை மக்கள் கேட்டு நடக்கின்றனர் என்பதாலும், தன்னை மக்கள் தங்கள் வீட்டு கன்னிப் பெண்களை விட அதிகம் நேசிக்கிறார்கள் என்பதாலும், தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவர்களை அழைத்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றெண்ணி தனது சமூகத்தாரை இஸ்லாமிற்கு அழைத்தார். ஆனால், அம்மக்களோ அவரின் எண்ணத்திற்கு நேர் மாற்றமாக நடந்தனர். நாலாத் திசைகளிலிருந்தும் அவரை அம்பெறிந்துக் கொன்றே விட்டனர்.

சில மாதங்கள் கழிந்து அவர்கள் ஒன்றுகூடி ''நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான அரபிகள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர். அவர்களை எதிர்க்கும் ஆற்றல் நம்மிடமில்லை. நாம் என்ன செய்யலாம்?'' என்று ஆலோசனை செய்தனர். இறுதியில், அப்து யாலீல் இப்னு அம்ரு என்பவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்ப முடிவு செய்து, அது தொடர்பாக அவரிடம் பேசினர்.

இஸ்லாமைக் கற்று, அதனை ஏற்றுத், திரும்ப மக்களிடம் வந்து கூறும்போது உர்வாவுக்கு ஏற்பட்ட கதி நமக்கும் ஏற்படுமோ என அஞ்சி அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். என்னுடன் உங்களது ஆட்கள் சிலரையும் அனுப்பி வைத்தால் சென்று வருகிறேன் என்ற ஒரு மாற்று ஆலோசனையை முன் வைத்தார். அவர்கள் அதனை ஏற்று மாலிக் குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும், தங்களது நட்புக் கோத்திரங்களிலிருந்து இருவரையும் அவருடன் அனுப்ப ஒப்புக் கொண்டனர். ஆக மொத்தம், ஆறு நபர்கள் மதீனா நோக்கி பயணமானார்கள்.

அவர்களில் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் ஸஃகபீ என்பவரும் இருந்தார். அவர்தான் அவர்களில் மிகச் சிறிய வயதுடையவர். அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளியின் ஓரத்தில் அவர்கள் தங்குவதற்காகக் கூடாரம் ஒன்றை நபி (ஸல்) அமைத்துத் தந்தார்கள். குர்ஆன் ஓதுவதை கேட்கவும், மக்கள் தொழுவதைப் பார்த்து கற்றுக் கொள்ளவும் அவர்களை பள்ளியிலேயே தங்க வைத்தார்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களிடமும் அவ்வப்போது வந்து போய் கொண்டிருந்தார்கள். இக்குழுத் தலைவர், நபியவர்களிடம் ''உங்களுக்கும் எங்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தர வேண்டும். அதில், விபச்சாரம், மது, வட்டி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும். எங்களின் பெரிய சிலையான லாத்தை உடைக்கக் கூடாது. தொழுகையை எங்களுக்கு விதிவிலக்கு ஆக்க வேண்டும். எங்களின் மற்ற சிலைகளை நாங்கள் உடைக்க மாட்டோம். இந்த அம்சங்கள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும்'' என்று கூறினார்.

இவர்களின் எந்த ஒப்பந்தத்தையும் நபி (ஸல்) ஏற்க மறுத்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் சபையை விட்டு அகன்று தனியாக ஆலோசனை செய்தனர். பணிந்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லாததால், நபியவர்களிடம் வந்து லாத் சிலையை நாங்கள் உடைக்க மாட்டோம். நீங்கள்தான் உடைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் அதனை ஒத்துக் கொண்டார்கள். இந்த அடிப்படையில் அவர்களுக்கு நபி (ஸல்) ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள்.

அவர்களுக்கு வயதில் குறைந்த உஸ்மான் இப்னு அபுல் ஆஸையே தலைவராக நியமித்தார்கள். ஏனெனில், அவர் மார்க்கத்தை அறிவதிலும் குர்ஆனை ஓதுவதிலும் மிக்க ஆர்வத்துடன் விளங்கினார். அந்தக் குழுவினர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வரும்போது தங்களது பொருட்களை பாதுகாப்பதற்கு உஸ்மானை கூடாரத்தில் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் குழுவினர் ஓய்வெடுக்கக் கூடாரத்திற்கு வந்த பின்பு, இவர் நபியவர்களிடம் சென்று குர்ஆனையும் மார்க்கத்தையும் கற்றுக் கொள்வார்.

அந்நேரம் நபி (ஸல்) அவர்களும் உறங்கிக் கொண்டிருந்தால் அபூபக்ரிடம் சென்று கற்பார். (அவர் தமது கூட்டத்தினருக்கு மிகுந்த நன்மைக்குரியவராக விளங்கினார். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் மக்களில் பலர் இஸ்லாமை விட்டு வெளியேறியபோது ஸகீஃப் வமிசத்தவரும் இஸ்லாமை விட்டு வெளியேறத் துடித்தனர். அப்போது ''ஸகீஃப் வமிசத்தாரே! மக்களில் நீங்கள் இறுதியாகவே இஸ்லாமைத் தழுவினீர்கள். அதனை விட்டு முதலாவதாக நீங்கள் விலகி விடாதீர்!'' என்று எச்சரித்தார். அவரின் இந்த அறிவுரையை ஏற்று இஸ்லாமில் உறுதியாகி விட்டனர்.)

நாம் இப்போது வரலாற்றைப் பார்ப்போம்.

வந்தவர்கள் தாயிஃபுக்குத் திரும்பி தமது சமூகத்தாரைச் சந்தித்தனர். நடந்த நிகழ்வுகளை மறைத்து விட்டு நபி (ஸல்) உங்கள் மீது போர் தொடுக்க முனைகிறார்கள் என எச்சரித்து விட்டு அதற்காக தாங்கள் கவலை, கைசேதத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொண்டனர். மேலும், இஸ்லாமை ஏற்க வேண்டும் விபச்சாரம், மது, வட்டி மற்றும் அனைத்து தீமையான காரியங்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிடின் போரைத் தவிர வேறு கதி கிடையாது என்று நபி (ஸல்) கூறியதாக அக்குழுவினர் கூறினார்கள். இதனைக் கேட்ட ஸகீஃப் கிளையினருக்கும் சினம் தலைக்கேறியது. நாமும் போருக்குத் தயாராவோம் என்று கூறி இரண்டு மூன்று நாட்களாக போருக்கான ஆயத்தம் செய்தனர்.

இந்நிலையில் அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்களோ தூதுக் குழுவினரை அழைத்து ''நீங்கள் திரும்பவும் அவரிடம் (நபியிடம்) செல்லுங்கள். அவர் கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றனர். அக்குழுவினர் அப்போது உண்மை நிலையை விவரித்தனர். அதனைக் கேட்டு ஸகீஃப் கூட்டத்தார் மிக சந்தோஷமாக இஸ்லாமில் இணைந்தனர்.

லாத்தை உடைப்பதற்காக நபி (ஸல்) தங்களின் தோழர்கள் பலரைக் காலித் இப்னு வலீது (ரழி) தலைமையில் அனுப்பினார்கள். இக்குழுவில் இடம்பெற்ற முகீரா இப்னு ஷுஃபா (ரழி) ஒரு கோடரியை எடுத்துக் கொண்டு ''நான் இப்பொழுது ஸகீஃப் கிளையினரால் உங்களை சிரிப்பில் ஆழ்த்துகிறேன் பாருங்கள்'' என்று கூறி லாத் சிலை இருந்த பீடத்தை இடித்து விட்டுத் தானாக வேண்டுமென்றே கீழே வீழ்ந்தார். அதைக் கண்ட கூட்டத்தார் ''அல்லாஹ் முகீராவை நாசமாக்கி விட்டான். எங்களது (பெண் கடவுள்) இறைவி முகீராவைக் கொன்று விட்டது'' என்று துடியாய் துடித்தனர். அதனைக் கேட்ட முகீரா வெகுண்டெழுந்து ''அல்லாஹ் உங்களை நாசமாக்குவானாக! இது என்ன? கல்லும் மண்ணும் சேர்ந்த கலவைதானே?'' என்று எள்ளி நகையாடி லாத்தை உடைத்தெறிந்து அதன் மதில் மேல் ஏறினார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம்களும் பாய்ந்து ஏறி இடித்துத் தள்ளினர். பீடங்களைத் தோண்டி, அங்கிருந்த செல்வங்களை அள்ளிக் கொண்டு காலித் (ரழி) தலைமையில் முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தனர். இந்நிகழ்ச்சி ஸகீஃப் கிளையினருக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. இவ்வெற்றிக்காக நபி (ஸல்) அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்தார்கள். பின்னர் தோழர்கள் கொணர்ந்த கனீமா பொருட்களை அவர்களுக்கே பங்கு வைத்துக் கொடுத்தார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

9) யமன் நாட்டு அரசர்களின் கடிதங்கள்

நபி (ஸல்) தபூக் போரிலிருந்து மதீனா வந்த பின் யமன் நாட்டு ஹிம்யர் பகுதி அரசர்களின் கடிதம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது. அந்த அரசர்களின் பெயர்கள் வருமாறு:

1) அல்ஹாரிஸ் இப்னு அப்து குலால், 2) நுஅய்ம் இப்னு அப்து குலால், 3) நுஃமான், 4) கைலு தீருஅய்ன், 5) ஹம்தான், 6) முஆஃபிர்.

இவர்கள் மாலிக் இப்னு முர்ரா ரஹாவியை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி நாங்கள் இணைவைத்தலையும் இணைவைப்பவர்களையும் விட்டு விலகி இஸ்லாமை ஏற்றோம் என்று தெரிவித்தனர்.

நபி (ஸல்) அந்த அரசர்களின் இஸ்லாமிய வருகையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் முஸ்லிம்களின் சலுகைகள், அவர்களின் கடமைகள் முதலியவற்றை விவரித்தார்கள். ஒப்பந்தக்காரர்கள் ஜிஸ்யா வரியை முறையாக செலுத்தும் வரை அல்லாஹ் உடைய, அவனது தூதருடைய பாதுகாவல் உண்டு என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், முஆத் இப்னு ஜபல் (ரழி) தலைமையில் தம் தோழர்களை மார்க்கக் கல்விப் பணிக்காக அம்மக்களிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். மேலும், யமனின் மேற்புறத்தில் உள்ள 'அத்ன்' பகுதியிலுள்ள சுகூன், சகாஸிக் என்ற இரு ஊர்களுக்கு இடையிலுள்ள இடங்களுக்கும் பொறுப்பாளியாக்கினார்கள். முஆத் அவர்கள் நீதிபதியாகவும், தலைமை ராணுவ அதிகாரியாகவும், ஜகாத், ஜிஸ்யா ஆகியவற்றை வசூல் செய்யும் அதிகாரியாகவும், மக்களுக்குத் தொழுகை நடத்தும் இமாமாகவும் தலைசிறந்து விளங்கினார்கள்.

அபூமூஸா அஷ்அரியை யமனின் கீழ்புறத்தில் உள்ள ஜுபைத், மஃரப், ஜமா, ஸால் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாளியாக்கினார்கள். ''நீங்கள் இருவரும் எளிமையாக்குங்கள், கடினமாக்காதீர்கள், நற்செய்தி நவிலுங்கள், வெறுப்பூட்டாதீர்கள், இணக்கமாக இருங்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள்'' என நபி (ஸல்) அழகிய அறிவுரை கூறியனுப்பினார்கள். நபி (ஸல்) மரணிக்கும் வரை முஆத் (ரழி) யமனிலேயே தங்கிவிட்டார்கள். அபூமூஸா அஷ்அரி (ரழி) நபியவர்களுடன் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்டார்கள்.

10) ஹம்தான் குழுவினர்
நபி (ஸல்) தபூக் போரிலிருந்து திரும்பிய பின்பு இக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்கள் கேட்டதை நபி (ஸல்) அவர்கள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மாலிக் இப்னு நமத் (ரழி) என்பவரைத் தலைவராக்கினார்கள். மேலும், ஹம்தான் கிளையினரில் யாரெல்லாம் முஸ்லிமாவார்களோ அவர்களுக்கும் இவரையே பொறுப்பாளியாக்கினார்கள். ஹம்தான் கிளையில் முஸ்லிமாகாதவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதற்காக நபி (ஸல்) காலித் பின் வலீதை (ரழி) அனுப்பி வைத்தார்கள். அவருடைய ஆறு மாத உழைப்பில் ஒருவர் கூட முஸ்லிமாகவில்லை.

இதையறிந்த நபி (ஸல்) அலீ இப்னு அபூதாலிபை அப்பணிக்காக அனுப்பி, காலிதை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். மேலும், ஹம்தான் கிளையாருக்குப் படித்து காண்பிப்பதற்காக கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அலீ (ரழி) அக்கடிதத்தை அவர்கள் முன்னிலையில் படித்துக்காட்டியே இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அம்மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். இந்த நற்செய்தியை நபி (ஸல்) அவர்களுக்கு அலீ (ரழி) கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள். நபி (ஸல்) இச்செய்தியை செவியேற்று ஸஜ்தா செய்து, பிறகு தலையை உயர்த்தி, (ஸலாமுன் அலாஹம்தான்) ''ஹம்தான் கிளையினருக்கு ஈடேற்றம் உண்டாகுக!'' என இருமுறைக் வேண்டினார்கள்.

11) ஃபஜாரா குழுவினர்
நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 9ல் இவர்கள் வந்தனர். இக்குழுவில் பத்து பேர்கள் இடம் பெற்றிருந்தனர். அனைவரும் இஸ்லாமை ஏற்றே நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்கள் ''தங்கள் ஊர் வறுமையால் வாடுகிறது பஞ்சத்தால் நாங்கள் அவதிப்படுகிறோம்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்கள் மீது மனமிரங்கி மிம்பரில் ஏறி இரு கரங்களையும் ஏந்தி மழைக்காக துஆச் செய்தார்கள்: ''அல்லாஹ்வே! நீ படைத்த ஊர்களுக்கும், கால்நடைகளுக்கும் நீர் புகட்டுவாயாக! உன் கருணையை அவர்களுக்கு அருள்வாயாக! வாடிப் போயிருக்கும் நீ படைத்த ஊரை உயிர்பிப்பாயாக! அல்லாஹ்வே! எங்களைக் காப்பாற்றும் வளமிக்க, செழுமைமிக்க, விசாலமான, அடர்த்தியான, தாமதமின்றி, உடனடியான, இடையூறின்றி பலன்தரக்கூடிய மழையை எங்களுக்கு இறக்கியருள்வாயாக! அல்லாஹ்வே! அது கருணை பொழியும் மழையாக இருக்க வேண்டும் வேதனை தரக்கூடியதாக, தகர்க்கக் கூடியதாக, மூழ்கடிக்கக் கூடியதாக, அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வே! மழையை இறக்குவாயாக! எதிரிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!'' (ஜாதுல் மஆது)

12) நஜ்ரான் குழுவினர்

நஜ்ரான்' யமன் தேசத்துக்கருகே உள்ள நகரம். இது மக்காவிலிருந்து ஏழு நாட்கள் தொலைவில் உள்ளது. (ஃபத்ஹுல் பாரி)

இந்நகரத்திற்குக் கீழ் எழுபத்து மூன்று கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.

நஜ்ரானிலிருந்து ஹிஜ்ரி 9ல், அறுபது பேர்கள் கொண்ட குழு மதீனா வந்தது. இவர்களில் இருபத்து நான்கு பேர்கள் (உயர்மட்டத் தலைவர்கள்) முக்கியமானவர்கள். அவர்களில் மூவர் நஜ்ரான் மக்களுக்கு பிரதிநிதிகளாக இருந்தனர்.

1) அப்துல் மஸீஹ் - இவர் அம்மக்களின் ஆட்சியாளராகவும், தீர்ப்பளிப்பவராகவும் இருப்பவர். இவரை மக்கள் 'ஆகிப்' என அழைத்தனர்.

2) அய்ஹம் அல்லது ஷுரஹ்பீல் - இவர் அரசியல் மற்றும் கலாச்சார காரியங்களை நிறைவேற்றி வந்தார். இவரை மக்கள் 'ஸைம்த்' என அழைத்தனர்.

3) அபூஹாஸா இப்னு அல்கமா - இவர் மதரீதியான, ஆன்மீக ரீதியான காரியங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இவரை மக்கள் 'அஸ்கஃப்' என அழைத்தனர்.

இவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்நேரத்தில் நபி (ஸல்) குர்ஆனை ஓதிக் காண்பித்து இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், இம்மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஈஸா (அலை) பற்றி விசாரித்தார்கள். அன்றைய தினம் நபி (ஸல்) பதில் கூறாமல் அல்லாஹ்வின் வஹீயை எதிர்பார்த்து தாமதித்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பின்வரும் வசனத்தை இறக்கினான்.

(நபியே!) உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் இதைப் பற்றி தர்க்கித்தால் ''வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' என்று நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 3:61)

மறுநாள் காலை அம்மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அல்லாஹ் தனக்கு இறக்கிய வசனங்களின் வெளிச்சத்தில் ஈஸாவைப் பற்றித் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய தினம் நன்றாக யோசித்துக் கொள்ள அனுமதி வழங்கினார்கள். ஆனால், அம்மக்கள் ஈஸா (அலை) விஷயத்தில் நபி (ஸல்) கூறுவதை ஏற்க மறுத்து விட்டனர்.

மறுநாள் காலை நபியவர்களை சந்திக்க வந்த இவர்களை நபி (ஸல்) ''வாருங்கள் அசத்தியத்தில் இருப்பவரை அல்லாஹ் அழித்துவிட பிரார்த்திப்போம்'' என்று அழைத்தார்கள். நபி (ஸல்) ஒரு போர்வையில் ஹசன், ஹுசைன் (ரழி) இருவரையும் சேர்த்துக் கொண்டார்கள். ஃபாத்திமா (ரழி) நபி (ஸல்) அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் நடந்து வந்தார்கள். நபி (ஸல்) உறுதியாக இருப்பதைக் கண்ட அவர்கள் தனியே தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். அப்போது ஆகிப், சய்யிது இருவரும் ஒருவர் மற்றவரிடம் ''இவ்வாறு செய்யாதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உண்மையில் நபியாக இருந்து நாம் சாபத்திற்குச் சென்றால் ஒருக்காலும் நாம் வெற்றியடைய முடியாது. நமக்குப் பின் எவரும் மிஞ்சவும் மாட்டார். நமது இன மக்கள் ஒருவர் கூட இல்லாமல் அழிந்து விடுவார்கள்'' என்று கூறினார்.

இதற்குப் பின் அனைவரும் ஒன்றுகூடி, ''நபி (ஸல்) அவர்களை நடுவராக்கிக் கொண்டு அவர் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்வோம்'' என ஒருமித்துக் கூறினார். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''நீங்கள் கேட்பதை நாங்கள் தந்து விடுகிறோம். ஒவ்வோர் ஆண்டிலும் ரஜப் மாதம் ஆயிரம் ஆடைகளும், ஸஃபர் மாதம் ஆயிரம் ஆடைகளும் தந்து ஒவ்வொரு ஆடையுடன் ஓர் ஊக்கியா வெள்ளியையும் தந்து விடுகிறோம்'' என சமாதானம் பேசினார்கள். நபியவர்களும் அதனை ஒத்துக்கொண்டு அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பையும் நபியவர்களுடைய பாதுகாப்பையும் வழங்கினார்கள். அவர்களுடைய மத விஷயங்களில் முழு சுதந்திரம் வழங்கினார்கள். இதுகுறித்த ஒப்பந்தத்தையும் அவர்களுக்கு எழுதித் தந்தார்கள். அம்மக்கள் ஒப்பந்தப் பொருளை வழங்குவதற்காக நம்பிக்கைக்குரிய ஓர் ஆளை தங்களுடன் அனுப்பும்படி வேண்டினர். அதன்படி இச்சமுதாயத்தில் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் என சிறப்புப் பெயர் கொண்ட அபூ உபைதாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள்.

சில காலத்திற்குப் பின் அந்தச் சமூகத்தில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. ஸம்து, ஆகிப் (ரழி) இருவரும் நஜ்ரான் சென்ற பிறகு இஸ்லாமை ஏற்றனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். நபி (ஸல்) ஜகாத் மற்றும் ஜிஸ்யாவை வசூலிக்க நஜ்ரானுக்கு அலீயை அனுப்பி இருக்கின்றார்கள். ஜகாத் முஸ்லிம்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் நஜ்ரானில் இஸ்லாம் பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது. (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

13) பனூ ஹனீஃபா குழுவினர்

இக்கிளையைச் சார்ந்த பதினேழு நபர்கள் ஹிஜ்ரி 9ம் ஆண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்களில் பொய்யன் முஸைலமாவும் ஒருவன். இவனது முழுப்பெயர் முஸைலமா இப்னு ஸுமாமா இப்னு கபீர் இப்னு ஹபீப் இப்னு ஹாரிஸ் என்பதாகும். (ஃபத்ஹுல் பாரி)

இக்குழுவினர் அன்சாரி ஒருவர் வீட்டில் தங்கி, அங்கிருந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தனர். அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். ஆனால், முஸைலமா நபியை ஏற்று நம்பிக்கை கொண்டானா? இல்லையா? என்பதைப் பற்றி மட்டும் பலவிதமான கருத்துகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் கீழ்காணும் முடிவுக்கு வரலாம்:

இவனிடம் பதவி மோகமும் அகம்பாவமும் இருந்ததால், குழுவுடன் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திக்காமல் தனியாக சந்தித்தான். இவனைத் தங்களது நேசனாக மாற்ற நபி (ஸல்) சொல்லாலும் செயலாலும் அழகிய முறையில் நடந்து கொண்டார்கள். அது எவ்விதப் பலனையும் தராததால் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு நபி (ஸல்) ஒரு கனவு கண்டிருந்தார்கள். அதில் பூமியில் உள்ள பொக்கிஷங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, அதிலிருந்து தங்கக் காப்புகள் இரண்டு தங்களது கைக்குள் வருவதாக பார்த்தார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. மறைவில் இருந்து ''அவ்விரண்டையும் ஊதி விடுங்கள்'' என அறிவிக்கப்படவே நபி (ஸல்) ஊதிவிட்டார்கள். அது காணாமல் போய்விட்டது. தனக்குப் பின் இரண்டு பொய்யர்கள் வருவார்கள் என இக்கனவுக்கு விளக்கம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் முஸைலமா கண்ணியக்குறைவாக நடந்து கொண்டு, ''முஹம்மது தனக்குப் பின் அதிகாரத்தை எனக்கு வழங்கினால் அவரை ஏற்றுக் கொள்வேன்'' என்று கூறி வந்தான். நபி (ஸல்) கரத்தில் ஒரு பேரீத்த மர மட்டையுடன், ''அவன் இருந்த இடத்திற்குச் சென்றார்கள். ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் என்பவரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார். நபி (ஸல்) முஸைலமாவிடம் சிறிது நேரம் உரையாடினார்கள். அப்போது அவன் ''நீங்கள் விரும்பினால் இப்போது அதிகாரங்களை தங்களுக்கு விட்டுத் தருகிறோம். உங்களுக்குப் பிறகு எல்லா அதிகாரங்களையும் எங்களுக்கு நீங்கள் வழங்கிட வேண்டும்'' என்றான். ''சின்ன மட்டைத் துண்டைக் கூட நீ கேட்டால் நான் தரமாட்டேன். உன் விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை நீ மீறிவிட முடியாது. இதே நிலையில் நீ திரும்பினால் அல்லாஹ் உன்னைக் கொன்று விடுவான். எனக்குக் கனவில் காட்டப்பட்டது நிச்சயமாக நீதான் என்று சத்தியமாக எண்ணுகிறேன். இதோ! ஸாபித் என் சார்பாக உனக்கு பதில் தருவார்'' எனக் கூறிவிட்டு நபி (ஸல்) திரும்பி விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)

இறுதியாக, நபி (ஸல்) எதிர்பார்த்ததே நடந்தது. முஸைலமா யமாமா திரும்பிய பின் ''தன்னையும் நபி (ஸல்) தூதுத்துவத்தில் கூட்டாக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி தனது வாதங்களை அடுக்கு மொழிகளினாலும் வசனங்களினாலும் மக்கள் மத்தியில் பரப்பினான். தம் கூட்டத்தாருக்கு மது அருந்துவது, விபச்சாரம் புரிவது இரண்டையும் ஆகுமானதாக்கினான். இவ்வாறான நிலையில் முஹம்மதை நபியாகவும் ஏற்றிருந்தான். அவனது கூட்டத்தினர் அவனையே பின்பற்றினர். அவன் மக்களிடம் மிகப் பிரபலமானான். மக்கள் அவனை ''ரஹ்மானுல் யமாமா'' (யமாமாவின் இறைவன்) என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

நானும் உங்களுடன் அதிகாரத்தில் கூட்டாக இருக்கிறேன். அதிகாரம் எங்களுக்குப் பாதி, குறைஷிகளுக்குப் பாதி என்று நபி (ஸல்) அவர்களுக்குக் கடிதம் எழுதினான். அதற்கு ''நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தமானது அவனது அடியார்களில் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குகிறான். நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்குத்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் மறுப்புக் கடிதம் எழுதினார்கள். (ஜாதுல் மஆது)

இந்நிகழ்ச்சிக்குப்பின் நடந்ததை இப்னு மஸ்வூத் (ரழி) விவரிக்கிறார்கள்: இப்னு நவ்வாஹா, இப்னு உஸால் என்ற முஸைலமாவின் இரண்டு தூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். ''நான் அல்லாஹ்வின் தூதர் என்று உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிகிறீர்களா?'' என நபி (ஸல்) கேட்க, நாங்கள் ''முஸைலமாவையே அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறோம்'' என அவ்விருவரும் கூறினர். ''நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புகிறேன். தூதுவர்களை கொல்லும் வழக்கம் எனக்கு இருந்தால் உங்களிருவரையும் கொன்றிருப்பேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, மிஷ்காத்)

இவன் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு தன்னை நபியென்று வாதிட்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரழி) அவர்கள் இவனையும் இவனது தோழர்களையும் ஒழிப்பதற்காக யமாமா நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையில் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி (ரழி) இடம் பெற்றிருந்தார். அவர்தான் பொய்யன் முஸைலமாவைக் கொன்றொழித்தார்.

நபியென்று தன்னை வாதிட்ட மற்றொருவன் 'அஸ்வத் அனஸி'. இவனும் யமன் வாசியே! இவனைக் கொல்வதற்காக நபி (ஸல்) 'ஃபைரோஸ்' (ரழி) என்ற தனது தோழர் ஒருவரை அனுப்பினார்கள். அவனது தலையை அவர் கொய்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) மரணத்திற்கு ஒருநாள் முன்பு நடைபெற்றது. அல்லாஹ் இச்செய்தியை வஹி மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துத் தந்துவிட்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூபக்ர் (ரழி) கலீஃபாவான போது ஃபைரோஸ் (ரழி) மதீனா வந்தடைந்தார். (ஃபத்ஹுல் பாரி)

14) பனூ ஆமிர் இப்னு சஃசஆ குழுவினர்

இக்குழுவினரில் அல்லாஹ்வின் எதிரி ஆமிர் இப்னு துஃபைல் என்பவனும் லபீதின் தாய்வழிச் சகோதரன் அர்பத் இப்னு கைஸ், காலித் இப்னு ஜஅஃபர், ஜப்பார் இப்னு அஸ்லம் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் இக்கூட்டத்தின் தலைவர்களாகவும், அதே சமயம் விஷமிகளாகவும் இருந்தனர். இதிலுள்ள ஆமிர் என்பவன்தான் நபித்தோழர்களை மோசடி செய்து (பிஃர்) 'மஊனா' என்ற கிணற்றருகே கொலை செய்தவன்.

இக்குழுவினர் மதீனா வரும் வழியில் அவர்களில் ஆமிரும் அர்பதும் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டினர். இக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். ஆமிர் பேச்சுக் கொடுத்தான். அர்பத் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்குப் பின்புறமாகச் சென்றான். ஒரு சாண் அளவு அவன் வாளை உருவுவதற்குள் அல்லாஹ் அவனது கையை தடுத்து விட்டான். அவனால் அடுத்து வாளை உருவ முடியவில்லை. அல்லாஹ் தனது நபியவர்களை பாதுகாத்துக் கொண்டான்.

இவ்விருவரின் சதித்திட்டம் தெரிந்த நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் எதிராக துஆச் செய்தார்கள். இவ்விருவரும் செல்லும் வழியில் ஓர் இடியை அல்லாஹ் ஏவினான். அது அர்பதையும் அவனது ஒட்டகத்தையும் எரித்து நாசமாக்கியது. நண்பன் அர்பத் செத்தபின்பு ஆமிர், சலூலியாப் பெண்ணுடன் இரவு தங்கினான். அவனது கழுத்தில் ஒரு கொப்புளத்தை அல்லாஹ் ஏற்படுத்தினான் அதுவே அவனது மரணத்திற்குக் காரணமானது. ''ஒட்டகக் கொப்புளமா? சலூலியா வீட்டில் மரணமா?'' என ஓலமிட்டவனாக, ''வேண்டாம் வேண்டாம். என்னை இங்கிருந்து கிளப்புங்கள். எனது குதிரையைக் கொண்டு வாருங்கள்'' என்றான். மதீனாவிலிருந்து தனது ஊருக்கு குதிரையில் போய்க் கொண்டிருக்கும் போதே செத்து வீழ்ந்தான்.

இந்நிகழ்ச்சி பற்றி ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: ஆமிர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மூன்று விஷயங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். ''குடிசை வீடுகளில் உள்ளவர்கள் உங்களுக்கு, மாடி வீடுகளில் உள்ளவர்கள் எனக்கு. அதாவது, ஏழைகளை நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம், பணக்காரர்களை நான் ஆதிக்கம் செலுத்துவேன். அல்லது உங்களுக்குப் பின் நானே ஆளுநராக இருப்பேன். அல்லது ஆயிரம் ஆண் குதிரை, ஆயிரம் பெண் குதிரைகளில் கத்ஃபான் கிளையினரை அழைத்து வந்து உன்னிடம் போர் புரிவேன்.'' அவன் இவ்வாறு கூறிவிட்டு திரும்பும் வழியில் ஒரு பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த போது அம்மை நோயால் தாக்கப்பட்டு ''ஒட்டக கொப்பளமா? இன்னவள் வீட்டில் மரணமா?'' என்று அலறினான். பிறகு தனது குதிரையை வரவழைத்து அதில் ஏறி வாகனித்துச் செல்லும் போது செத்து மடிந்தான்.

15) துஜீப் குழுவினர்

இக்குழுவினர் ஜகாத் பொருட்களை தங்களிலுள்ள ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு மீதமானதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களிடம் தங்கி குர்ஆனையும் மார்க்கக் கல்வியையும் கற்றனர். மேலும், பல விஷயங்கள் குறித்து கேட்டனர். நபி (ஸல்) அவற்றை அவர்களுக்கு எழுதிக் கொடுக்கும்படி தோழர்களிடம் சொன்னார்கள். நீண்ட நாட்கள் தங்கியிருக்க முடியாமல் திரும்பிச் செல்ல அனுமதி கேட்டனர். அவர்கள் புறப்படும் போது அவர்களிலுள்ள அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை மன்னித்து என் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டும் என்று எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆக் கேட்குமாறு கோருவதற்காகவே நான் இங்கு வந்தேன்'' என்றார். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே அவருக்கு துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் தனது தூதரின் துஆவை அப்படியே ஏற்றுக் கொண்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் குழப்பங்கள் அதிகமாகி மக்கள் மார்க்கத்தை விட்டு மதம் மாறும் அபாயம் ஏற்பட்டபோது இவரும் இஸ்லாமில் உறுதியாக இருந்து, தமது கூட்டத்தாருக்கு இவர் வழங்கிய அறிவுரையால் அவர்களும் இஸ்லாமில் நிலையாக இருந்தனர். இவர் தனது கூட்டத்தாரிலேயே மிக அதிகமாக போதுமென்ற குணம் கொண்டிருந்தார். இக்குழுவினர் ஹஜ்ஜத்துல் விதாவில் (ஹிஜ்ரி பத்து) நபியவர்களின் இறுதி ஹஜ்ஜில் இரண்டாம் முறையாக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தனர்.

16) தைய் குழுவினர்

இக்குழுவில் ஜைது அல்கைல் என்பவரும் இருந்தார். இக்குழுவினர் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துக் கூற, அனைவரும் முஸ்லிமானார்கள். ''ஒருவரைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்படும். ஆனால், அவர் என்னை நேரடியாகக் காணும் போது பேசப்பட்டதை விட குறைவாகவே அவரைப் பார்த்திருக்கிறேன். எனினும், ஜைதைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்பட்டது. என்றாலும் ஜைதை நேரடியாகக் காணும் போது அவரைப் பற்றி கூறப்பட்டது எனக்குக் குறைவாகவே பட்டது. எனவே, ''ஜைது அல் கைர் - சிறந்த ஜைது என நான் பெயரிடுகிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இவ்வாறு பல குழுக்கள் மதீனா வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துச் சென்றுள்ளனர். வரலாற்றாசிரியர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த பல குழுக்களை குறிப்பிட்டுள்ளனர். அக்குழுக்களின் பெயர்களை மட்டும் இங்குக் குறிப்பிடுவோம்.

1) யமன் நாட்டு குழுக்கள், 2) அஜ்து, 3) பனூ ஸஅத் ஹுதைம், 4) பனூ ஆமிர், 5) பனூ அஸத், 6) பஹ்ரா, 7) கவ்லான், 8) முஹாப், 9) பனூ ஹாரிஸ் இப்னு கஅப், 10) காமித் 11) பனூல் முன்தஃபிக், 12) சலாமான், 13) பனூ அப்ஸ், 14) முஜைனா, 15) முராத், 16) ஜுபைத், 17) கிந்தா, 18) தூ முர்ரா, 19) கஸ்ஸான், 20) பனூ ஈஷ், 21) நகஃ. இந்த குழுவினர் ஹிஜிரி 11ல் முஹர்ரம் மாதம் நடுவில் வந்தனர். இக்குழுவில் 200 நபர்கள் இருந்தனர். இதுவே நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த குழுக்களில் இறுதியானக் குழுவாகும்.

மேற்கூறிய குழுக்களில் பெரும்பாலானவை ஹிஜ்ரி 9,10-ல் வந்தவை. சில குழுக்கள் மட்டும் 11ல் வந்தன. இவ்வாறு பல குழுக்கள் அதிகமதிகம் மதீனா நோக்கி வருகை தந்தது, இஸ்லாமிய அழைப்புப் பணி பெற்ற வெற்றியையும் இஸ்லாம் அரபியத் தீப கற்பத்தில் முழுமையான முறையில் வேரூன்றி விட்டதையும் அரபிகள் மதீனாவை உயர்ந்த பார்வையில் பார்த்தனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இஸ்லாமுக்கு முன் பணிந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர்கள் அறிந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் முழு அரபியத் தீபகற்பத்திற்கும் மதீனாவே தலைநகராக மாறியது. அதனைப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலை உண்டானது. இவ்வாறெல்லாம் இருந்தும் புதிதாக இஸ்லாமை ஏற்ற அனைவரின் உள்ளங்களிலும் மார்க்கம் உறுதி பெற்றிருந்தது என நாம் கூற முடியாது. காரணம், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் முரட்டுக் குணங்கொண்ட கிராமவாசிகளாக இருந்தனர். இவர்கள் இஸ்லாமை ஏற்றது தங்களது தலைவர்கள் முஸ்லிமாகி விட்டார்கள் என்ற காரணத்தினால்தான். இவர்கள் முஸ்லிமாக மாறிய பின்பும் கொள்ளையடிப்பது போன்ற குற்றச் செயல்களிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இஸ்லாமிய அறிவுரைகள் மூலம் சீராக வேண்டிய அளவு அவர்கள் தங்களைச் சீர்செய்து கொள்ளவில்லை.

எனவே, இவர்களில் சிலரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் (வேத) வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை) மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:97, 98)

மற்றும் சிலரை அல்லாஹ் புகழவும் செய்கிறான்:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப் புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:99)

மறுபுறம் மக்காவாசிகள், மதீனாவாசிகள், ஸகீஃப் கிளையினர், யமன், பஹ்ரைனில் இருந்த பெரும்பாலானவர்கள் மார்க்கத்தில் உறுதி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். மூத்த நபித்தோழர்களும், சிறந்த முஸ்லிம்களும் இதில் உள்ளவர்களே! (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்

நபி (ஸல்) அவர்களின் இறுதி காலக் கட்டத்தைப் பற்றி நாம் அறிவதற்கு முன் இதுநாள் வரை அவர்கள் புரிந்த செயல்பாடுகள், ஆற்றிய பணிகள் பற்றி சுருக்கமாகக் கூறுவது நல்லது. அதற்குக் காரணம், இச்செயல்பாடுகள்தான் நபி (ஸல்) வாழ்க்கையின் இதயப் பகுதியாகும். இதனால்தான் ஏனைய இறைத்தூதர்களிலிருந்து நமது நபி (ஸல்) தனிச் சிறப்புற்று விளங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ''முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் தலைவர்'' என்று மகுடம் சூட்டியிருப்பதற்கும் காரணம் இதுதான்.

(நபியே!) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் நீங்கள் (தொழுகைக்காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல அதிலொரு) சொற்ப பாகம். (அல்குர்ஆன் 73:1, 2)

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் (அல்குர்ஆன் 74:1, 2)

என்று அல்லாஹ் கூறியதுதான் தாமதம்.

நபி (ஸல்) எழுந்தார்கள், நின்றார்கள்... இருபது ஆண்டுகளுக்கு மேலாக நின்றார்கள். இப்புவியில் மாபெரும் அமானிதச் சுமையை... தங்களது தோளில் சுமந்தவர்களாக நின்றார்கள்... முழு மனித சமுதாயச் சுமையை... கொள்கைச் சுமையை... பல துறைகளில் போராட்டச் சுமையை... சுமந்து நின்றார்கள்... மடமை இருள்களிலும் வழிகேடுகளிலும் மூழ்கிப்போன மனித இதயத்தை... மீட்க எழுந்து நின்றார்கள்... அற்ப ஆசைகளின் பிடியிலும், மன இச்சை சிறைகளிலும், சிக்குண்டிருக்கும் உள்ளங்களை மீட்கும் போராட்டங்களுக்காக நின்றார்கள்... ஆம்! ஒரு நேரத்தில் தங்களுக்கென உன்னதத் தோழர்களை வார்த்தெடுத்தார்கள்... அறியாமை அழுக்குகளிலிருந்தும் அற்ப உலக ஆசைகளில் இருந்தும் அவர்களின் உள்ளங்களை புடம் போட்டத் தங்கமாக மாற்றினார்கள்.

அடுத்து சில சோதனைகள்... போர்கள்... ஒன்றா?... இரண்டா?... தொடர்ந்த சங்கிலிகளைப் போன்று போர்களே போர்கள்! அல்லாஹ்வின் எதிரிகளுடன்... எதிரிகளா அவர்கள்?... கல் நெஞ்சம் கொண்ட அநியாயக்காரர்கள்... இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க... இறை நேசர்களை ஒழிக்க... இஸ்லாமிய இளஞ்செடி பூமியில் வேரூன்றி... வானளாவ அதன் கிளைகள் உயர்ந்து... அதன் நிழல்கள் உலகை வியாபிப்பதற்கு முன்பாக... அதைக் கிள்ளி எறிய நப்பாசைக் கொண்டவர்கள்! எதிரிகளுடன் ஓயாத ஒழியாத போர் ஒருபுறம்! உள்ளத்துடன் உக்கிரமான போர் மறுபுறம்! உள்ளத்துடன் போர் நிரந்தரம்!... என்றுமே அது ஷைத்தானுடன் நடைபெறும்!... உள்ளத்தின் ஆழங்களில் ஊசலாட்டத்தை ஊடுருவச் செய்து மனிதனை வழிகெடுக்க வேண்டும்! அவனது நேர்வழிப் பயணத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஒரு கணமும் ஷைத்தான் அயர்வதில்லை... உள்ளத்தின் போர் என்பது அவனுடன் செய்யும் போரே!

இந்த இடர்பாடுகள் நிறைந்த எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் அழைப்பை எட்டச் செய்வதற்காக நபி (ஸல்) நின்றார்கள். தொடர்ந்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாய்... கோணங்கள் மாறுபட்ட பல போர்களை எதிர்கொள்ள நபி (ஸல்) நின்றார்கள். தங்களை நோக்கி வந்த உலகைக் கடைக் கண்ணாலும் பாராமல் சிரமத்திலும் துன்பத்திலும், நெருக்கடியான நிலையிலும் நிலைகுலையாது நின்றார்கள்... நின்ற நபியின் நிழலிலே... விசுவாசிகள் சுகத்தையும் நிம்மதியையும் சுவாசித்தார்கள்... முடிவுபெறா சிரமங்கள் தொடர்ந்தாலும்... அழகிய பொறுமையுடன் இரவில் நின்று... ஏக இறைவனை வணங்குவதுடன்... அருள்மறை குர்ஆனை ஓதுவதுடன்... அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருந்து... இறை ஆணையை நிறைவேற்ற நின்றார்கள்... (ழிலாலுல் குர்ஆன்)

இருபது ஆண்டுகளுக்கு மேலாக இறைப் பணியில் கவனம் சிதறாமல் தொடர் போராட்டத்தில் எதிர் நீச்சல் போட்டு, இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள்... அந்த வெற்றிக்கு அரபுலகம் பணிந்தது! அறியாமை இருள் அகன்றது! பிணிகொண்ட அறிவுகள் சீர்பெற்றன! இதனால் சிலைகளை விட்டு விலகியது மட்டுமல்ல அதனை உடைத்து தவிடு பொடியாக்கினார்கள். அவர்களின் ஏகத்துவ முழக்கம் விண்ணுலகை எட்டியது. இறை வணக்கத்திற்கான பாங்கொலி விண்ணின் செவிகளைப் பிளந்தன. புதிய நம்பிக்கையால் உயிர்பெற்று எழுந்த அழைப்புப் பணி (ஏகத்துவ முழக்கம்) வறண்ட பாலைவனங்களை ஊடுறுவிச் சென்றன.

நாலாத் திசைகளிலும் குர்ஆனை கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் பரவிச் சென்று இறைவேதத்தை ஓதிக் காண்பித்து, அவனது சட்டங்களை நிலை நிறுத்தினார்கள். பிரிந்து கிடந்த வம்சங்களும் சமூகங்களும் ஒன்றாயின. மனிதன் மனிதனை வணங்குவதிலிருந்து விடுபட்டு... அல்லாஹ்வை வணங்க முற்பட்டான். அநியாயக்காரன்-அநீதியிழைக்கப்பட்டவன், அரசன்-ஆண்டி, எஜமான்-அடிமை என்ற பாகுபாடுகள் நீங்கின. மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே; அனைவரும் தங்களுக்குள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ள வேண்டும் இறைக் கட்டளைக்கு ஒவ்வொருவரும் அடிபணிய வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அறியாமைக் கால கர்வம், முன்னோர்களைக் கூறி பெருமையடிப்பது, இனவெறி கொள்வது அனைத்தையும் விட்டு அல்லாஹ் இவர்களை தூரமாக்கினான்.

இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகைளிலும் ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விட, ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லாமல் போனது. மக்கள் எல்லோரும் ஆதமின் மக்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர் என்ற உண்மை உள்ளத்தில் பதிய வைக்கப்பட்டது. இறுதியாக இந்த அழைப்புப் பணியின் சிறப்பால் முழு மனித சமுதாயம், சமூகம் அரசியல் என அனைத்தாலும் ஒன்றுபட்டது. இம்மை மறுமை பிரச்சனைகளில் மானுடம் ஈடேற்றம் கண்டது. காலங்கள் மாறி புதிய உலகம் தோன்றிது. புதிய வரலாறு உருவானது. புதிய சிந்தனை எழுந்தது.

இஸ்லாமிய அழைப்புப் பணி தோன்றுவதற்கு முன்னதாக உலகை அறியாமை ஆட்சி செய்தது. மனித உள்ளங்கள் சீர்கெட்டு பண்பாடின்றி இருந்தன. நன்மை தீமைகளின் அளவு கோல்கள் கோளாறாயிருந்தன. அநியாயம் புரிதலும் அடிமைபடுத்துதலும் சமுதாயத்தில் பரவி இருந்தன. ஒருபுறம் சிலர் வரம்பு மீறிய செல்வத்தில் கொழிக்க, மறுபுறம் ஏழைகள் வறுமையில் வாடினர்.

எத்தனையோ முந்திய மார்க்கங்கள் இருந்தன. ஆனால், அவற்றில் குளறுபடிகளும், குழப்பங்களும், பலவீனங்களும் வேரூன்றி விட்டதால், மனித இதயங்களை அவை ஆட்சி செலுத்த முடியவில்லை. அவை உயிரற்ற, உணர்ச்சியற்ற, இறுகிப்போன சடங்குகளாகவே மாறிவிட்டன. இதனால் மனிதர்களை இறைநிராகரிப்பும் வழிகேடுகளும் சூழ்ந்திருந்தன. இஸ்லாமிய அழைப்புப் பணி, மனித சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய பணிகளைச் சிறப்பாக செவ்வனே செய்தது. கற்பனை, வீண் குழப்பங்கள், பிறருக்கு அடிமையாகுதல், விஷமம், கலகம், கெட்ட குணங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவற்றிலிருந்து மனித உயிரை தூய்மைப்படுத்தியது.

அநியாயம், அட்டூழியம், அத்துமீறல், பிரிந்து சிதறி ஒற்றுமையின்றி வாழுதல், நிற, இன பேதங்கள் பாராட்டுதல், அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகுதல், குறிகாரர்கள், ஜோசியர்களால் இழிவடைதல் ஆகிய அனைத்திலிருந்தும் இஸ்லாமிய அழைப்புப் பணி மனித சமுதாயத்தைக் காப்பாற்றியது. ஒழுக்கம், கட்டுப்பாடு, அக, புற தூய்மை, முழு சுதந்திரம், புதுமை, கல்வியறிவு, தெளிவு, உறுதி, பிடிப்பு, இறை நம்பிக்கை, மனித நேயம், வாழ்க்கையை வளப்படுத்த, மேம்படுத்த, உயர்வாக்கத் தொடர்ந்து முயற்சித்தல், அவரவர் உரிமையைக் கொடுத்தல் என்ற உறுதிமிக்க அஸ்திவாரத் தூண்களின் மீது மனித சமுதாயக் கட்டடத்தை இஸ்லாம் நிறுவியது. இதுவரை கண்டிராத வளமிக்க எழுச்சிகளையும், மாற்றங்களையும் இந்த அழைப்புப் பணியின் முன்னேற்றத்தால் அரபுலகம் அடைந்தது. தனது வாழ்க்கை வரலாற்றில் என்றுமே கண்டிராத ஒளி வெள்ளத்தை இந்நாட்களில் அரபுலகம் கண்டது.

ஹஜ்ஜத்துல் விதா

அழைப்புப் பணிகள் நிறைவுற்றன. இறைத்தூது உலகின் முன் வைக்கப்பட்டது. ''லாஇலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றார்கள்'' என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது. இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களின் உள்மனம், தாம் உலகில் இருக்கும் காலங்கள் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! அவ்வாறுதான், நபி (ஸல்) ஹிஜ்ரி 10ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரழி) அவர்களை அனுப்பும் போது கூறிய பொன்மொழிகள் ஞாபகம் இருக்கலாம்.

''அநேகமாக இந்த ஆண்டிற்குப் பின் என்னை சந்திக்கமாட்டாய் முஆதே! இந்த பள்ளிக்கும் எனது மண்ணறைக்கும் அருகில்தான் நீ செல்வாய்.'' நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தால் முஆது (ரழி) கண் கலங்கினார்கள். அல்லாஹ் தனது தூதருக்கு அவர்கள் செய்த அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக பலவகை சிரமங்களைச் சகித்தார்கள்.

மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கின்ற அரபிய வமிசங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டத் திட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அமானிதத்தை நிறைவேற்றினார்கள். தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்தார்கள். சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடமிருந்து நபி (ஸல்) வாங்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். அல்லாஹ்வின் இந்த விருப்பத்திற்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர். துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

தலையில் எண்ணெய் தடவி தலைவாரி, கீழாடையாக கைலியையும், மேலாடையாக போர்வையையும் அணிந்து கொண்டு, தனது ஒட்டகப் பிராணிக்கு மாலை அணிவித்தார்கள். ளுஹ்ர் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டு அஸ்ர் தொழுகைக்கு முன்பாக 'துல் ஹுலைஃபா' வந்தார்கள். அங்கு அஸ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு அங்கே அன்று முழுதும் தங்கி, மறுநாள் காலை ஸுப்ஹ் தொழுத பின்பு, தமது தோழர்களைப் பார்த்து, ''அந்த பரக்கத் (அருள் வளம்) பொருந்திய பள்ளத்தாக்கில் தொழுது, ''ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா எனக் கூறுங்கள்'' என என்னுடைய இறைவனிடமிருந்து வந்த ஒருவர் இன்றிரவு கூறிவிட்டுச் சென்றார் என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ளுஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்துக் கொண்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் தங்கள் கரங்களால் கஸ்தூரி கலந்த ஒரு நறுமணத்தையும் 'தரீரா' என்ற நறுமணத்தையும் நபி (ஸல்) அவர்களின் உடலிலும் தலையிலும் தடவினார்கள். அந்த நறுமணத்தின் மினுமினுப்பு நபி (ஸல்) அவர்களின் தலை வகிடுகளிலும் தாடியிலும் காணப்பட்டது. அந்த நறுமணத்தை அவர்கள் அகற்றவில்லை. பின்னர் வேறொரு கைலியையும் போர்வையினையும் அணிந்து கொண்டு ளுஹ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு 'தல்பியா' கூறினார்கள். தொழுகையை முடித்து வெளியேறி, கஸ்வா ஒட்டகத்தின் மீதேறி, மீண்டும் தல்பியா கூறினார்கள். பாலைவனங்களில் செல்லும் இடமெல்லாம் தல்பியா கூறினார்கள். இவ்வாறு கடந்து வந்து, மக்கா அருகில் 'தூத்துவா' என்ற இடத்தில் தங்கினார்கள். அங்கு ஸுப்ஹ் தொழுகையை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு மக்கா நோக்கி புறப்பட்டார்கள். அது ஹிஜ்ரி 10, துல்ஹஜ் பிறை 4, ஞாயிறு காலை நேரமாகும். ஆக, பயணத்தில் நபி (ஸல்) எட்டு நாட்கள் கழித்தார்கள். சங்கைமிக்க கஅபா வந்தபோது தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள். தவாஃபையும் ஸயீயையும் முடித்துக் கொண்டு கஅபாவிலிருந்து புறப்பட்டு மக்காவின் மேட்டுப் பகுதியிலுள்ள 'ஹஜுன்' என்ற இடத்தில் தங்கினார்கள். தவாப் செய்வதற்காக மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கஅபா வரவில்லை. பிறை 8 வரை அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தன்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) ''நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.'' என்று கூறினார்கள்.

'தர்வியா' என்றழைக்கப்படும் துல்ஹஜ் பிறை 8ல் நபி (ஸல்) மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் 'நமிரா' என்ற இடத்தில் அவர்களுக்காக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடாரத்தில் சூரியன் நடுப்பகலை தாண்டும் வரை தாமதித்திருந்தார்கள். நடுப்பகல் நேரம் தாண்டியவுடன் தனது கஸ்வா ஒட்டகத்தைத் தயார்படுத்தச் செய்து அதில் வாகனித்து 'பத்னுல் வாதி' என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் (1,24,000) அல்லது ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம் (1,44,000) முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா உரை

மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும், அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.

''மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?'' என்று கேட்டார்கள்.

கூடியிருந்தோர் ''நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்'' என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி ''அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!'' என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) ஒவ்வொன்றாகக் கூறியபோது அதை ரபிஆ இப்னு உமையா இப்னு கலஃப் (ரழி) மக்களுக்குச் சப்தமிட்டு எடுத்துரைத்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) தங்களது உரையை முழுமையாக முடித்தபோது,

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3)

என்ற வசனம் இறங்கியது.

இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள். நபி (ஸல்) ''உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன?'' என வினவினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம். இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது. முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்'' என உமர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ''நீங்கள் உண்மைதான் கூறினீர்கள்'' என்றார்கள். (இப்னு கஸீர், இப்னு ஜரீர், இப்னு அபீ ஷய்பா)

நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பிலால் (ரழி) பாங்கு கூறி, பிறகு இகாமத் கூறினார்கள். நபி (ஸல்) மக்களுக்கு முதலில் ளுஹ்ரை தொழ வைத்தார்கள். பின்பு பிலால் (ரழி) இகாமத் கூற, நபி (ஸல்) அஸ்ர் தொழுகையைத் தொழ வைத்தார்கள். இவ்விரண்டிற்கும் இடையில் நபி (ஸல்) எந்தத் தொழுகையையும் தொழவில்லை. பின்பு தங்களது வாகனத்தில் ஏறி, தான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு தங்களது ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியை ஜபலுர் ரஹ்மாவை நோக்கிய பாறைகளின் பக்கமாக ஆக்கிக் கொண்டு, நடந்து செல்லும் மக்களை தனக்கு முன்பக்கமாக ஆக்கிக் கொண்டு கிப்லாவை முன்னோக்கியவர்களாக சூரியன் மறையும் வரை ஒட்டகத்தின் மேல் அதே இடத்தில் இருந்தார்கள்.

சூரிய வட்டம் மறைந்தவுடன் உஸாமாவை தங்களது வாகனத்தின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு முஜ்தலிபாவுக்குச் சென்றார்கள். அங்கு மஃரிப், இஷா இரண்டையும் ஒரு அதான் (பாங்கு) இரண்டு இகாமத் கூறி தொழுதார்கள். இரண்டு தொழுகைகளுக்கு மத்தியில் எந்த தஸ்பீஹும் செய்யவில்லை. பிறகு காலை வரை ஓய்வெடுத்தார்கள். ஃபஜ்ர் நேரமானவுடன் பாங்கு இகாமத் கூறி காலைத் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்பு மஷ்அருல் ஹரமுக்கு ஒட்டகத்தில் வந்து சேர்ந்தார்கள். அங்கு கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டு தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹ், துஆ போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார்கள். சூரியன் உதயத்திற்கு முன் அங்கிருந்து புறப்பட்டு மினா வந்தடைந்தார்கள். அப்போது ஃபழ்லு இப்னு அப்பாஸை தங்களுக்குப் பின் அமர்த்தியிருந்தார்கள். 'பத்ரின் முஹஸ்ஸிர்' என்ற இடம் வந்தபோது சற்று விரைவாகச் சென்றார்கள். அங்கிருந்து நடுபாதையில் சென்று முதல் ஜம்ராவை அடைந்தார்கள். அக்காலத்தில் முதல் ஜம்ரா அருகே ஒரு மரம் இருந்தது. அந்த ஜம்ராவுக்கு 'ஜம்ரத்துல் அகபா, ஜம்ரத்துல் ஊலா' என இரு பெயர்கள் உள்ளன.

பொடிக் கற்களை எடுத்து பத்னுல் வாதியிலிருந்து ஜம்ராவை நோக்கி எறிந்தார்கள். பிறகு குர்பானி கொடுக்குமிடம் வந்து தங்களது கரத்தால் 63 ஒட்டகங்களை அறுத்தார்கள். பிறகு கத்தியை அலீ (ரழி) அவர்களிடம் கொடுக்க, மீதமுள்ள முப்பத்து ஏழு ஒட்டகங்களை அலீ (ரழி) அறுத்தார்கள். நபி (ஸல்) அலீயை தங்களது குர்பானியில் கூட்டாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு ஒட்டகையிலிருந்து ஒரு சதைத் துண்டு வீதம் எடுத்து சமைத்து, தானும் அலீயும் சாப்பிட்டார்கள். ஆணத்தையும் (சால்னா) குடித்தார்கள்.

பிறகு அங்கிருந்து வாகனம் மூலம் கஅபத்துல்லாஹ் வந்தார்கள். அங்கு ளுஹ்ர் தொழுது விட்டு ஜம்ஜம் கிணற்றருகே வந்தார்கள். அங்கு முத்தலிப் கிளையினர் ஜம்ஜம் கிணற்றில் இருந்து நீறைத்து மக்களுக்கு வழங்கினார்கள். அவர்களைப் பார்த்து ''முத்தலிப் கிளையினரே! நன்றாக நீரை இறைத்து வழங்குங்கள். உங்களுடன் போட்டியிட்டு மக்களும் தண்ணீரை இறைக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து தண்ணீர் இறைப்பதில் பங்கு பெறுவேன்'' என்றார்கள்.

முத்தலிப் கிளையார் ஒரு வாளி தண்ணீரை இறைத்து கொடுக்க, நபி (ஸல்) அதிலிருந்து குடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அன்றும் நபி (ஸல்) முற்பகலில் மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது நபி (ஸல்) கோவேறுக் கழுதை மீது இருந்தார்கள். அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களின் உரையை எடுத்துரைத்து கொண்டிருக்க, மக்கள் நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் செவிமடுத்தனர். தங்களது இன்றைய உரையில் நேற்று கூறிய சிலவற்றையும் சேர்த்துக் கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

அபூபக்ரா (ரழி) வாயிலாக இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

பிறை 10ல் நபி (ஸல்) எங்களுக்கு உரையாற்றினார்கள். ''காலம், அல்லாஹ் வானங்கள் பூமியைப் படைத்த தினத்தின் அமைப்பை போன்றே இருக்கிறது. ஆண்டு 12 மாதங்கள் கொண்டது. அவற்றில் நான்கு கண்ணியமிக்கது. துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என்று தொடர்ந்து வரும் மூன்று மாதங்களும் ஜுமாதா அஸ்ஸானியா, ஷஅபான் ஆகிய இரண்டிற்கு மத்தியிலுள்ள ரஜப் மாதமும் ஆகும். பிறகு ''இது எந்த மாதம்?'' என்று நபி (ஸல்) கேட்க ''அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறிவிட்டோம். நபி (ஸல்) சற்று நேரம் அமைதியாக இருந்ததும் நபி (ஸல்) இதற்கு வேறு பெயர் கூறப்போகிறார்கள் என்று எண்ணினோம். ''இது துல்ஹஜ் மாதமில்லையா?'' என்று கேட்க, ''ஆம்! துல்ஹஜ் மாதம்தான்'' என்றோம். ''இது எந்த ஊர்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள்'' என்றோம். நபி (ஸல்) அமைதி காத்தபோது இதற்கு வேறு பெயர் கூறுவார்கள் என எண்ணினோம். ''இது அந்த ஊர் இல்லையா?'' என்று கேட்க, ''நாங்கள் ஆம்! அந்த ஊர்தான்'' என்று கூறினோம். பின்பு ''இன்றைய தினம் என்ன நாள்?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவார்கள் என்றோம்''. பிறகு நபி (ஸல்) ''இது அறுத்து பலியிடும் 10வது தினம்தானே என்றார்கள்.'' நாங்கள் ''ஆம்! 10வது நாள்தான்'' என்றோம்.

உங்களது உயிரும் பொருளும் கண்ணியமும் உங்களது இந்த மாதம், இந்த ஊர், இந்த தினத்தைப் போன்று கண்ணியம் பெற்றதாகும். உங்களுடைய இறைவனை சந்திப்பீர்கள். உங்களது செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பின் நீங்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு வழி தவறிவிடாதீர்கள். ''நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேனா?'' என்று கேட்க, குழுமி இருந்தோர் ''ஆம்!'' என்றனர். ''யா அல்லாஹ்! நீயே இதற்கு சாட்சி, செய்தியைக் கேள்விப்படுபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவர்களை விட விளக்கமுள்ளவராக இருக்கலாம்.''என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, இப்னு ஹிஷாம், இப்னு ஜரீர்)

மேலும் இப்பிரசங்கத்தில் நபி (ஸல்) கூறினார்கள்: ''ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினர்களுக்கல்ல. எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் எந்த பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ அல்லது பிள்ளையின் குற்றத்திற்காக தந்தையையோ தண்டிக்கப்பட மாட்டாது.

நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்தப் பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் அற்பமாகக் கருதுபவற்றில் அவனுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவன் மகிழ்ச்சி அடைவான். (ஜாமிவுத் திர்மிதி, இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் மினாவில் தங்கி ஹஜ் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டும், மார்க்கச் சட்டத் திட்டங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து கொண்டும் இருந்தார்கள். இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தின்படி நேரிய வழிமுறைகளை நிலை நிறுத்தி இணைவைப்புடைய அடையாளங்களையும் அடிச்சுவடுகளையும் அடியோடு அழித்தார்கள்.

இந்த மூன்றில் சில நாட்களிலும் நபி (ஸல்) உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். 'ஸர்ரா பின்த் நப்ஹான்' என்ற பெண்மணி வாயிலாக ஓர் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) எங்களுக்கு பிறை 12ல் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ''தஷ்ரீக் (பிறை 11, 12, 13) நாட்களில் இது நடுநாள் அல்லவா?'' என்று வினவினார்கள். தொடர்ந்து பிறை 10ல் ஆற்றியது போன்றே இன்றும் உரை நிகழ்த்தினார்கள். (ஸுனன் அபூதாவூது)

நபி (ஸல்) அவர்களின் இவ்வுரை,

(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால், (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீர்களாக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 110:1-4)

என்ற அத்தியாயம் நஸ்ர் இறங்கியதற்கு பின் நடைபெற்றது.

துல்ஹஜ் பிறை 13ல் நபி (ஸல்) மினாவில் இருந்து புறப்பட்டு 'அப்தஹ்' என்ற இடத்திலுள்ள கினானா என்ற கிளையினரின் இடத்தில் அன்று பகலும் இரவும் தங்கியிருந்தார்கள். அங்குதான் ளுஹ்ர், அஸர், மஃரிப், இஷா தொழுதார்கள். இஷாவுக்குப் பிறகு சிறிது தூங்கிவிட்டு கஅபாவிற்கு வந்து 'தவாஃபுல் விதா' நிறைவேற்றினார்கள். மக்களையும் அதை நிறைவேற்ற பணித்தார்கள்.

ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின்பு, மதீனா முனவ்வரா நோக்கிப் புறப்படுமாறு தங்களுடன் வந்தவர்களுக்கு கூறினார்கள். அவர்கள் சற்று ஓய்வு எடுப்பதற்கும் அவகாசம் அளிக்கவில்லை. அல்லாஹ்வின் பாதையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும், தியாகங்களையும் புரிவதற்காக உடனடியாக புறப்படும்படி அழைப்பு விடுத்தார்கள்.

குறிப்பு: நபியவர்களின் இந்த இறுதி ஹஜ்ஜை பற்றிய விவரங்கள் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.

இறுதிப் படை

தற்பெருமையும் அகம்பாவமும் கொண்ட ரோமானியர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் ஆளுநராக மஆன் பகுதியிலுள்ள ஃபர்வா இப்னு அம்ர் ஜுதாமி இஸ்லாமை ஏற்றபோது அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்ற நிகழ்ச்சியை முன்னர் விவரித்துள்ளோம்.

ரோமர்களின் இந்த அடக்குமுறைகளையும் அத்துமீறலையும் முடிவுக்கு கொண்டுவர பெரும் படை ஒன்றை ஹிஜ்ரி 11ல் நபி (ஸல்) தயார்படுத்தினார்கள். ரோமரின் கட்டுப்பாட்டிலுள்ள ஃபலஸ்தீன் பகுதியின் 'பல்கா', 'தாரூம்' எல்லைகள் வரைச் சென்று எதிரிகளை எச்சரித்து வருமாறு அந்தப் படைக்கு ஆணையிட்டார்கள்.

எல்லைகளில் வசித்து வந்த அரபியர்களின் உள்ளங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது நம்பிக்கையை வரவைப்பதற்காகவும், கிறிஸ்துவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையை தகர்ப்பதற்காகவும், இஸ்லாமை ஏற்றுக் கொள்வது ஆபத்துகளையும் மரணத்தையும் தேடித் தரும் என்று எவரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவும் இப்படை அனுப்பப்பட்டது.

இப்படையின் தளபதி வயது குறைந்தவராக இருப்பதைக் குறித்து மக்கள் பலவாறாகப் பேசினர். அவருடன் புறப்படத் தயங்கினர். இதைக் கண்ட நபி (ஸல்) ''அவரது தலைமையை இடித்துரைத்தீர்கள் என்றால் இதற்கு முன் அவரது தந்தையின் தலைமையையும் இடித்துரைத்திருப்பீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் தலைமைக்கு ஏற்றவரே! தகுதியானவரே! மக்களில் எனக்கு மிக நேசமானவர்களில் அவரும் ஒருவரே. அவருக்குப் பின் நிச்சயமாக இவரும் எனக்கு நேசமானவர்களில் ஒருவரே. (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மக்களெல்லாம் உஸாமாவின் படையில் சேர்வதற்கு ஆர்வத்துடன் குழுமினர். உஸாமா (ரழி) படையை முழுமையாக ஒழுங்குபடுத்திக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு 8 கி.மீ. தூரத்திலுள்ள 'ஜுர்ஃப்' என்ற இடத்தில் தங்கினார். இத்தருணத்தில் நபி (ஸல்) நோய்வாய்ப்பட்டார்கள் என்ற துக்கமான செய்தி கிடைத்தது. அல்லாஹ்வின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக சற்றுத் தாமதித்தார். இப்படை அபூபக்ர் (ரழி) ஆட்சியின் போது புறப்பட வேண்டிய முதல் ராணுவப்படையாக அமைய வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

Friday, July 3, 2015

[ரஹீக் 026]-தபூக் போர் (ஹிஜ்ரி 9, ரஜப்)

இதற்கு முன் நிகழ்ந்த மக்கா போர் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைப் பிரித்தறிவித்து விட்டது. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதைப் புரிய வைத்துவிட்டது. எனவே, காலநிலை முற்றிலும் மாறி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர் என்பதை இதற்குப் பின் ''குழுக்கள்'' என்ற தலைப்பில் வரும் விவரங்களிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்தும் இதை நன்கு அறிந்து கொள்ளலாம். ஆக, மக்கா வெற்றி கொள்ளப்பட்டபின் முஸ்லிம்களின் உள்நாட்டுப் பிரச்சனைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு முழுமையான அவகாசம் கிடைத்தது.

போருக்கான காரணம்

எனினும், ஒரே ஒரு சக்தி மட்டும் எவ்விதக் காரணமுமின்றி முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. அதுதான் ரோமானியப் பேரரசு. ரோமர்கள் அக்காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தார்கள். இதற்கு முன் ஒரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துச் சென்றிருந்த 'ஹாரிஸ் இப்னு உமைர் அஸ்தி' என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த 'ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி' என்பவன் வழிமறித்துக் கொன்று விட்டான். அதற்குப் பழிவாங்குவதற்காக நபி (ஸல்) ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார்கள். இவர்கள் 'முஃதா' என்ற இடத்தில் ரோமர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுமையாக அந்த அநியாயக்காரர்களைப் பழிவாங்க முடியவில்லை. இருப்பினும் முஸ்லிம்களின் ஒரு சிறு படை ஒரு மாபெரும் வல்லரசை எதிர்த்துச் சண்டையிட்டது. அரபியர்களின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. முஃதாவின் அருகிலுள்ள அரபியர்களுக்கு மட்டுமல்லாமல் வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் கூட முஸ்லிம்களைப் பற்றிய அதே பாதிப்பை இது ஏற்படுத்தியது.

இப்போரினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நன்மையையும் இதற்குப் பின் தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரபுப் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதையும் கைஸர் மன்னனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தனது எல்லையை நெருங்கி வரும் ஆபத்தாக உணர்ந்தான். அரபியர்களுக்கு அருகிலிருக்கும் தனது ஷாம் நாட்டுக் கோட்டைகளை ஆட்டம் காண வைக்கும் ஒரு செயலாகக் கருதினான். முஸ்லிம்களின் இந்த எழுச்சி அழிக்க முடியாத அளவுக்கு வலிமைப் பெறுவதற்கு முன்னதாகவே அடக்கி அழித்துவிட வேண்டும். ரோம் நாட்டை சுற்றியிருக்கும் அரபு பகுதிகளில் முஸ்லிம்கள் கிளர்ச்சியை உண்டாக்குவதற்கு முன்னதாகவே அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என அவன் எண்ணினான்.

முஃதா போர் முடிந்து ஒரு வருடம் ஆவதற்குள் தனது இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான் கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான்.

ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மாபெரும் போருக்குரிய முனைப்புடன் ரோமர்கள் வருகிறார்கள் எனும் செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் மதீனாவாசிகள் அச்சத்திலும் திடுக்கத்திலும் காலத்தைக் கழித்தனர். வழக்கத்திற்கு மாற்றமான ஏதாவது இரைச்சலைக் கேட்டுவிட்டால் ரோம் நாட்டுப் படை மதீனாவிற்குள் நுழைந்து விட்டதோ என எண்ணினர். உமர் இப்னு கத்தாப் (ரழி) தங்களைப் பற்றி கூறுவதிலிருந்து இதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) தங்கள் மனைவிகளிடம் ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அந்த ஆண்டு சத்தியம் செய்து விலகி தங்கள் வீட்டுப் பரணியில் தங்கிக் கொண்டார்கள். உண்மை நிலவரத்தை அறியாத நபித்தோழர்கள் நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள் என்பதாக விளங்கிக் கொண்டார்கள். இது நபித்தோழர்களுக்குப் பெரும் துக்கத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி உமர் (ரழி) கூறுகிறார்கள்:

''எனக்கு அன்சாரி நண்பர் ஒருவர் இருந்தார். நான் எங்காவது சென்று விட்டால் அன்று நடந்த செய்திகளை என்னிடம் வந்து கூறுவார். அவர் எங்காவது சென்றிருந்தால் நான் அவருக்கு விவப்ரிபேன். நாங்கள் இருவரும் மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்தோம். நாங்கள் முறைவைத்து மாறி மாறி நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொள்வோம். கஸ்ஸான் நாட்டு மன்னன் எங்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி பரவியிருந்ததால் எப்போதும் நாங்கள் பயத்தில் ஆழ்ந்திருந்தோம். ஒருநாள் திடீரென அன்சாரி தோழர் எனது வீட்டிற்கு ஓடிவந்து ''திற! திற!!'' எனக் கூறிக் கொண்டு கதவை வேகமாகத் தட்டினார். நான் கதவைத் திறந்து ''என்ன கஸ்ஸானிய மன்னனா வந்து விட்டான்?'' எனக் கேட்டேன். அதற்கவர் ''இல்லை! அதைவிட மிக ஆபத்தான ஒன்று நடந்து விட்டது நபி (ஸல்) தங்கள் மனைவியரை விட்டு விலகி விட்டார்கள்'' என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மற்றும் ஓர் அறிவிப்பில் வருவதாவது, உமர் (ரழி) கூறுகிறார்கள்: கஸ்ஸான் கிளையினர் எங்களிடம் போர் புரிவதற்குப் படையை ஒன்று திரட்டுகின்றார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்ததிலிருந்து அதைப் பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் எனது அன்சாரி நண்பர் நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொண்டபின், இஷா நேரத்தில் என் வீட்டு வாசல் கதவைப் பலமாகத் தட்டி ''என்ன அவர் தூங்குகிறாரா?'' என்று கேட்டார். நான் திடுக்கிட்டு எழுந்து அவரிடம் வந்தபோது அவர் ''மிகப்பெரிய விஷயம் ஒன்று நிகழ்ந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு நான் ''என்ன? கஸ்ஸானின் படை வந்துவிட்டதா?'' என வினவினேன். அதற்கவர் ''அதைவிடப் பெரிய விஷயம் ஒன்று நடந்து விட்டது. நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள்'' என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து ரோமர்களின் படையெடுப்பைப் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் எந்தளவு அச்சம் நிலவியிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ரோமர்கள் மதீனாவைத் தாக்கப் புறப்படுகின்றனர் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து மதீனாவில் இருந்த நயவஞ்சகர்கள் பல சதித்திட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களே வெற்றியடைகிறார்கள். அவர்கள் உலகில் எந்த சக்தியையும், அரசர்களையும் பயப்படுவதில்லை. மாறாக, நபியவர்களின் வழியில் குறுக்கிடும் தடைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றன என்பதை இந்த நயவஞ்சகர்கள் நன்றாக விளங்கியிருந்தும் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று ஆசைப்பட்டனர்.

''தங்களுடைய சதித்திட்டங்களைத் தீட்டுவதற்குத் தகுந்த இடமாக ஒரு பள்ளிவாசலையும் அமைத்துக் கொண்டனர். முஸ்லிம்களுக்குக் கெடுதல் செய்வதற்காகவும், அவர்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்குவதற்காகவும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பவர்களுக்குப் பதுங்குமிடமாகவும் அமைய இப்பள்ளியை ஏற்படுத்தினர்'' என்று இந்தப் பள்ளியைப் பற்றி குர்ஆனிலேயே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இப்பள்ளியைக் கட்டிய பின் நபி (ஸல்) அதில் தொழுகை நடத்த வரவேண்டுமென கோரினர். அவர்களது நோக்கமெல்லாம் ''முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் இப்பள்ளியில் தாங்கள் செய்யும் சதிகளைப் பற்றி முஸ்லிம்கள் தெரிந்து கொள்ளக் கூடாது தங்களுக்கும் வெளியிலுள்ள முஸ்லிம்களின் எதிரிகளான தங்களின் நண்பர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இது அமைய வேண்டும்'' என்பதே.

அவர்கள் பலமுறை நபி (ஸல்) அவர்களிடம் வந்து அந்தப் பள்ளியில் தொழுகை நடத்த வருமாறு கேட்டுக் கொண்டும், நபி (ஸல்) அதைத் தவிர்த்து வந்தார்கள். இறுதியில் 'தபூக் போர்' முடிந்து திரும்பும் போது இப்பள்ளியின் நோக்கத்தைப் பற்றிய முழுச் செய்தியையும் அல்லாஹ் தன் நபியவர்களுக்கு அறிவித்து, அந்த நயவஞ்சகர்களைக் கேவலப்படுத்தி விட்டான். எனவே, போரிலிருந்து திரும்பியபின் அப்பள்ளியை இடித்துத் தகர்க்குமாறு கட்டளையிட்டார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, ஷாம் தேசத்திலிருந்து மதீனாவுக்கு ஜைத்தூன் எண்ணெய் விற்பனைக்காக வந்திருந்த நிஃப்த்திகள் 'ஹிர்கல் நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட பெரும் படையை தயார் செய்து விட்டான். தனது ஆளுநர்களில் ஒருவரை அப்படைக்குத் தலைமை ஏற்கச் செய்து, அரபியர்களில் கிறிஸ்தவர்களாக மாறியிருந்த லக்கும், ஜுதாம் ஆகிய இரு கோத்திரங்களையும் அப்படையில் இணைத்திருக்கிறான். இப்படையின் முற்பகுதி தற்போது பல்கா வந்தடைந்து இருக்கிறது'' என்ற அதிர்ச்சி தரும் செய்தியை முஸ்லிம்களின் காதுகளில் போட்டனர். மிகப் பெரிய ஆபத்து வந்துவிட்டதை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

நிலைமை மேலும் மோசமாகுதல்

மேற்கூறியது ஒருபுறமிருக்க, அக்காலம் கடுமையான வெய்யில் காலமாக இருந்தது. மக்களும் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும், அது பேரீத்தம் பழங்களின் அறுவடை காலமாகவும் இருந்தது. தங்களின் அறுவடையில் ஈடுபடுவதும், மதீனா நிழலில் இளைப்பாறுவதும் அவர்களுக்கு மிக விருப்பமாக இருந்தது. அதுமட்டுமின்றி செல்ல வேண்டிய இடமும் மிகத் தொலைவில் இருந்ததுடன், அந்தப் பாதையும் கரடுமுரடானதாக இருந்தது. மேற்கண்ட காரணங்களால் போருக்குப் புறப்படுவது முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமானதாகவே இருந்தது.

நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

இந்த எல்லா நிலைமைகளையும் நபி (ஸல்) உன்னிப்பாகக் கவனித்து வந்தார்கள். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது முஸ்லிம்களின் எல்லைக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் முஸ்லிம் இராணுவத்தின் கௌரவத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவையும் களங்கத்தையும் ஏற்படுத்திவிடும். ஹுனைன் யுத்தத்தில் படுதோல்வி கண்டபின் தனது இறுதி மூச்சை எண்ணிக் கொண்டிருக்கும் முஷ்ரிக்குகள் மீண்டும் உயிர்பெற்றெழுவார்கள். முஸ்லிம்களுக்குச் சோதனைகளும், ஆபத்துகளும் நிகழ வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கும் நயவஞ்சகர்கள் பாவி அபூ ஆமின் உதவியுடன் ரோம் நாட்டு மன்னனுடன் தொடர்பு வைத்திருந்தனர். முஸ்லிம்கள் மீது ரோமர்கள் தாக்குதல் நடத்தினால் இந்த நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் முதுகுக்குப் பின்னாலிருந்து தாக்கி அழிப்பார்கள். இதனால் இஸ்லாமைப் பரப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இதுநாள் வரை செய்து வந்த அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பல போர்களையும் படையெடுப்புகளையும் சந்தித்து, உயிராலும் பொருளாலும் பல தியாகங்களைச் செய்ததின் மூலமாக கிடைத்த பயன்கள் எல்லாம் வீணாகிவிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த நபி (ஸல்) ''எவ்வளவுதான் சிரமம் ஏற்பட்டாலும் ரோமர்களது எல்லைக்கும் செல்லக் கூடாது, அதே சமயம் இஸ்லாமிய எல்லையில் அவர்கள் படையுடன் நுழைய வாய்ப்பும் அளிக்கக் கூடாது'' என்று திட்டவட்டமான முடிவெடுத்தார்கள்.

ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

நபி (ஸல்) தங்களின் நிலைமையை அறிந்து தெளிவாக முடிவெடுத்த பின் போருக்குத் தயாராகுங்கள் என தங்களது தோழர்களுக்கு அறிவித்தார்கள். அருகிலுள்ள அரபு கோத்திரத்தாருக்கும், மக்கா வாசிகளுக்கும் தங்களது தோழர்களின் குழுக்களை அனுப்பி போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) ஒரு போருக்காகச் செல்லும்போது, தான் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிடாமல் அதற்கு மாற்றமாக வேறொர் இடத்திற்குச் செல்கிறோம் என்று குறிப்பிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை பெரும் ஆபத்திற்குரியதாக இருப்பதாலும், மிகக் கடுமையான வறுமை நிலைமையில் இருப்பதாலும் தங்களின் நோக்கத்தை நபி (ஸல்) வெளிப்படையாகக் கூறினார்கள். ''நாம் ரோமர்களை சந்திக்க இருக்கிறோம் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தி, அதற்குத் தேவையான முழு தயாரிப்புகளையும் செய்து கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தி, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்கு ஆர்வமூட்டினார்கள். அல்லாஹ் அத்தியாயம் பராஆவின் ஒரு பகுதியை இறக்கிவைத்தான். துணிவுடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும், இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் அவர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினான். நபி (ஸல்) அவர்களும் தர்மம் செய்வதின் சிறப்புகளையும், அல்லாஹ்வின் பாதையில் தங்களின் உயர்வான பொருட்களைச் செலவு செய்வதின் சிறப்புகளையும் கூறி தங்களின் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு போருக்குத் தயாராகுகின்றனர்

ரோமர்களிடம் போர் புரிய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் அழைப்பைக் கேட்டதுதான் தாமதம், முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க வெகு விரைவாக போருக்குத் தயாராகினர். மக்காவைச் சுற்றியுள்ள அரபி கோத்திரத்தார்கள் எல்லாம் பல வழிகளில் மதீனா வந்து குழுமினர். உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மையுள்ளவர்களைத் தவிர போரில் கலந்து கொள்ளாமலிருப்பதை மற்றெவரும் அறவே விரும்பவில்லை. ஆம்! நபி (ஸல்) அவர்களின் அந்த நெருக்கமான மூன்று தோழர்களைத் தவிர. இவர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை. மற்றும் தங்களின் போருக்கான செலவுகளைச் செய்ய இயலாத வறுமையில் உள்ள நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்'' என்று கேட்டனர். நபி (ஸல்) மிக்க கவலையுடன் ''உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம் ஒன்றுமில்லையே'' என்றார்கள். அந்தப் பதிலை கேட்ட தோழர்கள் ''அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எங்களிடம் வசதி இல்லையே!'' என்று அழுதவர்களாக சபையிலிருந்து திரும்பிச் சென்றனர்.

(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு ''உங்களை ஏற்றிச் செல்லக் கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாது போன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.) (அல்குர்ஆன் 9:92)

முஸ்லிம்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு அல்லாஹ்வின் பாதையில் பொருட்களைச் செலவு செய்வதிலும், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழர் உஸ்மான் (ரழி) ஷாம் நாட்டு வியாபாரத்திற்கு அனுப்புவதற்காக ஒரு குழுவை தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் இருநூறு ஒட்டகைகள், அதற்குரிய முழு சாதனங்களுடன் இருந்தன. மேலும், இருநூறு ஊக்கியா வெள்ளிகளும் இருந்தன. அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு அவை அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் தர்மமாக வழங்கினார்கள். பின்பு ஓரு நாட்கள் கழித்து முழு சாதனங்களுடன் உள்ள நூறு ஒட்டகைகளை தர்மமாக வழங்கிவிட்டு ஆயிரம் தங்க காசுகளை நபி (ஸல்) அவர்களின் மடியில் பரப்பினார்கள். அதை நபி (ஸல்) புரட்டியவர்களாக ''இன்றைய தினத்திற்குப் பின் உஸ்மான் எது செய்தாலும் அது அவருக்கு இடையூறளிக்காது'' எனக் கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

இந்தளவுடன் நிறுத்திக் கொள்ளாமல் உஸ்மான் (ரழி) மேன்மேலும் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கினார்கள். இப்போருக்காக மொத்தத்தில் தொள்ளாயிரம் ஒட்டகைகளையும், நூறு குதிரைகளையும் வழங்கினார்கள். இதுமட்டுமின்றி ஏராளமானத் தங்க வெள்ளி காசுகளையும் வாரி வழங்கினார்கள்.

இப்போருக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) இருநூறு ஊக்கியா வெள்ளிகளை வழங்கினார்கள். அபூபக்ர் (ரழி) தனது செல்வம் அனைத்தையும் வழங்கினார்கள். தனது குடும்பத்தினருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தவிர வேறெதையும் விட்டு வைக்கவில்லை. இப்போருக்காக முதன் முதலில் தனது பொருளை வழங்கியவர் அவர்தான். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கியது மொத்தம் நான்காயிரம் திர்ஹமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது செல்வத்தில் பாதியை, அப்பாஸ் (ரழி) பெரும் செல்வத்தை, தல்ஹா, ஸஅது இப்னு உபாதா, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) ஆகியோரும் தங்களின் பெரும்பகுதி செல்வத்தை வழங்கினார்கள். ஆஸிம் இப்னு அதி (ரழி) தொண்ணூறு வஸ்க் பேரீத்தம் பழங்களை வழங்கினார்கள். இவ்வாறு குறைவாகவோ அதிகமாகவோ தங்களால் முடிந்ததை எவ்விதக் கஞ்சத்தனமுமின்றி மக்கள் அல்லாஹ்வின் பாதையில் வழங்கினார்கள். ஒரு சிலர், ஒன்று அல்லது இரண்டு 'முத்'கள் (முத்' என்பது ஓர் அளவாகும்.) தானியங்களை வழங்கினர். அதைத் தவிர அவர்களிடம் வேறெதுவும் இருக்கவில்லை. பெண்கள் தங்களிடமிருந்த வளையல்கள், கால், காது அணிகலன்கள், மோதிரங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மை உள்ளவர்களே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கருமித்தனம் செய்தனர்.

இவர்கள் எத்தகையவர்கள் என்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருட்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக) கூலி வேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள் பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான். அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 9:79)

தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை...

இவ்வாறு முடிந்தளவு முன்னேற்பாடுகளுடன் இஸ்லாமியப் படை மதீனாவிலிருந்து புறப்பட்டது. மதீனாவில் நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) என்றும், சிலர் ஸபா இப்னு உர்ஃபுதா (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) தங்களது குடும்பத்திற்கு அலீ இப்னு அபூதாலிபை (ரழி) பிரதிநிதியாக நியமித்தார்கள். படை புறப்பட்ட பின் இதைப் பற்றி நயவஞ்சகர்கள் குத்தலாகப் பேசவே, அலீ (ரழி) மதீனாவில் இருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்தார்கள். ''மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) இருந்ததைப் போன்று நீ எனக்கு இருக்க விரும்பவில்லையா? ஆனால், எனக்குப் பின் எந்தவொரு நபியும் இல்லை'' என்று கூறி, அலீயை மதீனாவிற்கு திரும்ப அனுப்பி விட்டார்கள்.

படை மதீனாவிலிருந்து வியாழக்கிழமை தபூக்கை நோக்கிப் புறப்பட்டது. படையின் தயாரிப்புக்காக எவ்வளவுதான் செலவு செய்த போதிலும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை முப்பதாயிரமாக இருந்ததால், வீரர்களின் எண்ணிக்கை அளவுக்கு வாகன வசதியும், உணவும் இல்லாமலிருந்தது. ஒரே ஓர் ஒட்டகத்தில் முறை வைத்து பதினெட்டு நபர்கள் வாகனித்தனர். உணவுப் பற்றாக்குறையால் இலை தழைகளைச் சாப்பிட்டதால் வாயெல்லாம் புண்ணாகி விட்டன. தண்ணீருக்காக ஒட்டகங்களை அறுத்து அதன் இரப்பையில் இருக்கும் நீரை அருந்தும் அளவிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இக்காரணத்தால் இப்படைக்கு 'ஜய்ஷுல் உஸ்ரா (வறுமைப் படை) என்று பெயர் வந்தது.

தபூக்கை நோக்கிச் செல்லும் வழியில் 'ஜ்ர்' என்னும் ஊர் வந்தது. 'வாதில் குரா' என்ற பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரின் வீடுகள் இங்குதான் இருந்தன. தாகம் மிகுதியால் அங்குள்ள கிணற்றிலிருந்து தங்களது பாத்திரங்களிலும் துருத்திகளிலும் தண்ணீரை நிரப்பிக் கொண்டார்கள். ஆனால், ''அந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள், அதில் உழுவும் செய்யாதீர்கள், அதிலிருந்து குழைத்த மாவை ஒட்டகங்களுக்குக் கொடுத்து விடுங்கள், நீங்கள் அதிலிருந்து எதையும் சாப்பிடாதீர்கள். அதை அடுத்துள்ள ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் தண்ணீர் குடித்த கிணற்றிலிருந்து நீரை சேமித்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) ஹிஜ்ர் பகுதிக்கு வந்தபோது ''தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்தவர்களின் இடங்களை நீங்கள் கடந்துச் செல்லும்போது அழுதவர்களாக செல்லுங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை உங்களுக்கும் ஏற்படலாம் என பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறி தங்களது தலையை மறைத்துக் கொண்டு அந்தப் பள்ளத்தாக்கை விரைவாகக் கடந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

வழியில் படைக்குத் தண்ணீரின் தேவை அதிகமாகவே, நபியவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபி (ஸல்) அல்லாஹ்விடம் தண்ணீர் புகட்டக் கோரி இறைஞ்சினார்கள். அல்லாஹ் தாகத்தைப் போக்க மேகத்தை அனுப்பி மழை பொழியச் செய்தான். மக்கள் தாகம் தணிந்து பாத்திரங்களிலும் மழை நீரைச் சேமித்துக் கொண்டார்கள்.

''தபூக்கிற்கு மிக நெருக்கமாக வந்தவுடன் நாளை நீங்கள் தபூக் நகரின் ஊற்றை சென்றடைவீர்கள். முற்பகல் வருவதற்குள் அங்கு செல்ல வேண்டாம். அங்கு சென்றவுடன் நான் வரும்வரை அந்த ஊற்றை யாரும் நெருங்கவும் வேண்டாம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

''நாங்கள் தபூக் வந்தபோது எங்களில் இருவர் முந்திக் கொண்டு அந்த ஊற்றுக்குச் சென்று விட்டனர். அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் சிறுகச் சிறுக வெளியேறிக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவ்விருவரிடம் ''நீங்கள் அந்தத் தண்ணீரைத் தொட்டீர்களா?'' என்று கேட்க அவர்கள் ''ஆம்!'' என்றனர். அவ்விருவருக்கும் அல்லாஹ் நாடியவாறு சிலவற்றைக் கூறிய நபி (ஸல்) அவ்வூற்றுக் கண்ணிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அள்ளி ஒரு பாத்திரத்தில் நிரப்பி, பின்பு அதில் தங்களது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு அந்தத் தண்ணீரை மீண்டும் அந்த ஊற்றில் கொட்டினார்கள். அங்கிருந்து தண்ணீர் பீறிட்டு வழிந்தோடியது. மக்களெல்லாம் நீர் பருகிக் கொண்டார்கள். பின்பு ''முஆதே உனது வாழ்க்கை நீண்டதாக இருந்தால் வெகு விரைவில் இந்த இடங்கள் தோட்டங்களாக மாறுவதைப் பார்ப்பாய்'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தபூக் செல்லும் வழியில் அல்லது சென்றடைந்த பிறகு (இரு விதமாகவும் சொல்லப்படுகின்றது) ''இன்றிரவு உங்கள் மீது கடுமையான காற்று வீசும். யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் உள்ளவர்கள் அதைக் கட்டி வைக்கவும்'' என நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே அன்றிரவு கடுமையான காற்று வீசியது. படையில் ஒருவர் எழுந்து நின்றுவிட்டார். அவர் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு 'தை' மலையில் வீசப்பட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) பயணத்தில் ளுஹ்ரை அஸருடன் அல்லது அஸ்ரை ளுஹ்ருடன், மஃரிபை இஷாவுடன் அல்லது இஷாவை மஃரிபுடன் சேர்த்து தொழுது வந்தார்கள்.

தபூக்கில் இஸ்லாமியப் படை

இஸ்லாமியப் படை தபூக் வந்தடைந்து தனது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டு எதிரிகளைச் சந்திப்பதற்கு எந்நேரமும் ஆயத்தமாக இருந்தது. நபி (ஸல்) எழுந்து நின்று வீரத்திற்கு உரமூட்டும் பேருரை நிகழ்த்தினார்கள். ஈருலக நன்மையை அடைந்து கொள்வதற்கு ஆர்வப்படுத்தியதுடன், அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்தார்கள். ஆன்மாக்களுக்கு வலிமை ஊட்டினார்கள். பொருளாதாரத்தாலும் தயாரிப்புகளாலும் பின்தங்கியுள்ளோம் என எண்ணியிருந்த முஸ்லிம்களிடமிருந்து தாழ்வு மனப்பான்மையையும் சோர்வையும் இந்தப் பிரச்சாரத்தின் மூலமாக அகற்றினார்கள்.

மற்றொருபுறம் நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கமடைந்தார்கள். அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றி தங்களது நாட்டுக்குள் பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. இதனால் அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்குப் பெரும் பயன்களும் கிடைத்தன. ஒருக்கால் ரோமர்கள் வந்து போர் நடந்திருந்தால் கூட, இந்தளவு நன்மைகள் கிடைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது.

தபூக்கிற்கு அருகிலிருந்த அய்லா பகுதியின் தலைவர் யுஹன்னா இப்னு ரூஃபா தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்து கொடுத்ததுடன் ஜிஸ்யாவையும் நிறைவேற்றினார். மேலும், 'ஜர்பா' பகுதியினரும் 'அத்ருஹ்' பகுதியினரும் ஒப்பந்தம் செய்து ஜிஸ்யாவையும் வழங்கினர். நபி (ஸல்) ஒப்பந்தப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். இவ்வாறே மீனா பகுதி மக்களும் தங்கள் பகுதியில் விளையும் கனிவர்க்கங்களில் 1-4 பங்கை வழங்கி விடுவதாக சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அய்லாவின் தலைவருக்கு நபி (ஸல்) எழுதிக் கொடுத்த ஒப்பந்தமாவது:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் புறத்திலிருந்தும் யுஹன்னா இப்னு ருஃபாவுக்கும் அய்லாவாசிகளுக்கும் வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்தமாகும் இது. கடலில் செல்லும் இவர்களது கப்பல்களுக்கும், பூமியில் செல்லும் இவர்களது பயணக் கூட்டங்களுக்கும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பும் முஹம்மதுடைய பாதுகாப்பும் உண்டு. மேலும், ஷாம் நாட்டிலும் இவர்களது கடல் பகுதியை சுற்றி வாழும் மக்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உண்டு. ஆனால், இவர்களில் யாராவது குழப்பம், கலகம் செய்தால் அவரது உயிர், பொருள் பாதுகாக்கப்படாது. அவரை அடக்குபவருக்கு அவரது பொருள் சொந்தமாகிவிடும். இவர்கள் தண்ணீருக்காக செல்லும்போது யாரும் தடுக்கக் கூடாது. கடலிலோ தரையிலோ பயணிக்கும் போது யாரும் குறுக்கிடக் கூடாது.''

அடுத்து, இருபத்து நான்கு குதிரை வீரர்களுடன் தூமதுல் ஜந்தலின் தலைவர் உகைதிர் என்பவரை பிடித்து வருவதற்காக காலித் பின் வலீதை நபி (ஸல்) அனுப்பினார்கள். மேலும், ''நீ அவரை சந்திக்கும் போது அவர் ஒரு மாட்டை வேட்டையாடிக் கொண்டிருப்பார்'' என்றும் நபி (ஸல்) காலிதிடம் கூறினார்கள். காலித் (ரழி) உகைதின் கோட்டைக்கு அருகில் சென்று தாமதித்தார். அப்போது ஒரு மாடு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வெளியேறி உகைதின் கோட்டைக் கதவை கொம்புகளால் உராய்ந்து கொண்டிருந்தது. உகைதிர் அதை வேட்டையாடி பிடிப்பதற்காகக் கோட்டைக்கு வெளியே வந்தார். அன்று பௌர்ணமி இரவாக இருந்தது. காலித் தனது படையுடன் சென்று உகைதிரை பிடித்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம் ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகள் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஜிஸ்யா தருவதாகவும் ஒப்புக் கொண்டார். முன் சென்றவர்களுடன் ஒப்பந்தம் செய்தது போன்று நபி (ஸல்) இவருடனும் செய்து கொண்டார்கள்.

ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்கள் எல்லாம் ''இனி நம்முடைய பழைய தலைவர்களை நம்புவதில் பலனில்லை. அந்தக் காலம் மலையேறி விட்டது. இனி முஸ்லிம்களுக்குத்தான் நாம் பணிய நேரிடும்'' என நன்கு புரிந்திருந்தனர். இவ்வாறே இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து விரிவாகி ரோம ராஜ்ஜியத்தைத் தொட்டது. பெரும்பாலான அரபு பகுதியிலுள்ள ரோம ஆளுநர்களின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது.

மதீனாவிற்குத் திரும்புதல்

தபூக்கிலிருந்து இஸ்லாமிய ராணுவம் சண்டையின்றி வெற்றி வாகை சூடி மதீனா வந்தது. சண்டைகளிலிருந்து இறைநம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். வழியில் ஒரு கணவாயை அடையும்போது நபி (ஸல்) அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் சதித்திட்டம் தீட்டினர். நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முன் பக்கத்தில் இருந்து அம்மார் இழுத்துச் செல்ல, ஹுதைஃபா (ரழி) ஒட்டகத்தைப் பின்னாலிருந்து ஓட்டிச் சென்றார். திடீரென ஒரு கூட்டம் முகங்களை மறைத்தவர்களாக இம்மூவரையும் சூழ்ந்து கொண்டனர். ஹுதைஃபா (ரழி) தன்னிடமிருந்த வளைந்த கைத்தடியால் சூழ்ச்சிக்காரர்களுடைய வாகனங்களின் முகத்தை நோக்கி சுழற்றி அடித்தார். நபித்தோழர்கள் உஷாராக இருப்பதைக் கண்ட அந்தக் கும்பலின் உள்ளத்தில் பயம் கவ்வியதும் தப்பி ஓடி, முஸ்லிம்களின் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். அந்தக் கும்பலில் வந்தவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பதை நபி (ஸல்) விவரித்துக் கூறினார்கள். இதனால்தான் ஹுதைஃபாவுக்கு ''நபியின் அந்தரங்கத் தோழர்'' என்ற புனைப் பெயரும் உண்டு.

இந்நிகழ்ச்சி குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

(உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி அவர்கள்) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் முயற்சித்தனர். (அல்குர்ஆன் 9:74)

வெகு தூரத்தில் மதீனாவின் கட்டடங்கள் தெரியவே ''இது தாபா (இது சிறந்த ஊர்). இதோ உஹுது மலை. இது நம்மை நேசிக்கிறது. நாமும் இதனை நேசிக்கிறோம்'' என நபி (ஸல்) கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையை கேள்விப்பட்ட முஸ்லிம்களில் பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் அனைவரும் மதீனாவுக்கு வெளியே வந்து மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று,

''நம் எதிரே முழு நிலா தோன்றியது

வழியனுப்பும் பாறைகளிலிருந்து.

நன்றி கூறல் நம்மீது கடமை;

அல்லாஹ்வை அழைப்பவர் அழைக்கும் வரை.''

என்று பாடினர்.

ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இப்போருக்காக ஐம்பது நாட்கள் செலவாயின. அதாவது, இருபது நாட்கள் தபூக்கில் தங்கினார்கள். மீதம் முப்பது நாட்கள் இதற்கான பயணத்தில் கழிந்தன. இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.

பின்தங்கியவர்கள்

இப்போர் அதன் விசேஷ நிலைமைகளைப் பொறுத்து அல்லாஹ்வின் மிகப்பெரும் சோதனையாக அமைந்திருந்தது. உண்மை முஸ்லிம் யார் என இப்போர் இனங்காட்டி விட்டது. ஆம்! இதுபோன்ற நிலைமையில் அல்லாஹ்வின் நடைமுறை அவ்வாறே அமைந்திருந்தது. இதையே அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். (அல்குர்ஆன் 3:179)

அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் முழுமையாக ஏற்று நடந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொள்ள புறப்பட்டனர். இதில் கலந்து கொள்ளாதவர்களை உள்ளத்தில் நயவஞ்சகம் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது. ஒரு நபர் போருக்குச் செல்லாது பின்தங்கி விட்டார் என நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டால் ''அவரைப் பற்றி எதுவும் பேசாதீர்கள். அவரிடம் ஏதேனும் நன்மை இருக்குமாயின் அல்லாஹ் நம்முடன் அவரை இணைத்து வைப்பான். அவ்வாறு இல்லாவிட்டால் நம்மை அவரை விட்டு காப்பாற்றி நிம்மதியைத் தருவான்'' என்று ஆறுதல் கூறுவார்கள். உண்மையில் தகுந்த காரணமுள்ளவர்கள் அல்லது நயவஞ்சகர்கள் இவர்களைத் தவிர அனைவரும் போரில் கலந்து கொண்டனர். சில நயவஞ்சகர்கள் பொய்க் காரணங்களைக் கூறியும், சில நயவஞ்சகர்கள் காரணம் ஏதும் கூறாமலேயே போரைப் புறக்கணித்தனர். ஆம்! உண்மையான நம்பிக்கையாளர்கள் மூவர் தகுந்த காரணமின்றியே போரில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களை அல்லாஹ் சோதித்தான். பிறகு அவர்கள் மனம் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதால் அவர்களை மன்னித்து விட்டான்.

மதீனாவிற்கு வருகை தந்த நபி (ஸல்) பள்ளியில் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு மக்களைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். எண்பதுக்கும் அதிகமான நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பல காரணங்களைக் கூறி, தாங்கள் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தனர். தாங்கள் உண்மையே உரைப்பதாகக் கூறி தங்களது சொல்லுக்கு வலிமை சேர்ப்பதற்காக பொய் சத்தியமும் செய்தனர். நபி (ஸல்) அந்தரங்கக் காரணங்களைத் தோண்டித் துருவாமல் வெளிப்படையான அவர்களது காரணங்களை ஏற்று, வாக்குறுதி வாங்கிக் கொண்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவர்களது அந்தரங்க விஷயத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டார்கள்.

உண்மை விசுவாசிகளில் பின்தங்கிய கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீ, ஹிலால் இப்னு உமையா (ரழி) ஆகிய மூவரும் பொய்க் காரணங்களைக் கூறாமல் தங்களது உண்மை நிலைமையைத் தெரிவித்து விட்டனர். நபி (ஸல்) இம்மூவரின் விஷயத்தில் ''அல்லாஹ்வின் தீர்ப்பு வரும்வரை யாரும் இவர்களிடம் பேச வேண்டாம்'' என தோழர்களுக்குக் கட்டளையிட்டு விட்டார்கள். நபியவர்களும் தோழர்களும் அவர்களிடம் பேசாமல் புறக்கணித்து ஒதுக்கி வைத்த காரணத்தால் அம்மூவருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதே நிலையில் நாற்பது நாட்கள் கழிந்த பின்பு மூவரும் அவரவர் மனைவியை விட்டு விலகியிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஐம்பது நாட்கள் கழிந்தன. இந்நாட்களில் அவர்களின் மனநிலையை அல்லாஹ்வே அறிவான். பிறகு அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான்.

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:118)

இவ்வசனம் இறக்கப்பட்டதும் மூவர் மட்டுமின்றி முஸ்லிம்களும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தனர். அல்லாஹ் தங்களை மன்னித்த ஆனந்தத்தால் ஏராளமான தான தர்மங்களை வாரி வழங்கினர். இந்நாளை தங்களது வாழ்வின் பாக்கியமான நாளாகக் கருதினர். போரில் தக்க காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதாவது:

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது எந்த குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) எந்த வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:91)

மதீனாவுக்கு அருகில் வந்தபோது ''மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் பயணித்த இடங்களிலெல்லாம் அவர்களும் உங்களுடன் இருந்தனர். தகுந்த காரணம் ஒன்றே அவர்களைப் போரில் கலக்க விடாமல் செய்து விட்டது.'' என்று நபி (ஸல்) மேற்கூறப்பட்டவர்களை குறித்து கூறினார்கள். ''அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டேவா!'' (நம்முடன் வந்த நன்மையைப் பெறுகிறார்கள்!) என ஆச்சரியத்துடன் தோழர்கள் வினவினர். ''ஆம்! மதீனாவில் இருந்து கொண்டே! (நன்மையைப் பெறுகிறார்கள்)'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

போரின் தாக்கங்கள்

இப்போரினால் முஸ்லிம்களின் கை அரபிய தீபகற்பத்தில் ஓங்கியது. அரபிய தீபகற்பத்தில் இஸ்லாமைத் தவிர இனி வேறெந்த சக்தியும் வாழ முடியாது என்பதை அனைவரும் நன்றாக அறிந்தனர். எஞ்சியிருந்த சில மடையர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிரமங்களை எதிர்பார்க்கும் நயவஞ்சகர்கள் ஆகியோரின் உள்ளத்தில் மிச்ச மீதமிருந்த சில கெட்ட ஆசைகளும் அடியோடு அழிந்தன. இவர்கள் ரோமர்களின் உதவியோடு முஸ்லிம்களை வீழ்த்திவிடலாம் என்று இறுமாந்தது நாசமாகி விடவே, முற்றிலும் முஸ்லிம்களிடம் பணிந்து வாழத் தலைப்பட்டனர்.

முஸ்லிம்கள் இனி நயவஞ்சகர்களிடம் நளினமாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டுமென்ற தேவை இல்லாது போனது. அல்லாஹ்வும் இந்த நயவஞ்சகர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமென சட்டங்களை இறக்கி வைத்தான். இவர்களின் தர்மங்களை ஏற்பதோ, இவர்களுக்காக ஜனாஸா தொழுவதோ, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோ, இவர்களின் அடக்கத்தலங்களுக்குச் செல்வதோ கூடாது என தடை செய்து விட்டான். பள்ளி என்ற பெயரில் சூழ்ச்சிகள் செய்யவும், அதனைச் செயல்படுத்தவும் அவர்கள் பயன்படுத்திய இடங்களைத் தகர்த்தெரியுமாறு கட்டளையிட்டான். மேலும், அவர்களின் தீய பண்புகளை விவரித்து பல வசனங்களையும் இறக்கி வைத்த காரணத்தால் அவர்கள் மிகுந்த இழிவுக்குள்ளானார்கள். இந்த வசனங்கள் நயவஞ்சகர்கள் யார் எனத் தெளிவாக மதீனாவாசிகளுக்குச் சுட்டிக்காட்டுவது போல அமைந்திருந்தது. முதலாவதாக. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமை ஏற்கவும் அறியவும் மக்கள் அலை அலையாய் மதீனா நோக்கி வந்தனர். இரண்டாம் கட்டமான மக்கா வெற்றிக்குப் பின்போ இது பன்மடங்காகப் பெருகியது. மூன்றாம் கட்டமான தபூக் போருக்குப் பின் இவற்றையெல்லாம் மிகைக்கும் வகையில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டங்கூட்டமாக மதீனா வந்தனர்.

(இப்போரின் விவரங்கள் ''ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி'' ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.)

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போர் குறித்து பல திருவசனங்கள் அத்தியாயம் (பராஆ) தவ்பாவில் அருளப்பட்டன. அவற்றில், சில நபி (ஸல்) போருக்குப் புறப்படும் முன்பும், சில பயணத்தின் இடையிலும், சில போர் முடிந்து மதீனா திரும்பிய பின்பும் அருளப்பட்டன. அவற்றில் போரின் நிலவரங்கள், நயவஞ்சகர்களின் தீய குணங்கள், போரில் கலந்து கொண்ட தியாகிகள் மற்றும் உண்மை முஸ்லிம்களின் சிறப்புகள், போரில் கலந்து கொண்ட உண்மை முஃமின்கள், கலந்து கொள்ளாத உண்மை முஃமின்களின் பிழை பொறுத்தல் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன.

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகள் இந்த ஆண்டில் நடந்தன:

1) நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின்பு உவைமிர் அஜ்லானிக்கும், அவருடைய மனைவிக்குமிடையில் 'லிஆன்' (பழி சுமத்தி ஒருவரையொருவர் சபித்தல்) நடந்தது.

2) ''தவறு செய்து விட்டேன். என்னை தூய்மையாக்குங்கள்'' என நபியவர்களிடம் வந்த காமிதிய்யா பெண்மணி மீது 'ரஜ்ம்' தண்டனை நிறைவேற்றப்பட்டது.

3) ஹபஷா மன்னர் அஸ்ஹமா ரஜபு மாதத்தில் மரணமானார். அவருக்காக நபி (ஸல்) மதீனாவில் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

4) நபி (ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்தும் (ரழி) ஷஅபான் மாதத்தில் மரணமானார்கள். நபி (ஸல்) இதனால் மிகுந்த கவலையடைந்தார்கள். எனக்கு மூன்றாவதாக ஒரு மகள் இருந்தால், அவரையும் உங்களுக்கே மணமுடித்துத் தந்திருப்பேன் என உஸ்மான் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

5) தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்த பின்பு நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் இறந்து போனான். உமர் (ரழி) அவர்கள் தடுத்தும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்குத் தொழுகை நடத்தி இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள். இது தொடர்பாக உமர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையே ஏற்றமானது என குர்ஆன் வசனம் இறங்கியது.

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

ஒன்பதாவது ஆண்டு துல்ஹஜ் அல்லது துல்கஅதா மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை மக்கா அனுப்பினார்கள்.

மதீனாவிலிருந்து அபூபக்ர் (ரழி) புறப்பட்ட பின்பு அத்தியாயம் தவ்பாவின் முதல் வசனங்கள் இறக்கப்பட்டன. அதில் முஷ்ரிக்குகளுடன் இருந்த உடன்படிக்கைகளை முறித்துவிட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட்டான். தன் சார்பாக இதனை மக்களிடம் தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) 'அர்ஜ் அல்லது ழஜ்னான்' என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். ''தாங்கள் (அமீர்) தலைவராக வந்தீர்களா? அல்லது தலைவன் கீழ் செயல்பட வந்தீர்களா?'' என்று அபூபக்ர் (ரழி) கேட்க, அதற்கு ''நான் தங்களுடைய தலைமையில் பணியாற்றவே வந்திருக்கிறேன்'' என்று அலீ (ரழி) கூறினார்கள். பிறகு இருவரும் ஒன்றாக மக்கா சென்றனர்.

அபூபக்ர் (ரழி) மக்களுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றித் தந்தார்கள். ஹஜ் பிறை 10ல் ஜம்ரா அருகில் நின்று கொண்டு, மக்களுக்கு நபி (ஸல்) கூறியவற்றைச் சொல்லி ''ஒப்பந்தங்கள் அனைத்தும் இன்றுடன் முடிந்து விட்டன'' என்று அறிவித்தார்கள். மேலும், அவர்களுக்கு நான்கு மாதங்கள் தவணையளித்தார்கள். ஒப்பந்தமில்லாதவர்களுக்கும் நான்கு மாதத் தவணைக் கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தவர்கள் அதனை மீறாமலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிறருக்கு உதவி செய்யாமலும் இருந்தால் அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை தவணையளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

அபூபக்ர் (ரழி) தங்களது ஆட்களை அனுப்பி ''இந்த ஆண்டிற்குப் பிறகு முஷ்ரிக்குகள் யாரும் மக்கா வரக்கூடாது. நிர்வாணமாக கஅபாவை யாரும் வலம் வரக்கூடாது'' என்று அறிவிப்புச் செய்தார்கள். இது ''அரபுலகம் முழுவதும் சிலை வணக்கம் ஒழிந்தது இனி அது தலைதூக்க முடியாது'' என்று அறிவிப்பதற்குச் சமமாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

போர்கள் - ஒரு கண்ணோட்டம்

நபி (ஸல்) கலந்து கொண்ட போர்கள், நபி (ஸல்) அனுப்பி வைத்த படைப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் நிலைமைகள், பின்விளைவுகள், மாற்றங்கள் பற்றி நாம் ஆய்வு மேற்கொண்டாலும் அல்லது வேறு யார் ஆய்வு செய்தாலும் கீழ்க்கண்ட முடிவுக்கே வர வேண்டும்.

நபி (ஸல்) இறைத்தூதர்களில் தலைசிறந்து விளங்கியது போன்றே அனுபவம் வாய்ந்த ஒரு ராஜதந்தியாகவும், நிபுணத்துவம் நிறைந்த தலைசிறந்த தளபதியாகவும் விளங்கினார்கள். போரில் பல அனுபவம் பெற்ற தளபதிகளையும் தனது நுண்ணறிவால் மிஞ்சியிருந்தார்கள். தான் கலந்து கொண்ட எல்லா போர்க் களங்களிலும் அவர்களின் போர் திறனிலோ, ராணுவ முகாம்களைச் சரியான உறுதிமிக்க முக்கிய இடங்களில் அமைத்து போர் புரிவதிலோ ஒருக்காலும் தவறு நிகழ்ந்ததில்லை. இவை அனைத்திலும் எக்காலத்திலும் எந்தப் போர் தளபதிகளிடமும் இருந்திராத அரிய நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

உஹுத், ஹுனைன் ஆகிய போர்களில் படையினரின் தவறான முடிவுகளாலும், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ததாலும் தான் பின்னடைவு ஏற்பட்டது. இவ்விரண்டு போர்களில் முஸ்லிம்கள் தோற்று பின்னடைந்த போதிலும், நபி (ஸல்) புறமுதுகுக் காட்டாமல் எதிரிகளை முன்னோக்கிச் சென்று தங்களது துணிவையும் வீரத்தையும் நிலைநாட்டினார்கள். இதற்கு உஹுதுப் போர் ஓர் எடுத்துக்காட்டாகும். போரில் ஏற்பட்ட தோல்வியை வெற்றியாக மாற்றினார்கள். இதற்கு ஹுனைன் போரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதுபோன்ற உக்கிரமான போர்களில் படையினர் புறமுதுகிட்டுத் தோற்று திரும்பி ஓடும்போது தளபதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஆனால், நபி (ஸல்) அவ்வாறு செய்யாமல், எதிரிகளை நோக்கியே முன்னேறினார்கள். இதுவரை நாம் கூறியது நபியவர்களின் போர் நிபுணத்துவம் பற்றிய கண்ணோட்டமாகும்.

மேலும், இப்போர்களினால் அரபுலகம் முழுவதும் பாதுகாப்புப் பெற்றது. அங்கு நிம்மதி நிலவியது. குழப்பத் தீ அணைந்தது. இஸ்லாமிற்கும் சிலை வழிபாட்டிற்குமிடையே நடந்த போர்களில் எதிரிகளின் வலிமைக் குன்றியது. அவர்கள் சமாதானத்திற்கு அடிபணிந்தனர். இஸ்லாமிய அழைப்புப் பணி பரவுவதற்குண்டான தடைகளும் அகன்றன. இவை யாவும் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அறப்போர்களினால் ஏற்பட்டவை என்பது ஆய்வில் நமக்குத் தெரிய வரும் உண்மை. மேலும், இப்போர்களில் தன்னுடன் இருப்பவர்களில் உண்மையான தோழர் யார்? உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து மோசடி செய்யத் துடிக்கும் முனாஃபிக்குகள் யார்? என்பதை நபி (ஸல்) அவர்களால் பிரித்தறிய முடிந்தது.

இதுமட்டுமின்றி போரைத் தலைமையேற்று நடத்தும் மிகச் சிறந்த தளபதிகளையும் நபி (ஸல்) உருவாக்கினார்கள். இந்தத் தளபதிகள் இராக், ஷாம் போன்ற பகுதிகளில் பாரசீகர்களுடனும், ரோமர்களுடனும் போர் புரிந்தனர். நீண்ட காலம் வல்லரசுகளாக விளங்கிய ரோமானியர்களையும் பாரசீகர்களையும் விட மிகத் திறமையாக படையை வழி நடத்தி, தோட்டந்துரவுகளிலும் கோட்டை கொத்தளங்களிலும், மிக ஏகபோக அடக்குமுறையுடன் அராஜக வாழ்க்கை நடத்திய எதிரிகளை அவர்களது வீடு, வாசல், நாடுகளை விட்டு வெளியேற்றி வெற்றி கண்டனர்.

இதுபோன்றே போர்களினால் முஸ்லிம்களுக்குத் தேவையான குடியிருப்பு, விவசாய நிலங்கள், தொழில்துறை போன்றவற்றை நபி (ஸல்) வளப்படுத்தினார்கள். வீடுவாசலின்றி அகதிகளாக வந்த மக்களின் துயர் துடைத்தார்கள். இஸ்லாமிய அரசுக்குத் தேவையான ஆயுதங்கள், படை பலங்கள், வாகனங்கள், செலவீனங்கள் அனைத்தையும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். இவ்வனைத்து ஏற்பாடுகளையும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது வரம்புமீறல், அட்டூழியம் செய்தல் ஆகிய ஏதுமின்றியே செய்து வந்தார்கள். மேலும், இதுநாள் வரை அறியாமைக் காலத்தில் எந்த அடிப்படைக்காகவும், நோக்கங்களுக்காகவும் போர்த் தீ மூட்டப்பட்டு வந்ததோ அவை அனைத்தையும் அணைத்து முற்றிலும் மாற்றி அமைத்தார்கள்.

கொள்ளை, சூறையாடல், அநியாயம், அத்துமீறல், எளியோரை வாட்டுதல், கட்டடங்களை இடித்தல், பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தல், சிறுவர்கள், குழந்தைகள் போன்றவர்களுடன் கடின சித்தத்துடன் நடந்து கொள்ளுதல், விவசாயப் பயிர் நிலங்களைப் பாழ்படுத்துதல், அல்லாஹ்வின் பூமியில் குழப்பம், கலகம் விளைவித்தல் போன்ற கொடுஞ்செயல்கள் நிறைந்ததாகவே போர்கள் அக்காலத்தில் இருந்தன. ஆனால், நபி (ஸல்) உயர்ந்த இலட்சியங்களையும், சிறந்த நோக்கங்களையும், அழகிய முடிவுகளையும் கொண்டு வருவதற்குச் செய்யப்படும் ஒரு தியாகமாக விடுதலைக் காற்றை சுவாசிக்கத் துடிக்கும் ஒரு சுதந்திரப் போராட்டமாகப் போரை மாற்றினார்கள். மனித சமுதாயத்திற்கு கண்ணியம் அளிப்பது, அநியாயத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது, நீதத்திற்குக் கட்டுப்படுவது ஆகியவற்றையே போரின் நோக்கமாக்கினார்கள். பலமானவர், பலமில்லாதவரை சுரண்டி வாழும் தீய அமைப்பிலிருந்து விலக்கி, பலமில்லாதவரை பலமுள்ளவராக்கி தனது நியாயத்தை அடைந்து கொள்ளும் நல்லமைப்பிற்கு மனித சமுதாயத்தைக் கொண்டு வருவதையே போரின் இலட்சியமாக்கினார்கள். இதைத்தான் ஒடுக்கப்பட்டவர்களை, பலவீனமானவர்களை விடுவிப்பதற்காக போர் புரியுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர் புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ''எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 4:75)

ஆகவே மோசடி, அநியாயம், அழிச்சாட்டியம், பாவங்கள், அத்துமீறல் ஆகிய அனைத்தில் இருந்தும் அல்லாஹ்வின் பூமியைச் சுத்தப்படுத்தி அதில் அமைதி, பாதுகாப்பு, அன்பு, மனித நேயம் ஆகியவற்றை பரப்புவதும் நிலைநாட்டுவதும் தான் ஜிஹாதின் நோக்கமாகும். மேலும், போருக்கென மிக உயர்ந்த சட்ட ஒழுங்குகளை வரையறுத்து, அவற்றைத் தனது தளபதிகளும் படைகளும் பின்பற்ற வேண்டுமென கட்டாயமாக்கினார்கள். எவ்விதத்திலும் இச்சட்டங்கள் மீறப்படுவதை நபி (ஸல்) அனுமதிக்கவில்லை.

சுலைமான் இப்னு புரைதா (ரழி) தனது தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்: நபி (ஸல்) பெரிய அல்லது சிறிய படைக்குத் தளபதியை நியமித்தால் ''நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களது படையினரிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்'' என தளபதிக்கு விசேஷமாக வலியுறுத்தி உபதேசம் புரிந்துவிட்டு, அவருக்கும் படையினருக்கும் சேர்த்து கீழ்காணும் உபதேசம் செய்வார்கள்.

''அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள். அல்லாஹ்வை நிராகரிப்போருடன் போர் செய்யுங்கள். போரிடுங்கள்! களவாடாதீர்கள்! மோசடி செய்யாதீர்கள்! உறுப்புகளைச் சிதைக்காதீர்கள்! குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!''.மேலும், நீங்கள் எளிதாக்குங்கள் சிரமமாக்காதீர்கள் அமைதியை நிலைநாட்டுங்கள். வெறுப்படையச் செய்யாதீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம், முஃஜமுத் தப்ரானி)

நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுக்கச் செல்கையில், இரவு நேரமாக இருப்பின் காலை வரை பொறுத்திருப்பார்கள். உயிர்களை நெருப்பிலிட்டு பொசுக்குவதை நபி (ஸல்) வன்மையாகத் தடுத்தார்கள். சரணடைந்தவர்களைக் கொல்லக் கூடாது. பெண்களை கொல்வதோ அடிப்பதோ கூடாது. கொள்ளையடிக்கக் கூடாது. கொள்ளையடிக்கப்பட்ட பொருளை உண்பது, செத்த பிணத்தை உண்பதை விட கேவலமானது, விவசாய நிலம் மற்றும் மரங்களை அழிக்கக் கூடாது, ஆனால், எதிரியை அடக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி ஏதும் தென்படாவிட்டால் நிர்ப்பந்த சூழ்நிலையில் நிலம் மற்றும் மரங்களை அழிக்கலாம். இவ்வாறு போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகளை நபி (ஸல்) தமது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

மேலும், மக்கா வெற்றியின் போது ''காயம்பட்டோரை தாக்காதீர்கள்! புறமுதுகுக் காட்டி ஓடுபவரைத் துரத்தாதீர்கள்! கைதிகளைக் கொல்லாதீர்கள்'' என ஆணை பிறப்பித்தார்கள்.

ஒப்பந்தம், உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் கொல்லப்படுவதை மிக வன்மையாகக் கண்டித்து ''யார் ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டவரைக் கொன்று விட்டாரோ அவர் சுவன வாடையை நுகர மாட்டார். சுவன வாடையை நாற்பது ஆண்டுகள் தூரமாக இருந்தாலும் நுகரலாம்'' என நபி (ஸல்) எச்சரித்தார்கள்.

இன்னும் பல உயர்வான அடிப்படைகளை உருவாக்கியதன் மூலம் அறியாமைக் கால அசுத்தத்தை விட்டு போர்களைச் சுத்தமாக்கி அவற்றைப் புனிதப் போராக, மனிதநேயமிக்க ஜிஹாதாக மாற்றினார்கள். (ஜாதுல் மஆது)

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவுகின்றனர்

முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்க கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டது. இவ்வெற்றியால் பொய்யிலிருந்து மெய்யை, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை மக்கள் பிரித்து அறிந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்கள் நீங்கின. எனவே, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். இவ்விஷயத்தை உறுதி செய்யும் ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். அம்ர் இப்னு ஸலமா (ரழி) கூறுகிறார்:

மக்கள் பயணிக்கும் பாதையை ஒட்டி உள்ள கிணற்றின் அருகில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தோம். எங்களைக் கடந்து பயணிகள் செல்லும் போது அந்த மக்களின் செய்தி என்ன? இந்த மக்களின் செய்தி என்ன? அந்த மனிதன் யார்? (நபியென்று கூறும் அந்த ஆள் யார்?) என்று அவர்களிடம் விசாரிப்போம். அல்லாஹ் தன்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான் என தன்னைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருப்பதாக மக்கள் பதில் கூறுவர். அவர்கள் கூறும் கூற்றை என் அடிமனதில் பதிய வைத்து விடுவேன். அது நன்றாகப் படிந்து விடும். அரபி மக்கள் தாங்கள் முஸ்லிமாவதற்கு மக்கா வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர்.

அவர்களின் கூற்று என்னவெனில், ''இம்மனிதரையும் அவரது கூட்டத்தினரையும் அவரது போக்கில் விட்டு விடுங்கள். இவர் தமது கூட்டத்தாரை வெற்றி கண்டால் உண்மை நபியாவார். இவ்வாறு எண்ணம் கொண்டிருந்த அம்மக்கள், நபி (ஸல்) மக்காவை வெற்றி கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். எனது தந்தை தனது சமுதாயத்திற்கு முன்னரே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். பின்பு எங்களிடம் வந்து, ''இந்த நேரத்தில் இந்தத் தொழுகையை நிறைவேற்றுங்கள். இந்த நேரத்தில் இந்தத் தொழுகையைத் தொழுங்கள். நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் அதான் கூறட்டும். உங்களில் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மக்காவின் வெற்றி பல மாற்றங்களை நிகழ்த்தியது. இஸ்லாமுக்கு கண்ணியம் வழங்கி அரபியர்களை அதற்குப் பணிய வைத்தது என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக விளக்குகிறது. தபூக் போருக்குப் பின் இந்நிலை மேலும் முன்னேறியது. ஆகவேதான் ஹிஜ்ரி 9, 10 ஆகிய ஆண்டுகளில் மதீனாவை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக குழுக்கள் வரத் தொடங்கின. மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். மக்காவை மீட்கச் சென்றபோது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். ஆனால், மக்கா வெற்றிக்குப் பின் தபூக் போருக்கு சென்றபோது நபி (ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். தபூக் போர் முடிந்து நபி (ஸல்) ஹஜ்ஜுக்காக மக்கா பயணமானபோது முஸ்லிம்களின் ஒரு கடலே அவர்களுடன் இருந்தது. அதாவது தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் முழக்கங்கள் விண்ணை முட்ட ஒரு இலட்சம் அல்லது ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை புடை சூழ சென்றனர்.