ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Friday, July 3, 2015

[ரஹீக் 026]-தபூக் போர் (ஹிஜ்ரி 9, ரஜப்)

இதற்கு முன் நிகழ்ந்த மக்கா போர் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைப் பிரித்தறிவித்து விட்டது. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதைப் புரிய வைத்துவிட்டது. எனவே, காலநிலை முற்றிலும் மாறி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர் என்பதை இதற்குப் பின் ''குழுக்கள்'' என்ற தலைப்பில் வரும் விவரங்களிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்தும் இதை நன்கு அறிந்து கொள்ளலாம். ஆக, மக்கா வெற்றி கொள்ளப்பட்டபின் முஸ்லிம்களின் உள்நாட்டுப் பிரச்சனைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு முழுமையான அவகாசம் கிடைத்தது.

போருக்கான காரணம்

எனினும், ஒரே ஒரு சக்தி மட்டும் எவ்விதக் காரணமுமின்றி முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. அதுதான் ரோமானியப் பேரரசு. ரோமர்கள் அக்காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தார்கள். இதற்கு முன் ஒரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துச் சென்றிருந்த 'ஹாரிஸ் இப்னு உமைர் அஸ்தி' என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த 'ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி' என்பவன் வழிமறித்துக் கொன்று விட்டான். அதற்குப் பழிவாங்குவதற்காக நபி (ஸல்) ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார்கள். இவர்கள் 'முஃதா' என்ற இடத்தில் ரோமர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுமையாக அந்த அநியாயக்காரர்களைப் பழிவாங்க முடியவில்லை. இருப்பினும் முஸ்லிம்களின் ஒரு சிறு படை ஒரு மாபெரும் வல்லரசை எதிர்த்துச் சண்டையிட்டது. அரபியர்களின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. முஃதாவின் அருகிலுள்ள அரபியர்களுக்கு மட்டுமல்லாமல் வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் கூட முஸ்லிம்களைப் பற்றிய அதே பாதிப்பை இது ஏற்படுத்தியது.

இப்போரினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நன்மையையும் இதற்குப் பின் தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரபுப் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதையும் கைஸர் மன்னனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தனது எல்லையை நெருங்கி வரும் ஆபத்தாக உணர்ந்தான். அரபியர்களுக்கு அருகிலிருக்கும் தனது ஷாம் நாட்டுக் கோட்டைகளை ஆட்டம் காண வைக்கும் ஒரு செயலாகக் கருதினான். முஸ்லிம்களின் இந்த எழுச்சி அழிக்க முடியாத அளவுக்கு வலிமைப் பெறுவதற்கு முன்னதாகவே அடக்கி அழித்துவிட வேண்டும். ரோம் நாட்டை சுற்றியிருக்கும் அரபு பகுதிகளில் முஸ்லிம்கள் கிளர்ச்சியை உண்டாக்குவதற்கு முன்னதாகவே அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என அவன் எண்ணினான்.

முஃதா போர் முடிந்து ஒரு வருடம் ஆவதற்குள் தனது இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான் கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான்.

ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மாபெரும் போருக்குரிய முனைப்புடன் ரோமர்கள் வருகிறார்கள் எனும் செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் மதீனாவாசிகள் அச்சத்திலும் திடுக்கத்திலும் காலத்தைக் கழித்தனர். வழக்கத்திற்கு மாற்றமான ஏதாவது இரைச்சலைக் கேட்டுவிட்டால் ரோம் நாட்டுப் படை மதீனாவிற்குள் நுழைந்து விட்டதோ என எண்ணினர். உமர் இப்னு கத்தாப் (ரழி) தங்களைப் பற்றி கூறுவதிலிருந்து இதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) தங்கள் மனைவிகளிடம் ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அந்த ஆண்டு சத்தியம் செய்து விலகி தங்கள் வீட்டுப் பரணியில் தங்கிக் கொண்டார்கள். உண்மை நிலவரத்தை அறியாத நபித்தோழர்கள் நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள் என்பதாக விளங்கிக் கொண்டார்கள். இது நபித்தோழர்களுக்குப் பெரும் துக்கத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி உமர் (ரழி) கூறுகிறார்கள்:

''எனக்கு அன்சாரி நண்பர் ஒருவர் இருந்தார். நான் எங்காவது சென்று விட்டால் அன்று நடந்த செய்திகளை என்னிடம் வந்து கூறுவார். அவர் எங்காவது சென்றிருந்தால் நான் அவருக்கு விவப்ரிபேன். நாங்கள் இருவரும் மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்தோம். நாங்கள் முறைவைத்து மாறி மாறி நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொள்வோம். கஸ்ஸான் நாட்டு மன்னன் எங்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி பரவியிருந்ததால் எப்போதும் நாங்கள் பயத்தில் ஆழ்ந்திருந்தோம். ஒருநாள் திடீரென அன்சாரி தோழர் எனது வீட்டிற்கு ஓடிவந்து ''திற! திற!!'' எனக் கூறிக் கொண்டு கதவை வேகமாகத் தட்டினார். நான் கதவைத் திறந்து ''என்ன கஸ்ஸானிய மன்னனா வந்து விட்டான்?'' எனக் கேட்டேன். அதற்கவர் ''இல்லை! அதைவிட மிக ஆபத்தான ஒன்று நடந்து விட்டது நபி (ஸல்) தங்கள் மனைவியரை விட்டு விலகி விட்டார்கள்'' என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மற்றும் ஓர் அறிவிப்பில் வருவதாவது, உமர் (ரழி) கூறுகிறார்கள்: கஸ்ஸான் கிளையினர் எங்களிடம் போர் புரிவதற்குப் படையை ஒன்று திரட்டுகின்றார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்ததிலிருந்து அதைப் பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் எனது அன்சாரி நண்பர் நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொண்டபின், இஷா நேரத்தில் என் வீட்டு வாசல் கதவைப் பலமாகத் தட்டி ''என்ன அவர் தூங்குகிறாரா?'' என்று கேட்டார். நான் திடுக்கிட்டு எழுந்து அவரிடம் வந்தபோது அவர் ''மிகப்பெரிய விஷயம் ஒன்று நிகழ்ந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு நான் ''என்ன? கஸ்ஸானின் படை வந்துவிட்டதா?'' என வினவினேன். அதற்கவர் ''அதைவிடப் பெரிய விஷயம் ஒன்று நடந்து விட்டது. நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள்'' என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து ரோமர்களின் படையெடுப்பைப் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் எந்தளவு அச்சம் நிலவியிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ரோமர்கள் மதீனாவைத் தாக்கப் புறப்படுகின்றனர் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து மதீனாவில் இருந்த நயவஞ்சகர்கள் பல சதித்திட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களே வெற்றியடைகிறார்கள். அவர்கள் உலகில் எந்த சக்தியையும், அரசர்களையும் பயப்படுவதில்லை. மாறாக, நபியவர்களின் வழியில் குறுக்கிடும் தடைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றன என்பதை இந்த நயவஞ்சகர்கள் நன்றாக விளங்கியிருந்தும் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று ஆசைப்பட்டனர்.

''தங்களுடைய சதித்திட்டங்களைத் தீட்டுவதற்குத் தகுந்த இடமாக ஒரு பள்ளிவாசலையும் அமைத்துக் கொண்டனர். முஸ்லிம்களுக்குக் கெடுதல் செய்வதற்காகவும், அவர்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்குவதற்காகவும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பவர்களுக்குப் பதுங்குமிடமாகவும் அமைய இப்பள்ளியை ஏற்படுத்தினர்'' என்று இந்தப் பள்ளியைப் பற்றி குர்ஆனிலேயே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இப்பள்ளியைக் கட்டிய பின் நபி (ஸல்) அதில் தொழுகை நடத்த வரவேண்டுமென கோரினர். அவர்களது நோக்கமெல்லாம் ''முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் இப்பள்ளியில் தாங்கள் செய்யும் சதிகளைப் பற்றி முஸ்லிம்கள் தெரிந்து கொள்ளக் கூடாது தங்களுக்கும் வெளியிலுள்ள முஸ்லிம்களின் எதிரிகளான தங்களின் நண்பர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இது அமைய வேண்டும்'' என்பதே.

அவர்கள் பலமுறை நபி (ஸல்) அவர்களிடம் வந்து அந்தப் பள்ளியில் தொழுகை நடத்த வருமாறு கேட்டுக் கொண்டும், நபி (ஸல்) அதைத் தவிர்த்து வந்தார்கள். இறுதியில் 'தபூக் போர்' முடிந்து திரும்பும் போது இப்பள்ளியின் நோக்கத்தைப் பற்றிய முழுச் செய்தியையும் அல்லாஹ் தன் நபியவர்களுக்கு அறிவித்து, அந்த நயவஞ்சகர்களைக் கேவலப்படுத்தி விட்டான். எனவே, போரிலிருந்து திரும்பியபின் அப்பள்ளியை இடித்துத் தகர்க்குமாறு கட்டளையிட்டார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, ஷாம் தேசத்திலிருந்து மதீனாவுக்கு ஜைத்தூன் எண்ணெய் விற்பனைக்காக வந்திருந்த நிஃப்த்திகள் 'ஹிர்கல் நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட பெரும் படையை தயார் செய்து விட்டான். தனது ஆளுநர்களில் ஒருவரை அப்படைக்குத் தலைமை ஏற்கச் செய்து, அரபியர்களில் கிறிஸ்தவர்களாக மாறியிருந்த லக்கும், ஜுதாம் ஆகிய இரு கோத்திரங்களையும் அப்படையில் இணைத்திருக்கிறான். இப்படையின் முற்பகுதி தற்போது பல்கா வந்தடைந்து இருக்கிறது'' என்ற அதிர்ச்சி தரும் செய்தியை முஸ்லிம்களின் காதுகளில் போட்டனர். மிகப் பெரிய ஆபத்து வந்துவிட்டதை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

நிலைமை மேலும் மோசமாகுதல்

மேற்கூறியது ஒருபுறமிருக்க, அக்காலம் கடுமையான வெய்யில் காலமாக இருந்தது. மக்களும் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும், அது பேரீத்தம் பழங்களின் அறுவடை காலமாகவும் இருந்தது. தங்களின் அறுவடையில் ஈடுபடுவதும், மதீனா நிழலில் இளைப்பாறுவதும் அவர்களுக்கு மிக விருப்பமாக இருந்தது. அதுமட்டுமின்றி செல்ல வேண்டிய இடமும் மிகத் தொலைவில் இருந்ததுடன், அந்தப் பாதையும் கரடுமுரடானதாக இருந்தது. மேற்கண்ட காரணங்களால் போருக்குப் புறப்படுவது முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமானதாகவே இருந்தது.

நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

இந்த எல்லா நிலைமைகளையும் நபி (ஸல்) உன்னிப்பாகக் கவனித்து வந்தார்கள். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது முஸ்லிம்களின் எல்லைக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் முஸ்லிம் இராணுவத்தின் கௌரவத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவையும் களங்கத்தையும் ஏற்படுத்திவிடும். ஹுனைன் யுத்தத்தில் படுதோல்வி கண்டபின் தனது இறுதி மூச்சை எண்ணிக் கொண்டிருக்கும் முஷ்ரிக்குகள் மீண்டும் உயிர்பெற்றெழுவார்கள். முஸ்லிம்களுக்குச் சோதனைகளும், ஆபத்துகளும் நிகழ வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கும் நயவஞ்சகர்கள் பாவி அபூ ஆமின் உதவியுடன் ரோம் நாட்டு மன்னனுடன் தொடர்பு வைத்திருந்தனர். முஸ்லிம்கள் மீது ரோமர்கள் தாக்குதல் நடத்தினால் இந்த நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் முதுகுக்குப் பின்னாலிருந்து தாக்கி அழிப்பார்கள். இதனால் இஸ்லாமைப் பரப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இதுநாள் வரை செய்து வந்த அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பல போர்களையும் படையெடுப்புகளையும் சந்தித்து, உயிராலும் பொருளாலும் பல தியாகங்களைச் செய்ததின் மூலமாக கிடைத்த பயன்கள் எல்லாம் வீணாகிவிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த நபி (ஸல்) ''எவ்வளவுதான் சிரமம் ஏற்பட்டாலும் ரோமர்களது எல்லைக்கும் செல்லக் கூடாது, அதே சமயம் இஸ்லாமிய எல்லையில் அவர்கள் படையுடன் நுழைய வாய்ப்பும் அளிக்கக் கூடாது'' என்று திட்டவட்டமான முடிவெடுத்தார்கள்.

ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

நபி (ஸல்) தங்களின் நிலைமையை அறிந்து தெளிவாக முடிவெடுத்த பின் போருக்குத் தயாராகுங்கள் என தங்களது தோழர்களுக்கு அறிவித்தார்கள். அருகிலுள்ள அரபு கோத்திரத்தாருக்கும், மக்கா வாசிகளுக்கும் தங்களது தோழர்களின் குழுக்களை அனுப்பி போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) ஒரு போருக்காகச் செல்லும்போது, தான் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிடாமல் அதற்கு மாற்றமாக வேறொர் இடத்திற்குச் செல்கிறோம் என்று குறிப்பிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை பெரும் ஆபத்திற்குரியதாக இருப்பதாலும், மிகக் கடுமையான வறுமை நிலைமையில் இருப்பதாலும் தங்களின் நோக்கத்தை நபி (ஸல்) வெளிப்படையாகக் கூறினார்கள். ''நாம் ரோமர்களை சந்திக்க இருக்கிறோம் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தி, அதற்குத் தேவையான முழு தயாரிப்புகளையும் செய்து கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தி, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்கு ஆர்வமூட்டினார்கள். அல்லாஹ் அத்தியாயம் பராஆவின் ஒரு பகுதியை இறக்கிவைத்தான். துணிவுடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும், இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் அவர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினான். நபி (ஸல்) அவர்களும் தர்மம் செய்வதின் சிறப்புகளையும், அல்லாஹ்வின் பாதையில் தங்களின் உயர்வான பொருட்களைச் செலவு செய்வதின் சிறப்புகளையும் கூறி தங்களின் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு போருக்குத் தயாராகுகின்றனர்

ரோமர்களிடம் போர் புரிய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் அழைப்பைக் கேட்டதுதான் தாமதம், முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க வெகு விரைவாக போருக்குத் தயாராகினர். மக்காவைச் சுற்றியுள்ள அரபி கோத்திரத்தார்கள் எல்லாம் பல வழிகளில் மதீனா வந்து குழுமினர். உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மையுள்ளவர்களைத் தவிர போரில் கலந்து கொள்ளாமலிருப்பதை மற்றெவரும் அறவே விரும்பவில்லை. ஆம்! நபி (ஸல்) அவர்களின் அந்த நெருக்கமான மூன்று தோழர்களைத் தவிர. இவர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை. மற்றும் தங்களின் போருக்கான செலவுகளைச் செய்ய இயலாத வறுமையில் உள்ள நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்'' என்று கேட்டனர். நபி (ஸல்) மிக்க கவலையுடன் ''உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம் ஒன்றுமில்லையே'' என்றார்கள். அந்தப் பதிலை கேட்ட தோழர்கள் ''அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எங்களிடம் வசதி இல்லையே!'' என்று அழுதவர்களாக சபையிலிருந்து திரும்பிச் சென்றனர்.

(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு ''உங்களை ஏற்றிச் செல்லக் கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாது போன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.) (அல்குர்ஆன் 9:92)

முஸ்லிம்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு அல்லாஹ்வின் பாதையில் பொருட்களைச் செலவு செய்வதிலும், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழர் உஸ்மான் (ரழி) ஷாம் நாட்டு வியாபாரத்திற்கு அனுப்புவதற்காக ஒரு குழுவை தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் இருநூறு ஒட்டகைகள், அதற்குரிய முழு சாதனங்களுடன் இருந்தன. மேலும், இருநூறு ஊக்கியா வெள்ளிகளும் இருந்தன. அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு அவை அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் தர்மமாக வழங்கினார்கள். பின்பு ஓரு நாட்கள் கழித்து முழு சாதனங்களுடன் உள்ள நூறு ஒட்டகைகளை தர்மமாக வழங்கிவிட்டு ஆயிரம் தங்க காசுகளை நபி (ஸல்) அவர்களின் மடியில் பரப்பினார்கள். அதை நபி (ஸல்) புரட்டியவர்களாக ''இன்றைய தினத்திற்குப் பின் உஸ்மான் எது செய்தாலும் அது அவருக்கு இடையூறளிக்காது'' எனக் கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

இந்தளவுடன் நிறுத்திக் கொள்ளாமல் உஸ்மான் (ரழி) மேன்மேலும் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கினார்கள். இப்போருக்காக மொத்தத்தில் தொள்ளாயிரம் ஒட்டகைகளையும், நூறு குதிரைகளையும் வழங்கினார்கள். இதுமட்டுமின்றி ஏராளமானத் தங்க வெள்ளி காசுகளையும் வாரி வழங்கினார்கள்.

இப்போருக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) இருநூறு ஊக்கியா வெள்ளிகளை வழங்கினார்கள். அபூபக்ர் (ரழி) தனது செல்வம் அனைத்தையும் வழங்கினார்கள். தனது குடும்பத்தினருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தவிர வேறெதையும் விட்டு வைக்கவில்லை. இப்போருக்காக முதன் முதலில் தனது பொருளை வழங்கியவர் அவர்தான். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கியது மொத்தம் நான்காயிரம் திர்ஹமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது செல்வத்தில் பாதியை, அப்பாஸ் (ரழி) பெரும் செல்வத்தை, தல்ஹா, ஸஅது இப்னு உபாதா, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) ஆகியோரும் தங்களின் பெரும்பகுதி செல்வத்தை வழங்கினார்கள். ஆஸிம் இப்னு அதி (ரழி) தொண்ணூறு வஸ்க் பேரீத்தம் பழங்களை வழங்கினார்கள். இவ்வாறு குறைவாகவோ அதிகமாகவோ தங்களால் முடிந்ததை எவ்விதக் கஞ்சத்தனமுமின்றி மக்கள் அல்லாஹ்வின் பாதையில் வழங்கினார்கள். ஒரு சிலர், ஒன்று அல்லது இரண்டு 'முத்'கள் (முத்' என்பது ஓர் அளவாகும்.) தானியங்களை வழங்கினர். அதைத் தவிர அவர்களிடம் வேறெதுவும் இருக்கவில்லை. பெண்கள் தங்களிடமிருந்த வளையல்கள், கால், காது அணிகலன்கள், மோதிரங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மை உள்ளவர்களே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கருமித்தனம் செய்தனர்.

இவர்கள் எத்தகையவர்கள் என்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருட்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக) கூலி வேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள் பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான். அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 9:79)

தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை...

இவ்வாறு முடிந்தளவு முன்னேற்பாடுகளுடன் இஸ்லாமியப் படை மதீனாவிலிருந்து புறப்பட்டது. மதீனாவில் நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) என்றும், சிலர் ஸபா இப்னு உர்ஃபுதா (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) தங்களது குடும்பத்திற்கு அலீ இப்னு அபூதாலிபை (ரழி) பிரதிநிதியாக நியமித்தார்கள். படை புறப்பட்ட பின் இதைப் பற்றி நயவஞ்சகர்கள் குத்தலாகப் பேசவே, அலீ (ரழி) மதீனாவில் இருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்தார்கள். ''மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) இருந்ததைப் போன்று நீ எனக்கு இருக்க விரும்பவில்லையா? ஆனால், எனக்குப் பின் எந்தவொரு நபியும் இல்லை'' என்று கூறி, அலீயை மதீனாவிற்கு திரும்ப அனுப்பி விட்டார்கள்.

படை மதீனாவிலிருந்து வியாழக்கிழமை தபூக்கை நோக்கிப் புறப்பட்டது. படையின் தயாரிப்புக்காக எவ்வளவுதான் செலவு செய்த போதிலும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை முப்பதாயிரமாக இருந்ததால், வீரர்களின் எண்ணிக்கை அளவுக்கு வாகன வசதியும், உணவும் இல்லாமலிருந்தது. ஒரே ஓர் ஒட்டகத்தில் முறை வைத்து பதினெட்டு நபர்கள் வாகனித்தனர். உணவுப் பற்றாக்குறையால் இலை தழைகளைச் சாப்பிட்டதால் வாயெல்லாம் புண்ணாகி விட்டன. தண்ணீருக்காக ஒட்டகங்களை அறுத்து அதன் இரப்பையில் இருக்கும் நீரை அருந்தும் அளவிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இக்காரணத்தால் இப்படைக்கு 'ஜய்ஷுல் உஸ்ரா (வறுமைப் படை) என்று பெயர் வந்தது.

தபூக்கை நோக்கிச் செல்லும் வழியில் 'ஜ்ர்' என்னும் ஊர் வந்தது. 'வாதில் குரா' என்ற பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரின் வீடுகள் இங்குதான் இருந்தன. தாகம் மிகுதியால் அங்குள்ள கிணற்றிலிருந்து தங்களது பாத்திரங்களிலும் துருத்திகளிலும் தண்ணீரை நிரப்பிக் கொண்டார்கள். ஆனால், ''அந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள், அதில் உழுவும் செய்யாதீர்கள், அதிலிருந்து குழைத்த மாவை ஒட்டகங்களுக்குக் கொடுத்து விடுங்கள், நீங்கள் அதிலிருந்து எதையும் சாப்பிடாதீர்கள். அதை அடுத்துள்ள ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் தண்ணீர் குடித்த கிணற்றிலிருந்து நீரை சேமித்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) ஹிஜ்ர் பகுதிக்கு வந்தபோது ''தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்தவர்களின் இடங்களை நீங்கள் கடந்துச் செல்லும்போது அழுதவர்களாக செல்லுங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை உங்களுக்கும் ஏற்படலாம் என பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறி தங்களது தலையை மறைத்துக் கொண்டு அந்தப் பள்ளத்தாக்கை விரைவாகக் கடந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

வழியில் படைக்குத் தண்ணீரின் தேவை அதிகமாகவே, நபியவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபி (ஸல்) அல்லாஹ்விடம் தண்ணீர் புகட்டக் கோரி இறைஞ்சினார்கள். அல்லாஹ் தாகத்தைப் போக்க மேகத்தை அனுப்பி மழை பொழியச் செய்தான். மக்கள் தாகம் தணிந்து பாத்திரங்களிலும் மழை நீரைச் சேமித்துக் கொண்டார்கள்.

''தபூக்கிற்கு மிக நெருக்கமாக வந்தவுடன் நாளை நீங்கள் தபூக் நகரின் ஊற்றை சென்றடைவீர்கள். முற்பகல் வருவதற்குள் அங்கு செல்ல வேண்டாம். அங்கு சென்றவுடன் நான் வரும்வரை அந்த ஊற்றை யாரும் நெருங்கவும் வேண்டாம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

''நாங்கள் தபூக் வந்தபோது எங்களில் இருவர் முந்திக் கொண்டு அந்த ஊற்றுக்குச் சென்று விட்டனர். அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் சிறுகச் சிறுக வெளியேறிக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவ்விருவரிடம் ''நீங்கள் அந்தத் தண்ணீரைத் தொட்டீர்களா?'' என்று கேட்க அவர்கள் ''ஆம்!'' என்றனர். அவ்விருவருக்கும் அல்லாஹ் நாடியவாறு சிலவற்றைக் கூறிய நபி (ஸல்) அவ்வூற்றுக் கண்ணிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அள்ளி ஒரு பாத்திரத்தில் நிரப்பி, பின்பு அதில் தங்களது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு அந்தத் தண்ணீரை மீண்டும் அந்த ஊற்றில் கொட்டினார்கள். அங்கிருந்து தண்ணீர் பீறிட்டு வழிந்தோடியது. மக்களெல்லாம் நீர் பருகிக் கொண்டார்கள். பின்பு ''முஆதே உனது வாழ்க்கை நீண்டதாக இருந்தால் வெகு விரைவில் இந்த இடங்கள் தோட்டங்களாக மாறுவதைப் பார்ப்பாய்'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தபூக் செல்லும் வழியில் அல்லது சென்றடைந்த பிறகு (இரு விதமாகவும் சொல்லப்படுகின்றது) ''இன்றிரவு உங்கள் மீது கடுமையான காற்று வீசும். யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் உள்ளவர்கள் அதைக் கட்டி வைக்கவும்'' என நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே அன்றிரவு கடுமையான காற்று வீசியது. படையில் ஒருவர் எழுந்து நின்றுவிட்டார். அவர் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு 'தை' மலையில் வீசப்பட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) பயணத்தில் ளுஹ்ரை அஸருடன் அல்லது அஸ்ரை ளுஹ்ருடன், மஃரிபை இஷாவுடன் அல்லது இஷாவை மஃரிபுடன் சேர்த்து தொழுது வந்தார்கள்.

தபூக்கில் இஸ்லாமியப் படை

இஸ்லாமியப் படை தபூக் வந்தடைந்து தனது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டு எதிரிகளைச் சந்திப்பதற்கு எந்நேரமும் ஆயத்தமாக இருந்தது. நபி (ஸல்) எழுந்து நின்று வீரத்திற்கு உரமூட்டும் பேருரை நிகழ்த்தினார்கள். ஈருலக நன்மையை அடைந்து கொள்வதற்கு ஆர்வப்படுத்தியதுடன், அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்தார்கள். ஆன்மாக்களுக்கு வலிமை ஊட்டினார்கள். பொருளாதாரத்தாலும் தயாரிப்புகளாலும் பின்தங்கியுள்ளோம் என எண்ணியிருந்த முஸ்லிம்களிடமிருந்து தாழ்வு மனப்பான்மையையும் சோர்வையும் இந்தப் பிரச்சாரத்தின் மூலமாக அகற்றினார்கள்.

மற்றொருபுறம் நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கமடைந்தார்கள். அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றி தங்களது நாட்டுக்குள் பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. இதனால் அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்குப் பெரும் பயன்களும் கிடைத்தன. ஒருக்கால் ரோமர்கள் வந்து போர் நடந்திருந்தால் கூட, இந்தளவு நன்மைகள் கிடைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது.

தபூக்கிற்கு அருகிலிருந்த அய்லா பகுதியின் தலைவர் யுஹன்னா இப்னு ரூஃபா தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்து கொடுத்ததுடன் ஜிஸ்யாவையும் நிறைவேற்றினார். மேலும், 'ஜர்பா' பகுதியினரும் 'அத்ருஹ்' பகுதியினரும் ஒப்பந்தம் செய்து ஜிஸ்யாவையும் வழங்கினர். நபி (ஸல்) ஒப்பந்தப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். இவ்வாறே மீனா பகுதி மக்களும் தங்கள் பகுதியில் விளையும் கனிவர்க்கங்களில் 1-4 பங்கை வழங்கி விடுவதாக சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அய்லாவின் தலைவருக்கு நபி (ஸல்) எழுதிக் கொடுத்த ஒப்பந்தமாவது:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் புறத்திலிருந்தும் யுஹன்னா இப்னு ருஃபாவுக்கும் அய்லாவாசிகளுக்கும் வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்தமாகும் இது. கடலில் செல்லும் இவர்களது கப்பல்களுக்கும், பூமியில் செல்லும் இவர்களது பயணக் கூட்டங்களுக்கும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பும் முஹம்மதுடைய பாதுகாப்பும் உண்டு. மேலும், ஷாம் நாட்டிலும் இவர்களது கடல் பகுதியை சுற்றி வாழும் மக்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உண்டு. ஆனால், இவர்களில் யாராவது குழப்பம், கலகம் செய்தால் அவரது உயிர், பொருள் பாதுகாக்கப்படாது. அவரை அடக்குபவருக்கு அவரது பொருள் சொந்தமாகிவிடும். இவர்கள் தண்ணீருக்காக செல்லும்போது யாரும் தடுக்கக் கூடாது. கடலிலோ தரையிலோ பயணிக்கும் போது யாரும் குறுக்கிடக் கூடாது.''

அடுத்து, இருபத்து நான்கு குதிரை வீரர்களுடன் தூமதுல் ஜந்தலின் தலைவர் உகைதிர் என்பவரை பிடித்து வருவதற்காக காலித் பின் வலீதை நபி (ஸல்) அனுப்பினார்கள். மேலும், ''நீ அவரை சந்திக்கும் போது அவர் ஒரு மாட்டை வேட்டையாடிக் கொண்டிருப்பார்'' என்றும் நபி (ஸல்) காலிதிடம் கூறினார்கள். காலித் (ரழி) உகைதின் கோட்டைக்கு அருகில் சென்று தாமதித்தார். அப்போது ஒரு மாடு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வெளியேறி உகைதின் கோட்டைக் கதவை கொம்புகளால் உராய்ந்து கொண்டிருந்தது. உகைதிர் அதை வேட்டையாடி பிடிப்பதற்காகக் கோட்டைக்கு வெளியே வந்தார். அன்று பௌர்ணமி இரவாக இருந்தது. காலித் தனது படையுடன் சென்று உகைதிரை பிடித்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம் ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகள் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஜிஸ்யா தருவதாகவும் ஒப்புக் கொண்டார். முன் சென்றவர்களுடன் ஒப்பந்தம் செய்தது போன்று நபி (ஸல்) இவருடனும் செய்து கொண்டார்கள்.

ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்கள் எல்லாம் ''இனி நம்முடைய பழைய தலைவர்களை நம்புவதில் பலனில்லை. அந்தக் காலம் மலையேறி விட்டது. இனி முஸ்லிம்களுக்குத்தான் நாம் பணிய நேரிடும்'' என நன்கு புரிந்திருந்தனர். இவ்வாறே இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து விரிவாகி ரோம ராஜ்ஜியத்தைத் தொட்டது. பெரும்பாலான அரபு பகுதியிலுள்ள ரோம ஆளுநர்களின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது.

மதீனாவிற்குத் திரும்புதல்

தபூக்கிலிருந்து இஸ்லாமிய ராணுவம் சண்டையின்றி வெற்றி வாகை சூடி மதீனா வந்தது. சண்டைகளிலிருந்து இறைநம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். வழியில் ஒரு கணவாயை அடையும்போது நபி (ஸல்) அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் சதித்திட்டம் தீட்டினர். நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முன் பக்கத்தில் இருந்து அம்மார் இழுத்துச் செல்ல, ஹுதைஃபா (ரழி) ஒட்டகத்தைப் பின்னாலிருந்து ஓட்டிச் சென்றார். திடீரென ஒரு கூட்டம் முகங்களை மறைத்தவர்களாக இம்மூவரையும் சூழ்ந்து கொண்டனர். ஹுதைஃபா (ரழி) தன்னிடமிருந்த வளைந்த கைத்தடியால் சூழ்ச்சிக்காரர்களுடைய வாகனங்களின் முகத்தை நோக்கி சுழற்றி அடித்தார். நபித்தோழர்கள் உஷாராக இருப்பதைக் கண்ட அந்தக் கும்பலின் உள்ளத்தில் பயம் கவ்வியதும் தப்பி ஓடி, முஸ்லிம்களின் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். அந்தக் கும்பலில் வந்தவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பதை நபி (ஸல்) விவரித்துக் கூறினார்கள். இதனால்தான் ஹுதைஃபாவுக்கு ''நபியின் அந்தரங்கத் தோழர்'' என்ற புனைப் பெயரும் உண்டு.

இந்நிகழ்ச்சி குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

(உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி அவர்கள்) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் முயற்சித்தனர். (அல்குர்ஆன் 9:74)

வெகு தூரத்தில் மதீனாவின் கட்டடங்கள் தெரியவே ''இது தாபா (இது சிறந்த ஊர்). இதோ உஹுது மலை. இது நம்மை நேசிக்கிறது. நாமும் இதனை நேசிக்கிறோம்'' என நபி (ஸல்) கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையை கேள்விப்பட்ட முஸ்லிம்களில் பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் அனைவரும் மதீனாவுக்கு வெளியே வந்து மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று,

''நம் எதிரே முழு நிலா தோன்றியது

வழியனுப்பும் பாறைகளிலிருந்து.

நன்றி கூறல் நம்மீது கடமை;

அல்லாஹ்வை அழைப்பவர் அழைக்கும் வரை.''

என்று பாடினர்.

ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இப்போருக்காக ஐம்பது நாட்கள் செலவாயின. அதாவது, இருபது நாட்கள் தபூக்கில் தங்கினார்கள். மீதம் முப்பது நாட்கள் இதற்கான பயணத்தில் கழிந்தன. இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.

பின்தங்கியவர்கள்

இப்போர் அதன் விசேஷ நிலைமைகளைப் பொறுத்து அல்லாஹ்வின் மிகப்பெரும் சோதனையாக அமைந்திருந்தது. உண்மை முஸ்லிம் யார் என இப்போர் இனங்காட்டி விட்டது. ஆம்! இதுபோன்ற நிலைமையில் அல்லாஹ்வின் நடைமுறை அவ்வாறே அமைந்திருந்தது. இதையே அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். (அல்குர்ஆன் 3:179)

அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் முழுமையாக ஏற்று நடந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொள்ள புறப்பட்டனர். இதில் கலந்து கொள்ளாதவர்களை உள்ளத்தில் நயவஞ்சகம் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது. ஒரு நபர் போருக்குச் செல்லாது பின்தங்கி விட்டார் என நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டால் ''அவரைப் பற்றி எதுவும் பேசாதீர்கள். அவரிடம் ஏதேனும் நன்மை இருக்குமாயின் அல்லாஹ் நம்முடன் அவரை இணைத்து வைப்பான். அவ்வாறு இல்லாவிட்டால் நம்மை அவரை விட்டு காப்பாற்றி நிம்மதியைத் தருவான்'' என்று ஆறுதல் கூறுவார்கள். உண்மையில் தகுந்த காரணமுள்ளவர்கள் அல்லது நயவஞ்சகர்கள் இவர்களைத் தவிர அனைவரும் போரில் கலந்து கொண்டனர். சில நயவஞ்சகர்கள் பொய்க் காரணங்களைக் கூறியும், சில நயவஞ்சகர்கள் காரணம் ஏதும் கூறாமலேயே போரைப் புறக்கணித்தனர். ஆம்! உண்மையான நம்பிக்கையாளர்கள் மூவர் தகுந்த காரணமின்றியே போரில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களை அல்லாஹ் சோதித்தான். பிறகு அவர்கள் மனம் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதால் அவர்களை மன்னித்து விட்டான்.

மதீனாவிற்கு வருகை தந்த நபி (ஸல்) பள்ளியில் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு மக்களைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். எண்பதுக்கும் அதிகமான நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பல காரணங்களைக் கூறி, தாங்கள் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தனர். தாங்கள் உண்மையே உரைப்பதாகக் கூறி தங்களது சொல்லுக்கு வலிமை சேர்ப்பதற்காக பொய் சத்தியமும் செய்தனர். நபி (ஸல்) அந்தரங்கக் காரணங்களைத் தோண்டித் துருவாமல் வெளிப்படையான அவர்களது காரணங்களை ஏற்று, வாக்குறுதி வாங்கிக் கொண்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவர்களது அந்தரங்க விஷயத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டார்கள்.

உண்மை விசுவாசிகளில் பின்தங்கிய கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீ, ஹிலால் இப்னு உமையா (ரழி) ஆகிய மூவரும் பொய்க் காரணங்களைக் கூறாமல் தங்களது உண்மை நிலைமையைத் தெரிவித்து விட்டனர். நபி (ஸல்) இம்மூவரின் விஷயத்தில் ''அல்லாஹ்வின் தீர்ப்பு வரும்வரை யாரும் இவர்களிடம் பேச வேண்டாம்'' என தோழர்களுக்குக் கட்டளையிட்டு விட்டார்கள். நபியவர்களும் தோழர்களும் அவர்களிடம் பேசாமல் புறக்கணித்து ஒதுக்கி வைத்த காரணத்தால் அம்மூவருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதே நிலையில் நாற்பது நாட்கள் கழிந்த பின்பு மூவரும் அவரவர் மனைவியை விட்டு விலகியிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஐம்பது நாட்கள் கழிந்தன. இந்நாட்களில் அவர்களின் மனநிலையை அல்லாஹ்வே அறிவான். பிறகு அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான்.

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:118)

இவ்வசனம் இறக்கப்பட்டதும் மூவர் மட்டுமின்றி முஸ்லிம்களும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தனர். அல்லாஹ் தங்களை மன்னித்த ஆனந்தத்தால் ஏராளமான தான தர்மங்களை வாரி வழங்கினர். இந்நாளை தங்களது வாழ்வின் பாக்கியமான நாளாகக் கருதினர். போரில் தக்க காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதாவது:

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது எந்த குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) எந்த வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:91)

மதீனாவுக்கு அருகில் வந்தபோது ''மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் பயணித்த இடங்களிலெல்லாம் அவர்களும் உங்களுடன் இருந்தனர். தகுந்த காரணம் ஒன்றே அவர்களைப் போரில் கலக்க விடாமல் செய்து விட்டது.'' என்று நபி (ஸல்) மேற்கூறப்பட்டவர்களை குறித்து கூறினார்கள். ''அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டேவா!'' (நம்முடன் வந்த நன்மையைப் பெறுகிறார்கள்!) என ஆச்சரியத்துடன் தோழர்கள் வினவினர். ''ஆம்! மதீனாவில் இருந்து கொண்டே! (நன்மையைப் பெறுகிறார்கள்)'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

போரின் தாக்கங்கள்

இப்போரினால் முஸ்லிம்களின் கை அரபிய தீபகற்பத்தில் ஓங்கியது. அரபிய தீபகற்பத்தில் இஸ்லாமைத் தவிர இனி வேறெந்த சக்தியும் வாழ முடியாது என்பதை அனைவரும் நன்றாக அறிந்தனர். எஞ்சியிருந்த சில மடையர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிரமங்களை எதிர்பார்க்கும் நயவஞ்சகர்கள் ஆகியோரின் உள்ளத்தில் மிச்ச மீதமிருந்த சில கெட்ட ஆசைகளும் அடியோடு அழிந்தன. இவர்கள் ரோமர்களின் உதவியோடு முஸ்லிம்களை வீழ்த்திவிடலாம் என்று இறுமாந்தது நாசமாகி விடவே, முற்றிலும் முஸ்லிம்களிடம் பணிந்து வாழத் தலைப்பட்டனர்.

முஸ்லிம்கள் இனி நயவஞ்சகர்களிடம் நளினமாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டுமென்ற தேவை இல்லாது போனது. அல்லாஹ்வும் இந்த நயவஞ்சகர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமென சட்டங்களை இறக்கி வைத்தான். இவர்களின் தர்மங்களை ஏற்பதோ, இவர்களுக்காக ஜனாஸா தொழுவதோ, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோ, இவர்களின் அடக்கத்தலங்களுக்குச் செல்வதோ கூடாது என தடை செய்து விட்டான். பள்ளி என்ற பெயரில் சூழ்ச்சிகள் செய்யவும், அதனைச் செயல்படுத்தவும் அவர்கள் பயன்படுத்திய இடங்களைத் தகர்த்தெரியுமாறு கட்டளையிட்டான். மேலும், அவர்களின் தீய பண்புகளை விவரித்து பல வசனங்களையும் இறக்கி வைத்த காரணத்தால் அவர்கள் மிகுந்த இழிவுக்குள்ளானார்கள். இந்த வசனங்கள் நயவஞ்சகர்கள் யார் எனத் தெளிவாக மதீனாவாசிகளுக்குச் சுட்டிக்காட்டுவது போல அமைந்திருந்தது. முதலாவதாக. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமை ஏற்கவும் அறியவும் மக்கள் அலை அலையாய் மதீனா நோக்கி வந்தனர். இரண்டாம் கட்டமான மக்கா வெற்றிக்குப் பின்போ இது பன்மடங்காகப் பெருகியது. மூன்றாம் கட்டமான தபூக் போருக்குப் பின் இவற்றையெல்லாம் மிகைக்கும் வகையில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டங்கூட்டமாக மதீனா வந்தனர்.

(இப்போரின் விவரங்கள் ''ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி'' ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.)

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போர் குறித்து பல திருவசனங்கள் அத்தியாயம் (பராஆ) தவ்பாவில் அருளப்பட்டன. அவற்றில், சில நபி (ஸல்) போருக்குப் புறப்படும் முன்பும், சில பயணத்தின் இடையிலும், சில போர் முடிந்து மதீனா திரும்பிய பின்பும் அருளப்பட்டன. அவற்றில் போரின் நிலவரங்கள், நயவஞ்சகர்களின் தீய குணங்கள், போரில் கலந்து கொண்ட தியாகிகள் மற்றும் உண்மை முஸ்லிம்களின் சிறப்புகள், போரில் கலந்து கொண்ட உண்மை முஃமின்கள், கலந்து கொள்ளாத உண்மை முஃமின்களின் பிழை பொறுத்தல் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன.

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகள் இந்த ஆண்டில் நடந்தன:

1) நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின்பு உவைமிர் அஜ்லானிக்கும், அவருடைய மனைவிக்குமிடையில் 'லிஆன்' (பழி சுமத்தி ஒருவரையொருவர் சபித்தல்) நடந்தது.

2) ''தவறு செய்து விட்டேன். என்னை தூய்மையாக்குங்கள்'' என நபியவர்களிடம் வந்த காமிதிய்யா பெண்மணி மீது 'ரஜ்ம்' தண்டனை நிறைவேற்றப்பட்டது.

3) ஹபஷா மன்னர் அஸ்ஹமா ரஜபு மாதத்தில் மரணமானார். அவருக்காக நபி (ஸல்) மதீனாவில் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

4) நபி (ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்தும் (ரழி) ஷஅபான் மாதத்தில் மரணமானார்கள். நபி (ஸல்) இதனால் மிகுந்த கவலையடைந்தார்கள். எனக்கு மூன்றாவதாக ஒரு மகள் இருந்தால், அவரையும் உங்களுக்கே மணமுடித்துத் தந்திருப்பேன் என உஸ்மான் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

5) தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்த பின்பு நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் இறந்து போனான். உமர் (ரழி) அவர்கள் தடுத்தும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்குத் தொழுகை நடத்தி இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள். இது தொடர்பாக உமர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையே ஏற்றமானது என குர்ஆன் வசனம் இறங்கியது.

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

ஒன்பதாவது ஆண்டு துல்ஹஜ் அல்லது துல்கஅதா மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை மக்கா அனுப்பினார்கள்.

மதீனாவிலிருந்து அபூபக்ர் (ரழி) புறப்பட்ட பின்பு அத்தியாயம் தவ்பாவின் முதல் வசனங்கள் இறக்கப்பட்டன. அதில் முஷ்ரிக்குகளுடன் இருந்த உடன்படிக்கைகளை முறித்துவிட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட்டான். தன் சார்பாக இதனை மக்களிடம் தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) 'அர்ஜ் அல்லது ழஜ்னான்' என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். ''தாங்கள் (அமீர்) தலைவராக வந்தீர்களா? அல்லது தலைவன் கீழ் செயல்பட வந்தீர்களா?'' என்று அபூபக்ர் (ரழி) கேட்க, அதற்கு ''நான் தங்களுடைய தலைமையில் பணியாற்றவே வந்திருக்கிறேன்'' என்று அலீ (ரழி) கூறினார்கள். பிறகு இருவரும் ஒன்றாக மக்கா சென்றனர்.

அபூபக்ர் (ரழி) மக்களுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றித் தந்தார்கள். ஹஜ் பிறை 10ல் ஜம்ரா அருகில் நின்று கொண்டு, மக்களுக்கு நபி (ஸல்) கூறியவற்றைச் சொல்லி ''ஒப்பந்தங்கள் அனைத்தும் இன்றுடன் முடிந்து விட்டன'' என்று அறிவித்தார்கள். மேலும், அவர்களுக்கு நான்கு மாதங்கள் தவணையளித்தார்கள். ஒப்பந்தமில்லாதவர்களுக்கும் நான்கு மாதத் தவணைக் கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தவர்கள் அதனை மீறாமலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிறருக்கு உதவி செய்யாமலும் இருந்தால் அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை தவணையளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

அபூபக்ர் (ரழி) தங்களது ஆட்களை அனுப்பி ''இந்த ஆண்டிற்குப் பிறகு முஷ்ரிக்குகள் யாரும் மக்கா வரக்கூடாது. நிர்வாணமாக கஅபாவை யாரும் வலம் வரக்கூடாது'' என்று அறிவிப்புச் செய்தார்கள். இது ''அரபுலகம் முழுவதும் சிலை வணக்கம் ஒழிந்தது இனி அது தலைதூக்க முடியாது'' என்று அறிவிப்பதற்குச் சமமாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

போர்கள் - ஒரு கண்ணோட்டம்

நபி (ஸல்) கலந்து கொண்ட போர்கள், நபி (ஸல்) அனுப்பி வைத்த படைப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் நிலைமைகள், பின்விளைவுகள், மாற்றங்கள் பற்றி நாம் ஆய்வு மேற்கொண்டாலும் அல்லது வேறு யார் ஆய்வு செய்தாலும் கீழ்க்கண்ட முடிவுக்கே வர வேண்டும்.

நபி (ஸல்) இறைத்தூதர்களில் தலைசிறந்து விளங்கியது போன்றே அனுபவம் வாய்ந்த ஒரு ராஜதந்தியாகவும், நிபுணத்துவம் நிறைந்த தலைசிறந்த தளபதியாகவும் விளங்கினார்கள். போரில் பல அனுபவம் பெற்ற தளபதிகளையும் தனது நுண்ணறிவால் மிஞ்சியிருந்தார்கள். தான் கலந்து கொண்ட எல்லா போர்க் களங்களிலும் அவர்களின் போர் திறனிலோ, ராணுவ முகாம்களைச் சரியான உறுதிமிக்க முக்கிய இடங்களில் அமைத்து போர் புரிவதிலோ ஒருக்காலும் தவறு நிகழ்ந்ததில்லை. இவை அனைத்திலும் எக்காலத்திலும் எந்தப் போர் தளபதிகளிடமும் இருந்திராத அரிய நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

உஹுத், ஹுனைன் ஆகிய போர்களில் படையினரின் தவறான முடிவுகளாலும், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ததாலும் தான் பின்னடைவு ஏற்பட்டது. இவ்விரண்டு போர்களில் முஸ்லிம்கள் தோற்று பின்னடைந்த போதிலும், நபி (ஸல்) புறமுதுகுக் காட்டாமல் எதிரிகளை முன்னோக்கிச் சென்று தங்களது துணிவையும் வீரத்தையும் நிலைநாட்டினார்கள். இதற்கு உஹுதுப் போர் ஓர் எடுத்துக்காட்டாகும். போரில் ஏற்பட்ட தோல்வியை வெற்றியாக மாற்றினார்கள். இதற்கு ஹுனைன் போரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதுபோன்ற உக்கிரமான போர்களில் படையினர் புறமுதுகிட்டுத் தோற்று திரும்பி ஓடும்போது தளபதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஆனால், நபி (ஸல்) அவ்வாறு செய்யாமல், எதிரிகளை நோக்கியே முன்னேறினார்கள். இதுவரை நாம் கூறியது நபியவர்களின் போர் நிபுணத்துவம் பற்றிய கண்ணோட்டமாகும்.

மேலும், இப்போர்களினால் அரபுலகம் முழுவதும் பாதுகாப்புப் பெற்றது. அங்கு நிம்மதி நிலவியது. குழப்பத் தீ அணைந்தது. இஸ்லாமிற்கும் சிலை வழிபாட்டிற்குமிடையே நடந்த போர்களில் எதிரிகளின் வலிமைக் குன்றியது. அவர்கள் சமாதானத்திற்கு அடிபணிந்தனர். இஸ்லாமிய அழைப்புப் பணி பரவுவதற்குண்டான தடைகளும் அகன்றன. இவை யாவும் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அறப்போர்களினால் ஏற்பட்டவை என்பது ஆய்வில் நமக்குத் தெரிய வரும் உண்மை. மேலும், இப்போர்களில் தன்னுடன் இருப்பவர்களில் உண்மையான தோழர் யார்? உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து மோசடி செய்யத் துடிக்கும் முனாஃபிக்குகள் யார்? என்பதை நபி (ஸல்) அவர்களால் பிரித்தறிய முடிந்தது.

இதுமட்டுமின்றி போரைத் தலைமையேற்று நடத்தும் மிகச் சிறந்த தளபதிகளையும் நபி (ஸல்) உருவாக்கினார்கள். இந்தத் தளபதிகள் இராக், ஷாம் போன்ற பகுதிகளில் பாரசீகர்களுடனும், ரோமர்களுடனும் போர் புரிந்தனர். நீண்ட காலம் வல்லரசுகளாக விளங்கிய ரோமானியர்களையும் பாரசீகர்களையும் விட மிகத் திறமையாக படையை வழி நடத்தி, தோட்டந்துரவுகளிலும் கோட்டை கொத்தளங்களிலும், மிக ஏகபோக அடக்குமுறையுடன் அராஜக வாழ்க்கை நடத்திய எதிரிகளை அவர்களது வீடு, வாசல், நாடுகளை விட்டு வெளியேற்றி வெற்றி கண்டனர்.

இதுபோன்றே போர்களினால் முஸ்லிம்களுக்குத் தேவையான குடியிருப்பு, விவசாய நிலங்கள், தொழில்துறை போன்றவற்றை நபி (ஸல்) வளப்படுத்தினார்கள். வீடுவாசலின்றி அகதிகளாக வந்த மக்களின் துயர் துடைத்தார்கள். இஸ்லாமிய அரசுக்குத் தேவையான ஆயுதங்கள், படை பலங்கள், வாகனங்கள், செலவீனங்கள் அனைத்தையும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். இவ்வனைத்து ஏற்பாடுகளையும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது வரம்புமீறல், அட்டூழியம் செய்தல் ஆகிய ஏதுமின்றியே செய்து வந்தார்கள். மேலும், இதுநாள் வரை அறியாமைக் காலத்தில் எந்த அடிப்படைக்காகவும், நோக்கங்களுக்காகவும் போர்த் தீ மூட்டப்பட்டு வந்ததோ அவை அனைத்தையும் அணைத்து முற்றிலும் மாற்றி அமைத்தார்கள்.

கொள்ளை, சூறையாடல், அநியாயம், அத்துமீறல், எளியோரை வாட்டுதல், கட்டடங்களை இடித்தல், பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தல், சிறுவர்கள், குழந்தைகள் போன்றவர்களுடன் கடின சித்தத்துடன் நடந்து கொள்ளுதல், விவசாயப் பயிர் நிலங்களைப் பாழ்படுத்துதல், அல்லாஹ்வின் பூமியில் குழப்பம், கலகம் விளைவித்தல் போன்ற கொடுஞ்செயல்கள் நிறைந்ததாகவே போர்கள் அக்காலத்தில் இருந்தன. ஆனால், நபி (ஸல்) உயர்ந்த இலட்சியங்களையும், சிறந்த நோக்கங்களையும், அழகிய முடிவுகளையும் கொண்டு வருவதற்குச் செய்யப்படும் ஒரு தியாகமாக விடுதலைக் காற்றை சுவாசிக்கத் துடிக்கும் ஒரு சுதந்திரப் போராட்டமாகப் போரை மாற்றினார்கள். மனித சமுதாயத்திற்கு கண்ணியம் அளிப்பது, அநியாயத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது, நீதத்திற்குக் கட்டுப்படுவது ஆகியவற்றையே போரின் நோக்கமாக்கினார்கள். பலமானவர், பலமில்லாதவரை சுரண்டி வாழும் தீய அமைப்பிலிருந்து விலக்கி, பலமில்லாதவரை பலமுள்ளவராக்கி தனது நியாயத்தை அடைந்து கொள்ளும் நல்லமைப்பிற்கு மனித சமுதாயத்தைக் கொண்டு வருவதையே போரின் இலட்சியமாக்கினார்கள். இதைத்தான் ஒடுக்கப்பட்டவர்களை, பலவீனமானவர்களை விடுவிப்பதற்காக போர் புரியுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர் புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ''எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 4:75)

ஆகவே மோசடி, அநியாயம், அழிச்சாட்டியம், பாவங்கள், அத்துமீறல் ஆகிய அனைத்தில் இருந்தும் அல்லாஹ்வின் பூமியைச் சுத்தப்படுத்தி அதில் அமைதி, பாதுகாப்பு, அன்பு, மனித நேயம் ஆகியவற்றை பரப்புவதும் நிலைநாட்டுவதும் தான் ஜிஹாதின் நோக்கமாகும். மேலும், போருக்கென மிக உயர்ந்த சட்ட ஒழுங்குகளை வரையறுத்து, அவற்றைத் தனது தளபதிகளும் படைகளும் பின்பற்ற வேண்டுமென கட்டாயமாக்கினார்கள். எவ்விதத்திலும் இச்சட்டங்கள் மீறப்படுவதை நபி (ஸல்) அனுமதிக்கவில்லை.

சுலைமான் இப்னு புரைதா (ரழி) தனது தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்: நபி (ஸல்) பெரிய அல்லது சிறிய படைக்குத் தளபதியை நியமித்தால் ''நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களது படையினரிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்'' என தளபதிக்கு விசேஷமாக வலியுறுத்தி உபதேசம் புரிந்துவிட்டு, அவருக்கும் படையினருக்கும் சேர்த்து கீழ்காணும் உபதேசம் செய்வார்கள்.

''அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள். அல்லாஹ்வை நிராகரிப்போருடன் போர் செய்யுங்கள். போரிடுங்கள்! களவாடாதீர்கள்! மோசடி செய்யாதீர்கள்! உறுப்புகளைச் சிதைக்காதீர்கள்! குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!''.மேலும், நீங்கள் எளிதாக்குங்கள் சிரமமாக்காதீர்கள் அமைதியை நிலைநாட்டுங்கள். வெறுப்படையச் செய்யாதீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம், முஃஜமுத் தப்ரானி)

நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுக்கச் செல்கையில், இரவு நேரமாக இருப்பின் காலை வரை பொறுத்திருப்பார்கள். உயிர்களை நெருப்பிலிட்டு பொசுக்குவதை நபி (ஸல்) வன்மையாகத் தடுத்தார்கள். சரணடைந்தவர்களைக் கொல்லக் கூடாது. பெண்களை கொல்வதோ அடிப்பதோ கூடாது. கொள்ளையடிக்கக் கூடாது. கொள்ளையடிக்கப்பட்ட பொருளை உண்பது, செத்த பிணத்தை உண்பதை விட கேவலமானது, விவசாய நிலம் மற்றும் மரங்களை அழிக்கக் கூடாது, ஆனால், எதிரியை அடக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி ஏதும் தென்படாவிட்டால் நிர்ப்பந்த சூழ்நிலையில் நிலம் மற்றும் மரங்களை அழிக்கலாம். இவ்வாறு போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகளை நபி (ஸல்) தமது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

மேலும், மக்கா வெற்றியின் போது ''காயம்பட்டோரை தாக்காதீர்கள்! புறமுதுகுக் காட்டி ஓடுபவரைத் துரத்தாதீர்கள்! கைதிகளைக் கொல்லாதீர்கள்'' என ஆணை பிறப்பித்தார்கள்.

ஒப்பந்தம், உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் கொல்லப்படுவதை மிக வன்மையாகக் கண்டித்து ''யார் ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டவரைக் கொன்று விட்டாரோ அவர் சுவன வாடையை நுகர மாட்டார். சுவன வாடையை நாற்பது ஆண்டுகள் தூரமாக இருந்தாலும் நுகரலாம்'' என நபி (ஸல்) எச்சரித்தார்கள்.

இன்னும் பல உயர்வான அடிப்படைகளை உருவாக்கியதன் மூலம் அறியாமைக் கால அசுத்தத்தை விட்டு போர்களைச் சுத்தமாக்கி அவற்றைப் புனிதப் போராக, மனிதநேயமிக்க ஜிஹாதாக மாற்றினார்கள். (ஜாதுல் மஆது)

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவுகின்றனர்

முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்க கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டது. இவ்வெற்றியால் பொய்யிலிருந்து மெய்யை, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை மக்கள் பிரித்து அறிந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்கள் நீங்கின. எனவே, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். இவ்விஷயத்தை உறுதி செய்யும் ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். அம்ர் இப்னு ஸலமா (ரழி) கூறுகிறார்:

மக்கள் பயணிக்கும் பாதையை ஒட்டி உள்ள கிணற்றின் அருகில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தோம். எங்களைக் கடந்து பயணிகள் செல்லும் போது அந்த மக்களின் செய்தி என்ன? இந்த மக்களின் செய்தி என்ன? அந்த மனிதன் யார்? (நபியென்று கூறும் அந்த ஆள் யார்?) என்று அவர்களிடம் விசாரிப்போம். அல்லாஹ் தன்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான் என தன்னைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருப்பதாக மக்கள் பதில் கூறுவர். அவர்கள் கூறும் கூற்றை என் அடிமனதில் பதிய வைத்து விடுவேன். அது நன்றாகப் படிந்து விடும். அரபி மக்கள் தாங்கள் முஸ்லிமாவதற்கு மக்கா வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர்.

அவர்களின் கூற்று என்னவெனில், ''இம்மனிதரையும் அவரது கூட்டத்தினரையும் அவரது போக்கில் விட்டு விடுங்கள். இவர் தமது கூட்டத்தாரை வெற்றி கண்டால் உண்மை நபியாவார். இவ்வாறு எண்ணம் கொண்டிருந்த அம்மக்கள், நபி (ஸல்) மக்காவை வெற்றி கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். எனது தந்தை தனது சமுதாயத்திற்கு முன்னரே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். பின்பு எங்களிடம் வந்து, ''இந்த நேரத்தில் இந்தத் தொழுகையை நிறைவேற்றுங்கள். இந்த நேரத்தில் இந்தத் தொழுகையைத் தொழுங்கள். நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் அதான் கூறட்டும். உங்களில் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மக்காவின் வெற்றி பல மாற்றங்களை நிகழ்த்தியது. இஸ்லாமுக்கு கண்ணியம் வழங்கி அரபியர்களை அதற்குப் பணிய வைத்தது என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக விளக்குகிறது. தபூக் போருக்குப் பின் இந்நிலை மேலும் முன்னேறியது. ஆகவேதான் ஹிஜ்ரி 9, 10 ஆகிய ஆண்டுகளில் மதீனாவை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக குழுக்கள் வரத் தொடங்கின. மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். மக்காவை மீட்கச் சென்றபோது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். ஆனால், மக்கா வெற்றிக்குப் பின் தபூக் போருக்கு சென்றபோது நபி (ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். தபூக் போர் முடிந்து நபி (ஸல்) ஹஜ்ஜுக்காக மக்கா பயணமானபோது முஸ்லிம்களின் ஒரு கடலே அவர்களுடன் இருந்தது. அதாவது தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் முழக்கங்கள் விண்ணை முட்ட ஒரு இலட்சம் அல்லது ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை புடை சூழ சென்றனர்.

No comments:

Post a Comment