ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Tuesday, January 20, 2015

[ரஹீக் 004] – ஆசிரியர் முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நேர்வழி மற்றும் சத்திய மார்க்கத்தை வழங்கி, உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்ளும்படி செய்தான். மேலும், சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனது கட்டளையைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும், பிரகாசிக்கும் கலங்கரை விளக்காகவும் அவரை ஆக்கினான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி அவனை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களுக்கு அத்தூதரிடம் அழகிய முன்மாதிரியை அமைத்தான்.

அல்லாஹ்வே! அத்தூதர் மற்றும் அவர்களது உறவினர்கள், தோழர்கள் ஆகியோரை மறுமை நாள் வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுவோருக்கு உனது அருளையும் ஈடேற்றத்தையும், நலம் பொருந்திய வளங்களையும், அன்பையும், பொருத்தத்தையும் என்றென்றும் வழங்குவாயாக!

மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி யாதெனில்: ஹிஜ்ரி 1396, ரபிஉல் அவ்வல் மாதம் பாகிஸ்தானில் ”ஸீரத்துன் நபி” (நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) குறித்து ஒரு மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களது ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி’ என்ற அமைப்பு அம்மாநாட்டில் ஒரு அகில உலக போட்டியை அறிவித்தது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக அழகிய ஓர் ஆய்வு கட்டுரையாக எழுதி அந்த அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுதான் அந்த அறிவிப்பு. வாக்கியங்களால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிறப்புமிக்கதாக இந்த அறிவிப்பை நான் கருதுகிறேன். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும், முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கின்றன என்பதை ஆழமாக ஆராயும்போது தெரிந்து கொள்ளலாம்.

அந்த சிறப்புமிக்க போட்டியில் கலந்து, கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிட்டியதை நான் எனக்குக் கிடைத்த நற்பேறாகக் கருதுகிறேன். எனினும், முன்னோர் பின்னோன் தலைவரான நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பற்றி முழுமையாக என்னால் கூறி முடிக்க இயலாது. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்து ஈடேற்றம் பெற விழையும் சாதாரண அடியான் நான். நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக மரணித்து அவர்களது பரிந்துரையால் அல்லாஹ் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதே அடியேனின் லட்சியம்.

அடுத்து, கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை ராபிதா அறிவித்திருந்தது. அது தவிர நானும் இந்த ஆய்வுக்காக எனக்கென பல நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டேன்.

அதாவது, சோர்வு ஏற்படுத்துமளவுக்கு நீளமாக இல்லாமலும், புரியமுடியாத வகையில் சுருக்கமாக இல்லாமலும் நடுநிலையாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் குறித்து பல மாறுபட்ட செய்திகள் இருந்து அவற்றிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லையெனில், ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் எனது பார்வையில் மிக ஏற்றமானதாக நான் கருதுவதை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடுவேன். நான் தெரிவு செய்ததற்கான காரணங்களை பக்கங்கள் அதிகமாகிவிடும் என்பதற்காக எழுதவில்லை.

மூத்த அறிஞர்கள் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும், அவர்களின் முடிவை அப்படியே நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் சரியானது அழகானது பலவீனமானது என எப்படி முடிவு செய்தாலும் அதையே நானும் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், இதுகுறித்து மேலாய்வு செய்வதற்கு போதுமான நேரம் என்னிடம் இல்லை.

நான் கூறும் கருத்துகள் படிப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம் என நான் அஞ்சும் இடங்களில் அல்லது பெரும்பாலான கருத்து நான் கூறும் உண்மையான கருத்துக்கு மாற்றமாக இருக்குமிடங்களில் மட்டும் நான் தெரிவு செய்த கருத்துக்குரிய ஆதாரங்களை சுட்டிக் காட்டியுள்ளேன். அல்லாஹ்தான் நல்வாய்ப்பு வழங்க போதுமானவன்.

அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நலவை முடிவு செய்! நீதான் மன்னிப்பாளன், அன்பு செலுத்துபவன், அர்ஷின் அதிபதி, கண்ணியத்திற்குரியவன்!!

ஸஃபிய்யுர் ரஹ்மான்,
முபாரக்பூர், இந்தியா.


சுட்டி: ரஹீக் ஆடியோ

No comments:

Post a Comment