ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Friday, March 20, 2015

[ரஹீக் 017]-நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்

இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்
போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின், மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துவதற்காக ராணுவ நடவடிக்கைகளை நபி (ஸல்) தொடங்கினார்கள். அதாவது, இந்த நடவடிக்கைகள் ஒரு கண்காணிப்பு ரோந்துப் பணிகளைப் போன்று அமைந்திருந்தன. இதனுடைய அடிப்படை நோக்கங்கள் என்னவெனில்:

மதீனாவைச் சுற்றியுள்ள அனைத்து தரை மார்க்கங்களையும், பொது வழிகளையும் நன்கு அறிந்து கொள்ளுதல், பழக்கப்படுத்திக் கொள்ளுதல். அவ்வாறே மக்காவை நோக்கி செல்லும் அனைத்து வழிகளையும் அறிந்து கொள்ளுதல்.

இந்த வழிகளில் குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்.

முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள், வலிமை பெற்றுவிட்டார்கள். பழைய இயலாமையிலிருந்து விடுதலையடைந்து விட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும் உணர்த்துதல்.

அத்துமீறி நடந்து கொண்டிருந்த குறைஷிகளுக்கு அவர்களின் முடிவு என்னவாகும் என்பதை எச்சரிக்கை செய்தல். ஏனெனில், இந்த எச்சரிக்கையின் விளைவாக தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தி வரும் தங்களது அழிச்சாட்டியங்களை விட்டு அவர்கள் விலகிக் கொள்ளலாம். தங்களதுப் பொருளாதார வழிகளும் பொருளாதாரங்களும் வெகு விரைவில் மிகப் பயங்கரமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படலாம். மேலும், முஸ்லிம்கள் அவர்களது நாட்டுக்குள் இருக்கும்போது அவர்களுடன் போர் செய்யும் எண்ணத்தை கைவிடலாம். பிறரை அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து தடுக்காமல் இருக்கலாம். மேலும், மக்காவிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து விலகிக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரேபிய தீபகற்பத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தைச் சுதந்திரமாக எடுத்து வைக்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் பெறுவார்கள்.

படைப் பிரிவுகளின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்:

1) 'ஸய்ஃபுல் பஹர்'

ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா (ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். 'ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள 'ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்தபோது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

இப்போரில் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

2) 'ராபிக்'

ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் 'ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல்முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

3. 'கர்ரார்'

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் 'கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

4) 'அப்வா' (அ) 'வத்தான்'

ஹிஜ்ரி 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக 'அல்அப்வா' அல்லது 'வத்தான்' என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த போரின் போது 'ழம்ரா' கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:

''இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது 'ழம்ரா' கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம். ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.''

இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப் போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

5) 'பூவாத்'

ஹிஜ்ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் 'ரழ்வா' என்ற மலைக்கருகில் உள்ள 'பூவாத்' என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக் கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

6) 'ஸஃப்வான்'

ஹிஜ்ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் 'குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்' என்பவன் சில முஷ்ரிக் வீரர்களுடன் மதீனாவின் மேய்ச்சல் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளில் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றான். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தங்களின் எழுபது தோழர்களை அழைத்துக் கொண்டு அவனை விரட்டிப் பிடிப்பதற்காக விரைந்தார்கள். பத்ருக்கு அருகிலுள்ள 'ஸஃப்வான்' என்ற இடம் வரை சென்றும் குருஸையும் அவனது ஆட்களையும் பிடிக்க முடியாததால் சண்டையின்றி திரும்பினார்கள். இந்தப் போருக்கு 'முதல் பத்ர் போர்' என்றும் பெயர் கூறப்படுகிறது.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் தனது பிரதிநிதியாக ஜைது இப்னு ஹாஸாவை நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

7) 'துல் உஷைரா'

ஹிஜ்ரி 2, ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போரில் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் 'துல் உஷைரா' என்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது தெரியவந்தது. இதே வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து திரும்ப வரும்போது அதை வழிமறிப்பதற்காகச் செல்லும் போதுதான் பிரபலமான இரண்டாவது பத்ர் போர் (பத்ர் அல் குப்ரா) நடைபெற்றது.

நபி (ஸல்) ஜுமாதா அல்ஊலா கடைசியில் இப்போருக்காக வெளியேறி ஜுமாதா அல்ஆகிரா தொடக்கத்தில் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.

முஸ்லிம்கள் மீது அத்துமீறக் கூடாது என முத்லிஜ், ழம்ரா மற்றும் அவர்களுடைய நட்பு கிளையினருடன் இப்பயணத்தில் நபி (ஸல்) ஒப்பந்தம் செய்தார்கள்.

இப்போருக்கு நபி (ஸல்) சென்றபோது மதீனாவில் அபூஸலமா இப்னு அப்துல் அஸத் அல்மக்ஜூமி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. இதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

8) 'நக்லா'

ஹிஜ்ரி 2, ரஜப் (கி.பி. 624 ஜனவரி) மாதம் நபி (ஸல்) 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை 'நக்லா' என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம் செய்தனர்.

நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, கடிதத்தைப் படித்துப் பார்த்தார்கள்.

அக்கடிதத்தில் ''நீர் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்கா மற்றும் தாயிஃபிற்கு மத்தியிலுள்ள 'நக்லா' என்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து எனக்கு செய்தி அனுப்புங்கள்'' என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) ''செவிமடுத்தோம் வழிப்பட்டோம்!'' என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

''நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர் என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். ஆனால், நான் போர் செய்யத் தயாராக இருக்கிறேன்'' என்று அப்துல்லாஹ் (ரழி) தங்கள் தோழர்களிடம் கூறினார். அவர்களது தோழர்கள் ''போருக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போது வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸும், உத்பா இப்னு கஸ்வானும் தாங்கள் வாகனித்த ஒட்டகத்தைத் தவற விட்டதால், அதைத் தேடுவதில் ஈடுபட்டு படையிலிருந்து பின்னடைந்து விட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் 'நக்லா' என்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். ''நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல் இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்'' - இவ்வாறு விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன் பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.

அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்' அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும். இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும், இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள். மேலும், ''சங்கைமிக்க மாதத்தில் போர் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லையே!'' என்று கண்டித்து விட்டு கைதிகள் மற்றும் வியாபாரப் பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள்.

இந்நிகழ்ச்சியை முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர் பயன்படுத்தினர். முஸ்லிம்கள் மீது பலவாறு பழி சுமத்தினாலும் அந்த அனைத்துப் பழிகளையும் பொய்யான கூற்றுகளையும் முற்றிலும் தகர்த்தெறியும்படி ஒரு வசனத்தை அல்லாஹ் குர்ஆனில் இறக்கினான். அந்த வசனத்தில் முஸ்லிம்கள் செய்ததை விட இணைவைப்போரின் செயல் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.

(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ''அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை (நீங்கள்) நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போரி(ல் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில், (அதை விட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையை விட மிகக் கொடியது. (அல்குர்ஆன் 2:217)

அதாவது, முஸ்லிம்கள் விஷயத்தில் இணைவைப்போர் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்களும் கூச்சல்களும் அடிப்படையற்றவை. ஏனெனில், முஸ்லிம்கள் விஷயத்தில் இவ்வாறு கூறுவதற்கு அந்த இணைவைப்போருக்குத் தகுதியே கிடையாது. இஸ்லாமை எதிர்ப்பதற்கும் முஸ்லிம்கள் மீது அநியாயமிழைப்பதற்கும் இந்த இணைவைப்போர் எவ்விதத்திலும் தயக்கம் காட்டவில்லை. முஸ்லிம்கள் சங்கைமிக்க மக்காவில் தங்கியிருந்தபோது அவர்களது பொருட்கள் அபகரிக்கப்பட்டன. நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வெறியுடன் அலைந்தனர். இன்னும் புனிதமிக்க எத்தனையோ கடமைகளையும் உரிமைகளையும் பாழாக்கிய இவர்களுக்கு புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? புனிதங்களையே மதிக்காத இவர்களுக்கு இப்பொழுது மட்டும் புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி எங்கிருந்து வந்தது? எனவே, முஸ்லிம்கள் இந்தப் புனிதத்தைப் பாழாக்கியது எந்த வகையிலும் அசிங்கமோ குற்றமோ இல்லை. ஆகவே, இணைவைப்பவர்கள் பரப்பிய இந்த வதந்திகள் முற்றிலும் கேவலமான ஒன்றே!

இவ்வசனம் இறக்கப்பட்டதற்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைதிகளையும் விடுவித்தார்கள். மேலும், கொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடும் வழங்கினர்கள். (ஜாதுல் மஆது)

மேற்கூறப்பட்ட (கஸ்வா, ஸய்யா) போர்கள் அனைத்தும் பத்ர் போருக்கு முன் நிகழ்ந்தவையாகும். இறுதியில் கூறப்பட்ட போரைத் தவிர வேறெதிலும் பொருட்கள் சூறையாடப்படவுமில்லை உயிர்கள் கொலை செய்யப்படவுமில்லை. ஆனால், குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்யீன் தலைமையின் கீழ் இணைவைப்பவர்கள் முஸ்லிம்களின் பொருட்களை கொள்ளையடித்த பின்பே முஸ்லிம்கள் பதில் நடவடிக்கை எடுத்தனர்.

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த மக்கா முஷ்ரிக்குகள் பயந்து நடுங்கினர். மிகப்பெரிய ஆபத்து தங்களுக்கு முன் உருவாகி விட்டதை உணர்ந்தனர். முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்துவிட்டால் எத்தகைய ஆபத்து நிகழும் என்று பயந்தனரோ அந்த ஆபத்தில் இப்போது சிக்கிக் கொண்டனர். மதீனாவாசிகள் மிகுந்த விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருக்கிறார்கள். தங்களின் வணிகப் பயணங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கண்காணிக்கின்றனர் முஸ்லிம்கள் 300 மைல்கள் கூட படையெடுத்து வந்து தங்களைக் கொலை செய்யவோ, சிறைபிடிக்கவோ, தங்களின் செல்வங்களை அள்ளிக்கொண்டு நிம்மதியாக திரும்பவோ முழு ஆற்றல் பெற்றுவிட்டனர் என்பதை இப்போது இந்த இணைவைப்பவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர்.

மேலும், தங்களின் ஷாம் தேசத்தை நோக்கிய வியாபார வழித்தடம் மிகுந்த ஆபத்திற்குள்ளாகி இருப்பதையும் நன்கு உணர்ந்து கொண்டனர். இருந்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகி ஜுஹைனா மற்றும் ழம்ரா கிளையினர் செய்ததைப் போன்று சமாதான வழியைக் கையாள்வதற்குப் பதிலாக மீண்டும் முன்பை விட அதிகமாக பகைமை கொள்ளலானார்கள். இதற்கு முன்னர் முஸ்லிம்களை அவர்களது நாட்டுக்குள் வைத்தே அழித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்ததை இப்போது நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று உறுதி பூண்டனர். மடத்தனமான இந்த எண்ணம்தான் இவர்களை பத்ர் போருக்கு அழைத்து வந்தது.

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் இந்த சம்பவத்திற்குப் பின்பு ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் போர் புரிவதை கடமையாக்கினான். இவ்விஷயத்தில் பல தெளிவான வசனங்களை இறக்கினான்.

உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) அத்துமீற வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.

ஆகவே (உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்துப் போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே!

(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்துப் போர் புரியாது) விலகிக் கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

அன்றி, (இஸ்லாமிற்கு எதிராகச் செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு), அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்து மீறக்கூடாது. (அல்குர்ஆன் 2:190-193)

மேற்கூறப்பட்ட வசனங்களைத் தொடர்ந்து மேலும் பல வசனங்களை இறக்கினான். அவ்வசனங்களில் போர் முறைகளைக் கற்றுக் கொடுத்து, போருக்கு ஆர்வமூட்டி அதன் சட்டங்களை விவரித்தான்.

(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்துப் போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்துவிட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாகவேனும் விட்டுவிடுங்கள்.

இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களைப் பழி வாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்.

ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கி விட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.

அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான். (அல்குர்ஆன் 47:4-7)

பின்பு, போர் கடமையாக்கப்பட்டதை கேள்விப்பட்டு உள்ளம் நடுங்கியவர்களை மிக வன்மையாக பழித்து குர்ஆன் வசனங்களை இறக்கினான்:

நம்பிக்கை கொண்டவர்களிலும் சிலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு, போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 47:20)

போர் கடமையாக்கப்பட்டதும், அதற்கு ஆர்வமூட்டப்பட்டதும், அதற்குரிய தயாரிப்புகளைச் செய்ய வேண்டுமென்று கட்டளையிடப்பட்டதும் அக்காலச் சூழ்நிலையின் தேவையாகவும் கட்டாயமாகவும் இருந்தது. சூழ்நிலைகளை நன்கு அலசிப்பார்க்கும் ஆற்றலுள்ள தலைவர் யாராக இருப்பினும் அக்கால அவசியத்தைக் கருதி திடீர் நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென தனது படைகளுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார். விஷயம் இவ்வாறிருக்க அனைத்தையும் அறிந்தவனும் மிகைத்தவனுமான அல்லாஹ் இக்கட்டளைகளை முஸ்லிம்களுக்கு பிறப்பிக்காமல் இருப்பானா? அக்கால சூழ்நிலையோ முற்றிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் மத்தியில் கடும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷுடைய படையின் நிகழ்ச்சி இணைவைப்போரின் ரோஷத்திற்கும் இன பெருமைக்கும் மிகப் பெரிய அடியாக இருந்தது. இந்நிகழ்ச்சி இவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்தது மட்டுமல்லாமல் நெருப்புக் கங்குகளில் புரள்பவர்களாக இவர்களை ஆக்கி விட்டது.

போர் சம்பந்தமான இறைவசனங்களின் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது பெரிய போர் சமீபத்தில் நடக்கப்போகிறது, அதன் முடிவில் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் முஸ்லிம்களுக்கே கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பாருங்கள்! எவ்வாறு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். ''மக்கா இணைவைப்பாளர்கள் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றியது போன்று நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள்'' என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். (பார்க்க மேற்கூறப்பட்டுள்ள அல்குர்ஆன் 2:191).

மேலும், வெற்றி பெற்ற ராணுவத்தினர் கைதிகளிடம் எந்த முறையில் நடந்துகொள்ள வேண்டுமென்ற சட்டங்களை மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் எவ்வாறு விவரித்திருக்கின்றான் என்பதைப் பாருங்கள். ஆக, இவை அனைத்தும் முஸ்லிம்களுக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீரரும் அல்லாஹ்வின் பாதையில் தனது வீரத்தை வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த நற்செய்திகளை அல்லாஹ் (உடனே வெளிப்படுத்தாமல்) சற்று மறைத்தே வைத்தான்.

இந்த நாட்களில்தான் ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதம் (கி.பி. 624 பிப்ரவரியில்) அல்லாஹ் 'பைதுல் முகத்தஸின்' திசையிலிருந்து கஅபாவின் பக்கம் கிப்லாவை மாற்றிக் கொள்ளுங்கள் என கட்டளையிட்டான். இதன் விளைவு, பிளவுகளை உண்டாக்க வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களின் அணியிற்குள் புகுந்து கொண்ட நயவஞ்சகர்களும் நம்பிக்கையில் பலவீனமானவர்களும் முஸ்லிம்களை விட்டு விலகி, தங்களது பழைய கொள்கைக்கே திரும்பிச் சென்றனர். மோசடிக்காரர்கள் மற்றும் துரோகம் செய்பவர்களை விட்டும் முஸ்லிம்களின் அணி தூய்மை அடைந்தது.

கிப்லா மாற்றப்பட்டதால் ஏற்பட்ட பெரிய பலன் இதுவே ஆகும். மேலும், கிப்லா மாற்றப்பட்டதில் ஒரு நுட்பமான அறிவிப்பும் இருக்கலாம். அதாவது, முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறார்கள். இந்தத் தொடக்கம், முஸ்லிம்கள் தங்களின் கிப்லாவைக் கைப்பற்றுவது கொண்டு முடிவுபெறும். சத்தியத்திலிருக்கும் ஒரு சமுதாயத்தின் கிப்லா எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த சமுதாயம் அந்த கிப்லாவை எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரு நாள் விடுவித்தே தீரும் என்பதை உணர்த்தும் ஒரு நுட்பமான சுட்டிக்காட்டலும் கிப்லா மாற்றப்பட்டதில் இருக்கலாம்.

இதுபோன்ற கட்டளைகளினாலும், சங்கைமிகு குர்ஆன் வசனங்களின் சுட்டிக் காட்டுதலினாலும். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயர்த்துவதற்காக தீர்வான ஒரு போரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.

No comments:

Post a Comment