ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Friday, March 13, 2015

[ரஹீக் 016]-மதீனாவில் முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி ''இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்'' என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அல்மஸ்ஜித் அந்நபவி

இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் 'அல்மஸ்ஜித் அந்நபவி' (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

''இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.''

என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,

நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்

அது வழிகெட்ட செயலல்லவோ!

என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், 'கர்கத்' என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா' திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை' நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாயிலின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.

பள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள் கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.

அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.

ஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் 'அதான்' (பாங்கு) மார்க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ''லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர்ந்தவன், முஹம்மது ரஸூலுல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகத்தில் உயர்ந்தது இல்லை'' என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர் கனவில் பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கவே அதை நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதே கனவைத்தான் உமர் இப்னு கத்தாஃப் (ரழி) அவர்களும் கண்டார்கள். இதன் முழுச் சரித்திரம் ஹதீஸ் நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர்மிதி)

சகோதரத்துவ ஒப்பந்தம்

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

இதைப்பற்றி இப்னுல் கய்யூம்' (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும், அன்பு காட்ட வேண்டும், ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் இரத்த உறவினர்களைவிட இவரே அவரின் சொத்துகளுக்கு வாரிசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு,

இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)

என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

சிலர், ''நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.'' (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும். இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.

இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: ''அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.'' அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:

அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்து விடுகிறேன். அவர் 'இத்தா' காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு ''அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்'' என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினரின் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) ''என்ன மகிழ்ச்சியான செய்தி?'' என விசாரித்தார்கள். அவர் ''நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்'' என்றார். ''எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்'' என்று நபி (ஸல்) கேட்க, ''(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்'' என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.

இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்.

நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:

1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.

2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் 'தியத்''தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் 'ஃபித்யா'' கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் 'தியத்' கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் 'ஃபித்யா' கொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.

3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு 'ஃபித்யா' அல்லது 'தியத்' விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.

4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.

7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.

8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.

9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.

11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.

13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவனின் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.

14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.

15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)

ஆன்மீகப் புரட்சிகள்

இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை உறுதியுடன் நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த ஆன்மீக சிறப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை அந்த மேன்மக்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ''இஸ்லாமில் சிறந்த அமல் எது?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. ''மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள். உணவளியுங்கள். உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள். இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள். நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.'' (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவரின் அண்டை வீட்டார் நிம்மதியற்று போவாரோ அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: எவரின் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.

நபி (ஸல்) கூறினார்கள் ''அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன் கண்ணுக்கு வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: ''ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: ''பகைமை கொள்ளாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள், புறக்கணிக்காதீர்கள், சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது. அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது. யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவரின் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்து விடுவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ''பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.'' (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: ''தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் முஃமினாக இருக்க மாட்டார்.'' (பைஹகி)

மேலும் கூறினார்கள்: ''இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம் சண்டை செய்வது இறைநிராகரிப்பாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும், ''பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி'' என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ''தர்மம் பாவங்களை அழித்து விடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல!' (முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: ''எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து ஓர் ஆடையை அணிவிப்பான். எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் ''முத்திரையிடப்பட்ட சுவன மது''வைக் குடிக்கக் கொடுப்பான்.'' (ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: ''ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள், போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு மாஜா)

மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன் எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும் தங்களின் தோழர்களுக்கு அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது ஏற்படும் சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச் செய்தார்கள். மேலும், குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.

இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை விழித்தெழச் செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை அவர்களிடம் வளரச் செய்தார்கள். இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்து விட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள். பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)

மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை நேசித்தன. அவர்களுக்காக அர்ப்பணமாயின. அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று நடந்தார்கள்.

இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி (ஸல்) மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை என்ற இருள்களிலும் சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.

இதுபோன்ற மிக உயர்ந்த உளப்பூர்மான, உள்ரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம் காலத்தின் சவால்களைச் சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.

யூதர்களுடன் ஒப்பந்தம்

நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை, அதைச் செய்யவுமில்லை.

நபி (ஸல்) யூதர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.

3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.

6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.

10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.

12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுரிமையும் முஸ்லிம்களுக்கே இருந்தன.

அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதன் சில விவரங்களை அடுத்துவரும் பக்கங்களில் காண்போம்.

ஆயுதமேந்தித் தாக்குதல்

குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்

மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலா துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடியபோது அவர்களைப் பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர் செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன் அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் அவன்தான் மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள் கூறியதாவது:

''நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும் அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்) அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக் கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்''- இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸுனன் அபூதாவூது)

ஏற்கனவே, நபி (ஸல்) தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ் இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச் செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபையிக்கும், அவனுடன் இருந்த சிலை வணங்கிகளுக்கும் கிடைத்தபோது அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் போர் செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது அவர்களிடம், ''குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?'' என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி பிரிந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி)
அந்நேரத்தில் தனது தோழர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து போர் செய்வதிலிருந்து இப்னு உபை விலகிக் கொண்டாலும், சமயமேற்படும் போதெல்லாம் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான். ஆனால், அல்லாஹ்வின் அருளால் அவர்களது வஞ்சகத் தீ மூழும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் ஞானமிக்க நடவடிக்கை அதை அணைத்துக் கொண்டே இருந்தது.

அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் ''நான் கஅபாவை வலம் வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்'' என்று கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு கஅபாவிற்குச் சென்றான்.

அந்த இருவரையும் வழியில் அபூஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் ''அபூ ஸஃப்வானே!' உன்னுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்டான். அதற்கு உமய்யா ''இவர் ஸஅது'' என்றான். அப்போது அபூஜஹ்ல் ஸஅதிடம் ''நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப் செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாது'' என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்தி ''நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்'' என்று எச்சரித்தார். (ஸஹீஹுல் புகாரி)

குறைஷிகளின் மிரட்டல்

உண்மையில், குறைஷிகள் இதைவிட மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற உறுதியில் இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள் அல்லது தங்களின் தோழர்களின் பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) மதீனாவுக்கு வந்த காலத்தில் ஓரிரவு விழித்திருந்தார்கள். அப்போது ''எனது தோழர்களில் நல்லவர் ஒருவர் இன்று இரவு என்னை பாதுகாக்க வேண்டுமே'' என்றார்கள். அங்கு ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் ''அது யார்?'' என்று கேட்கவே, வந்தவர் ''நான்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ''நீர் ஏன் வந்தீர்?'' என்று வினவினார்கள். அதற்கவர் ''நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறேன்'' என்றார். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஸஅதுக்காக துஆ (பிரார்த்தனைச்) செய்து விட்டு தூங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் இவ்வாறு பாதுகாத்தது சில இரவுகளில் மட்டுமல்ல மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில் கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: இரவில் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பார்.

(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (எந்த குறைவுமின்றி மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவனுடையத் தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5:67)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி ''மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்'' என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

ஆபத்து நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் இருந்தது. இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர்.

போர் புரிய அனுமதி

முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல் வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன் காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)

மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும் அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.

அவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22:41)

இந்த அனுமதி குறைஷிகளிடம் போர் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பு தேவைக்கேற்ப போருக்கான சட்டம் மாற்றப்பட்டு, பொதுவாக போர் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைஷிகளுடனும் இனணவைக்கும் மற்றவர்களுடனும் போர் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைக்குப் பிறகு ஏற்பட்ட போர்களில் நடந்த சம்பவங்களைக் கூறுவதற்கு முன் இப்போர்கள் ஏன் கடமையாக்கப்பட்டன என்பதற்கான காரணங்களை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1) முதல் காரணம்: இணைவைக்கும் குறைஷிகளை எதிரிகளாகக் கருதியது. ஏனெனில், அவர்கள்தான் முஸ்லிம்களிடம் முதன் முதலாக பகைமையைத் தொடங்கினர். எனவே, முஸ்லிம்கள் குறைஷிகளை எதிர்த்து போர் செய்வது மட்டுமில்லாமல் குறைஷிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது நியதியே! ஆனால், குறைஷிகளைத் தவிர மற்ற அரபிகள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யாததால் அவர்களை எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் போர் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

2) இரண்டாவது காரணம்: இணைவைக்கும் அரபிகளில் யார் குறைஷிகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடமும், வேறு யாராவது முஸ்லிம்களைப் பகைத்தால் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது காரணம்: உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்களில் எவர் உடன்படிக்கைக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முஸ்லிம்களின் எதிரிகளாகிய இணை வைப்பாளருக்கு ஆதரவு தருகிறாரோ, அத்தகைய யூதர்களின் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதுடன் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

4) நான்காவது காரணம்: வேதம் கொடுக்கப்பட்டவர்களில் யார் முஸ்லிம்களைப் பகைப்பார்களோ, முஸ்லிம்களிடம் சண்டையிடுவார்களோ அவர்களிடம் போர் செய்ய வேண்டும். அவர்கள் இழிவுபட்டு வரி செலுத்தும் வரை இந்தப் போர் நீடிக்கும். ''வேதம் கொடுக்கப்பட்டவர்'' என்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று.

5) ஐந்தாவது காரணம்: முஷ்ரிக்கு (இணைவைப்பவர்) அல்லது யூதர் அல்லது கிறிஸ்தவர் அல்லது எவராக இருப்பினும் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரண்படாமல் இருக்கும் வரை அவருடைய உயிர், பொருள், மானம் அனைத்தும் காக்கப்படும். அவருடைய கேள்வி கணக்கு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். அதாவது, உள்ரங்கமான அல்லது மறைமுகமான அவரது செயல்களைப் பற்றி அல்லாஹ் விசாரணை செய்து கொள்வான். அதைக் கண்காணிக்க வேண்டியது நமது கடமையல்ல! (இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுவது என்றால், எடுத்துக்காட்டாக -கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, கிளர்ச்சி செய்வது- போன்ற செயல்களில் ஈடுபடுவது. அப்படி ஈடுபட்டால், அதற்குரிய தண்டனை உலகிலேயே அவருக்குக் கிடைக்கும்.)

போருக்கான அனுமதி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தவுடன் குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம் செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை வகுத்தார்கள்.

முதலாவது திட்டம்:-

மக்காவாசிகளின் முக்கிய வியாபார வழித்தடத்திற்கு அருகில் வசிக்கும் கோத்திரத்தாருடனும், இந்த வியாபார வழித்தடத்திற்கும் மதீனாவிற்குமிடையில் வசிக்கும் கோத்திரத்தாருடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொள்வது.

அதாவது, அந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும். அப்படி நட்புறவோடு நடந்து கொள்ளவில்லை என்றாலும் முஸ்லிம்களுடன் பகைமை காட்டக் கூடாது. இவ்வகையில் போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் ஜுஹைனா கிளையினருடனும் ஓர் உடன்படிக்கையை நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்டார்கள். இந்த ஜுஹைனா கிளையினரின் வீடுகள் மதீனாவைச் சுற்றி மூன்று இடங்களில் இருந்தன. போரின் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின் இன்னும் பல கோத்திரத்தாருடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்கள். இதனுடைய விவரங்கள் பின்னால் வர உள்ளன.

இரண்டாவது திட்டம்:-

மக்காவாசிகளின் இந்த வியாபாரப் பாதையை நோக்கி ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பது.

(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் 'கஸ்வா' என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு 'ஸய்யா' என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை 'போர்' என்றும் ஸய்யாவை 'படைப் பிரிவு' என்றும் குறிப்பிடுகிறோம்.)

No comments:

Post a Comment