ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு
Showing posts with label மதீனா. Show all posts
Showing posts with label மதீனா. Show all posts

Friday, April 17, 2015

[ரஹீக் 021]-இரண்டாம் பத்ர் போர்

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)

இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.

அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள 'மர்ருள் ளஹ்ரான்' என்ற பகுதியிலுள்ள 'மஜன்னா' என்ற கிணற்றருகில் தங்கினார்.

அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக 'மர்ருள் ளஹ்ரான்' வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம் ''குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்'' என்று கூறினார்.

பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.

முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் 8 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி திரும்பி விட்டனர். மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு பயமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இப்போருக்கு, ''இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு'' என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் பத்ரில் இருந்து திரும்பிய பிறகு, மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலை நிலவியது. முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகவே, இப்போது அரபு நாடு முழுவதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காகவும், முஸ்லிம்களை நேசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்வதற்காகவும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர நபியவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாம் பத்ர் போரிலிருந்து திரும்பிய பிறகு மதீனாவில் 6 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் ஷாம் நாட்டிற்கருகில் உள்ள 'தூமத்துல் ஜன்தல்' என்ற இடத்தைச் சுற்றி வாழும் கோத்திரத்தினர் வழிப்பறி, கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மேலும், மதீனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்த பெரும் கூட்டம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்கள் என்ற செய்தி நபியவர்களுக்கு எட்டியது. எனவே, நபியவர்கள் மதீனாவில் 'ஸிபா இப்னு உர்ஃபுத்தா கிஃபா' என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்து விட்டு 1000 முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 5, ரபீஉல் அவ்வல், பிறை 25ல் தூமத்துல் ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள். உத்ரா கிளையைச் சேர்ந்த 'மத்கூர்' என்ற நபரைத் தனக்கு வழிகாட்டியாக நபியவர்கள் அழைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரிகள் கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நபியவர்கள் பயணத்தை இவ்வாறு தொடர்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்றபோது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில் சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர். மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.

இதற்குப் பின் 'தூமத்துல் ஜன்தல்' என்ற இடத்திற்கு சென்றபோது அங்குள்ள அனைவரும் தங்கள் இல்லங்களைக் காலி செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். நபியவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சுற்றியுள்ள இடங்களுக்குப் படைகளை அனுப்பித் தேடியும் எவரும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, மதீனாவிற்குத் திரும்ப ஆயத்தமானார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்போருக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள 'உயய்னா இப்னு ஸ்னு' என்பவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 'தூமா' என்பது 'மஷாஃபுஷ் ஷாம்' என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற இடமாகும். இங்கிருந்து 'திமஷ்க்' நகரம் ஐந்து இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது. இந்நகரம் மதீனாவிலிருந்து 15 இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது.

இதுபோன்ற மதிநுட்பமான, தீர்க்கமான நடவடிக்கைகளினால் அமைதி மற்றும் பாதுகாப்பை அனைத்து பகுதிகளிலும் நிறுவி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மேலும், இதன் மூலம் முஸ்லிம்களுக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். பல பக்கங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு வந்து கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிரமங்களை அகற்றினார்கள். நயவஞ்சகர்களும் அடங்கி அமைதியாகி விட்டார்கள். யூதர்களில் ஒரு முக்கிய பிரிவினரான 'நழீர்' என்ற கோத்திரத்தினரை மதீனாவிலிருந்து முற்றிலும் நாடு கடத்தப்பட்டதை பார்த்து பயந்துபோன மற்றொரு கோத்திரத்தினர், தாங்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒழுங்காக நிறைவேற்றினர். கிராம அரபிகளும் தங்களது அடடூழியங்களையும் வம்புத்தனங்களையும் அடக்கிக் கொண்டு முஸ்லிம்களுக்குப் பணிந்து நடந்தனர். மக்காவிலிருந்த குறைஷிகளும் முஸ்லிம்களைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இதுபோன்ற சாதகமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செம்மையாக நிறைவேற்றுவதற்குரிய நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றனர்.

அல்அஹ்ஜாப் போர்

அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது.

ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள் யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும் சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக் கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே, அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர். நெருப்பாய் எரிந்தனர்.

அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.

அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு வருகிறோம் என்று உஹுத் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.

இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அபூஸுஃப்யானின் தலைமையில் புறப்பட்டனர். 'மர்ருள் ளஹ்ரான்' என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்தபோது அங்குள்ள ஸுலைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர் உயைனா இப்னு ஸ்னு தலைமையில் புறப்பட்டனர். மேலும், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் என்பவனின் தலைமையின் கீழ் முர்ரா கிளையினரும் மிஸ்அர் இப்னு ருஹைலாவின் தலைமையின் கீழ் அஷ்ஜஃ கிளையினரும், இதைத் தவிர அஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் ஒன்றுசேர்ந்து புறப்பட்டனர்.

இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000 வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.

எதிரிகளின் இந்த ராணுவங்கள் அனைத்தும் திடீரென மதீனாவைத் தாக்கினால் நிச்சயம் முஸ்லிம்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அழிந்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், மதீனா நகரத்தின் தலைமைத்துவமோ முற்றிலும் விழித்த நிலையிலேயே இருந்தது. மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம் ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி (ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.

''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்தபோது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்'' என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.

இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். ''ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்'' என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

ஸஹ்லு இப்னு ஸஅது (ரழி) கூறுகிறார்: நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம். பலர் குழி தோண்டுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வே! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை!

முஹாஜிர்கள் அன்சாரிகளை மன்னித்து அருள்வாயாக!'' (ஸஹீஹுல் புகாரி)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும் இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!

அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!''

இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:

''நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்

புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்

வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்

நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,

தர்மம் செய்திருக்க மாட்டோம்,

தொழுதும் இருக்க மாட்டோம்.

எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!

எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது

பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!

இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது

அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்

எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹுல் புகாரி)
இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை கூறுவார்கள்.

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக் கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும் வீசும். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)
மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவரின் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபிரின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)

நுஃமான் இப்னு பஷீரின் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும் தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். ''நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தபோது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது'' என்றார்கள். நபியவர்கள் ''நான் இறங்குகிறேன்'' என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள். நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால் வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு ''அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்'' என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். ''அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்'' என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் ''அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்'' என்றார்கள். (ஸுனன் நஸாயீ, முஸ்னது அஹ்மது)

இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது. குறைஷிகள் 4000 நபர்களுடன் 'ஜுர்ஃப்' மற்றும் 'ஜகாபா'விற்கு மத்தியிலுள்ள 'ரூமா' என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹுதிற்கு அருகிலுள்ள 'தனப் நக்மா' என்ற இடத்தில் தங்கினர்.

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்டபோது ''(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33:22)

நயவஞ்சகர்களும் பலவீனமான உள்ளம் உள்ளவர்களும் இந்த படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

''அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33:12)
நபி (ஸல்) அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் மதீனாவிலிருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்து அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அதன் பிறகு மூவாயிரம் முஸ்லிம்களுடன் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அங்கு 'ஸல்உ' என்ற மலையைத் தங்களது முதுகுப்புறமாகவும், எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அகழைத் தடையாகவும் ஆக்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களுக்கிடையில் அடையாள வார்த்தையாக 'ஹாமீம், லா யுன்ஸரூன்' என்ற வசனம் நிர்ணயிக்கப்பட்டது.

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடியபோது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் எதிர்பாராததால் அதற்கான எவ்வித தயாரிப்பும் செய்திருக்கவில்லை. அகழியைப் பார்த்த அவர்கள் ''இது மாபெரும் ஒரு சூழ்ச்சி; அரபியரல்லாத ஒருவர்தான் இதைக் கூறியிருக்க வேண்டும்'' என்று தங்களுக்குள் புலம்பினார்கள்.

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அல்லது அகழில் இறங்குவதோ அல்லது அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர்.

குறைஷி குதிரை வீரர்களில் சிலர் முற்றுகையின் முடிவை எதிர்ப்பார்த்து அகழைச் சுற்றி நின்று கொண்டிருப்பதை வெறுத்து அகழியில் குதிப்பதற்குப் புறப்பட்டனர். அம்ர் இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடி அதில் இறங்கினர். பின்பு அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் மத்தியிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரழி) முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார்கள். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ர், ''தன்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?'' என்று கேட்க, அலீ (ரழி) ''நான்'' என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரழி), அவன் கோபமடையும்படி சில வார்த்தையைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கி சீறினான். இருவரும் தங்களின் வாளை சுழற்ற சில நொடிகளில் அலீ (ரழி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரை பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமா கூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்களை உமர் (ரழி) சந்தித்து குறைஷிகளை ஏசினார். பிறகு ''அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழுகவில்லை'' என்றார். அதற்கு நபியவர்கள் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அஸ்ரைத் தொழவில்லை'' என்றார்கள். பின்பு நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் 'புத்ஹான்' என்ற இடத்திற்குச் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதோம். (ஸஹீஹுல் புகாரி)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரழி) கூறுகிறார்கள்:

''யா அல்லாஹ்! இவர்களின் இல்லங்களையும், புதைக்குழிகளையும் நெருப்பால் நிரப்புவாயாக! எங்களை சூரியன் மறையும் வரை அஸர் தொழவிடாமல் இவர்கள் தடுத்தனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
முஸ்னது அஹ்மது மற்றும் முஸ்னது ஷாபிஈ ஆகிய நூற்களில் ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்தனர் என்றும் வந்துள்ளது. ஸஹீஹுல் புகாரியில் அஸ்ர் தொழுகை மட்டும் என்று கூறப்பட்டுள்ளதை இதற்கு முன்பு பார்த்தோம். இதற்கு விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

''அகழ்ப்போர் பல நாட்களாக நடந்தது. அதில் சில நாட்களில் அஸ்ர் மட்டும் தொழாமல் இருந்திருக்கலாம். சில நாட்களில் மற்றும் பல தொழுகைகளையும் தொழ முடியாமல் ஆகியிருக்கலாம்.'' (ஷரஹ் முஸ்லிம்)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களில் ஆறு பேரும் இணை வைப்பவர்களில் பத்து பேரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிலர் வாளாலும் கொல்லப்பட்டனர்.

ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை ஓர் அம்பு தாக்கியதில் அவர்களது குடங்கையிலுள்ள நரம்பு துண்டிக்கப்பட்டது. ஹப்பான் இப்னு அக்கா என்பவன்தான் இந்த அம்பை எறிந்தான். இந்தக் காரியம் ஸஅது (ரழி) அவர்களை அதிகம் வருத்தவே அவர்கள் அல்லாஹ்விடம் ''அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்யாக்கி, அவர்களை வெளியாக்கிய கூட்டத்தினரைத் தவிர வேறு எவரிடமும் உனக்காக நான் போர் புரிவது எனக்கு விருப்பமாக இல்லை என்பதை நீ நன்கு அறிவாய். அல்லாஹ்வே! எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் போரை நீ இத்துடன் முடித்துவிட்டாய் என்றே நான் கருதுகிறேன். அல்லாஹ்வே! குறைஷிகளிடம் போர் புரிய வேண்டிய நிலை மீண்டும் ஏற்படும் என்றிருந்தால், உனக்காக நான் அவர்களிடம் போர் புரிவதற்கு என்னை உயிருடன் வாழ வை! நீ போரை முடித்துவிட்டாய் என்றிருப்பின் இக்காயத்திலேயே எனக்கு மரணத்தை ஏற்படுத்தி விடு'' என்று வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

''பனூ குரைளா யூதர்கள் குறித்து என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வரை என் உயிரை கைப்பற்றிவிடாதே'' என்றும் வேண்டினார்கள் என 'தாரீக் இப்னு ஷாமி'ல் கூறப்பட்டிள்ளது.

முஸ்லிம்கள் இப்போரில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்த சமயத்தில் பொந்துகளிலிருந்த விஷப் பாம்புகள் (யூதர்கள்) தங்களின் விஷத்தைக் கக்குவதற்குத் துடித்தன. நழீர் வமிச யூதர்களின் மிகப் பெரிய விஷமி ஹை இப்னு அக்தப், குரைளா இன யூதர்களின் இல்லங்களுக்குச் சென்றான். முதலில் கஅப் இப்னு அஸதிடம் வந்தான். இவன்தான் குரைளா இன யூதர்களின் தலைவன். ஹை இவனது வீட்டுக் கதவை தட்டினான். ஆனால், கஅப் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டான். ஹய் அதிகம் வற்புறுத்தவே கஅப் கதவைத் திறந்தான். அப்போது ஹை, கஅபிடம், ''கஅபே! நான் உன்னிடம் உனக்கு நிரந்தரமாக கண்ணியம் தரும் ஒன்றையும், கடல் அலை போன்ற பெரிய படையையும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது, குறைஷிகளை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து ரூமாவில் உள்ள 'மஜ்மஉல் அஸ்யாலில்' தங்க வைத்துள்ளேன். அவ்வாறே கத்பான் கிளையினர்களை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து உஹுதுக்கு அருகில் உள்ள 'தனப் நக்மா'வில் தங்க வைத்துள்ளேன். இவர்களெல்லாம் முஹம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பூண்டோடு அழிக்காதவரை இங்கிருந்து திரும்ப மாட்டோம் என என்னிடம் ஒப்பந்தமும், உடன்படிக்கையும் செய்துள்ளனர்'' என்றான்.

இதைக் கேட்ட கஅப்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ காலமெல்லாம் இழிவு தரும் செயல்களையே என்னிடம் செய்யச் சொல்கிறாய். அதுமட்டுமல்ல, நீ என்னிடம் கூறிய காரியம் எப்படியெனில் வெறும் இடிஇடித்து, மின்னல் வெட்டி மழை தராத ஒரு மேகத்தைப் போன்றதுதான். ஹய்யே! உனக்கு நாசம் உண்டாகட்டும்! என்னை எனது நிலையில் விட்டுவிடு. நான் முஹம்மதிடம் உண்மை, வாக்கை நிறைவேற்றும் தன்மை இவற்றைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை'' என்றான்.

ஆனால் ஹய், கஅபைத் தொடர்ந்து மூளைச் சலவை செய்தான். இறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஓர் உடன்படிக்கையையும் செய்தான். அதாவது ''முஹம்மதை அழிக்காமல் குறைஷிகள் மற்றும் கத்ஃபானியர்கள் தோல்வியுற்று திரும்பிவிட்டாலும் நான் உன்னை விட்டும் பிரிய மாட்டேன். உன்னுடன் உனது கோட்டைக்குள் நானும் இருப்பேன். முஹம்மதாலும் அவருடைய படையாலும் உனக்கு ஏற்படும் கதி எனக்கும் ஏற்படட்டும். நான் உன்னை விட்டு ஒருக்காலும் பிரியமாட்டேன்.'' இந்த வாக்குறுதியை ஹை கூறியவுடன் கஅப் முஸ்லிம்களுக்கும் தனக்குமிடையிலுள்ள உடன்படிக்கையை முறித்துக் கொண்டான். அதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகச் சண்டை செய்வதற்காக அவன் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)

இதைத் தொடர்ந்து, உடனடியாக குரைளா இன யூதர்கள் முஸ்லிம்களுடன் போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:

ஹஸ்ஸான் இப்னு ஸாபிதுக்கு சொந்தமான 'ஃபாஉ' என்ற கோட்டையில் நபியவர்களின் மாமியான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிபும் மற்ற முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் துணையாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்.

ஸஃபிய்யா (ரழி) கூறுகிறார்: அப்போது ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி சுற்றி வந்தான். பனூ குரைளா யூதர்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்துவிட்டு போருக்குத் ஆயத்தமாகி விட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவந்து, அவர்கள் எங்களைத் தாக்க நாடினால்கூட எங்களைப் பாதுகாப்பதற்கு ஹஸ்ஸானைத் தவிர யாரும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தங்களது எதிரிகளுடன் மிகத் தீவிரமாக போரில் ஈடுபட்டிருந்தனர். எங்களைத் தாக்குவதற்கு யாராவது வந்தாலும் அவர்களால் எதிரிகளை விட்டுவிட்டு எங்களைக் காப்பாற்றுவதற்காக மதீனாவிற்குள் வர இயலாது. எனவே, நான் ஹஸ்ஸானிடம் ''ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருவதை நீ பார்க்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் கூறிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன். நபியவர்களும் நபித்தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். எனவே, நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!'' எனக் கூறினேன்.

அதற்கு ஹஸ்ஸான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது என்னால் முடியாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும்'' எனக் கூறிவிட்டார். உடனே நான் எனது இடுப்புத் துணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்தேன். பின்பு கோட்டையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த யூதனை நான் வைத்திருந்த கைத்தடியால் அடித்துக் கொன்றேன். பின்பு கோட்டைக்குள் வந்து ''ஹஸ்ஸானே! இறங்கிச் சென்று அவனது உடைமைகளை எடுத்து வா! அவன் ஆண் என்பதால்தான் அவனது உடைமைகளை என்னால் எடுக்க முடியவில்லை'' என்றேன். அது எனக்குத் தேவையில்லையென ஹஸ்ஸான் கூறிவிட்டார். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது, கோட்டைகளை வேவு பார்ப்பதற்காக சென்ற யூதன் திரும்ப வரவில்லை என்பதை அறிந்த மற்ற யூதர்கள் மதீனாவில் உள்ள கோட்டைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன என்று எண்ணினர். ஆகையால் மற்றொரு முறை இதுபோன்று துணிவு கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இருப்பினும் யூதர்கள் போரில் ஈடுபட்டுள்ள இணைவைப்பவர்களுக்கு உணவுகள் அனுப்பி வைத்தனர். இது யூதர்கள் முஸ்லிம்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இணைவைப்பவர்களுடன் இணைந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட உணவுகளில் இருபது ஒட்டகங்களை முஸ்லிம்கள் பறிமுதல் செய்தனர்.

யூதர்கள் இணைவைப்பவர்களுடன் இணைந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைத்தது. இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக இச்செய்தியை உறுதி செய்து கொள்ள நபியவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவ்வாத் இப்னு ஜுபைர் (ரழி) ஆகியோரை உண்மை நிலையை அறிந்து வர நபியவர்கள் அனுப்பினார்கள். நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம், ''நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கிடைத்த செய்தி உண்மைதானா? என்று பாருங்கள். நாம் கேள்விப்பட்டது உண்மையாக இருப்பின் என்னிடம் நான் அறிந்து கொள்ளும் விதமாக சைகை மட்டும் செய்யுங்கள். மக்களிடம் அந்தச் செய்தியை பரப்பி விடாதீர்கள். அவர்கள் வாக்குறுதி மாறாமல் இருந்தால் அதை மக்கள் அனைவருக்கும் தெரியும்படி சொல்லுங்கள்'' என்றார்கள்.

இதற்குப் பின் நபித்தோழர்கள் யூதர்களிடம் வந்தனர். யூதர்கள் இவர்களுக்கு மிகக் கெட்ட பதிலைக் கூறியதுடன் நபி (ஸல்) அவர்களை வசைபாடினர். ''அல்லாஹ்வின் தூதர் என்றால் யார் அவர்? எங்களுக்கும் முஹம்மதுக்கும் எவ்வித உடன்படிக்கையும் ஒப்பந்தமும் இல்லை'' என்றனர். இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்களிடம் திரும்பிய தோழர்கள் 'அழல், காரா' என்றனர். (அதாவது 'ரஜீஃ' என்னும் இடத்தில் நபித்தோழர்களை அழல், காரா கிளையினர் வஞ்சகமாகக் கொன்றது போல் யூதர்களும் நம்முடன் வஞ்சகம் செய்கின்றனர் என்று பொருள்.)

நபி (ஸல்) அவர்களைத் தவிர இந்த உண்மை பிறமக்களுக்குத் தெரியாமல் இருக்க நபித்தோழர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. யூதர்களின் மோசடி உண்மைதான் என்பதை மக்களும் அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு முன் பெரும் ஆபத்து வந்து விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது. துரோகம் இழைத்த யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம்களின் பெண்களும் சிறுவர்களும் எவ்வித உரிய பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலை அல்லாஹ் குர்ஆனில் கூறியது போன்றே இருந்தது.

உங்களுக்கு மேற்புறமிருந்தும் கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்துகொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்குள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:10,11)

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. ''நாங்கள் கிஸ்ரா, கைஸருடைய கஜானாக்களை அடைவோம் என்று முஹம்மது எங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். ஆனால், இன்று எங்களால் சுயதேவையை நிறைவேற்றுவதற்குக் கூட செல்ல முடியவில்லை. அந்த அளவு பயத்தில் இருக்கிறோம்'' என்று சிலர் கூறினர். ''எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன'' என்று சிலர் கூறினர். ஸலமா கிளையினர் கூட போரிலிருந்து திரும்பிட எண்ணினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் ''அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வாக்களிக்கவில்லை.'' என்று கூறுகின்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ''யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமல் இருந்தும் ''நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (போர்க்களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (போரிலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (அல்குர்ஆன் 33:13)

குரைளா யூதர்கள் தங்களுக்கு மோசடி செய்து விட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் நபி (ஸல்) அவர்கள் தங்களது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நீண்ட நேரம் சாய்ந்து படுத்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். இங்கு முஸ்லிம்கள் கடும் சோதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாகினர். பிறகு நபியவர்கள் எழுந்து ''அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்கள். இதற்குப் பின் நிலைமையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதில் முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உடனடியாக சில வீரர்களை அனுப்பினார்கள்.

இது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பு படையில் இருக்கும் குறைஷி அல்லாத கூட்டத்தனரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர்களைப் போர்முனையிலிருந்து திருப்பி விடலாம். பிறகு முஸ்லிம்களின் பரம எதிரியான குறைஷிகளைப் போர்க்களத்தில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணி, இது குறித்து அன்சாரிகளின் தலைவர்களான ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். ''எதிரிப் படையிலுள்ள கத்ஃபான் குலத் தலைவர்களான உயைனா இப்னு ஹிஸ்ன், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் ஆகியோருக்கு தூதனுப்பி மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம், நீங்கள் எங்களுடன் சண்டையிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்போமா? என்று நபி (ஸல்) ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் ''நபியே! நீங்கள் கூறும் இந்த ஆலோசனை அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம். அதே சமயம் இது எங்களின் நலனுக்காக நீங்கள் செய்வதாக இருந்தால் நிச்சயம் நாங்கள் அதனை விரும்பவில்லை. காரணம், மதீனாவில் விளையும் பழங்களை நாங்கள் விற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ மட்டுமே கத்ஃபான் குலத்தினர் உண்ண முடியும். இதைத் தவிர வேறு வழியில் மதீனாவின் பழங்களை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நாங்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன்பே இந்நிலையென்றால், இன்று அல்லாஹ் எங்களை இஸ்லாமின் மூலம் கண்ணியப்படுத்தி எங்களுக்கு நேர்வழியையும் தந்துவிட்டான். இப்போது பணிந்து நாங்கள் எங்களது செல்வங்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாளைத் தவிர வேறு எதையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க மாட்டோம். (அதாவது பணிய மாட்டோம்) இறுதிவரை போரிடுவோம்'' என்று அவ்விருவரும் கூறினார்கள். இவ்விருவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட நபியவர்கள் ''அரபிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறார்களே என்ற நிலை கருதி உங்களின் நன்மைக்காக இந்த ஆலோசனையை முன் வைத்தேன்'' என்று விளக்கினார்கள்.

அன்சாரிகளின் இந்த உறுதி, நிலை குலையாமை, துணிவு, மற்ற எல்லாத் தோழர்களின் பொறுமை, தியாகம் - இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹுத் தஆலா தன் புறத்திலிருந்து உதவியை இறக்கினான். எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது ராணுவங்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தான். இதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். கத்ஃபான் கோத்திரத்தில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்கிறேன்'' என்றார். அதற்கு நபியவர்கள் ''நீ தனியாக என்ன செய்து விட முடியும்? உன்னால் முடிந்தால் எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கினங்க அவர் குரைளாவினரிடம் சென்றார். இவர் குரைளாவினரின் நண்பராக இருந்ததால், அவர்களிடம் சென்று ''நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?'' என்றார். அதற்கவர்கள் ''ஆம்! என்றனர். இந்த ஊர் உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும், பிள்ளைகளும், பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகள் உங்களைப் போன்றல்ல. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்பு கிட்டவில்லை என்றாலோ அல்லது போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். அவரோ உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். நீங்கள் என்ன செய்ய முடியும்'' என்று கேட்டார். அதற்கு யூதர்கள் ''நுஅய்மே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்'' எனக் கேட்டனர். அதற்கவர் ''நீங்கள் அவர்களிடம் அவர்களின் சில நபர்களை உங்களிடம் அடைமானமாக வைத்துக்கொள்ள கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக போர் புரியாதீர்கள்'' என்று கூறினார். அதற்கு யூதர்கள் ''நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்'' என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஅய்ம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம் ''உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''ஆம்!'' அப்படித்தான் என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஅய்ம், யூதர்கள் முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைதேசமடைந்துள்ளனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சில நபர்களை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்'' என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ் 5, ஷவ்வால் மாதம் சனிக்கிழமை இரவு குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி அனுப்பினர். அதாவது ''நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும், ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்'' என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

குறைஷிகளின் இக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன் ''இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு ஏற்பட்ட தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாக சண்டையிட மாட்டோம்'' என்று கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் கூறியவுடன் ''நுஅய்ம் உங்களுக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்'' என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

இதற்குப் பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி ''நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம் வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்'' என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஅய்ம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்'' என்று தங்களுக்குள் கூறிவிட்டு வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது. முடிவு என்னவாகுமோ என அவர்கள் பயந்தனர்.

முஸ்லிம்கள் அல்லாஹ்விடம்,

''அல்லாஹ்வே! எங்களுடைய அவயங்களை மறைத்திடு. எங்களின் பயங்களை போக்கி அபயம் அளி'' என்று வேண்டினர்.

அடுத்து நபி (ஸல்) அவர்களும்,

வேதத்தை இறக்கியவனே! விரைவாக கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக! என அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும் ஏற்றுக் கொண்டான். எதிரிகளின் அணிகளில் பிரிவினை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்குள் உதவி செய்வதைக் கைவிட்டனர். அத்துடன் அல்லாஹ் அவர்களை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களை தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். அவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி, அவர்களை நிலை குலைய வைத்தனர்.

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கடுமையான குளிர் நிறைந்த இரவில் தோழர் ஹுதைஃபாவை எதிரிகளின் செய்திகளைத் தெரிந்து வர அனுப்பினார்கள். எதிரிகள் மக்கா திரும்ப ஆயத்தமாகி இருந்தனர். இச்செய்தியை நபியவர்களிடம் ஹுதைஃபா (ரழி) கூறினார். அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் இப்போரின் மூலம் தாங்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களைப் பாதுகாத்தான். அவனது வாக்கை உண்மைப் படுத்தினான். தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ் யுத்தம் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் நடைபெற்றது. இதுவே மிகச் சரியான கூற்றாகும். எதிரிகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் முற்றுகையிட்ட காலம் ஏறக்குறைய ஒரு மாதமாகும். பல மூலநூல்களின் கருத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது இப்போர் ஷவ்வால் மாதம் தொடங்கி துல்கஅதா மாதத்தில் முடிவுற்றது எனத் தெரிய வருகிறது. அறிஞர் இப்னு ஸஅது, ''நபியவர்கள் அகழ் போர் முடிந்து துல்கஅதா பிறை 23 புதன்கிழமை மதீனா திரும்பினார்கள்'' என்று கூறுகிறார்:

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது. இப்போரின் இறுதியில் இணைவைப்பவர்கள் நிராசையாகி, தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். இணைவைப்பவர்கள் எவ்வளவு பெரிய பலமுல்ல ராணுவங்களை ஒன்று திரட்டி மதீனாவில் வளர்ந்து வரும் இந்த சிறிய இஸ்லாமிய ராணுவத்தை அழித்துவிட முயன்றாலும் அது ஒருக்காலும் முடியாது என்பது இப்போரிலிருருந்து நன்கு தெரியவந்தது. இம்முறை இப்போருக்கு அரபிகள் ஒன்றுதிரட்டி வந்த படைகளைப் போல் இனி ஒருக்காலும் அவர்களால் ஒன்று திரட்டிவர முடியாது. ஆகவேதான் எதிரிகளை அல்லாஹ் வெளியேற்றிய பின் ''இனிமேல் நாமே அவர்கள் மீது போர் தொடுப்போம். அவர்கள் நம்மீது போர் தொடுக்க முடியாது. நாமே அவர்களிடம் செல்வோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் 'கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Friday, March 13, 2015

[ரஹீக் 016]-மதீனாவில் முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி ''இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்'' என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அல்மஸ்ஜித் அந்நபவி

இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் 'அல்மஸ்ஜித் அந்நபவி' (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

''இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.''

என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,

நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்

அது வழிகெட்ட செயலல்லவோ!

என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், 'கர்கத்' என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா' திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை' நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாயிலின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.

பள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள் கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.

அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.

ஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் 'அதான்' (பாங்கு) மார்க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ''லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர்ந்தவன், முஹம்மது ரஸூலுல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகத்தில் உயர்ந்தது இல்லை'' என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர் கனவில் பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கவே அதை நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதே கனவைத்தான் உமர் இப்னு கத்தாஃப் (ரழி) அவர்களும் கண்டார்கள். இதன் முழுச் சரித்திரம் ஹதீஸ் நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர்மிதி)

சகோதரத்துவ ஒப்பந்தம்

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

இதைப்பற்றி இப்னுல் கய்யூம்' (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும், அன்பு காட்ட வேண்டும், ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் இரத்த உறவினர்களைவிட இவரே அவரின் சொத்துகளுக்கு வாரிசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு,

இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)

என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

சிலர், ''நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.'' (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும். இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.

இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: ''அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.'' அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:

அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்து விடுகிறேன். அவர் 'இத்தா' காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு ''அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்'' என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினரின் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) ''என்ன மகிழ்ச்சியான செய்தி?'' என விசாரித்தார்கள். அவர் ''நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்'' என்றார். ''எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்'' என்று நபி (ஸல்) கேட்க, ''(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்'' என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.

இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்.

நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:

1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.

2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் 'தியத்''தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் 'ஃபித்யா'' கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் 'தியத்' கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் 'ஃபித்யா' கொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.

3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு 'ஃபித்யா' அல்லது 'தியத்' விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.

4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.

7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.

8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.

9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.

11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.

13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவனின் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.

14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.

15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)

ஆன்மீகப் புரட்சிகள்

இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை உறுதியுடன் நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த ஆன்மீக சிறப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை அந்த மேன்மக்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ''இஸ்லாமில் சிறந்த அமல் எது?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. ''மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள். உணவளியுங்கள். உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள். இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள். நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.'' (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவரின் அண்டை வீட்டார் நிம்மதியற்று போவாரோ அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: எவரின் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.

நபி (ஸல்) கூறினார்கள் ''அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன் கண்ணுக்கு வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: ''ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: ''பகைமை கொள்ளாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள், புறக்கணிக்காதீர்கள், சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது. அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது. யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவரின் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்து விடுவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ''பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.'' (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: ''தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் முஃமினாக இருக்க மாட்டார்.'' (பைஹகி)

மேலும் கூறினார்கள்: ''இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம் சண்டை செய்வது இறைநிராகரிப்பாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும், ''பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி'' என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ''தர்மம் பாவங்களை அழித்து விடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல!' (முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: ''எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து ஓர் ஆடையை அணிவிப்பான். எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் ''முத்திரையிடப்பட்ட சுவன மது''வைக் குடிக்கக் கொடுப்பான்.'' (ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: ''ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள், போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு மாஜா)

மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன் எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும் தங்களின் தோழர்களுக்கு அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது ஏற்படும் சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச் செய்தார்கள். மேலும், குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.

இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை விழித்தெழச் செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை அவர்களிடம் வளரச் செய்தார்கள். இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்து விட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள். பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)

மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை நேசித்தன. அவர்களுக்காக அர்ப்பணமாயின. அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று நடந்தார்கள்.

இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி (ஸல்) மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை என்ற இருள்களிலும் சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.

இதுபோன்ற மிக உயர்ந்த உளப்பூர்மான, உள்ரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம் காலத்தின் சவால்களைச் சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.

யூதர்களுடன் ஒப்பந்தம்

நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை, அதைச் செய்யவுமில்லை.

நபி (ஸல்) யூதர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.

3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.

6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.

10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.

12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுரிமையும் முஸ்லிம்களுக்கே இருந்தன.

அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதன் சில விவரங்களை அடுத்துவரும் பக்கங்களில் காண்போம்.

ஆயுதமேந்தித் தாக்குதல்

குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்

மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலா துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடியபோது அவர்களைப் பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர் செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன் அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் அவன்தான் மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள் கூறியதாவது:

''நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும் அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்) அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக் கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்''- இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸுனன் அபூதாவூது)

ஏற்கனவே, நபி (ஸல்) தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ் இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச் செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபையிக்கும், அவனுடன் இருந்த சிலை வணங்கிகளுக்கும் கிடைத்தபோது அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் போர் செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது அவர்களிடம், ''குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?'' என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி பிரிந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி)
அந்நேரத்தில் தனது தோழர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து போர் செய்வதிலிருந்து இப்னு உபை விலகிக் கொண்டாலும், சமயமேற்படும் போதெல்லாம் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான். ஆனால், அல்லாஹ்வின் அருளால் அவர்களது வஞ்சகத் தீ மூழும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் ஞானமிக்க நடவடிக்கை அதை அணைத்துக் கொண்டே இருந்தது.

அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் ''நான் கஅபாவை வலம் வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்'' என்று கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு கஅபாவிற்குச் சென்றான்.

அந்த இருவரையும் வழியில் அபூஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் ''அபூ ஸஃப்வானே!' உன்னுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்டான். அதற்கு உமய்யா ''இவர் ஸஅது'' என்றான். அப்போது அபூஜஹ்ல் ஸஅதிடம் ''நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப் செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாது'' என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்தி ''நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்'' என்று எச்சரித்தார். (ஸஹீஹுல் புகாரி)

குறைஷிகளின் மிரட்டல்

உண்மையில், குறைஷிகள் இதைவிட மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற உறுதியில் இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள் அல்லது தங்களின் தோழர்களின் பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) மதீனாவுக்கு வந்த காலத்தில் ஓரிரவு விழித்திருந்தார்கள். அப்போது ''எனது தோழர்களில் நல்லவர் ஒருவர் இன்று இரவு என்னை பாதுகாக்க வேண்டுமே'' என்றார்கள். அங்கு ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் ''அது யார்?'' என்று கேட்கவே, வந்தவர் ''நான்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ''நீர் ஏன் வந்தீர்?'' என்று வினவினார்கள். அதற்கவர் ''நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறேன்'' என்றார். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஸஅதுக்காக துஆ (பிரார்த்தனைச்) செய்து விட்டு தூங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் இவ்வாறு பாதுகாத்தது சில இரவுகளில் மட்டுமல்ல மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில் கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: இரவில் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பார்.

(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (எந்த குறைவுமின்றி மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவனுடையத் தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5:67)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி ''மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்'' என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

ஆபத்து நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் இருந்தது. இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர்.

போர் புரிய அனுமதி

முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல் வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன் காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)

மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும் அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.

அவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22:41)

இந்த அனுமதி குறைஷிகளிடம் போர் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பு தேவைக்கேற்ப போருக்கான சட்டம் மாற்றப்பட்டு, பொதுவாக போர் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைஷிகளுடனும் இனணவைக்கும் மற்றவர்களுடனும் போர் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைக்குப் பிறகு ஏற்பட்ட போர்களில் நடந்த சம்பவங்களைக் கூறுவதற்கு முன் இப்போர்கள் ஏன் கடமையாக்கப்பட்டன என்பதற்கான காரணங்களை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1) முதல் காரணம்: இணைவைக்கும் குறைஷிகளை எதிரிகளாகக் கருதியது. ஏனெனில், அவர்கள்தான் முஸ்லிம்களிடம் முதன் முதலாக பகைமையைத் தொடங்கினர். எனவே, முஸ்லிம்கள் குறைஷிகளை எதிர்த்து போர் செய்வது மட்டுமில்லாமல் குறைஷிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது நியதியே! ஆனால், குறைஷிகளைத் தவிர மற்ற அரபிகள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யாததால் அவர்களை எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் போர் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

2) இரண்டாவது காரணம்: இணைவைக்கும் அரபிகளில் யார் குறைஷிகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடமும், வேறு யாராவது முஸ்லிம்களைப் பகைத்தால் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது காரணம்: உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்களில் எவர் உடன்படிக்கைக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முஸ்லிம்களின் எதிரிகளாகிய இணை வைப்பாளருக்கு ஆதரவு தருகிறாரோ, அத்தகைய யூதர்களின் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதுடன் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

4) நான்காவது காரணம்: வேதம் கொடுக்கப்பட்டவர்களில் யார் முஸ்லிம்களைப் பகைப்பார்களோ, முஸ்லிம்களிடம் சண்டையிடுவார்களோ அவர்களிடம் போர் செய்ய வேண்டும். அவர்கள் இழிவுபட்டு வரி செலுத்தும் வரை இந்தப் போர் நீடிக்கும். ''வேதம் கொடுக்கப்பட்டவர்'' என்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று.

5) ஐந்தாவது காரணம்: முஷ்ரிக்கு (இணைவைப்பவர்) அல்லது யூதர் அல்லது கிறிஸ்தவர் அல்லது எவராக இருப்பினும் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரண்படாமல் இருக்கும் வரை அவருடைய உயிர், பொருள், மானம் அனைத்தும் காக்கப்படும். அவருடைய கேள்வி கணக்கு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். அதாவது, உள்ரங்கமான அல்லது மறைமுகமான அவரது செயல்களைப் பற்றி அல்லாஹ் விசாரணை செய்து கொள்வான். அதைக் கண்காணிக்க வேண்டியது நமது கடமையல்ல! (இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுவது என்றால், எடுத்துக்காட்டாக -கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, கிளர்ச்சி செய்வது- போன்ற செயல்களில் ஈடுபடுவது. அப்படி ஈடுபட்டால், அதற்குரிய தண்டனை உலகிலேயே அவருக்குக் கிடைக்கும்.)

போருக்கான அனுமதி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தவுடன் குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம் செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை வகுத்தார்கள்.

முதலாவது திட்டம்:-

மக்காவாசிகளின் முக்கிய வியாபார வழித்தடத்திற்கு அருகில் வசிக்கும் கோத்திரத்தாருடனும், இந்த வியாபார வழித்தடத்திற்கும் மதீனாவிற்குமிடையில் வசிக்கும் கோத்திரத்தாருடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொள்வது.

அதாவது, அந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும். அப்படி நட்புறவோடு நடந்து கொள்ளவில்லை என்றாலும் முஸ்லிம்களுடன் பகைமை காட்டக் கூடாது. இவ்வகையில் போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் ஜுஹைனா கிளையினருடனும் ஓர் உடன்படிக்கையை நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்டார்கள். இந்த ஜுஹைனா கிளையினரின் வீடுகள் மதீனாவைச் சுற்றி மூன்று இடங்களில் இருந்தன. போரின் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின் இன்னும் பல கோத்திரத்தாருடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்கள். இதனுடைய விவரங்கள் பின்னால் வர உள்ளன.

இரண்டாவது திட்டம்:-

மக்காவாசிகளின் இந்த வியாபாரப் பாதையை நோக்கி ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பது.

(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் 'கஸ்வா' என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு 'ஸய்யா' என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை 'போர்' என்றும் ஸய்யாவை 'படைப் பிரிவு' என்றும் குறிப்பிடுகிறோம்.)

Wednesday, March 4, 2015

[ரஹீக் 015]-மதீனா வாழ்க்கை - அழைப்பு, போர், வெற்றி

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்

மதீனா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாக பிரிக்கலாம்:

1) இஸ்லாமிய சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தல், இஸ்லாமிய அழைப்புப் பணியை உறுதிபடுத்துதல்.

இக்கால கட்டத்தில் மதீனாவிற்குள் பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டன. மதீனாவிற்கு வெளியிலிருந்து முஸ்லிம்களை அழிப்பதற்காகவும் அழைப்புப் பணியை வேரறுப்பதற்காகவும் எதிரிகள் பெரும் போர்களை நடத்தினர். ஆனால், இக்காலகட்டம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு துல்கஅதாவில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியையும், ஆதிக்கத்தையும் அருளினான்.

2) மிகப்பெரிய எதிரியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், அரசர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தல், சதித்திட்டங்களை முறியடித்தல்.

இக்காலகட்டம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமழான் மாதம் புனித மக்கா வெற்றியுடன் முடிவுற்றது.

3) குழுக்களை வரவேற்றல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைதல்.

இக்காலகட்டம் மக்கா வெற்றியிலிருந்து 11 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும், அவர்களின் நிலைமைகளும்

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்தார்கள். இந்த ஹிஜ்ராவிற்குக் காரணம் மக்காவில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களிருந்து தப்பித்துத் தங்களை விடுவித்துக் கொள்வது மட்டுமல்ல மாறாக, பாதுகாப்பான ஓர் ஊரில் புதிதொரு சமுதாயத்தை நிறுவுவதும் ஹிஜ்ராவின் நோக்கமாக இருந்தது. ஆகவே, ஹிஜ்ரா செய்ய ஆற்றல் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் ஹிஜ்ரா செய்து அந்தப் புதிய சமுதாயத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும், அந்த ஊரைப் பாதுகாப்பதற்கும் அதன் தகுதியை உயர்த்துவதற்கும் முழு அளவில் முயற்சி செய்யவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

அந்த சமூகத்தை நிறுவுவதிலும் அதை அமைப்பதிலும் நபி (ஸல்) அவர்களே முன்னோடியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்கள். அனைத்து பொறுப்புகளுக்குரிய அதிகாரங்கள் முழுவதும் நபி (ஸல்) அவர்களிடமே இருந்தன. இதில் மற்ற எவருக்கும் எவ்வித மனக்கசப்பும் இருக்கவில்லை.

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த மக்கள் மூன்று வகையினராக இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் நிலைமையும் பிறரின் நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. ஒரு வகையினரிடம் நபி (ஸல்) அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றொரு வகையினரிடம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன.

அம்மூன்று வகையினர்:

1) முஸ்லிம்கள் அதாவது, சிறப்பிற்குரிய நபித்தோழர்கள்.

2) மதீனாவின் பூர்வீக குடிகளில் உள்ள முஷ்ரிக்குகள். அதாவது, அந்நேரம்வரை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த மதீனாவாசிகள்.

3) யூதர்கள்.

மக்காவில் நபித்தோழர்களுக்கு இருந்த நிலைமையும், இப்போது மதீனாவில் அவர்களுக்கு இருக்கும் நிலைமையும் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருந்தன. மக்காவில் முஸ்லிம்கள் இஸ்லாமின் மூலம் ஒருங்கிணைந்து ஒரே நோக்கமுடையவர்களாக இருந்தும் அவர்களால் ஒரு முழுமையான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். ஏனெனில், முஸ்லிம்கள் பல குடும்பங்களில் பிரிந்திருந்தனர். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டு பலவீனமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. முஸ்லிம்களின் எதிரிகளே, மக்காவில் முழு அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆகவேதான் மக்காவில் அருளப்பட்ட குர்ஆன் அத்தியாயங்களில் இஸ்லாமிய அடிப்படை விளக்கங்களும், ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்ள வேண்டியக் கட்டளைகளும் குறிப்பாக கூறப்பட்டிருந்தன. மேலும் நன்மை, உபகாரம், நற்பண்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அதிகம் ஆர்வம் ஊட்டப்பட்டன. கெட்ட குணங்கள், இழி செயல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டன.

ஆனால், மதீனாவில் முஸ்லிம்கள் வசமே முழு உரிமையும், ஆதிக்கமும் இருந்தன. மாற்றார் யாரும் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு வலுவாக, பெரும்பான்மையாக இருந்தனர். ஆகவே, இப்போது முஸ்லிம்கள் தங்கள் சமூகத்துக்குத் தேவையான சட்டங்களையும் அடிப்படைகளையும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொருளாதாரம், வாழ்வியல், அரசியல், போர், சமாதானம், ஆகுமானவை, ஆகாதவை, வணக்க வழிபாடுகள் என்று சமூகத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்பட வேண்டிய தக்க நேரம் இதுவாகவே இருந்தது.

ஆம்! பத்து ஆண்டுகளாக பல துன்பங்களையும் வேதனைகளையும் எதற்காக முஸ்லிம்கள் அனுபவித்து வந்தார்களோ, அந்த அழைப்புப் பணிக்கு வழிகாட்டியாக, ஏனைய மனித சமுதாயத்திலிருந்தும் அறியாமைக்கால சமூகத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிறந்த சமுதாயத்தை முஸ்லிம்கள் அமைக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

இதுபோன்ற சமுதாயத்தை அமைப்பது ஒரே நாளில் அல்லது ஒரே மாதத்தில் அல்லது ஒரே ஆண்டில் சாத்தியமல்ல மாறாக, சட்டம் அமைத்தல், ஒழுங்குபடுத்துதல், பயிற்சியளித்தல், கல்வி புகட்டுதல், சட்டங்களை செயல்படுத்துதல் என அனைத்தும் முழுமை பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்பட்டது. அல்லாஹ் இம்மார்க்கத்தை அமைப்பதற்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனது சட்டங்களைச் செயல்படுத்தினார்கள், அதன் பக்கம் வழிகாட்டினார்கள். முஸ்லிம்களைச் சீர்ப்படுத்தித் தூய்மைபடுத்தினார்கள்.

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல்குர்ஆன் 62:2)

நபித்தோழர்கள் தங்களது உள்ளங்களால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனின் வசனங்கள் மூலம் தங்களுக்கு இடப்படும் சட்டங்களை முழுமையாக பின்பற்றியதுடன் அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மேன்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)
இங்கு இதுபோன்ற விஷயங்களை ஆராய்வது நமது நோக்கல்ல. எனவே, நாம் இங்கு தேவையான அளவிற்கு மட்டும் கூறுகிறோம்.

இஸ்லாமியச் சமுதாயத்தை உருவாக்குவதுதான் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் குறிக்கோளுமாகும். இதுதான் முஸ்லிம்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த மிக மகத்தான பணியாகும். இது அவசரமாக செய்து முடிக்க வேண்டிய தற்காலிக பணியல்ல மாறாக, இது அடிப்படை பிரச்சனையாகும். இதை முடிப்பதற்குப் பல காலங்கள் தேவைப்படும். ஆனால், அங்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பல அவசர பிரச்சனைகளும் இருந்தன.

அதில் மிக முக்கியமானது அப்போதைய முஸ்லிம்களின் நிலைமை. அவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

ஒரு சாரார் தங்களது சொந்த பூமியில் சொந்த வீட்டில் சொத்து, சுகங்களுடன் இருந்தனர். இவர்களுக்கு ஒரு சராசரி மனிதனுக்குரிய கவலையைத் தவிர வேறு கவலை இருக்கவில்லை. இவர்கள்தான் மதீனாவாசிகளான அன்சாரிகள்! இந்த மதீனாவாசிகளுக்கிடையில் கடுமையான பகைமையும், சண்டையும் இருந்து வந்தது.

மற்றொரு சாரார் முஹாஜிர்கள் (நாடு துறந்தவர்கள்). அவர்களுக்குச் சொந்த நாடும் இல்லை சொந்த வீடும் இல்லை. வாழ்வதற்குண்டான எந்த வாழ்வாதாரமும் அவர்களுக்கில்லை. தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்தவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இவர்களது எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் மக்காவை விட்டு மதீனாவில் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு நாளும் முஹாஜிர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. மதீனாவில் செல்வ வளங்களும் அதிகம் இல்லாததால் மதீனாவின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்படைந்தது.

இந்த சிரமமான நெருக்கடியான நேரத்தில் இஸ்லாமிற்கு விரோதமான சில சக்திகள் முஸ்லிம்களுக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தின. இதனால் மதீனாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களும் வருவாய்களும் குறைந்தன. நெருக்கடி மிகுந்த சிரமமான சூழ்நிலைகள் உருவாயின.

இரண்டாவது வகையினர், மதீனாவின் பூர்வீகக் குடிமக்களில் உள்ள முஷ்ரிக்குகள்! (இணைவைப்பவர்கள்). இவர்களிடம் முஸ்லிம்களை ஆதிக்கம் செலுத்துவதற்கான எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அவர்களது உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றி பல சந்தேகங்கள் இருந்தன. தங்களது மூதாதையர்களின் மதத்தை விட்டுவிடுவது தங்களுக்கு உகந்ததா? என்று யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எந்தவிதமான விரோதத்தையும், குரோதத்தையும், சூழ்ச்சியையும் தங்களது உள்ளங்களில் மறைத்திருக்கவில்லை. சில காலங்கள்தான் இவ்வாறு கழிந்திருக்கும். அதற்குள் இவர்களும் இஸ்லாமைத் தழுவி தங்களது வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கே ஆக்கிக் கொண்டார்கள்.

இவர்களில் சிலர் மட்டும் நபி (ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக விரோதம் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் முஸ்லிம்களை எதிர்க்கும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை. சூழ்நிலைகளைக் கருதி முஸ்லிம்கள் மீது தங்களுக்கு அன்பு இருப்பதாக காட்டிக் கொண்டனர். இவர்களில் மிக முக்கியமானவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவனாவான். 'புஆஸ்' என்ற யுத்தம் நடந்ததற்குப் பின் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு கிளையினரும் சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவரை நியமித்துக் கொள்ள ஆலோசனை செய்தனர். அதன்படி அப்துல்லாஹ் இப்னு உபைய்யை தங்களது தலைவராக ஆக்கலாம் என்று முடிவு செய்திருந்த சமயத்தில், நபி (ஸல்) மதீனாவிற்கு வந்துவிட்டதால் மதீனாவாசிகள் இவனைக் கைவிட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பி விட்டனர்.

எனவே, நபி (ஸல்) அவர்கள்தான் தனது தலைமைத்துவத்தை பறித்துக் கொண்டார் என்று அவர்களின் மீது மிகவும் கோபமாக இருந்தான். இருந்தாலும் சூழ்நிலைகளைக் கருதியும் எஞ்சியிருக்கும் கண்ணியத்தையும் இழந்துவிடுவோம் என்ற பயத்திலும் பத்ர் போருக்குப் பின்பு, தான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதாக அறிமுகப்படுத்தினான்.

ஆனால், உள்ளத்தில் நிராகரிப்பையே மறைத்து வைத்திருந்தான். நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான். இவன் தலைவனானால் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கலாம் என்று நப்பாசை கொண்டிருந்த இவனது தோழர்களும் இவனின் தீய திட்டங்கள் நிறைவேற இவனுக்கு உறுதுணையாக நின்றனர். சில நேரங்களில் சில வாலிபர்களையும், சில அப்பாவி முஸ்லிம்களையும் தங்களது தீய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக யாரும் அறிந்து கொள்ளாத வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

மூன்றாம் வகையினர் யூதர்கள். உண்மையில் இவர்கள் இதற்கு முன் நாம் கூறியவாறு அஷ்வர் மற்றும் ரோமர்கள் காலத்தில் தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளால் ஹிஜாஸில் குடியேறினர். இவர்கள் இப்ரானி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரபு பிரதேசத்திற்கு வந்ததால் தங்களது உடை, மொழி, கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டார்கள். தங்களது பெயர்களையும், தங்களது குலத்தின் பெயர்களையும் அரபியப் பெயர்களைப் போன்று மாற்றிக் கொண்டனர். தங்களுக்கும் அரபியர்களுக்கும் இடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், தங்களது இனவெறியை மட்டும் தக்க வைத்துக் கொண்டனர். முழுமையாக அரபியர்களுடன் ஒன்றிவிடவில்லை. தாங்கள் இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அரபியர்களை மிகக் கேவலமாகக் கருதினர். அரபியர்களின் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும், தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர்.

(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (எந்தவித குறைவுமின்றி அதை) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) ''பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்த போதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால் அவர்கள் அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:75)

யூதர்கள் தங்களது மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதில் தீவிரம் காட்டவில்லை. மாறாக, ஜோசியம் பார்ப்பது, சூனியம் செய்வது, மந்திரிப்பது, பஞ்சாங்கம் பார்ப்பது போன்றவற்றையே தங்களது குலத்தொழிலாகவும் மதச் சடங்காகவும் செய்தனர். இந்தச் செயல்களின் மூலம் தாங்களே கல்விமான்கள், ஆன்மீகத் தலைவர்கள், சிறப்பிற்குரியவர்கள் என்று கருதினர்.

பொருளீட்டும் வழிகளில் மிகுந்த திறமை பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள் தானியங்கள், பேரீத்தங்கனி, மது வகைகள், துணிமணிகள் என அனைத்து வியாபாரங்களையும் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஆடைகளையும், வித்துக்களையும், மது வகைகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, மதீனாவிலிருந்து பேரீத்தம் பழங்களை ஏற்றுமதி செய்தனர். மேலும் பல தொழில்களும், வியாபாரங்களும் அவர்கள் கைவசம் இருந்தன.

பொதுவாக அரபியர்கள் மூலம் பெரும் இலாபங்களை அடைந்தனர். வட்டி அவர்களின் குலத் தொழிலாக இருந்தது. கவிஞர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவும், மக்களிடம் பெயர் பெற வேண்டும் என்பதற்காகவும் பெரும் கடன்களை வாரி வழங்கினர். இதற்குப் பகரமாக அரபுத் தலைவர்களின் தோட்டங்களையும், விவசாய நிலங்களையும் அடைமானமாக வைத்துக் கொண்டனர். பின்பு, அரபுத் தலைவர்களால் அந்தக் கடன்களை அடைக்க முடியாமல் போனபோது அவர்களே அந்தத் தோட்டங்களுக்கும், நிலங்களுக்கும் உரிமையாளர்களாகி விட்டனர்.

யூதர்கள் சதித் திட்டம் தீட்டுவதிலும், அரபுகளின் ஒற்றுமையை குலைப்பதிலும், குழப்பங்களை உண்டு பண்ணுவதிலும் தீவிரம் காட்டினர். தங்களைச் சுற்றியுள்ள அரபு கோத்திரங்களுக் கிடையில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் சூழ்ச்சிகளைச் செய்து, சண்டைகளையும் போர்களையும் தூண்டி விட்டனர். இவர்களின் இந்தச் சதியால் அரபியர்களுக்கு மத்தியில் எப்போதும் போர் நடந்துகொண்டே இருந்தது. சில சமயம் போர் அணையும் நிலை ஏற்பட்டால் அந்த யூதர்களின் விரல்கள் மீண்டும் புதிதாகப் போரின் நெருப்பை தூண்டுவதற்கு அசையத் தொடங்கும். போர் சூடுபிடித்துக் கொண்டால் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துக் கொண்டு அந்த அப்பாவி அரபியர்களுக்கு ஏற்படும் அழிவையும், நாசத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். போருக்குத் தேவையான பொருளாதார வசதி குறைந்து அரபியர்கள் போரை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் கடன் கொடுப்பார்கள். இதுபோன்ற சூழ்ச்சிகளால் யூதர்கள் இரண்டு விதமான பயன்களை அடைந்தனர்.

1) யூதர்கள் தங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டனர்.

2) வட்டியைப் பரவலாக்கி தங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தினர்.

மதீனாவில் யூதர்களின் மூன்று கோத்திரத்தினர் இருந்தனர்.

1) கைனுகாஃ கோத்திரத்தினர்: இவர்கள் கஸ்ரஜ் கிளையினரின் நண்பர்கள். இவர்களது வீடுகள் மதீனாவிற்குள் இருந்தன.

2) நளீர் கோத்திரத்தினர்: இவர்களும் கஸ்ரஜ்களுக்கு நண்பர்களாக இருந்தனர். இவர்களது வீடுகள் மதீனாவின் சுற்றுப்புறங்களில் இருந்தன.

3) குரைளா கோத்திரத்தினர்: இவர்கள் அவ்ஸ் கிளையினரின் நண்பர்கள். இவர்களது வீடுகள் மதீனாவின் சுற்றுப்புறங்களில் இருந்தன.

இந்த யூதர்கள்தான் அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினருக்கிடையில் போரை மூட்டிக் கொண்டிருந்தனர். 'புஆஸ்' யுத்தத்தில் இந்த யூதர்களும் கலந்து கொண்டனர். அதாவது ஒவ்வொரு யூதக் கோத்திரத்தினரும் அவ்ஸ், கஸ்ரஜ்களில் தங்களது நண்பர்களுக்கு உதவ போரில் கலந்து கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது இனத்தில் அனுப்பப்படவில்லை என்பதால் யூதர்கள் இஸ்லாமின் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். இவர்களது இனவெறி இவர்களது அறிவையும், சிந்தனையையும் மழுங்கச் செய்தது. எனவே, அரபியர்களில் இறைத்தூதர் அனுப்பப்பட்டதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இஸ்லாமிய அழைப்புப்பணி இனவெறிகளுக்கும், அற்ப உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டதாகும். இஸ்லாமிய அழைப்புப்பணி என்பது ஒரு சீர்திருத்தமும், தூய்மையும், ஒழுக்கமும் நிறைந்த பணியாகும். இப்பணி பல இனத்தவர்களின் உள்ளங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. விரோதம் மற்றும் கோபத்தின் நெருப்பை அணைக்கிறது. எல்லா நிலைகளிலும், எல்லா செயல்களிலும் நம்பகத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் ஹலாலான' தூய்மையானதையே உண்ண வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எனவே, யூதர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

அரபியர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடும். தங்களது சதித்திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். தங்களது வியாபாரங்கள் நலிந்துவிடும். தங்களின் பொருளாதாரத்தின் மூலதனமாகிய வட்டித் தொழிலை இழந்து விடுவோம் என்று யோசித்தனர். மேலும், இந்த அரபியர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் வட்டியின் மூலம் அவர்களிடமிருந்து நாம் அபகரித்த சொத்துகளையும், தோட்டங்களையும், நிலங்களையும் மீட்டுக் கொள்வார்கள் என்று அஞ்சினர்.

இதைப் பற்றி ஒரு சம்பவத்தை உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரழி) அறிவிக்கிறார்கள்:

ஸஃபியா (ரழி) கூறுகிறார்கள்: நான் எனது தந்தைக்கும் தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல் உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன். ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை:''இவர் அவர்தானா?'' (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்றாத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)

எனது தந்தை:''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம்!''

சிறிய தந்தை:''அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''

எனது தந்தை:''ஆம்!''

சிறிய தந்தை:''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''

எனது தந்தை:''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உயிரோடு இருக்கும் காலம்வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்.'' இவ்வாறு ஸஃபிய்யா (ரழி) யஹூதியாக இருந்தத் தனது தந்தையின் மன நிலையைப் பற்றி விவரிக்கிறார்கள். (இப்னு ஹிஷாம்)

இதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோது நடந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் பெரிய யூதப் பாதிரியாராக இருந்தார். நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரிடம் வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அந்தக் கேள்விகளின் பதிலை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய பதில்களைச் சரியாகக் கூறியதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அதே இடத்தில், அதே சமயத்தில் நபி (ஸல்) அவர்களை ஏற்று இஸ்லாமைத் தழுவினார். பின்பு அவர் நபி (ஸல்) அவர்களிடம் ''யூதர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசக்கூடியவர்கள். நான் இஸ்லாமைத் தழுவியது அவர்களுக்குத் தெரிந்தால் என்னைப் பற்றி அவதூறு கூறுவார்கள். எனவே, நான் மறைந்து கொள்கிறேன், என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் விசாரியுங்கள்'' என்றார்.

நபி (ஸல்) யூதர்களை வரவழைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அறைக்குள் மறைந்து கொண்டார். யூதர்கள் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் ''அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''எங்களில் மிக அறிந்த மார்க்க மேதை. மேலும், எங்களில் மிக அறிந்த மார்க்க மேதையின் மகனாவார். அவர் எங்களில் மிகச் சிறந்தவர் எங்களில் மிகச் சிறந்தவரின் மகனாவார். (அவர் எங்களின் தலைவர், எங்களின் தலைவரின் மகனாவார். அவர் எங்களில் மிக மேலானவர் மிக மேலானவரின் மகனாவார். அவர் எங்களில் மிக உயர்ந்தவர் மிக உயர்ந்தவரின் மகனாவார்)'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) ''அப்துல்லாஹ் இப்னு ஸலாம் முஸ்லிமாகிவிட்டால் நீங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்'' என்றார்கள். அதற்கு யூதர்கள் ''அல்லாஹ் அதிலிருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும்'' என்று இரண்டு அல்லது மூன்று முறைக் கூறினார்கள். அப்போது அறையிலிருந்து வெளியேறி 'அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறினார். இதனைக் கேட்ட யூதர்கள் ''இவன் எங்களில் மிகக் கெட்டவன், மேலும், கெட்டவனின் மகன்'' என்றனர். மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: அறையில் இருந்து வெளியேறிய அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) யூதர்களைப் பார்த்து ''ஓ! யூத சமூகமே! வணக்கத்திற்குரிய ஏக இறைவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர் என்று உங்களுக்கு நன்கு தெரியும். அவர் உண்மையான மார்க்கத்தையே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும்'' என்று கூறினார். அதற்கு அந்த யூதர்கள் ''இல்லை நீ பொய் கூறுகிறாய்'' என்று கூறினர். (ஸஹீஹுல் புகாரி)

இது நபி (ஸல்) மதீனாவில் நுழைந்த முதல் நாளிலேயே யூதர்களிடம் பார்த்த முதல் அனுபவமாகும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த உள்நாட்டு விவகாரங்களும், நிலைமைகளும் ஆகும்.

முஸ்லிம்களின் வெளி விவகார பிரச்சனைகளாவன: மதீனாவைச் சுற்றி குறைஷிகளின் மதத்தை பின்பற்றுபவர்கள்தான் இருந்தனர். குறைஷிகள்தான் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தனர். முஸ்லிம்கள் மக்கா குறைஷிகளின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்தபோது ஏறக்குறைய பத்து ஆண்டுகள் முஸ்லிம்களை மிகக் கடுமையாக துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வந்தனர். மிகுந்த நெருக்கடியையும், தடைகளையும் ஏற்படுத்தினர். மனரீதியான போராட்டத்தை அவர்கள் மீது திணித்தனர். பல பழிகளையும் பொய் பிரச்சாரங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தனர். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்தவுடன் அவர்களின் சொத்துகளையும், வீடுகளையும், நிலங்களையும் பறிமுதல் செய்தனர். ஹிஜ்ரா சென்றுவிட்ட முஸ்லிம்களின் குடும்பத்தினரை மதீனாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர். மற்றும் பலரை வேதனை செய்தனர். இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டனர். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சியையும் குறைவின்றி செய்தனர். ஆனால், முஸ்லிம்கள் தங்களைவிட்டு தப்பித்து 500 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு வளமிக்க பகுதிக்குச் சென்றுவிட்டனர் என்றவுடன் அதை சகித்துக்கொள்ள முடியாத குறைஷிகள், முஸ்லிம்களுக்கு எதிராக தங்களின் அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களைத் தீட்டினர்.

அதன் ஒரு கட்டமாக, குறைஷிகள் தாங்கள் புனிதமிக்க எல்லையில் குடியிருப்பவர்கள் கஅபாவின் அண்டை வீட்டார்கள் கஅபாவின் நிர்வாகிகள் என்பதால் அரபியர்களுக்கு மத்தியில் தங்களுக்கு இருந்த உலக ரீதியான, மேலும், மார்க்க ரீதியான தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி முழு அரபுலகில் உள்ள அனைத்து அரபியர்களையும் மதீனாவாசிகளுக்கு எதிராகத் தூண்டி விட்டனர். இதனால் மதீனா ஆபத்துகளால் சூழப்பட்டது. அவர்கள் ஏற்படுத்திய பொருளாதார தடைகளால் மதீனாவின் வருமானங்களும், இறக்குமதிகளும் குறைந்தன. ஒவ்வொரு நாளும் மதீனாவில் குடியேறும் முஹாஜிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் இணைவைக்கும் மக்காவாசிகளுடன் அவர்களைப் பின்பற்றுபவர்களும் சேர்ந்து கொண்டு இப்புதிய ஊரில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அபாயமும் உருவானது.

மக்காவின் வம்பர்கள் முஸ்லிம்களின் சொத்துகளை பறிமுதல் செய்தவாறே முஸ்லிம்களும் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது, அந்த நிராகரிப்பவர்கள் முஸ்லிம்களின் மீது பல வேதனைகளைக் கட்டவிழ்த்து விட்டவாறே முஸ்லிம்களும் அந்த நிராகரிப்பவர்களின் மீது வேதனைகளை கட்டவிழ்த்து விடுவது, நிராகரிப்பவர்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையில் பல தடைகளை ஏற்படுத்தியவாறே அவர்களின் வாழ்க்கையிலும் பல தடைகளை ஏற்படுத்துவது, சுருங்கக்கூறின் எக்காலத்திலும் இஸ்லாமையோ முஸ்லிம்களையோ நிராகரிப்பவர்கள் அழிக்க முடியாத அளவுக்கு அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பது முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்தது.

மதீனா வந்ததற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த வெளிவிவகார பிரச்சனைகள் இவைதான். இந்த அனைத்துப் பிரச்னைகளையும் முழுமையாக வெற்றி கொள்ள இவற்றை மிக நுட்பமான முறையில் கையாள்வது நபி (ஸல்) அவர்களுக்கு மிக அவசியமாக இருந்தது.

அல்லாஹ்வின் அருளாலும், உதவியாலும் நபி (ஸல்) அவர்கள் எல்லாவற்றிற்கும் அழகிய முறையில் தீர்வு கண்டார்கள். ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதையே செய்தார்கள். அது அன்பு காட்டுவதோ தண்டிப்பதோ எதுவாயினும் சரியே. மேலும், மனிதர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி அல்லாஹ்வின் வேதத்தையும், ஞானங்களையும் கற்றுக் கொடுப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். கண்டிப்புக் காட்டுவதை விட அன்புகாட்டி கருணையுடன் மார்க்கத்தை கற்றுக்கொடுத்து உள்ளங்களை தூய்மைபடுத்துவதற்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். இதனால் சில ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து அதிகாரங்களும் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் கிட்டின. இதன் விவரங்களை பின்வரும் பக்கங்களில் மிகத் தெளிவாகக் காணலாம்.