ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Friday, April 17, 2015

[ரஹீக் 021]-இரண்டாம் பத்ர் போர்

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)

இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.

அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள 'மர்ருள் ளஹ்ரான்' என்ற பகுதியிலுள்ள 'மஜன்னா' என்ற கிணற்றருகில் தங்கினார்.

அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக 'மர்ருள் ளஹ்ரான்' வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம் ''குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்'' என்று கூறினார்.

பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.

முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் 8 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி திரும்பி விட்டனர். மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு பயமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இப்போருக்கு, ''இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு'' என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் பத்ரில் இருந்து திரும்பிய பிறகு, மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலை நிலவியது. முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகவே, இப்போது அரபு நாடு முழுவதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காகவும், முஸ்லிம்களை நேசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்வதற்காகவும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர நபியவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாம் பத்ர் போரிலிருந்து திரும்பிய பிறகு மதீனாவில் 6 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் ஷாம் நாட்டிற்கருகில் உள்ள 'தூமத்துல் ஜன்தல்' என்ற இடத்தைச் சுற்றி வாழும் கோத்திரத்தினர் வழிப்பறி, கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மேலும், மதீனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்த பெரும் கூட்டம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்கள் என்ற செய்தி நபியவர்களுக்கு எட்டியது. எனவே, நபியவர்கள் மதீனாவில் 'ஸிபா இப்னு உர்ஃபுத்தா கிஃபா' என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்து விட்டு 1000 முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 5, ரபீஉல் அவ்வல், பிறை 25ல் தூமத்துல் ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள். உத்ரா கிளையைச் சேர்ந்த 'மத்கூர்' என்ற நபரைத் தனக்கு வழிகாட்டியாக நபியவர்கள் அழைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரிகள் கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நபியவர்கள் பயணத்தை இவ்வாறு தொடர்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்றபோது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில் சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர். மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.

இதற்குப் பின் 'தூமத்துல் ஜன்தல்' என்ற இடத்திற்கு சென்றபோது அங்குள்ள அனைவரும் தங்கள் இல்லங்களைக் காலி செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். நபியவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சுற்றியுள்ள இடங்களுக்குப் படைகளை அனுப்பித் தேடியும் எவரும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, மதீனாவிற்குத் திரும்ப ஆயத்தமானார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்போருக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள 'உயய்னா இப்னு ஸ்னு' என்பவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 'தூமா' என்பது 'மஷாஃபுஷ் ஷாம்' என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற இடமாகும். இங்கிருந்து 'திமஷ்க்' நகரம் ஐந்து இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது. இந்நகரம் மதீனாவிலிருந்து 15 இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது.

இதுபோன்ற மதிநுட்பமான, தீர்க்கமான நடவடிக்கைகளினால் அமைதி மற்றும் பாதுகாப்பை அனைத்து பகுதிகளிலும் நிறுவி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மேலும், இதன் மூலம் முஸ்லிம்களுக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். பல பக்கங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு வந்து கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிரமங்களை அகற்றினார்கள். நயவஞ்சகர்களும் அடங்கி அமைதியாகி விட்டார்கள். யூதர்களில் ஒரு முக்கிய பிரிவினரான 'நழீர்' என்ற கோத்திரத்தினரை மதீனாவிலிருந்து முற்றிலும் நாடு கடத்தப்பட்டதை பார்த்து பயந்துபோன மற்றொரு கோத்திரத்தினர், தாங்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒழுங்காக நிறைவேற்றினர். கிராம அரபிகளும் தங்களது அடடூழியங்களையும் வம்புத்தனங்களையும் அடக்கிக் கொண்டு முஸ்லிம்களுக்குப் பணிந்து நடந்தனர். மக்காவிலிருந்த குறைஷிகளும் முஸ்லிம்களைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இதுபோன்ற சாதகமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செம்மையாக நிறைவேற்றுவதற்குரிய நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றனர்.

அல்அஹ்ஜாப் போர்

அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது.

ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள் யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும் சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக் கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே, அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர். நெருப்பாய் எரிந்தனர்.

அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.

அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு வருகிறோம் என்று உஹுத் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.

இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அபூஸுஃப்யானின் தலைமையில் புறப்பட்டனர். 'மர்ருள் ளஹ்ரான்' என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்தபோது அங்குள்ள ஸுலைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர் உயைனா இப்னு ஸ்னு தலைமையில் புறப்பட்டனர். மேலும், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் என்பவனின் தலைமையின் கீழ் முர்ரா கிளையினரும் மிஸ்அர் இப்னு ருஹைலாவின் தலைமையின் கீழ் அஷ்ஜஃ கிளையினரும், இதைத் தவிர அஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் ஒன்றுசேர்ந்து புறப்பட்டனர்.

இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000 வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.

எதிரிகளின் இந்த ராணுவங்கள் அனைத்தும் திடீரென மதீனாவைத் தாக்கினால் நிச்சயம் முஸ்லிம்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அழிந்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், மதீனா நகரத்தின் தலைமைத்துவமோ முற்றிலும் விழித்த நிலையிலேயே இருந்தது. மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம் ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி (ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.

''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்தபோது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்'' என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.

இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். ''ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்'' என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

ஸஹ்லு இப்னு ஸஅது (ரழி) கூறுகிறார்: நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம். பலர் குழி தோண்டுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வே! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை!

முஹாஜிர்கள் அன்சாரிகளை மன்னித்து அருள்வாயாக!'' (ஸஹீஹுல் புகாரி)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும் இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!

அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!''

இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:

''நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்

புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்

வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்

நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,

தர்மம் செய்திருக்க மாட்டோம்,

தொழுதும் இருக்க மாட்டோம்.

எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!

எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது

பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!

இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது

அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்

எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹுல் புகாரி)
இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை கூறுவார்கள்.

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக் கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும் வீசும். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)
மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவரின் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபிரின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)

நுஃமான் இப்னு பஷீரின் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும் தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். ''நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தபோது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது'' என்றார்கள். நபியவர்கள் ''நான் இறங்குகிறேன்'' என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள். நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால் வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு ''அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்'' என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். ''அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்'' என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் ''அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்'' என்றார்கள். (ஸுனன் நஸாயீ, முஸ்னது அஹ்மது)

இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது. குறைஷிகள் 4000 நபர்களுடன் 'ஜுர்ஃப்' மற்றும் 'ஜகாபா'விற்கு மத்தியிலுள்ள 'ரூமா' என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹுதிற்கு அருகிலுள்ள 'தனப் நக்மா' என்ற இடத்தில் தங்கினர்.

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்டபோது ''(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33:22)

நயவஞ்சகர்களும் பலவீனமான உள்ளம் உள்ளவர்களும் இந்த படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

''அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33:12)
நபி (ஸல்) அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் மதீனாவிலிருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்து அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அதன் பிறகு மூவாயிரம் முஸ்லிம்களுடன் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அங்கு 'ஸல்உ' என்ற மலையைத் தங்களது முதுகுப்புறமாகவும், எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அகழைத் தடையாகவும் ஆக்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களுக்கிடையில் அடையாள வார்த்தையாக 'ஹாமீம், லா யுன்ஸரூன்' என்ற வசனம் நிர்ணயிக்கப்பட்டது.

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடியபோது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் எதிர்பாராததால் அதற்கான எவ்வித தயாரிப்பும் செய்திருக்கவில்லை. அகழியைப் பார்த்த அவர்கள் ''இது மாபெரும் ஒரு சூழ்ச்சி; அரபியரல்லாத ஒருவர்தான் இதைக் கூறியிருக்க வேண்டும்'' என்று தங்களுக்குள் புலம்பினார்கள்.

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அல்லது அகழில் இறங்குவதோ அல்லது அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர்.

குறைஷி குதிரை வீரர்களில் சிலர் முற்றுகையின் முடிவை எதிர்ப்பார்த்து அகழைச் சுற்றி நின்று கொண்டிருப்பதை வெறுத்து அகழியில் குதிப்பதற்குப் புறப்பட்டனர். அம்ர் இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடி அதில் இறங்கினர். பின்பு அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் மத்தியிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரழி) முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார்கள். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ர், ''தன்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?'' என்று கேட்க, அலீ (ரழி) ''நான்'' என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரழி), அவன் கோபமடையும்படி சில வார்த்தையைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கி சீறினான். இருவரும் தங்களின் வாளை சுழற்ற சில நொடிகளில் அலீ (ரழி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரை பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமா கூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்களை உமர் (ரழி) சந்தித்து குறைஷிகளை ஏசினார். பிறகு ''அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழுகவில்லை'' என்றார். அதற்கு நபியவர்கள் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அஸ்ரைத் தொழவில்லை'' என்றார்கள். பின்பு நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் 'புத்ஹான்' என்ற இடத்திற்குச் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதோம். (ஸஹீஹுல் புகாரி)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரழி) கூறுகிறார்கள்:

''யா அல்லாஹ்! இவர்களின் இல்லங்களையும், புதைக்குழிகளையும் நெருப்பால் நிரப்புவாயாக! எங்களை சூரியன் மறையும் வரை அஸர் தொழவிடாமல் இவர்கள் தடுத்தனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
முஸ்னது அஹ்மது மற்றும் முஸ்னது ஷாபிஈ ஆகிய நூற்களில் ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்தனர் என்றும் வந்துள்ளது. ஸஹீஹுல் புகாரியில் அஸ்ர் தொழுகை மட்டும் என்று கூறப்பட்டுள்ளதை இதற்கு முன்பு பார்த்தோம். இதற்கு விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

''அகழ்ப்போர் பல நாட்களாக நடந்தது. அதில் சில நாட்களில் அஸ்ர் மட்டும் தொழாமல் இருந்திருக்கலாம். சில நாட்களில் மற்றும் பல தொழுகைகளையும் தொழ முடியாமல் ஆகியிருக்கலாம்.'' (ஷரஹ் முஸ்லிம்)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களில் ஆறு பேரும் இணை வைப்பவர்களில் பத்து பேரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிலர் வாளாலும் கொல்லப்பட்டனர்.

ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை ஓர் அம்பு தாக்கியதில் அவர்களது குடங்கையிலுள்ள நரம்பு துண்டிக்கப்பட்டது. ஹப்பான் இப்னு அக்கா என்பவன்தான் இந்த அம்பை எறிந்தான். இந்தக் காரியம் ஸஅது (ரழி) அவர்களை அதிகம் வருத்தவே அவர்கள் அல்லாஹ்விடம் ''அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்யாக்கி, அவர்களை வெளியாக்கிய கூட்டத்தினரைத் தவிர வேறு எவரிடமும் உனக்காக நான் போர் புரிவது எனக்கு விருப்பமாக இல்லை என்பதை நீ நன்கு அறிவாய். அல்லாஹ்வே! எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் போரை நீ இத்துடன் முடித்துவிட்டாய் என்றே நான் கருதுகிறேன். அல்லாஹ்வே! குறைஷிகளிடம் போர் புரிய வேண்டிய நிலை மீண்டும் ஏற்படும் என்றிருந்தால், உனக்காக நான் அவர்களிடம் போர் புரிவதற்கு என்னை உயிருடன் வாழ வை! நீ போரை முடித்துவிட்டாய் என்றிருப்பின் இக்காயத்திலேயே எனக்கு மரணத்தை ஏற்படுத்தி விடு'' என்று வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

''பனூ குரைளா யூதர்கள் குறித்து என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வரை என் உயிரை கைப்பற்றிவிடாதே'' என்றும் வேண்டினார்கள் என 'தாரீக் இப்னு ஷாமி'ல் கூறப்பட்டிள்ளது.

முஸ்லிம்கள் இப்போரில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்த சமயத்தில் பொந்துகளிலிருந்த விஷப் பாம்புகள் (யூதர்கள்) தங்களின் விஷத்தைக் கக்குவதற்குத் துடித்தன. நழீர் வமிச யூதர்களின் மிகப் பெரிய விஷமி ஹை இப்னு அக்தப், குரைளா இன யூதர்களின் இல்லங்களுக்குச் சென்றான். முதலில் கஅப் இப்னு அஸதிடம் வந்தான். இவன்தான் குரைளா இன யூதர்களின் தலைவன். ஹை இவனது வீட்டுக் கதவை தட்டினான். ஆனால், கஅப் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டான். ஹய் அதிகம் வற்புறுத்தவே கஅப் கதவைத் திறந்தான். அப்போது ஹை, கஅபிடம், ''கஅபே! நான் உன்னிடம் உனக்கு நிரந்தரமாக கண்ணியம் தரும் ஒன்றையும், கடல் அலை போன்ற பெரிய படையையும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது, குறைஷிகளை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து ரூமாவில் உள்ள 'மஜ்மஉல் அஸ்யாலில்' தங்க வைத்துள்ளேன். அவ்வாறே கத்பான் கிளையினர்களை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து உஹுதுக்கு அருகில் உள்ள 'தனப் நக்மா'வில் தங்க வைத்துள்ளேன். இவர்களெல்லாம் முஹம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பூண்டோடு அழிக்காதவரை இங்கிருந்து திரும்ப மாட்டோம் என என்னிடம் ஒப்பந்தமும், உடன்படிக்கையும் செய்துள்ளனர்'' என்றான்.

இதைக் கேட்ட கஅப்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ காலமெல்லாம் இழிவு தரும் செயல்களையே என்னிடம் செய்யச் சொல்கிறாய். அதுமட்டுமல்ல, நீ என்னிடம் கூறிய காரியம் எப்படியெனில் வெறும் இடிஇடித்து, மின்னல் வெட்டி மழை தராத ஒரு மேகத்தைப் போன்றதுதான். ஹய்யே! உனக்கு நாசம் உண்டாகட்டும்! என்னை எனது நிலையில் விட்டுவிடு. நான் முஹம்மதிடம் உண்மை, வாக்கை நிறைவேற்றும் தன்மை இவற்றைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை'' என்றான்.

ஆனால் ஹய், கஅபைத் தொடர்ந்து மூளைச் சலவை செய்தான். இறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஓர் உடன்படிக்கையையும் செய்தான். அதாவது ''முஹம்மதை அழிக்காமல் குறைஷிகள் மற்றும் கத்ஃபானியர்கள் தோல்வியுற்று திரும்பிவிட்டாலும் நான் உன்னை விட்டும் பிரிய மாட்டேன். உன்னுடன் உனது கோட்டைக்குள் நானும் இருப்பேன். முஹம்மதாலும் அவருடைய படையாலும் உனக்கு ஏற்படும் கதி எனக்கும் ஏற்படட்டும். நான் உன்னை விட்டு ஒருக்காலும் பிரியமாட்டேன்.'' இந்த வாக்குறுதியை ஹை கூறியவுடன் கஅப் முஸ்லிம்களுக்கும் தனக்குமிடையிலுள்ள உடன்படிக்கையை முறித்துக் கொண்டான். அதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகச் சண்டை செய்வதற்காக அவன் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)

இதைத் தொடர்ந்து, உடனடியாக குரைளா இன யூதர்கள் முஸ்லிம்களுடன் போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:

ஹஸ்ஸான் இப்னு ஸாபிதுக்கு சொந்தமான 'ஃபாஉ' என்ற கோட்டையில் நபியவர்களின் மாமியான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிபும் மற்ற முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் துணையாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்.

ஸஃபிய்யா (ரழி) கூறுகிறார்: அப்போது ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி சுற்றி வந்தான். பனூ குரைளா யூதர்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்துவிட்டு போருக்குத் ஆயத்தமாகி விட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவந்து, அவர்கள் எங்களைத் தாக்க நாடினால்கூட எங்களைப் பாதுகாப்பதற்கு ஹஸ்ஸானைத் தவிர யாரும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தங்களது எதிரிகளுடன் மிகத் தீவிரமாக போரில் ஈடுபட்டிருந்தனர். எங்களைத் தாக்குவதற்கு யாராவது வந்தாலும் அவர்களால் எதிரிகளை விட்டுவிட்டு எங்களைக் காப்பாற்றுவதற்காக மதீனாவிற்குள் வர இயலாது. எனவே, நான் ஹஸ்ஸானிடம் ''ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருவதை நீ பார்க்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் கூறிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன். நபியவர்களும் நபித்தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். எனவே, நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!'' எனக் கூறினேன்.

அதற்கு ஹஸ்ஸான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது என்னால் முடியாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும்'' எனக் கூறிவிட்டார். உடனே நான் எனது இடுப்புத் துணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்தேன். பின்பு கோட்டையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த யூதனை நான் வைத்திருந்த கைத்தடியால் அடித்துக் கொன்றேன். பின்பு கோட்டைக்குள் வந்து ''ஹஸ்ஸானே! இறங்கிச் சென்று அவனது உடைமைகளை எடுத்து வா! அவன் ஆண் என்பதால்தான் அவனது உடைமைகளை என்னால் எடுக்க முடியவில்லை'' என்றேன். அது எனக்குத் தேவையில்லையென ஹஸ்ஸான் கூறிவிட்டார். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது, கோட்டைகளை வேவு பார்ப்பதற்காக சென்ற யூதன் திரும்ப வரவில்லை என்பதை அறிந்த மற்ற யூதர்கள் மதீனாவில் உள்ள கோட்டைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன என்று எண்ணினர். ஆகையால் மற்றொரு முறை இதுபோன்று துணிவு கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இருப்பினும் யூதர்கள் போரில் ஈடுபட்டுள்ள இணைவைப்பவர்களுக்கு உணவுகள் அனுப்பி வைத்தனர். இது யூதர்கள் முஸ்லிம்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இணைவைப்பவர்களுடன் இணைந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட உணவுகளில் இருபது ஒட்டகங்களை முஸ்லிம்கள் பறிமுதல் செய்தனர்.

யூதர்கள் இணைவைப்பவர்களுடன் இணைந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைத்தது. இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக இச்செய்தியை உறுதி செய்து கொள்ள நபியவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவ்வாத் இப்னு ஜுபைர் (ரழி) ஆகியோரை உண்மை நிலையை அறிந்து வர நபியவர்கள் அனுப்பினார்கள். நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம், ''நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கிடைத்த செய்தி உண்மைதானா? என்று பாருங்கள். நாம் கேள்விப்பட்டது உண்மையாக இருப்பின் என்னிடம் நான் அறிந்து கொள்ளும் விதமாக சைகை மட்டும் செய்யுங்கள். மக்களிடம் அந்தச் செய்தியை பரப்பி விடாதீர்கள். அவர்கள் வாக்குறுதி மாறாமல் இருந்தால் அதை மக்கள் அனைவருக்கும் தெரியும்படி சொல்லுங்கள்'' என்றார்கள்.

இதற்குப் பின் நபித்தோழர்கள் யூதர்களிடம் வந்தனர். யூதர்கள் இவர்களுக்கு மிகக் கெட்ட பதிலைக் கூறியதுடன் நபி (ஸல்) அவர்களை வசைபாடினர். ''அல்லாஹ்வின் தூதர் என்றால் யார் அவர்? எங்களுக்கும் முஹம்மதுக்கும் எவ்வித உடன்படிக்கையும் ஒப்பந்தமும் இல்லை'' என்றனர். இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்களிடம் திரும்பிய தோழர்கள் 'அழல், காரா' என்றனர். (அதாவது 'ரஜீஃ' என்னும் இடத்தில் நபித்தோழர்களை அழல், காரா கிளையினர் வஞ்சகமாகக் கொன்றது போல் யூதர்களும் நம்முடன் வஞ்சகம் செய்கின்றனர் என்று பொருள்.)

நபி (ஸல்) அவர்களைத் தவிர இந்த உண்மை பிறமக்களுக்குத் தெரியாமல் இருக்க நபித்தோழர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. யூதர்களின் மோசடி உண்மைதான் என்பதை மக்களும் அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு முன் பெரும் ஆபத்து வந்து விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது. துரோகம் இழைத்த யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம்களின் பெண்களும் சிறுவர்களும் எவ்வித உரிய பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலை அல்லாஹ் குர்ஆனில் கூறியது போன்றே இருந்தது.

உங்களுக்கு மேற்புறமிருந்தும் கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்துகொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்குள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:10,11)

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. ''நாங்கள் கிஸ்ரா, கைஸருடைய கஜானாக்களை அடைவோம் என்று முஹம்மது எங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். ஆனால், இன்று எங்களால் சுயதேவையை நிறைவேற்றுவதற்குக் கூட செல்ல முடியவில்லை. அந்த அளவு பயத்தில் இருக்கிறோம்'' என்று சிலர் கூறினர். ''எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன'' என்று சிலர் கூறினர். ஸலமா கிளையினர் கூட போரிலிருந்து திரும்பிட எண்ணினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் ''அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வாக்களிக்கவில்லை.'' என்று கூறுகின்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ''யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமல் இருந்தும் ''நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (போர்க்களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (போரிலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (அல்குர்ஆன் 33:13)

குரைளா யூதர்கள் தங்களுக்கு மோசடி செய்து விட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் நபி (ஸல்) அவர்கள் தங்களது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நீண்ட நேரம் சாய்ந்து படுத்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். இங்கு முஸ்லிம்கள் கடும் சோதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாகினர். பிறகு நபியவர்கள் எழுந்து ''அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்கள். இதற்குப் பின் நிலைமையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதில் முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உடனடியாக சில வீரர்களை அனுப்பினார்கள்.

இது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பு படையில் இருக்கும் குறைஷி அல்லாத கூட்டத்தனரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர்களைப் போர்முனையிலிருந்து திருப்பி விடலாம். பிறகு முஸ்லிம்களின் பரம எதிரியான குறைஷிகளைப் போர்க்களத்தில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணி, இது குறித்து அன்சாரிகளின் தலைவர்களான ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். ''எதிரிப் படையிலுள்ள கத்ஃபான் குலத் தலைவர்களான உயைனா இப்னு ஹிஸ்ன், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் ஆகியோருக்கு தூதனுப்பி மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம், நீங்கள் எங்களுடன் சண்டையிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்போமா? என்று நபி (ஸல்) ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் ''நபியே! நீங்கள் கூறும் இந்த ஆலோசனை அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம். அதே சமயம் இது எங்களின் நலனுக்காக நீங்கள் செய்வதாக இருந்தால் நிச்சயம் நாங்கள் அதனை விரும்பவில்லை. காரணம், மதீனாவில் விளையும் பழங்களை நாங்கள் விற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ மட்டுமே கத்ஃபான் குலத்தினர் உண்ண முடியும். இதைத் தவிர வேறு வழியில் மதீனாவின் பழங்களை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நாங்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன்பே இந்நிலையென்றால், இன்று அல்லாஹ் எங்களை இஸ்லாமின் மூலம் கண்ணியப்படுத்தி எங்களுக்கு நேர்வழியையும் தந்துவிட்டான். இப்போது பணிந்து நாங்கள் எங்களது செல்வங்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாளைத் தவிர வேறு எதையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க மாட்டோம். (அதாவது பணிய மாட்டோம்) இறுதிவரை போரிடுவோம்'' என்று அவ்விருவரும் கூறினார்கள். இவ்விருவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட நபியவர்கள் ''அரபிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறார்களே என்ற நிலை கருதி உங்களின் நன்மைக்காக இந்த ஆலோசனையை முன் வைத்தேன்'' என்று விளக்கினார்கள்.

அன்சாரிகளின் இந்த உறுதி, நிலை குலையாமை, துணிவு, மற்ற எல்லாத் தோழர்களின் பொறுமை, தியாகம் - இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹுத் தஆலா தன் புறத்திலிருந்து உதவியை இறக்கினான். எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது ராணுவங்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தான். இதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். கத்ஃபான் கோத்திரத்தில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்கிறேன்'' என்றார். அதற்கு நபியவர்கள் ''நீ தனியாக என்ன செய்து விட முடியும்? உன்னால் முடிந்தால் எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கினங்க அவர் குரைளாவினரிடம் சென்றார். இவர் குரைளாவினரின் நண்பராக இருந்ததால், அவர்களிடம் சென்று ''நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?'' என்றார். அதற்கவர்கள் ''ஆம்! என்றனர். இந்த ஊர் உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும், பிள்ளைகளும், பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகள் உங்களைப் போன்றல்ல. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்பு கிட்டவில்லை என்றாலோ அல்லது போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். அவரோ உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். நீங்கள் என்ன செய்ய முடியும்'' என்று கேட்டார். அதற்கு யூதர்கள் ''நுஅய்மே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்'' எனக் கேட்டனர். அதற்கவர் ''நீங்கள் அவர்களிடம் அவர்களின் சில நபர்களை உங்களிடம் அடைமானமாக வைத்துக்கொள்ள கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக போர் புரியாதீர்கள்'' என்று கூறினார். அதற்கு யூதர்கள் ''நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்'' என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஅய்ம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம் ''உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''ஆம்!'' அப்படித்தான் என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஅய்ம், யூதர்கள் முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைதேசமடைந்துள்ளனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சில நபர்களை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்'' என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ் 5, ஷவ்வால் மாதம் சனிக்கிழமை இரவு குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி அனுப்பினர். அதாவது ''நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும், ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்'' என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

குறைஷிகளின் இக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன் ''இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு ஏற்பட்ட தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாக சண்டையிட மாட்டோம்'' என்று கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் கூறியவுடன் ''நுஅய்ம் உங்களுக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்'' என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

இதற்குப் பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி ''நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம் வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்'' என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஅய்ம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்'' என்று தங்களுக்குள் கூறிவிட்டு வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது. முடிவு என்னவாகுமோ என அவர்கள் பயந்தனர்.

முஸ்லிம்கள் அல்லாஹ்விடம்,

''அல்லாஹ்வே! எங்களுடைய அவயங்களை மறைத்திடு. எங்களின் பயங்களை போக்கி அபயம் அளி'' என்று வேண்டினர்.

அடுத்து நபி (ஸல்) அவர்களும்,

வேதத்தை இறக்கியவனே! விரைவாக கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக! என அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும் ஏற்றுக் கொண்டான். எதிரிகளின் அணிகளில் பிரிவினை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்குள் உதவி செய்வதைக் கைவிட்டனர். அத்துடன் அல்லாஹ் அவர்களை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களை தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். அவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி, அவர்களை நிலை குலைய வைத்தனர்.

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கடுமையான குளிர் நிறைந்த இரவில் தோழர் ஹுதைஃபாவை எதிரிகளின் செய்திகளைத் தெரிந்து வர அனுப்பினார்கள். எதிரிகள் மக்கா திரும்ப ஆயத்தமாகி இருந்தனர். இச்செய்தியை நபியவர்களிடம் ஹுதைஃபா (ரழி) கூறினார். அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் இப்போரின் மூலம் தாங்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களைப் பாதுகாத்தான். அவனது வாக்கை உண்மைப் படுத்தினான். தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ் யுத்தம் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் நடைபெற்றது. இதுவே மிகச் சரியான கூற்றாகும். எதிரிகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் முற்றுகையிட்ட காலம் ஏறக்குறைய ஒரு மாதமாகும். பல மூலநூல்களின் கருத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது இப்போர் ஷவ்வால் மாதம் தொடங்கி துல்கஅதா மாதத்தில் முடிவுற்றது எனத் தெரிய வருகிறது. அறிஞர் இப்னு ஸஅது, ''நபியவர்கள் அகழ் போர் முடிந்து துல்கஅதா பிறை 23 புதன்கிழமை மதீனா திரும்பினார்கள்'' என்று கூறுகிறார்:

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது. இப்போரின் இறுதியில் இணைவைப்பவர்கள் நிராசையாகி, தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். இணைவைப்பவர்கள் எவ்வளவு பெரிய பலமுல்ல ராணுவங்களை ஒன்று திரட்டி மதீனாவில் வளர்ந்து வரும் இந்த சிறிய இஸ்லாமிய ராணுவத்தை அழித்துவிட முயன்றாலும் அது ஒருக்காலும் முடியாது என்பது இப்போரிலிருருந்து நன்கு தெரியவந்தது. இம்முறை இப்போருக்கு அரபிகள் ஒன்றுதிரட்டி வந்த படைகளைப் போல் இனி ஒருக்காலும் அவர்களால் ஒன்று திரட்டிவர முடியாது. ஆகவேதான் எதிரிகளை அல்லாஹ் வெளியேற்றிய பின் ''இனிமேல் நாமே அவர்கள் மீது போர் தொடுப்போம். அவர்கள் நம்மீது போர் தொடுக்க முடியாது. நாமே அவர்களிடம் செல்வோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் 'கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

No comments:

Post a Comment