ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு
Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Friday, April 17, 2015

[ரஹீக் 021]-இரண்டாம் பத்ர் போர்

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)

இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.

அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள 'மர்ருள் ளஹ்ரான்' என்ற பகுதியிலுள்ள 'மஜன்னா' என்ற கிணற்றருகில் தங்கினார்.

அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக 'மர்ருள் ளஹ்ரான்' வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம் ''குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்'' என்று கூறினார்.

பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.

முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் 8 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி திரும்பி விட்டனர். மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு பயமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இப்போருக்கு, ''இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு'' என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் பத்ரில் இருந்து திரும்பிய பிறகு, மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலை நிலவியது. முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகவே, இப்போது அரபு நாடு முழுவதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காகவும், முஸ்லிம்களை நேசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்வதற்காகவும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர நபியவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாம் பத்ர் போரிலிருந்து திரும்பிய பிறகு மதீனாவில் 6 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் ஷாம் நாட்டிற்கருகில் உள்ள 'தூமத்துல் ஜன்தல்' என்ற இடத்தைச் சுற்றி வாழும் கோத்திரத்தினர் வழிப்பறி, கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மேலும், மதீனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்த பெரும் கூட்டம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்கள் என்ற செய்தி நபியவர்களுக்கு எட்டியது. எனவே, நபியவர்கள் மதீனாவில் 'ஸிபா இப்னு உர்ஃபுத்தா கிஃபா' என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்து விட்டு 1000 முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 5, ரபீஉல் அவ்வல், பிறை 25ல் தூமத்துல் ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள். உத்ரா கிளையைச் சேர்ந்த 'மத்கூர்' என்ற நபரைத் தனக்கு வழிகாட்டியாக நபியவர்கள் அழைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரிகள் கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நபியவர்கள் பயணத்தை இவ்வாறு தொடர்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்றபோது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில் சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர். மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.

இதற்குப் பின் 'தூமத்துல் ஜன்தல்' என்ற இடத்திற்கு சென்றபோது அங்குள்ள அனைவரும் தங்கள் இல்லங்களைக் காலி செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். நபியவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சுற்றியுள்ள இடங்களுக்குப் படைகளை அனுப்பித் தேடியும் எவரும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, மதீனாவிற்குத் திரும்ப ஆயத்தமானார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்போருக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள 'உயய்னா இப்னு ஸ்னு' என்பவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 'தூமா' என்பது 'மஷாஃபுஷ் ஷாம்' என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற இடமாகும். இங்கிருந்து 'திமஷ்க்' நகரம் ஐந்து இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது. இந்நகரம் மதீனாவிலிருந்து 15 இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது.

இதுபோன்ற மதிநுட்பமான, தீர்க்கமான நடவடிக்கைகளினால் அமைதி மற்றும் பாதுகாப்பை அனைத்து பகுதிகளிலும் நிறுவி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மேலும், இதன் மூலம் முஸ்லிம்களுக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். பல பக்கங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு வந்து கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிரமங்களை அகற்றினார்கள். நயவஞ்சகர்களும் அடங்கி அமைதியாகி விட்டார்கள். யூதர்களில் ஒரு முக்கிய பிரிவினரான 'நழீர்' என்ற கோத்திரத்தினரை மதீனாவிலிருந்து முற்றிலும் நாடு கடத்தப்பட்டதை பார்த்து பயந்துபோன மற்றொரு கோத்திரத்தினர், தாங்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒழுங்காக நிறைவேற்றினர். கிராம அரபிகளும் தங்களது அடடூழியங்களையும் வம்புத்தனங்களையும் அடக்கிக் கொண்டு முஸ்லிம்களுக்குப் பணிந்து நடந்தனர். மக்காவிலிருந்த குறைஷிகளும் முஸ்லிம்களைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இதுபோன்ற சாதகமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செம்மையாக நிறைவேற்றுவதற்குரிய நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றனர்.

அல்அஹ்ஜாப் போர்

அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது.

ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள் யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும் சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக் கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே, அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர். நெருப்பாய் எரிந்தனர்.

அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.

அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு வருகிறோம் என்று உஹுத் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.

இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அபூஸுஃப்யானின் தலைமையில் புறப்பட்டனர். 'மர்ருள் ளஹ்ரான்' என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்தபோது அங்குள்ள ஸுலைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர் உயைனா இப்னு ஸ்னு தலைமையில் புறப்பட்டனர். மேலும், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் என்பவனின் தலைமையின் கீழ் முர்ரா கிளையினரும் மிஸ்அர் இப்னு ருஹைலாவின் தலைமையின் கீழ் அஷ்ஜஃ கிளையினரும், இதைத் தவிர அஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் ஒன்றுசேர்ந்து புறப்பட்டனர்.

இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000 வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.

எதிரிகளின் இந்த ராணுவங்கள் அனைத்தும் திடீரென மதீனாவைத் தாக்கினால் நிச்சயம் முஸ்லிம்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அழிந்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், மதீனா நகரத்தின் தலைமைத்துவமோ முற்றிலும் விழித்த நிலையிலேயே இருந்தது. மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம் ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி (ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.

''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்தபோது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்'' என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.

இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். ''ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்'' என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

ஸஹ்லு இப்னு ஸஅது (ரழி) கூறுகிறார்: நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம். பலர் குழி தோண்டுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வே! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை!

முஹாஜிர்கள் அன்சாரிகளை மன்னித்து அருள்வாயாக!'' (ஸஹீஹுல் புகாரி)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும் இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!

அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!''

இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:

''நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்

புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்

வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்

நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,

தர்மம் செய்திருக்க மாட்டோம்,

தொழுதும் இருக்க மாட்டோம்.

எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!

எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது

பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!

இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது

அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்

எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹுல் புகாரி)
இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை கூறுவார்கள்.

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக் கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும் வீசும். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)
மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவரின் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபிரின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)

நுஃமான் இப்னு பஷீரின் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும் தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். ''நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தபோது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது'' என்றார்கள். நபியவர்கள் ''நான் இறங்குகிறேன்'' என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள். நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால் வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு ''அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்'' என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். ''அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்'' என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் ''அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்'' என்றார்கள். (ஸுனன் நஸாயீ, முஸ்னது அஹ்மது)

இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது. குறைஷிகள் 4000 நபர்களுடன் 'ஜுர்ஃப்' மற்றும் 'ஜகாபா'விற்கு மத்தியிலுள்ள 'ரூமா' என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹுதிற்கு அருகிலுள்ள 'தனப் நக்மா' என்ற இடத்தில் தங்கினர்.

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்டபோது ''(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33:22)

நயவஞ்சகர்களும் பலவீனமான உள்ளம் உள்ளவர்களும் இந்த படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

''அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33:12)
நபி (ஸல்) அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் மதீனாவிலிருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்து அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அதன் பிறகு மூவாயிரம் முஸ்லிம்களுடன் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அங்கு 'ஸல்உ' என்ற மலையைத் தங்களது முதுகுப்புறமாகவும், எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அகழைத் தடையாகவும் ஆக்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களுக்கிடையில் அடையாள வார்த்தையாக 'ஹாமீம், லா யுன்ஸரூன்' என்ற வசனம் நிர்ணயிக்கப்பட்டது.

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடியபோது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் எதிர்பாராததால் அதற்கான எவ்வித தயாரிப்பும் செய்திருக்கவில்லை. அகழியைப் பார்த்த அவர்கள் ''இது மாபெரும் ஒரு சூழ்ச்சி; அரபியரல்லாத ஒருவர்தான் இதைக் கூறியிருக்க வேண்டும்'' என்று தங்களுக்குள் புலம்பினார்கள்.

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அல்லது அகழில் இறங்குவதோ அல்லது அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர்.

குறைஷி குதிரை வீரர்களில் சிலர் முற்றுகையின் முடிவை எதிர்ப்பார்த்து அகழைச் சுற்றி நின்று கொண்டிருப்பதை வெறுத்து அகழியில் குதிப்பதற்குப் புறப்பட்டனர். அம்ர் இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடி அதில் இறங்கினர். பின்பு அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் மத்தியிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரழி) முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார்கள். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ர், ''தன்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?'' என்று கேட்க, அலீ (ரழி) ''நான்'' என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரழி), அவன் கோபமடையும்படி சில வார்த்தையைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கி சீறினான். இருவரும் தங்களின் வாளை சுழற்ற சில நொடிகளில் அலீ (ரழி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரை பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமா கூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்களை உமர் (ரழி) சந்தித்து குறைஷிகளை ஏசினார். பிறகு ''அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழுகவில்லை'' என்றார். அதற்கு நபியவர்கள் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அஸ்ரைத் தொழவில்லை'' என்றார்கள். பின்பு நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் 'புத்ஹான்' என்ற இடத்திற்குச் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதோம். (ஸஹீஹுல் புகாரி)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரழி) கூறுகிறார்கள்:

''யா அல்லாஹ்! இவர்களின் இல்லங்களையும், புதைக்குழிகளையும் நெருப்பால் நிரப்புவாயாக! எங்களை சூரியன் மறையும் வரை அஸர் தொழவிடாமல் இவர்கள் தடுத்தனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
முஸ்னது அஹ்மது மற்றும் முஸ்னது ஷாபிஈ ஆகிய நூற்களில் ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்தனர் என்றும் வந்துள்ளது. ஸஹீஹுல் புகாரியில் அஸ்ர் தொழுகை மட்டும் என்று கூறப்பட்டுள்ளதை இதற்கு முன்பு பார்த்தோம். இதற்கு விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

''அகழ்ப்போர் பல நாட்களாக நடந்தது. அதில் சில நாட்களில் அஸ்ர் மட்டும் தொழாமல் இருந்திருக்கலாம். சில நாட்களில் மற்றும் பல தொழுகைகளையும் தொழ முடியாமல் ஆகியிருக்கலாம்.'' (ஷரஹ் முஸ்லிம்)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களில் ஆறு பேரும் இணை வைப்பவர்களில் பத்து பேரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிலர் வாளாலும் கொல்லப்பட்டனர்.

ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை ஓர் அம்பு தாக்கியதில் அவர்களது குடங்கையிலுள்ள நரம்பு துண்டிக்கப்பட்டது. ஹப்பான் இப்னு அக்கா என்பவன்தான் இந்த அம்பை எறிந்தான். இந்தக் காரியம் ஸஅது (ரழி) அவர்களை அதிகம் வருத்தவே அவர்கள் அல்லாஹ்விடம் ''அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்யாக்கி, அவர்களை வெளியாக்கிய கூட்டத்தினரைத் தவிர வேறு எவரிடமும் உனக்காக நான் போர் புரிவது எனக்கு விருப்பமாக இல்லை என்பதை நீ நன்கு அறிவாய். அல்லாஹ்வே! எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் போரை நீ இத்துடன் முடித்துவிட்டாய் என்றே நான் கருதுகிறேன். அல்லாஹ்வே! குறைஷிகளிடம் போர் புரிய வேண்டிய நிலை மீண்டும் ஏற்படும் என்றிருந்தால், உனக்காக நான் அவர்களிடம் போர் புரிவதற்கு என்னை உயிருடன் வாழ வை! நீ போரை முடித்துவிட்டாய் என்றிருப்பின் இக்காயத்திலேயே எனக்கு மரணத்தை ஏற்படுத்தி விடு'' என்று வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

''பனூ குரைளா யூதர்கள் குறித்து என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வரை என் உயிரை கைப்பற்றிவிடாதே'' என்றும் வேண்டினார்கள் என 'தாரீக் இப்னு ஷாமி'ல் கூறப்பட்டிள்ளது.

முஸ்லிம்கள் இப்போரில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்த சமயத்தில் பொந்துகளிலிருந்த விஷப் பாம்புகள் (யூதர்கள்) தங்களின் விஷத்தைக் கக்குவதற்குத் துடித்தன. நழீர் வமிச யூதர்களின் மிகப் பெரிய விஷமி ஹை இப்னு அக்தப், குரைளா இன யூதர்களின் இல்லங்களுக்குச் சென்றான். முதலில் கஅப் இப்னு அஸதிடம் வந்தான். இவன்தான் குரைளா இன யூதர்களின் தலைவன். ஹை இவனது வீட்டுக் கதவை தட்டினான். ஆனால், கஅப் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டான். ஹய் அதிகம் வற்புறுத்தவே கஅப் கதவைத் திறந்தான். அப்போது ஹை, கஅபிடம், ''கஅபே! நான் உன்னிடம் உனக்கு நிரந்தரமாக கண்ணியம் தரும் ஒன்றையும், கடல் அலை போன்ற பெரிய படையையும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது, குறைஷிகளை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து ரூமாவில் உள்ள 'மஜ்மஉல் அஸ்யாலில்' தங்க வைத்துள்ளேன். அவ்வாறே கத்பான் கிளையினர்களை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து உஹுதுக்கு அருகில் உள்ள 'தனப் நக்மா'வில் தங்க வைத்துள்ளேன். இவர்களெல்லாம் முஹம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பூண்டோடு அழிக்காதவரை இங்கிருந்து திரும்ப மாட்டோம் என என்னிடம் ஒப்பந்தமும், உடன்படிக்கையும் செய்துள்ளனர்'' என்றான்.

இதைக் கேட்ட கஅப்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ காலமெல்லாம் இழிவு தரும் செயல்களையே என்னிடம் செய்யச் சொல்கிறாய். அதுமட்டுமல்ல, நீ என்னிடம் கூறிய காரியம் எப்படியெனில் வெறும் இடிஇடித்து, மின்னல் வெட்டி மழை தராத ஒரு மேகத்தைப் போன்றதுதான். ஹய்யே! உனக்கு நாசம் உண்டாகட்டும்! என்னை எனது நிலையில் விட்டுவிடு. நான் முஹம்மதிடம் உண்மை, வாக்கை நிறைவேற்றும் தன்மை இவற்றைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை'' என்றான்.

ஆனால் ஹய், கஅபைத் தொடர்ந்து மூளைச் சலவை செய்தான். இறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஓர் உடன்படிக்கையையும் செய்தான். அதாவது ''முஹம்மதை அழிக்காமல் குறைஷிகள் மற்றும் கத்ஃபானியர்கள் தோல்வியுற்று திரும்பிவிட்டாலும் நான் உன்னை விட்டும் பிரிய மாட்டேன். உன்னுடன் உனது கோட்டைக்குள் நானும் இருப்பேன். முஹம்மதாலும் அவருடைய படையாலும் உனக்கு ஏற்படும் கதி எனக்கும் ஏற்படட்டும். நான் உன்னை விட்டு ஒருக்காலும் பிரியமாட்டேன்.'' இந்த வாக்குறுதியை ஹை கூறியவுடன் கஅப் முஸ்லிம்களுக்கும் தனக்குமிடையிலுள்ள உடன்படிக்கையை முறித்துக் கொண்டான். அதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகச் சண்டை செய்வதற்காக அவன் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)

இதைத் தொடர்ந்து, உடனடியாக குரைளா இன யூதர்கள் முஸ்லிம்களுடன் போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:

ஹஸ்ஸான் இப்னு ஸாபிதுக்கு சொந்தமான 'ஃபாஉ' என்ற கோட்டையில் நபியவர்களின் மாமியான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிபும் மற்ற முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் துணையாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்.

ஸஃபிய்யா (ரழி) கூறுகிறார்: அப்போது ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி சுற்றி வந்தான். பனூ குரைளா யூதர்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்துவிட்டு போருக்குத் ஆயத்தமாகி விட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவந்து, அவர்கள் எங்களைத் தாக்க நாடினால்கூட எங்களைப் பாதுகாப்பதற்கு ஹஸ்ஸானைத் தவிர யாரும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தங்களது எதிரிகளுடன் மிகத் தீவிரமாக போரில் ஈடுபட்டிருந்தனர். எங்களைத் தாக்குவதற்கு யாராவது வந்தாலும் அவர்களால் எதிரிகளை விட்டுவிட்டு எங்களைக் காப்பாற்றுவதற்காக மதீனாவிற்குள் வர இயலாது. எனவே, நான் ஹஸ்ஸானிடம் ''ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருவதை நீ பார்க்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் கூறிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன். நபியவர்களும் நபித்தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். எனவே, நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!'' எனக் கூறினேன்.

அதற்கு ஹஸ்ஸான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது என்னால் முடியாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும்'' எனக் கூறிவிட்டார். உடனே நான் எனது இடுப்புத் துணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்தேன். பின்பு கோட்டையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த யூதனை நான் வைத்திருந்த கைத்தடியால் அடித்துக் கொன்றேன். பின்பு கோட்டைக்குள் வந்து ''ஹஸ்ஸானே! இறங்கிச் சென்று அவனது உடைமைகளை எடுத்து வா! அவன் ஆண் என்பதால்தான் அவனது உடைமைகளை என்னால் எடுக்க முடியவில்லை'' என்றேன். அது எனக்குத் தேவையில்லையென ஹஸ்ஸான் கூறிவிட்டார். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது, கோட்டைகளை வேவு பார்ப்பதற்காக சென்ற யூதன் திரும்ப வரவில்லை என்பதை அறிந்த மற்ற யூதர்கள் மதீனாவில் உள்ள கோட்டைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன என்று எண்ணினர். ஆகையால் மற்றொரு முறை இதுபோன்று துணிவு கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இருப்பினும் யூதர்கள் போரில் ஈடுபட்டுள்ள இணைவைப்பவர்களுக்கு உணவுகள் அனுப்பி வைத்தனர். இது யூதர்கள் முஸ்லிம்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இணைவைப்பவர்களுடன் இணைந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட உணவுகளில் இருபது ஒட்டகங்களை முஸ்லிம்கள் பறிமுதல் செய்தனர்.

யூதர்கள் இணைவைப்பவர்களுடன் இணைந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைத்தது. இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக இச்செய்தியை உறுதி செய்து கொள்ள நபியவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவ்வாத் இப்னு ஜுபைர் (ரழி) ஆகியோரை உண்மை நிலையை அறிந்து வர நபியவர்கள் அனுப்பினார்கள். நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம், ''நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கிடைத்த செய்தி உண்மைதானா? என்று பாருங்கள். நாம் கேள்விப்பட்டது உண்மையாக இருப்பின் என்னிடம் நான் அறிந்து கொள்ளும் விதமாக சைகை மட்டும் செய்யுங்கள். மக்களிடம் அந்தச் செய்தியை பரப்பி விடாதீர்கள். அவர்கள் வாக்குறுதி மாறாமல் இருந்தால் அதை மக்கள் அனைவருக்கும் தெரியும்படி சொல்லுங்கள்'' என்றார்கள்.

இதற்குப் பின் நபித்தோழர்கள் யூதர்களிடம் வந்தனர். யூதர்கள் இவர்களுக்கு மிகக் கெட்ட பதிலைக் கூறியதுடன் நபி (ஸல்) அவர்களை வசைபாடினர். ''அல்லாஹ்வின் தூதர் என்றால் யார் அவர்? எங்களுக்கும் முஹம்மதுக்கும் எவ்வித உடன்படிக்கையும் ஒப்பந்தமும் இல்லை'' என்றனர். இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்களிடம் திரும்பிய தோழர்கள் 'அழல், காரா' என்றனர். (அதாவது 'ரஜீஃ' என்னும் இடத்தில் நபித்தோழர்களை அழல், காரா கிளையினர் வஞ்சகமாகக் கொன்றது போல் யூதர்களும் நம்முடன் வஞ்சகம் செய்கின்றனர் என்று பொருள்.)

நபி (ஸல்) அவர்களைத் தவிர இந்த உண்மை பிறமக்களுக்குத் தெரியாமல் இருக்க நபித்தோழர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. யூதர்களின் மோசடி உண்மைதான் என்பதை மக்களும் அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு முன் பெரும் ஆபத்து வந்து விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது. துரோகம் இழைத்த யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம்களின் பெண்களும் சிறுவர்களும் எவ்வித உரிய பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலை அல்லாஹ் குர்ஆனில் கூறியது போன்றே இருந்தது.

உங்களுக்கு மேற்புறமிருந்தும் கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்துகொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்குள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:10,11)

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. ''நாங்கள் கிஸ்ரா, கைஸருடைய கஜானாக்களை அடைவோம் என்று முஹம்மது எங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். ஆனால், இன்று எங்களால் சுயதேவையை நிறைவேற்றுவதற்குக் கூட செல்ல முடியவில்லை. அந்த அளவு பயத்தில் இருக்கிறோம்'' என்று சிலர் கூறினர். ''எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன'' என்று சிலர் கூறினர். ஸலமா கிளையினர் கூட போரிலிருந்து திரும்பிட எண்ணினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் ''அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வாக்களிக்கவில்லை.'' என்று கூறுகின்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ''யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமல் இருந்தும் ''நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (போர்க்களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (போரிலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (அல்குர்ஆன் 33:13)

குரைளா யூதர்கள் தங்களுக்கு மோசடி செய்து விட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் நபி (ஸல்) அவர்கள் தங்களது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நீண்ட நேரம் சாய்ந்து படுத்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். இங்கு முஸ்லிம்கள் கடும் சோதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாகினர். பிறகு நபியவர்கள் எழுந்து ''அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்கள். இதற்குப் பின் நிலைமையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதில் முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உடனடியாக சில வீரர்களை அனுப்பினார்கள்.

இது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பு படையில் இருக்கும் குறைஷி அல்லாத கூட்டத்தனரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர்களைப் போர்முனையிலிருந்து திருப்பி விடலாம். பிறகு முஸ்லிம்களின் பரம எதிரியான குறைஷிகளைப் போர்க்களத்தில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணி, இது குறித்து அன்சாரிகளின் தலைவர்களான ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். ''எதிரிப் படையிலுள்ள கத்ஃபான் குலத் தலைவர்களான உயைனா இப்னு ஹிஸ்ன், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் ஆகியோருக்கு தூதனுப்பி மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம், நீங்கள் எங்களுடன் சண்டையிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்போமா? என்று நபி (ஸல்) ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் ''நபியே! நீங்கள் கூறும் இந்த ஆலோசனை அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம். அதே சமயம் இது எங்களின் நலனுக்காக நீங்கள் செய்வதாக இருந்தால் நிச்சயம் நாங்கள் அதனை விரும்பவில்லை. காரணம், மதீனாவில் விளையும் பழங்களை நாங்கள் விற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ மட்டுமே கத்ஃபான் குலத்தினர் உண்ண முடியும். இதைத் தவிர வேறு வழியில் மதீனாவின் பழங்களை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நாங்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன்பே இந்நிலையென்றால், இன்று அல்லாஹ் எங்களை இஸ்லாமின் மூலம் கண்ணியப்படுத்தி எங்களுக்கு நேர்வழியையும் தந்துவிட்டான். இப்போது பணிந்து நாங்கள் எங்களது செல்வங்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாளைத் தவிர வேறு எதையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க மாட்டோம். (அதாவது பணிய மாட்டோம்) இறுதிவரை போரிடுவோம்'' என்று அவ்விருவரும் கூறினார்கள். இவ்விருவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட நபியவர்கள் ''அரபிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறார்களே என்ற நிலை கருதி உங்களின் நன்மைக்காக இந்த ஆலோசனையை முன் வைத்தேன்'' என்று விளக்கினார்கள்.

அன்சாரிகளின் இந்த உறுதி, நிலை குலையாமை, துணிவு, மற்ற எல்லாத் தோழர்களின் பொறுமை, தியாகம் - இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹுத் தஆலா தன் புறத்திலிருந்து உதவியை இறக்கினான். எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது ராணுவங்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தான். இதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். கத்ஃபான் கோத்திரத்தில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்கிறேன்'' என்றார். அதற்கு நபியவர்கள் ''நீ தனியாக என்ன செய்து விட முடியும்? உன்னால் முடிந்தால் எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கினங்க அவர் குரைளாவினரிடம் சென்றார். இவர் குரைளாவினரின் நண்பராக இருந்ததால், அவர்களிடம் சென்று ''நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?'' என்றார். அதற்கவர்கள் ''ஆம்! என்றனர். இந்த ஊர் உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும், பிள்ளைகளும், பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகள் உங்களைப் போன்றல்ல. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்பு கிட்டவில்லை என்றாலோ அல்லது போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். அவரோ உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். நீங்கள் என்ன செய்ய முடியும்'' என்று கேட்டார். அதற்கு யூதர்கள் ''நுஅய்மே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்'' எனக் கேட்டனர். அதற்கவர் ''நீங்கள் அவர்களிடம் அவர்களின் சில நபர்களை உங்களிடம் அடைமானமாக வைத்துக்கொள்ள கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக போர் புரியாதீர்கள்'' என்று கூறினார். அதற்கு யூதர்கள் ''நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்'' என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஅய்ம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம் ''உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''ஆம்!'' அப்படித்தான் என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஅய்ம், யூதர்கள் முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைதேசமடைந்துள்ளனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சில நபர்களை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்'' என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ் 5, ஷவ்வால் மாதம் சனிக்கிழமை இரவு குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி அனுப்பினர். அதாவது ''நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும், ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்'' என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

குறைஷிகளின் இக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன் ''இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு ஏற்பட்ட தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாக சண்டையிட மாட்டோம்'' என்று கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் கூறியவுடன் ''நுஅய்ம் உங்களுக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்'' என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

இதற்குப் பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி ''நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம் வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்'' என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஅய்ம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்'' என்று தங்களுக்குள் கூறிவிட்டு வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது. முடிவு என்னவாகுமோ என அவர்கள் பயந்தனர்.

முஸ்லிம்கள் அல்லாஹ்விடம்,

''அல்லாஹ்வே! எங்களுடைய அவயங்களை மறைத்திடு. எங்களின் பயங்களை போக்கி அபயம் அளி'' என்று வேண்டினர்.

அடுத்து நபி (ஸல்) அவர்களும்,

வேதத்தை இறக்கியவனே! விரைவாக கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக! என அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும் ஏற்றுக் கொண்டான். எதிரிகளின் அணிகளில் பிரிவினை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்குள் உதவி செய்வதைக் கைவிட்டனர். அத்துடன் அல்லாஹ் அவர்களை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களை தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். அவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி, அவர்களை நிலை குலைய வைத்தனர்.

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கடுமையான குளிர் நிறைந்த இரவில் தோழர் ஹுதைஃபாவை எதிரிகளின் செய்திகளைத் தெரிந்து வர அனுப்பினார்கள். எதிரிகள் மக்கா திரும்ப ஆயத்தமாகி இருந்தனர். இச்செய்தியை நபியவர்களிடம் ஹுதைஃபா (ரழி) கூறினார். அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் இப்போரின் மூலம் தாங்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களைப் பாதுகாத்தான். அவனது வாக்கை உண்மைப் படுத்தினான். தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ் யுத்தம் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் நடைபெற்றது. இதுவே மிகச் சரியான கூற்றாகும். எதிரிகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் முற்றுகையிட்ட காலம் ஏறக்குறைய ஒரு மாதமாகும். பல மூலநூல்களின் கருத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது இப்போர் ஷவ்வால் மாதம் தொடங்கி துல்கஅதா மாதத்தில் முடிவுற்றது எனத் தெரிய வருகிறது. அறிஞர் இப்னு ஸஅது, ''நபியவர்கள் அகழ் போர் முடிந்து துல்கஅதா பிறை 23 புதன்கிழமை மதீனா திரும்பினார்கள்'' என்று கூறுகிறார்:

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது. இப்போரின் இறுதியில் இணைவைப்பவர்கள் நிராசையாகி, தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். இணைவைப்பவர்கள் எவ்வளவு பெரிய பலமுல்ல ராணுவங்களை ஒன்று திரட்டி மதீனாவில் வளர்ந்து வரும் இந்த சிறிய இஸ்லாமிய ராணுவத்தை அழித்துவிட முயன்றாலும் அது ஒருக்காலும் முடியாது என்பது இப்போரிலிருருந்து நன்கு தெரியவந்தது. இம்முறை இப்போருக்கு அரபிகள் ஒன்றுதிரட்டி வந்த படைகளைப் போல் இனி ஒருக்காலும் அவர்களால் ஒன்று திரட்டிவர முடியாது. ஆகவேதான் எதிரிகளை அல்லாஹ் வெளியேற்றிய பின் ''இனிமேல் நாமே அவர்கள் மீது போர் தொடுப்போம். அவர்கள் நம்மீது போர் தொடுக்க முடியாது. நாமே அவர்களிடம் செல்வோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் 'கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Friday, March 27, 2015

[ரஹீக் 018]-பெரிய பத்ர் போர் (மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர்)

போருக்குரிய காரணம்

'உஷைரா' என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கியபோது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் 'ஹவ்ரா' என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்தபோது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். ''இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவரின் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.

இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாரிகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாரிகளும் இருந்தனர். மதீனாவிலிருந்து வெளியேறும்போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன்தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும், மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர். நபி (ஸல்) மற்றும் அலீ, மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறிமாறி பயணம் செய்தனர்.

இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி 'ரவ்ஹா' என்ற இடத்தை அடைந்தபோது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.

இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை 'முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த' (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.

படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.

1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு 'உகாப்' என்று சொல்லப்பட்டது.

2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.

படையின் வலப்பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப்பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.

இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

நபி (ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு இல்லாத இப்படையுடன் மதீனாவின் வலப் பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள். 'ரவ்ஹா' என்ற கிணற்றை அடைந்து, அங்கு தங்கிவிட்டு மக்காவின் பிரதான பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக 'நாஸியா' என்ற இடம் வழியாக வெளியேறி பத்ரை நோக்கி சென்றார்கள். 'நாஸியா' என்ற இடத்தின் ஓரமாக பயணித்து அங்குள்ள பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். அந்தப் பள்ளத்தாக்கிற்கு பெயர் 'ருஹ்கான்' எனப்படும். அது நாஸியா மற்றும் 'ஸஃப்ரா' என்ற இடத்திற்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்காகும்.

பின்பு ஸஃப்ராவின் குறுகலான வழியாகச் சென்று ஸஃப்ராவை அடைந்தார்கள். ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கி, பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி, அதி இப்னு அபூஸக்பா அல் ஜுஹ்னி (ரழி) ஆகிய இருவரையும் பத்ர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தின் செய்தியைத் துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்.

மக்காவில் எச்சரிப்பவர்

வியாபாரக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அபூஸுஃப்யான் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்தார். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். எனவே, செய்திகளைச் சேகரித்தவராகத் தனக்கு எதிர்வரும் வாகனிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். அப்போது முஹம்மது (ஸல்) தங்களது தோழர்களை அழைத்துக் கொண்டு இந்த வியாபாரக் கூட்டத்தை கைப்பற்ற புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தது. அபூஸுஃப்யான் உடனடியாக ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து, மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்ய அனுப்பி வைத்தார். ழம்ழம் மக்காவிற்கு விரைந்து 'பத்னுல் வாதி' என்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக கூக்குரலிட்டார். மேலும், ஒட்டகத்தின் மூக்கை அறுத்து அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார். பின்பு ''குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!'' என்று உரக்கக் கத்தினார்.

மக்காவாசிகள் போருக்குத் தயார்


இதைக் கேட்ட மக்காவாசிகள் அங்குமிங்கும் ஓடலானார்கள். ''என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்'' என்று பேசிக் கொண்டனர். மக்காவில் உள்ள அனைவரும் வெளியேறத் தயாரானார்கள். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி வைத்தார்கள். மக்காவிலுள்ள பிரசித்திபெற்ற பிரமுகர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ள முடியாத அபூலஹப் மட்டும் தனக்குக் கடன் தரவேண்டிய ஒருவரை தனக்குப் பகரமாக அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தனர். 'அதீ' கிளையினரைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் அதில் கலந்து கொண்டனர். 'அதீ' கிளையினலிருந்து ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.

மக்கா நகர படையின் அளவு

மக்கா படை புறப்படும்போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷிகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாள் பத்து ஒட்டகம் என அறுத்து உணவளித்தனர்.

பக்ர் கிளையினரை அஞ்சுதல்

மக்காவின் படை புறப்படுவதற்கு ஒன்றுகூடிய போது பக்ர் கிளையினரைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வந்தது. குறைஷிகளுக்கும் இவர்களுக்குமிடையில் நீண்ட காலமாகப் பகைமை இருந்தது. இவர்கள் பின்புறமாகத் தங்களை தாக்கிவிட்டால் இரு நெருப்புக்கிடையில் சிக்கிக் கொள்வோமே என்று பயந்து பின்வாங்கினர். ஆனால், அந்நேரத்தில் பக்ர் கிளையினரின் முக்கிய பிரிவான கினானாவின் தலைவர் சுராகா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமின் உருவத்தில் ஷைத்தான் தோற்றமளித்து ''கினானா கிளையினர் உங்களுக்குப் பின்புறமாக தாக்குவதிலிருந்து நான் பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் துணிந்து செல்லலாம்'' என்று கூறினான்.

மக்காவின் படை புறப்படுகிறது

இப்படை தங்களது இல்லங்களிலிருந்து புறப்பட்ட நிலையை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்:

''பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க 'பத்ர்' போருக்குப்) புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர்...'' (அல்குர்ஆன் 8:47)

அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்வதற்காக, தங்களது முழு தயாரிப்புடனும் ஆயுதங்களுடனும் புறப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் தங்களது வியாபாரக் கூட்டத்தைத் தாக்குவதற்குத் துணிவு கொண்டதைப் பார்த்து மிகுந்த கோபத்துடனும் வெறியுடனும் புறப்பட்டனர்.

மிக விரைவாக பத்ரை நோக்கி மக்காவின் வடப்புற வழியாக பயணித்தனர். 'உஸ்வான்' பள்ளத்தாக்கு, பிறகு குதைத், பிறகு ஜுஹ்பாவை அடைந்தனர். அது சமயம் அபூ ஸுஃப்யானிடமிருந்து புதிய தகவல் ஒன்று வந்தது. அதாவது, ''நீங்கள் உங்களது வியாபாரக் கூட்டத்தையும், உங்களது செல்வங்களையும், ஆட்களையும் பாதுகாப்பதற்காகத்தான் மக்காவிலிருந்து புறப்பட்டீர்கள். அல்லாஹ் அவை அனைத்தையும் பாதுகாத்து விட்டான். ஆகவே, நீங்கள் திரும்பி விடுங்கள்'' என்று அபூஸுஃப்யான் எழுதியிருந்தார்.

வியாபாரக் கூட்டம் தப்பித்தது

அபூ ஸுஃப்யானின் நிலைமைப் பற்றி சிறிது பார்ப்போம்:

அபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழிநடத்திச் சென்றார். பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ரை சந்தித்தார். அவரிடம் ''மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா?'' என்று விசாரித்தார். அதற்கவர் ''நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. எனினும், இரு வாகனிகள் இந்த நீர் தடாகத்திற்கு அருகில் தங்களது ஒட்டகங்களைப் படுக்க வைத்தனர். பின்பு, தங்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்'' என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன், அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒட்டகங்களைப் படுக்க வைத்திருந்த இடத்திற்கு விரைந்தார். அந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறி அதில் பேரீத்தங்கொட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது யஸ்ரிப் (மதீனா) வாசிகளின் ஒட்டக உணவாகும் என்று கூறி தனது வியாபாரக் கூட்டத்திடம் விரைந்து வந்து அதன் பயண திசையை மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி மாற்றினார். பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை இடது பக்கத்தில் விட்டுவிட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். இதற்குப் பின்பே நாம் முன்பு கூறிய கடிதத்தை மக்காவின் படையினருக்கு எழுதியனுப்பினார்.

திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

அபூஸுஃப்யான் எழுதிய கடிதம் குறைஷிகளுக்கு கிடைத்தபோது அவர்கள் அனைவரும் திரும்பிவிடலாம் என்றே எண்ணினர். ஆனால், குறைஷிகளின் அட்டூழியக்காரன் அபூஜஹ்ல் கர்வத்துடன் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் திரும்பமாட்டோம். நாங்கள் பத்ருக்குச் செல்வோம், அங்கு மூன்று நாட்கள் தங்குவோம், ஒட்டகங்களை அறுத்து சமைத்து சாப்பிடுவோம், மது அருந்துவோம், அடிமைப் பெண்கள் இசைப்பாடுவர், எங்களைப் பற்றியும் எங்களது பயணத்தைப் பற்றியும், எங்கள் கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் எங்களை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள்'' என்று கூறினான்.

அபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆக வேண்டுமென்று ஆலோசனைக் கூறினார். ஆனால், அவரது பேச்சைப் பலர் செவிமடுக்கவில்லை. ஆனால், இவருக்கு நண்பர்களாக இருந்த ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். இந்தப் போரில் ஜுஹ்ராவினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார். எனவே, ஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் திரும்பி விட்டனர். இவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். பத்ர் போர் நடந்து முடிந்தபின் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் மெச்சினர். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவினரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் என்றென்றும் இருந்தார்.

ஹாஷிம் கிளையினரும் திரும்பிட நாடவே நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்றான்.

இவ்வாறு ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பிவிடவே, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் 'அல் உத்வதுல் குஸ்வா' என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.

இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

மதீனா படையின் ஒற்றர்கள், நபி (ஸல்) 'தஃபிரான்' பள்ளத்தாக்கில் இருக்கும் போது அபூஸுஃப்யானின் வியாபாரக் கூட்டம் மற்றும் மக்கா படை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வந்தனர். ஒற்றர்கள் கூறிய செய்திகளை நன்கு ஆராய்ந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச் சந்திக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். மக்கா படைகளை எதிர்க்காமல் விட்டுவிட்டால் அந்தப் பகுதியில் அவர்கள் தங்களின் ராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு அந்தப் பகுதி மக்களிடம் கேவலமும் அவமானமும் ஏற்படலாம். இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாமின் மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு நபி (ஸல்) மக்கா படையினரை எதிர்த்தே ஆகவேண்டுமென்ற உறுதியான முடிவுக்கு வந்தார்கள்.

முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பி விடுவதால் மக்கா எதிரிகள் மதீனாவரை படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. ஆகவே, ஒருவேளை முஸ்லிம்கள் மதீனா திரும்பியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் மற்றவர்களிடம் அவர்களைப் பற்றிய அச்சமற்றத் தன்மையும், துணிவும் பிறந்திருக்கும்.

ஆலோசனை சபை

திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் 8:5, 6)

ஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,

''மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)

என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு 'பர்குல் ஃகிமாது'' என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.

அவரின் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

இந்த மூன்று தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின் கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில், இவர்கள்தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அன்சாரிகளையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில் அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது. ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ''மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார். அதற்கு நபி (ஸல்) ''ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:

''நாங்கள் உங்களை விசுவாசித்தோம். உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம். நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம். இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம். எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள். உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம். எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார். நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை. நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம். எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம். உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம். அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.''

மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: ''அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன். அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன். நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியவரின் உறவை வெட்டிவிடுங்கள். நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும். நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக்கிணங்கத்தான் இருக்கும். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை 'கிம்தான்' பகுதியில் உள்ள 'பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

ஸஅதின் பேச்சையும் அவரின் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு ''நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது'' என்று கூறினார்கள்.

இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

பின்பு நபி (ஸல்) 'ஃதபிரான்' என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, அஸாஃபிர் வழியாகச் சென்று, 'தப்பா' என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து மலை போன்ற மிகப் பெரிய மணற் குன்றான ஹன்னானை வலப்பக்கம் விட்டுவிட்டு பத்ருக்குச் சமீபமாக வந்திறங்கினார்கள்.

கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

அங்கிருந்து நபி (ஸல்) தனது குகைத் தோழர் அபூபக்ருடன் மக்கா படைகளைக் கண்காணிக்கப் புறப்பட்டார்கள். அவ்விருவரும் மக்கா படையினர் எங்கு கூடாரமிட்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு வயது முதிர்ந்தவரைப் பார்த்தார்கள். அவரிடம் ''குறைஷிகளைப் பற்றியும் முஹம்மது மற்றும் அவரது தோழர்களைப் பற்றியும் உமக்குத் தெரியுமா?'' என்று விசாரித்தார்கள். அவர் தங்களை யார் என விளங்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் இரு படைகளைப் பற்றியும் விசாரித்தார்கள். ஆனால், அந்த வயது முதிர்ந்தவரோ ''நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாதவரை நான் உங்களுக்கு எந்த செய்தியையும் கூறமாட்டேன்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நாங்கள் கேட்டதை நீர் கூறினால் நாங்கள் யார் என்பதை உமக்குக் கூறுவோம்'' என்றார்கள். அதற்கு அந்த வயோதிகர் ''அவ்வாறுதானே!'' என்று கேட்க அதற்கு நபி (ஸல்) ''ஆம்!'' என்றார்கள்.

அதற்குப் பின் அந்த வயோதிகர் ''முஹம்மதும் அவரின் தோழர்களும் இன்ன நாளில் மதீனாவிலிருந்து வெளியேறினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இந்த செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இந்த இடத்தில் இருப்பார்கள்'' என்று மதீனாவின் படை இருந்த இடத்தை சரியாகக் கூறினார். மேலும், ''குறைஷிகள் இந்த நாளில் மக்காவிலிருந்து கிளம்பினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இச்செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இன்ன இடத்தில் இருப்பார்கள்'' என்று மக்கா படை தங்கியிருந்த இடத்தைச் சரியாகக் கூறினார்.

''பின்பு நீங்கள் யார்?'' என்று அவர் கேட்க, நபி (ஸல்) ''நாங்கள் (மாஃ) தண்ணீரிலிருந்து வந்திருக்கிறோம்'' என்று கூறி, அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் ''என்ன! தண்ணீலிருந்து வந்தவர்களா? எந்தத் தண்ணீரிலிருந்து...? இராக் நாட்டு தண்ணீரிலிருந்தா...?'' என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில் உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரிடமும் இஸ்லாமிய படையினர் விசாரிக்கவே அவர்கள், ''நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம்'' என்றனர். இவர்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தினராக இருக்கலாம் என்றெண்ணி இவர்களின் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக அடித்தனர். அடிக்குப் பயந்த அவ்விருவரும் ''ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்'' என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டுவிட்டனர்.

நபி (ஸல்) தொழுது முடித்தவுடன் தங்களது படையினரை கண்டிக்கும் விதமாக ''அவ்விருவரும் உங்களிடம் உண்மை கூறியபோது அடித்தீர்கள். ஆனால் பொய் கூறியபோது அவர்களை விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் உண்மையைத்தான் கூறினார்கள். அவர்கள் குறைஷிகளுக்காக வந்தவர்களே!'' என்று கூறினார்கள்.

பின்பு அவ்விருவரையும் அழைத்து ''குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) கேட்கவே, ''நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள் இருக்கிறார்கள்'' என்றனர். ''அவர்கள் எத்தனை நபர்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''மிக அதிகமாக இருக்கின்றனர்'' என்று அவர்கள் கூறினார்கள். ''அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள் உள்ளன'' என்று நபி (ஸல்) கேட்கவே, அவர்கள் ''தெரியாது'' என்று கூறினர். நபி (ஸல்) ''அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?'' என்று கேட்க, அதற்கு அவர்கள் ''ஒரு நாள் ஒன்பது. மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) ''அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம்'' என்றார்கள். பின்பு அவர்களிடம் ''குறைஷி பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?'' என்று நபி (ஸல்) கேட்க ''உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம் இப்னு ஜாம், நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர் இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் ஆகியோரும் மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்'' என அவ்விருவரும் கூறினர்.

நபி (ஸல்) மக்களை நோக்கி ''இதோ! மக்கா தனது ஈரக் குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறது'' என்றார்கள்.

மழை பொழிதல்

அல்லாஹ் அன்றிரவு மழையை இறக்கினான். அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக இருந்தது. அது அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கோ அது மென்மையான தூறலாக இருந்தது. அம்மழையினால் அல்லாஹ் முஸ்லிம்களைச் சுத்தப்படுத்தினான். ஷைத்தானின் அசுத்தத்தை அவர்களை விட்டும் அகற்றினான். அங்கிருந்த மணற்பாங்கான பூமியை முஸ்லிம்கள் தங்குவதற்கு வசதியாக இறுக்க மாக்கிக் கொடுத்தான். மேலும், அவர்களது உள்ளங்களையும் பாதங்களையும் உறுதியாக்கினான்.

முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

இணைவைப்பவர்கள் வருவதற்குள் பத்ர் மைதானத்திற்கருகில் உள்ள நீர்நிலைகளுக்கு நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) தனது படையை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் அந்த நீர்நிலைகளை எதிரிகள் கைப்பற்ற விடாமல் தடுக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் இஷா நேரத்தில் பத்ரின் நீர்நிலைகளில் ஒரு நீர்நிலைக்கு அருகில் நபி (ஸல்) வந்திறங்கினார்கள். அப்போது போர் தந்திரங்களை நன்கறிந்த (ராணுவ நிபுணர்) அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ''இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்'' என்றார்கள்.

அதற்கவர் ''அல்லாஹ்வின் தூதரே! இது தங்குவதற்குரிய இடமல்ல. நீங்கள் மக்களை அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நாம் குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர்நிலைகளையும் நாம் அழித்து விடுவோம். மேலும், ஒரு நீர் தடாகத்தை ஏற்படுத்தி அதை தண்ணீரால் நிரப்பி விடுவோம். நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது'' என்றார். நபி (ஸல்) அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, ''நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்'' என்றார்கள்.

உடனே நபி (ஸல்) தங்களது படையை அழைத்துக் கொண்டு எதிரிகளுக்கு சமீபமாக உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் வந்திறங்கினார்கள். அந்நேரம் இரவின் பெரும் பகுதி கழிந்திருந்தது. பின்பு, தங்களுக்குச் சிறிய சிறிய நீர்த் தடாகங்கள் சிலவற்றை அங்குக் கட்டிக் கொண்டு மற்ற அனைத்து கிணறுகளையும் அழித்துவிட்டார்கள்.

படையை வழி நடத்துவதற்கான இடம்

முஸ்லிம்கள் அந்த கிணற்றுக்கருகில் தங்கியபோது, ஸஅது இப்னு முஆது (ரழி) ''படையை வழிநடத்துவதற்காக நாங்கள் தங்களுக்கென பாதுகாப்பான ஒரு தனி இருப்பிடத்தை ஏற்படுத்துகிறோம். அப்போதுதான் அங்கிருந்து அவசர நடவடிக்கைகள் எடுக்க முடியும் வெற்றிக்குப் பதிலாக தோல்வி ஏற்பட்டாலும் அதற்குரிய சரியான திட்டத்தை நீங்கள் தீட்ட முடியும்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனைக் கூறினார்கள்.

இதோ அவரது ஆலோசனை! அவர் கூறக் கேட்போம்:

''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக உயரமான ஒரு பரணி வீட்டை கட்டுகிறோம் அதில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்குத் தேவையான வாகனங்களையும் அதற்கருகில் ஏற்பாடு செய்கிறோம் பின்பு நாளை எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது அல்லாஹ் நம்மை மிகைக்க வைத்தால், நமக்கு வெற்றி அளித்தால், அது நாம் விரும்பியவாறே நடந்ததாக இருக்கட்டும். இல்லை! அதற்கு மாற்றமாக ஏதாவது நடந்தால் நீங்கள் இந்த வாகனத்தில் அமர்ந்து எங்களுக்குப் பின்னுள்ள எங்களது கூட்டத்தனரிடம் சேர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் பலர் இங்கு வரவில்லை எங்களை விட அவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நீங்கள் போரைச் சந்திப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை விட்டு ஒருக்காலும் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் சென்றால் அவர்கள் மூலம் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அவர்கள் உங்களிடம் உண்மையுடன் நடந்து, உங்களுக்கு ஆதரவாக போரும் புரிவார்கள்.'' இவ்வாறு ஸஅது (ரழி) தங்களின் சிறந்த ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தார்.

ஸஅது (ரழி) அவர்களின் இந்த யோசனையை நபி (ஸல்) அவர்கள் கேட்டு, அவரைப் புகழ்ந்து அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். முஸ்லிம்கள் போர் மைதானத்திற்கு வடக்கிழக்கில் இருந்த உயரமான ஒரு திட்டின் மீது பரணி வீட்டை, அதில் இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்களை சுற்றி பாதுகாப்பிற்காக ஸஅது இப்னு முஆத் (ரழி) தலைமையில் சில அன்சாரி வாலிபர்களின் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்


பின்பு நபி (ஸல்) தனது படையை ஒழுங்குபடுத்தினார்கள். போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று ''இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தங்களது விரலால் சுட்டிக் காட்டினார்கள். பின்பு நபி (ஸல்) அங்குள்ள ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதரவுடன் இரவைக் கழித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி)

(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அதுசமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)

அது ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17 வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. இதே மாதம் பிறை 8 அல்லது 12ல் இந்தப் படை மதீனாவிலிருந்து பத்ரை நோக்கி புறப்பட்டது.

போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

குறைஷிகள் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் தங்களது கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்தனர். காலை விடிந்தவுடன் தங்களது படைகளுடன் பத்ர் பள்ளத்தாக்கருகில் உள்ள மணல் முகட்டுக்கருகில் வந்தனர். அவர்களில் சிலர் நபி (ஸல்) ஏற்படுத்தியிருந்த நீர் தடாகத்தில் நீர் அருந்த வந்தனர். அப்போது நபி (ஸல்) தோழர்களிடம் ''அவர்களை விட்டு விடுங்கள்'' என்றார்கள். அவர்களில் யாரெல்லாம் நீர் அருந்தினார்களோ அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். ஆனால், ஹக்கீம் இப்னு ஸாமைத் தவிர. இவர் போரில் கொல்லப்படவில்லை. பிறகு இவர் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாக விளங்கினார். அவர் சத்தியம் செய்ய அவசியம் ஏற்பட்டால் ''பத்ர் போரில் என்னைக் காப்பாற்றியவன் மீது சத்தியமாக!'' என்று கூறுவார். அதாவது தன்னுடன் நீர் அருந்திய அனைவரும் கொல்லப்பட்டு விட, தான் மட்டும் அல்லாஹ்வின் அருளால் தப்பித்ததை நினைத்து இவ்வாறு கூறுவார்.

குறைஷிகள் சூழ்நிலைகளைப் பார்த்து சற்று நிம்மதியடைந்த பிறகு உமைர் இப்னு வஹ்பு ஜுமயை முஸ்லிம்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினர். உமைர் தனது குதிரையில் முஸ்லிம் ராணுவத்தை நோட்டமிட்டு குறைஷிகளிடம் திரும்பி, ''அவர்கள் ஏறக்குறைய முன்னூறு நபர்கள் இருக்கலாம். இருப்பினும் எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் வேறு எங்காவது படை மறைந்திருக்கிறதா அல்லது அவர்களுக்கு உதவிக்காக வேறு படை ஏதும் வருகிறதா எனப் பார்த்து வருகிறேன்'' என்றார்.

பத்ர் பள்ளத்தாக்கில் மிக நீண்ட தூரம் வரை நோட்டமிட்டும் எதையும் பார்க்காததால், குறைஷிகளிடம் திரும்பி ''நான் எதையும் பார்க்கவில்லை. ஆனால், குறைஷிக் கூட்டமே! மரணங்களைச் சுமந்து வரும் சோதனைகள் என் கண் முன் தெரிகின்றன. மதீனாவின் ஒட்டகங்கள் வெறும் மரணத்தைத்தான் சுமந்து வந்திருக்கின்றன. வந்திருக்கும் கூட்டத்திற்கு வாளைத் தவிர வேறெந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு முன் உங்களில் ஒருவரைக் கொலை செய்யாமல் அவர் இறக்க மாட்டார். உங்களில் அவ்வளவு பெரிய எண்ணிக்கைகளை அவர்கள் கொன்றால், அதற்குப் பிறகு நீங்கள் வாழ்ந்துதான் என்ன பயனிருக்கிறது? எனவே, நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

போர் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் அபூ ஜஹ்லுக்கு எதிராகக் கிளர்ச்சி ஏற்பட்டது. அதுதான் சண்டை செய்யாமல் திரும்ப வேண்டும் என்பது! ஹக்கீம் இப்னுஹிஸாம் இதற்காக மக்களிடையே முயற்சித்தார். அவர் உத்பா இப்னு ரபீஆவை சந்தித்து ''உத்பாவே! நீர் குறைஷிகளில் பெரியவரும் தலைவருமாவீர். உங்களின் சொல்லுக்குக் குறைஷியர் கட்டுப்படுவர், காலங்காலமாக உமக்கு நற்புகழை தரும் ஒரு விஷயத்தை நான் சொல்லட்டுமா?'' என்றார். அதற்கு உத்பா ''நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஹக்கீமே!'' என்றார். ஹக்கீம் ''நீர் மக்களை அழைத்துக் கொண்டு திரும்பி விடும். (ஸய்யா நக்லாவில் கொல்லப்பட்ட) உமது நண்பர் அம்ர் இப்னு ஹழ்ரமியின் விஷயத்திற்கு நீர் பொறுப்பெடுத்துக் கொள்!'' என்று கூறினார். இதற்கு ''நான் அவ்வாறே செய்கிறேன். எனக்கு நீ ஜாமினாக இரு. அம்ர் என்னுடைய நண்பர்தான். எனவே அவருடைய கொலை குற்றப்பரிகாரத்தையும், அவருக்கு ஏற்பட்ட பொருள் சேதத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்'' என்று உத்பா கூறினார்.

பின்பு, ''நீர் அபூஜஹ்லிடம் சென்று, இது விஷயமாக பேசி வாரும். ஏனெனில், நிச்சயமாக அவனைத் தவிர வேறெவரும் மக்களுக்கு மத்தியில் பிளவு உண்டாக்க மாட்டார்'' என உத்பா ஹக்கீமிடம் கூறினார்.

பின்பு உத்பா மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்தார். இதோ... அவரது பிரசங்கம்:

''குறைஷிக் கூட்டத்தினரே! நிச்சயமாக நீங்கள் முஹம்மதிடமும் அவரது தோழர்களிடமும் சண்டையிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்தால், நாளை உங்களுக்குள் எவ்வளவு பெரிய வெறுப்பு ஏற்படும்? நம்மில் யாரொருவர் அவர்களில் ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரராகவோ, தாய்மாமன்களின் பிள்ளைகளாகவோ, நெருக்கமான உறவினர்களில் ஒருவராகவோ தான் இருப்பார். எனவே, முஹம்மதை மற்ற அரபியர்களுக்கு மத்தியில் விட்டு விட்டு நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். அவர்கள் முஹம்மதைக் கொலை செய்தால், நீங்கள் நாடியது நடந்து விடும். இல்லை, அதற்கு மாற்றமாக நடந்தால் நீங்கள் விரும்பாதது நடந்ததாக இருக்கட்டும்.''

ஹக்கீம் இப்னுஹிஸாம் அபூஜஹ்லிடம் வந்தார். தன் கவச ஆடையை அவன் சரிசெய்து கொண்டிருந்தான். அவர் ''ஓ அபுல்கமே!' உத்பா என்னை உன்னிடம் இன்னன்ன விஷயங்களைக் கூறி அனுப்பினார்'' என்றார். அதைக் கேட்ட அபூஜஹ்ல் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதையும் அவருடைய தோழர்களையும் பார்த்து உத்பா பயந்ததால், நெஞ்சு 'திக்...திக்' என்று அடிக்கிறதுபோலும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களுக்கும் முஹம்மதுக்கும் மத்தியில் தீர்ப்பளிக்கும் வரை நாங்கள் இவ்விடத்தை விட்டு திரும்ப மாட்டோம். உண்மையில் உத்பா கூறியது அவரது அசல் நோக்கமல்ல. மாறாக, தனது மகன் அபூ ஹுதைஃபாவை முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் மத்தியில் பார்த்து விட்டதால் நீங்கள் அவரைக் கொலை செய்து விடுவீர்களோ? என்று பயந்துதான் இவ்விதம் கூறியிருப்பான்'' என்றான்.

'பயத்தில் நெஞ்சு திக்திக்கென்று அடிக்கிறது. (அதாவது தொடை நடுங்கி)' என்ற அபூஜஹ்லின் கூற்று, உத்பாவுக்கு எட்டியபோது ''பயத்தால் காற்றை வெளியிடும் அவனுக்கு நெஞ்சு அடிக்கிறதா? இல்லை எனக்கா? என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறான் என்று உத்பா கூறினான்.'' உடனே அபூஜஹ்ல் எங்கே இந்த எதிர்ப்பு பெரிதாகிவிடுமோ எனப் பயந்து, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் படையினரால் கொல்லப்பட்ட அம்ர் இப்னு ஹழ்ரமியின் சகோதரர் ஆமீர் இப்னு ஹழ்ரமியை அழைத்து வரச் செய்தான். ஆமீரிடம் ''இதோ உனது நண்பன் உத்பா மக்களை அழைத்துக் கொண்டு திரும்ப விரும்புகிறார். நானோ உனது கண்ணில் பழிவாங்கும் உணர்வைப் பார்க்கிறேன். எனவே, எழுந்து உமது ஒப்பந்தத்தையும், உமது சகோதரனுக்காக பழிவாங்குவதையும் வலியுறுத்து!'' என்றான். தன் பின்பக்க ஆடையை ஆமீர் அவிழ்த்துவிட்டு ''அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே! அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே!'' என ஆமிர் கூச்சலிட்டான். இவனது கூக்குரலைக் கேட்ட கூட்டத்தினர் ஆவேசம் கொண்டு கொதித்தெழுந்தனர். இதனால் சண்டையிட வேண்டுமென்ற தங்களது தீய எண்ணத்தில் குறைஷிகள் உறுதியாக நின்றனர்.

இவ்வாறு, உத்பா மக்களுக்கு கூறிய நல்ல ஆலோசனையை அபூஜஹ்ல் கெடுத்து விட்டான். ஆம்! அவ்வாறுதான் மடமை ஞானத்தை மிகைத்தது. ஹக்கீமின் இந்த எதிர்ப்பு எவ்வித பலனுமின்றி மறைந்தது.

இரு படைகளும் நேருக்கு நேர்...

குறைஷிகள் மைதானத்திற்கு வந்தனர். குறைஷிப் படையும் இஸ்லாமியப் படையும் ஒன்று மற்றொன்றை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது, நபி (ஸல்) ''அல்லாஹ்வே! இதோ குறைஷிகள் கர்வத்துடனும் மமதையுடனும் உன்னிடம் போர் செய்பவர்களாக உன்னுடைய தூதரைப் பொய்ப்பிப்பவர்களாக வந்திருக்கின்றனர். அல்லாஹ்வே! நீ எனக்கு வாக்களித்த உனது உதவியைத் தருவாயாக! இக்காலைப் பொழுதில் அவர்களை அழிப்பாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

சிவப்பு நிற ஒட்டகையின் மீது உத்பா உலாவிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நபி (ஸல்) ''இந்தக் கூட்டத்திலேயே நலவை விரும்பும் ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும். இவருக்கு இக்கூட்டம் கட்டுப்பட்டால் அவர்கள் சரியான வழியை அடையக்கூடும்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்தபோது ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது நபி (ஸல்) அவர்களின் கையில் ஓர் அம்பு இருந்தது. அதன்மூலம் அணிவகுப்பைச் சரிசெய்து கொண்டிருந்தார்கள். ஸவாது இப்னு கஸிய்யா (ரழி) அணியில் சற்று முன்னால் நிற்கவே நபி (ஸல்) அவரது வயிற்றில் அந்த அம்பால் லேசாக ஒரு குத்து குத்தி ''ஸவாதே! சரியாக நிற்பீராக'' என்றார்கள். உடனே ஸவாது (ரழி), ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலியை உண்டாக்கி விட்டீர்கள். நான் உங்களிடம் பழிவாங்க வேண்டும்'' என்றார். நபி (ஸல்) தனது வயிற்றை திறந்து காட்டி ''பழி தீர்த்துக் கொள் ஸவாதே!'' என்றார்கள். ஸவாது நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து வயிற்றில் முத்தமிட்டார். நபி (ஸல்), ''ஸவாதே! ஏன் இப்படி செய்தீர்'' என்று கேட்டதற்கு ''அல்லாஹ்வின் தூதரே! இதோ... என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இறுதியாக எனது மேனி உங்களுடைய மேனியை தொட்டு விட வேண்டும் என்று பிரியப்பட்டேன்'' என்றார் ஸவாது. அவரின் நலவிற்காக நபி (ஸல்) பிரார்தித்தார்கள்.

அணிகளைச் சரிசெய்த பின் தமது படையினருக்குச் சில கட்டளைகளை நபி (ஸல்) பிறப்பித்தார்கள். அதில் கூறியதாவது: ''எனது இறுதிக் கட்டளை வரும் வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள். அவர்கள் உங்களை நெருங்கும்போது அவர்களை நோக்கி அம்பெறியுங்கள். அதே சமயம், அம்புகள் (அனைத்தையும் எறிந்து விடாமல்) கொஞ்சம் மீதமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்! (ஸுனன் அபூதாவூது)

அதன் பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் பரணி வீட்டிற்கு சென்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) தனது பாதுகாப்புப் படையுடன் அவ்வீட்டைச் சுற்றிப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இனி எதிரிகளைப் பற்றி சிறிது பார்ப்போம்: அபூஜஹ்லும் அன்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தான். ''அல்லாஹ்வே! எங்களில் உறவுகளை அதிகம் துண்டிப்பவர், நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக் கொண்டு வந்தவர், அவரை இன்று அழித்து விடு! அல்லாஹ்வே! எங்களில் உனக்கு யார் மிகவும் விருப்பமானவராகவும் உனது திருப்திக்கு உரியவராகவும் இருக்கிறாரோ அவருக்கு உதவி செய்!''

இது குறித்தே அல்லாஹ் இந்த வனத்தை இறக்கினான்:

(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்து விட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல நம்பிக்கையாளர்களுக்கே! அவர்கள்தான் உங்களை வெற்றி கொள்வார்கள். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன்வரும் பட்சத்தில் நாமும் முன்வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு எந்த பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:19)

நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜுமி என்பவன் போரின் தீ கங்குகளை முதலில் மூட்டினான். இவன் மிகுந்த கெட்ட குணமுடையவன். ''நான் முஸ்லிம்களின் தடாகத்தில் நீர் அருந்துவேன், இல்லையேல் அதை உடைத்தெறிவேன், அல்லது அங்கேயே நான் செத்து மடிவேன் என அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்கிறேன்'' என்று கூறியவனாக படையிலிருந்து வெளியேறினான். அவன் தடாகத்தை நெருங்க, ஹம்ஜா (ரழி) அவனை வாளால் எதிர்கொண்டு அவனது பாதத்தைக் கெண்டைக்கால் வரை வெட்டி வீழ்த்தினார்கள். அவன் காலிலிருந்து ரத்தம் சீறிப் பாய்ந்தது. தடாகத்திற்கு அருகிலிருந்த அவன் தவழ்ந்து வந்து தடாகத்திற்குள் விழுந்தான். அவன் தனது சத்தியத்தை நிறைவேற்றிவிட வேண்டுமென்று எண்ணியதால் தடாகத்திற்குள் விழுவதில் இந்த அளவு பிடிவாதம் காட்டினான். அவன் தடாகத்திற்குள் இருக்கும்போதே ஹம்ஜா (ரழி) அவர்கள் அவன் மீது மற்றொரு முறை பாய்ந்து அவனை வெட்டிச் சாய்த்தார்கள்.

ஒண்டிக்கு ஒண்டி

இந்த முதல் கொலை, போரின் நெருப்பை மூட்டியது. குறைஷிகளின் மிக தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம்மூவரிடமும் அந்த எதிரிகள் ''நீங்கள் யார்?'' என்றனர். அதற்கு அவர்கள் ''நாங்கள் மதீனாவாசிகள்'' என்றனர். அதற்கு அந்த எதிரிகள், ''சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள்தான். ஆனால் உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள் தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் ''முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!'' என்று கத்தினான். நபி (ஸல்) அவர்கள். ''உபைதா இப்னு ஹாஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே! எழுந்து செல்லுங்கள்!'' என்றார்கள்.

இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் ''நீங்கள் யார்?'' என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் ''சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே'' என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி) எதிரி வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)

ஆனால், ஹம்ஜாவும் அலீயும் தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும் கொன்றுவிட்டனர். ஆனால், உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக் கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றார்கள். அதற்குப் பிறகு உபைதாவை சுமந்து கொண்டு படைக்குத் திரும்பினர். உபைதா (ரழி) இதனால் நோய்வாய்ப்பட்டு இப்போருக்குப் பின் 4 அல்லது 5 நாட்கள் கழித்து மதீனாவிற்கு செல்லும் வழியில் 'ஸஃப்ரா' என்ற இடத்தில் இறந்தார்கள்.

(இறைநம்பிக்கையாளர்கள், இறைமறுப்பாளர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றி தர்க்கித்தனர். ஆகவே, அவர்களில் எவர் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டு இருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும். (அல்குர்ஆன் 22:19)

இந்த வசனம் தங்கள் விஷயத்தில்தான் இறங்கியது என்று அலீ (ரழி) சத்தியமிட்டு கூறுகிறார்கள்.

எதிரிகளின் பாய்ச்சல்

போரின் ஆரம்பமே எதிரிகளைப் பொருத்தவரை கெட்டதாக அமைந்தது. தங்களின் தளபதிகளிலும் குதிரை வீரர்களிலும் மிகச் சிறந்த மூவரை அவர்கள் இழந்தனர். இதனால் ஆத்திரமடைந்து, முஸ்லிம்களின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தனர். ஆனால், முஸ்லிம்களோ தங்களது இறைவனிடம் உதவியும் பாதுகாப்பும் கோரி, பணிவுடன் தங்களது எண்ணங்களை தூய்மைப்படுத்திக் கொண்டே, எதிரிகளின் தொடர் தாக்குதல்களை சமாளித்தனர். முஸ்லிம்கள் தங்கள் இடங்களிலேயே உறுதியாக நின்று எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்தனர். 'அஹத்! அஹத்!' (அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!!) என்று கூறிக்கொண்டே இணைவைப்பவர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தினர்.

நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து திரும்பிய பின் நபி (ஸல்) தனது இறைவன் தனக்கு வாக்களித்ததை அவனிடம் வேண்டினார்கள்.

அவர்கள் கேட்டதாவது: ''அல்லாஹ்வே! நீ எனக்களித்த வாக்கை நிறைவேற்றுவாயாக! அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும் ஒப்பந்தத்தையும் உன்னிடம் கேட்கிறேன்.''

மோதல்களும் தாக்குதல்களும் கடுமையாகச் சூடுபிடித்து உச்சக்கட்டத்தை அடைந்தபோது ''அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்'' என்று அல்லாஹ்விடம் கையேந்தினார்கள். கரங்களை உயர்த்தியதால் அவர்களின் புஜத்திலிருந்து போர்வை நழுவி விழுந்தது. அந்தளவு அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் போர்வையை அபூபக்ர் (ரழி) சரிசெய்து, ''அல்லாஹ்வின் தூதரே! போதும், நீங்கள் உங்கள் இறைவனிடம் அதிகம் வேண்டிவிட்டீர்கள்'' என்றார்கள்.

நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்து, வானவர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்தான்.

(நபியே!) உங்களது இறைவன் வானவர்களை நோக்கி ''நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப் படுத்துங்கள் (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களைக் கணுக் கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 8:12)

மேலும் தனது தூதருக்கு அறிவித்தான்:

(உங்களைப்) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் வேண்டியபோது ''அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)

அதாவது, அந்த வானவர்கள் உங்களுக்குப் பின்னிருந்து உங்களுக்கு உதவி புரிவார்கள் என்றோ அல்லது வானவர்கள் ஒரே தடவையில் வராமல் சிலருக்குப் பின் சிலராக வருவார்கள் என்றோ கருத்து கொள்ளலாம்.

வானவர்கள் வருகிறார்கள்.

நபி (ஸல்) சற்று தலையைத் தாழ்த்தி, பின்பு உயர்த்தி ''அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். இதோ... ஜிப்ரீல் புழுதிகளுடன் காட்சியளிக்கிறார்'' அல்லது ''அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு வந்துவிட்டது. இதோ.. ஜிப்ரீல் குதிரையின் கடிவாளத்தை இழுத்து வருகிறார். அவர் உடம்பில் புழுதி படிந்திருக்கிறது'' என்று கூறினார்கள்.

கவச ஆடை அணிந்து நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து வெளியேறி,

அதி சீக்கிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள், (பிறகு) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)

என்ற வசனத்தைக் கூறியவர்களாக பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை ''முகங்கள் மாறட்டும்'' என்று கூறி எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று அனைத்தையும் சென்றடைந்தது.

இது குறித்தே,

நீங்கள் எறியும்போது உண்மையில் அதை நீங்கள் எறியவில்லை. எனினும், அதை நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். (அல்குர்ஆன் 9:17)

என்ற வசனம் இறங்கியது.

எதிர் பாய்ச்சல்

இந்நேரத்தில்தான், நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு தனது இறுதிக் கட்டளையை அறிவித்தார்கள். ''எதிரிகள் மீது பாயுங்கள்'' என்று கூறி, போர் புரிய முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள். மேலும் கூறினார்கள், ''முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! இன்றைய தினத்தில் போர் புரிந்து சகிப்புடனும், நன்மையை நாடியும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்களையும் பூமிகளையும் அகலமாகக் கொண்ட சொர்க்கத்தின் பக்கம் விரைந்தோடுங்கள்'' என்று கூறி போருக்கு ஆர்வமூட்டினார்கள். உமைர் இப்னு அல்ஹுமாம் (ரழி) ''ஆஹா! ஆஹா!'' என்றார்கள். நபி (ஸல்) ''நீ ஏன் ஆஹா! ஆஹா!'' என்று கூறுகிறாய்? என்று கேட்க, அவர் ''நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற ஆசையில் அவ்வாறு கூறினேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! நிச்சயமாக நீர் சொர்க்கவாசிகளில் ஒருவர்தான்'' என்றார்கள். அவர் தன்னிடமிருந்த சில பேரீத்தம் பழங்களை எடுத்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு, ''இந்தப் பேரீத்தம் பழங்களை சாப்பிடும் வரை நான் உயிர் வாழ்வதை நீண்ட ஒரு காலமாகக் கருதுகிறேன்'' என்று கூறியவராக அந்தப் பேரீத்தம் பழங்களை எறிந்து விட்டு எதிரிகளுடன் போர் புரிந்து வீரமரணம் எய்தினார். (ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறுதான் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியானைப் பார்த்து எப்போது சிரிக்கிறான்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ''எந்தவித தற்காப்பு ஆடையும் அணியாமல் எதிரிகளுக்குள் தனது கையை அடியான் செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான்'' என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன், தான் அணிந்திருந்த கவச ஆடையைக் கழற்றி எறிந்து விட்டு எதிரிகளிடம் போர் புரிந்து வீரமரணம் எய்தினார்.

எதிர்த்துத் தாக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளைப் பிறப்பித்தவுடன் எதிரிகளின் மீது முஸ்லிம்கள் பாய்ந்தனர். அணிகளைப் பிளந்தனர். தலைகளைக் கொய்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்த அவர்கள், எதிரிகளை நிலை தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின் தாக்கும் வேகமும் குறைந்தது வீரமும் சோர்வுற்றது. எதிரிகளால் முஸ்லிம்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல! அன்று நபி (ஸல்) கவச ஆடை அணிந்து, யாரும் நெருங்க முடியாத அளவு எதிரிகளுக்கருகில் நெருங்கி நின்று,

அதி சீக்கிரத்தில் இந்த கூட்டம் சிதறடிக்கப்படும். மேலும் (இவர்கள்) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)

என்று உறுதியுடன் மிகத் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்காட்சியைப் பார்த்த முஸ்லிம்களுக்கு உற்சாகமும் ஆவேசமும் பன்மடங்கு பெருகின. (ஸஹீஹுல் புகாரி)

ஆகவே, முஸ்லிம்கள் மிகத் துணிவுடன் சண்டையிட்டார்கள். வானவர்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள்.

அபூஜஹ்லின் மகன் இக்ரிமா கூறுகிறார்: அன்றைய தினத்தில் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழும் ஆனால், அவரை வெட்டியவர் யாரென்று தெரியாது. (இப்னு ஸஅது)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகின்றார்கள்: ஒரு முஸ்லிம் எதிரியைத் தாக்க பின்தொடர்ந்து செல்லும்போது மேலிருந்து ஒரு சாட்டையின் ஒலியையும் 'ஹைஸூமே! முன்னேறு' என்று கூறும் ஒரு குதிரை வீரன் அதட்டலையும் கேட்டார். அதன் பிறகு அந்த முஸ்லிம், எதிரியை பார்க்கும்போது அந்த எதிரி மூக்கு அறுக்கப்பட்டு, முகம் பிளக்கப்பட்டு மல்லாந்துக் கிடந்தான். அவனது உயிர் முற்றிலும் பிரிந்திருந்தது. அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினார். ''ஆம்! நீர் உண்மைதான் கூறுகிறீர். அது மூன்றாவது வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய உதவியாகும்'' என்று நபி (ஸல்) விளக்கமளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூதாவூது அல் மாஸினி (ரழி) கூறுகிறார்கள்: நான் ஒரு எதிரியை வெட்டுவதற்காக அவனை பின்தொடர்ந்தபோது எனது வாள் அவன் மீது படுவதற்கு முன்னதாகவே அவனது தலை கீழே விழுந்தது. எனவே, வேறு யாரோ அவனை வெட்டினார்கள் என்று நான் அறிந்து கொண்டேன்.

அன்சாரிகளில் ஒருவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபை கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். அப்பாஸ் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் என்னை கைது செய்யவில்லை. என்னை கைது செய்தது சிறந்த குதிரையின் மீது அமர்ந்து வந்த மிக அழகிய முகமுடைய ஒருவர்தான். ஆனால், இப்போது அவரை நான் இந்தக் கூட்டத்தில் பார்க்கவில்லையே?'' என்று கூறினார். அதற்கு அன்சாரி ''அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவரைக் கைது செய்தேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ''நீங்கள் அமைதியாக இருங்கள்! அல்லாஹ்தான் சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு உதவி செய்தான்'' என்று கூறினார்கள்.

அலீ (ரழி) கூறினார்கள்: பத்ர் போரில் என்னையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் பார்த்து நபி (ஸல்) ''உங்கள் இருவரில் ஒருவருடன் ஜிப்ரீலும், மற்றொருவருடன் மீக்காயிலும் இருக்கிறார். பெரிய வானவரான இஸ்ராஃபீலும் போரில் கலந்திருக்கிறார்'' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பஜ்ஜார், முஸ்தத்ரகுல் ஹாகிம்)
நழுவுகிறான் இப்லீஸ்

சுராகா இப்னு மாலிகின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் இணைவைப்பவர்களை வானவர்கள் வெட்டுவதைப் பார்த்தவுடன் போர் களத்திலிருந்து நழுவினான். அவனை உண்மையிலேயே சுராகா என்று எண்ணியிருந்த ஹாரிஸ் இப்னு ஹிஷாம் அவனை தப்ப விடாமல் இருக்க பிடித்துக் கொண்டார். ஹாரிஸின் நெஞ்சில் அடித்து அவரைக் கீழே தள்ளி விட்டு இப்லீஸ் ஓடினான். மற்றவர்கள் ''சுராகாவே! எங்கே ஓடுகிறீர்? எங்களை விட்டுப் பிரியாமல் கடைசி வரை எங்களுடன் துணையாக இருப்பேன் என்று கூறியிருந்தீரே?'' என்றனர். அதற்கு ஷைத்தான்,

''நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன். வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' (அல்குர்ஆன்:48)

என்று கூறிக் கொண்டே, வெருண்டோடி கடலில் குதித்தான்.

பெரும் தோல்வி

எதிரிகளின் அணியில் சலசலப்பும், தோல்வியின் அடையாளங்களும் வெளிப்பட்டன. முஸ்லிம்களின் கடுமையானத் தாக்குதலுக்கு முன் இணைவைப்போரின் அணி சின்னா பின்னமாகியது. போர் முடிவை நெருங்கியது. எதிரிகள் நாலா பக்கங்களிலும் விரைந்தோடித் தப்பிக்க முயன்றனர். முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து பணிந்தவரை கைது செய்து பணியாதவரை வெட்டி வீழ்த்தினர். இவ்வாறு இணைவைக்கும் எதிரிகள் போரில் பெரும் தோல்வியடைந்தனர்.

அபூஜஹ்லின் வீம்பு

வம்பன் அபூஜஹ்ல் தனது அணியில் சலசலப்பைப் பார்த்தவுடன் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் படையை உற்சாகப்படுத்த முயன்றான். பெருமையுடனும் திமிருடனும் அவன் தனது படையைப் பார்த்து ''சுராகா உங்களை விட்டுப் பிரிந்து சென்றதால் நீங்கள் தோற்றுவிட வேண்டாம். ஏனெனில், அவன் முஹம்மதுக்கு இவ்வாறுதான் (படையை விட்டுப் பிரிந்து செல்வதாக) வாக்குக் கொடுத்திருந்தான். உத்பா, ஷைபா, வலீத் கொல்லப்பட்டதால் நீங்கள் பயந்துவிட வேண்டாம். அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள். லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! இந்த முஸ்லிம்களை கயிற்றில் பிணைத்துக் கட்டாதவரை நாம் திரும்ப மாட்டோம். நீங்கள் முஸ்லிம்களில் எவரையும் கொன்றுவிட வேண்டாம். மாறாக, அவர்களைப் பிடித்து கைதிகளாக்கிக் கொண்டு வாருங்கள். அவர்கள் செய்த தீய செயலை அவர்களுக்குப் புரிய வைப்போம்.''

இப்படி திமிராகப் பேசிய அபூஜஹ்லுக்குத் தனது அகம்பாவத்தின் எதார்த்தம் புரியத் தொடங்கியது. அவனைச் சுற்றி இணைவைப்போரின் பெரிய கூட்டமொன்று, தங்களது வாட்களாலும் ஈட்டிகளாலும் பாதுகாப்பு அரணை அமைத்திருந்தார்கள். இருந்தாலும் முஸ்லிம்களின் புயலுக்கு முன் அவை இருந்த இடம் தெரியாமல் ஆயின. அப்போது அபூஜஹ்ல் குதிரையின் மீது சுற்றிக் கொண்டிருப்பதைப் முஸ்லிம்கள் பார்த்தார்கள். இரு அன்சாரி சிறுவர்களின் கையினால் மரணம் அவனது இரத்தத்தைக் குடிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நான் பத்ர் போர் அன்று அணியில் நின்று கொண்டு, திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கமும் இடப்பக்கமும் குறைந்த வயதுடைய இரு வாலிபர்களே இருந்தனர். அவர்கள் இருப்பது எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்நிலையில் இருவரில் ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல் ''என் சிறிய தந்தையே! எனக்கு அபூஜஹ்லை காட்டுங்கள்'' என்றார். ''நீ அவனை என்ன செய்வாய்?'' என்று நான் கேட்டேன். அதற்கவர் ''அவன் நபியை ஏசுவதாக நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இன்று அவனைப் பார்த்தால் நான் அல்லது அவன் மரணிக்கும் வரை அவனை விட்டும் பிரியமாட்டேன்'' என்றார். இப்பேச்சு எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இதற்கிடையில் மற்றவரும் இவ்வாறே, என்னைச் சீண்டி முந்தியவர் கூறியதைப் போன்றே கூறினார். அது சமயம் அபூஜஹ்ல் மக்களுக்கு மத்தியில் உலாவுவதைப் பார்த்தேன். அவ்விரு வாலிபர்களிடம் ''நீங்கள் கேட்டவன் இதோ இவன் தான்!'' என்றேன்.. இருவரும் அவனை நோக்கிப் பாய்ந்தனர். சிறிது நேரத்தில் அவன் கதையை முடித்து நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினர். ''உங்கள் இருவரில் யார் அவனைக் கொன்றது?'' என்று நபி (ஸல்) கேட்க ஒவ்வொருவரும் ''நானே கொன்றேன்'' என்றார். ''உங்கள் வாட்களை துடைத்து விட்டீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்க இல்லை! எனக் கூறி தங்கள் வாட்களை காண்பிக்கவே ''நீங்கள் இருவருமே அவனைக் கொன்றீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். பிறகு அபூஜஹ்லின் உடைமைகளை அவர்களில் ஒருவரான முஆத் இப்னு அம்ரு இப்னு ஜமூஹ்விற்கு வழங்கினார்கள். அபூஜஹ்லைக் கொன்ற இரண்டாமவர் முஅவ்விது இப்னு அஃப்ரா (ரழி) ஆவார். அவர் இப்போரில் வீரமரணம் எய்தினார். (ஸஹீஹுல் புகாரி)

முஆது இப்னு அம்ர் இப்னு அல் ஜமூஹ் (ரழி) கூறுகிறார்கள்: ''அபூஜஹ்ல் அடர்ந்த மரங்களுக்கு நடுவிலுள்ள ஒரு மரத்தைப் போல் அவனை சென்றடைய முடியாத அளவிற்கு பாதுகாப்பில் இருக்கிறான். அவனிடம் யாரும் செல்ல முடியாது'' என்று மக்கள் கூறுவதை நான் கேட்டேன். எனவே, நானே அவனைக் கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். நான் அவனைப் பார்த்துவிட்டபோது ஓடிச்சென்று அவனது கரண்டைக் கால்களைத் துண்டித்தேன். திருகையிலிருந்து அரைபடாத கொட்டை நசுங்கினால் பறக்குமே,,, அது போன்று அவனது கால்கள் பறந்து விழுந்தன. இதைப் பார்த்த அவனது மகன் இக்ரிமா எனது தோள் மீது பாய்ந்து வெட்டினார். அதனால் எனது கை வெட்டப்பட்டு உடம்பில் தோலுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் முழுக்க அதை என் முதுகுக்குப் பின்னால் போட்டுக் கொண்டு போர் செய்தேன். அது எனக்கு மிகவும் நோவினை அளித்தபோது அதை என் பாதத்தின் கீழ் வைத்து பிய்த்துத் தூக்கி எறிந்து விட்டேன். பின்பு காயப்பட்டுக் கிடந்த அபூஜஹ்லுக்கு அருகில் சென்ற முஅவ்விது இப்னு அஃப்ரா (ரழி) அவனை வெட்டிச் சாய்த்தார். ஆனால், அபூஜஹ்ல் குற்றுயிராகக் கிடந்தான். இப்போரில் முஅவ்விது (ரழி) இறுதியில் வீரமரணம் எய்தினார்கள்.

போர் முடிந்தபோது நபி (ஸல்) ''அபூஜஹ்லுக்கு என்னவானது என யார் பார்த்து வருவீர்கள்?'' என்று கேட்டார்கள். அப்போது அவனைத் தேடிப் பார்ப்பதற்குத் தோழர்கள் பல திசைகளிலும் பிரிந்து சென்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அபூஜஹ்லைப் பார்த்து விட்டார்கள். அவன் தனது இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருந்தான். இப்னு மஸ்ஊது (ரழி) தனது காலை அவனது கழுத்தின் மீது வைத்து அவன் தலையைத் தனியாக அறுத்தெடுப்பதற்காக அவன் தாடியைப் பிடித்து ''அல்லாஹ்வின் எதிரியே! அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தி விட்டானா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் ''என்னை அல்லாஹ் எப்படி கேவலப்படுத்துவான்? நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அல்லது நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட மேலானவர் யார் இருக்க முடியும்?'' என்று கேட்டுவிட்டு, ''கேவலம்! சாதாரண விவசாயிகளைத் தவிர்த்து வேறு யாராவது (என் இனத்தவர்) என்னை கொன்றிருக்க வேண்டுமே என்று கூறி, சரி இன்றைய தினத்தில் வெற்றி யாருக்கு என்று சொல்?'' என்றான். அதற்கு இப்னு மஸ்ஊது (ரழி) ''அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்தான் கிடைத்தது'' என்று கூறினார்கள். பின்பு அவனது கழுத்தின் மீது காலை வைத்திருந்த இப்னு மஸ்ஊதிடம் ''ஏ... ஆடு மேய்த்த பொடியனே!' நீ மிகுந்த சிரமமான ஓர் இடத்தின் மேல் நிற்கிறாய் என்பதைத் தெரிந்துகொள்'' என்று கூறினான்.

இதற்குப் பிறகு இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அபூஜஹ்லின் தலையைத் தனியாக வெட்டியெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் சென்று ''அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி அபூஜஹ்லின் தலை!'' என்று கூறினார்கள். நபி (ஸல்) ''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று மூன்று முறை கூறிவிட்டு ''அல்லாஹ் மிகப் பெரியவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது வாக்கை உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும் தோற்கடித்தான்'' என்று கூறி, என்னை அழைத்துச் சென்று அவனை எனக்குக் காட்டு என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) கூறுகிறார்கள்: நாங்கள் அவன் இருந்த இடத்திற்குச் சென்றோம். அவனைக் கண்ட நபி (ஸல்) ''இவன்தான் இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்''' என்றார்கள்.

இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

உமைர் இப்னு ஹுமாம் (ரழி) மற்றும் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி) ஆகிய இருவரின் அற்புதமான முன் உதாரணங்களை இதற்கு முன் கூறினோம். அதுமட்டுமல்லாமல், மேலும் பல அதிசயமான நிகழ்ச்சிகள் இப்போரில் நடந்தன. கொள்கையில் அவர்களுக்கிருந்த உறுதியையும் நிலைத்தன்மையையும் அந்நிகழ்ச்சிகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இப்போரில் தந்தை பிள்ளைக்கு எதிராகவும், பிள்ளை தந்தைக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் போரிட்டனர். இவர்களுக்கு மத்தியில் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வாட்கள் தீர்ப்பளித்தன. மக்காவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தம்மைக் கொடுமைப்படுத்தியவர்களைக் கொன்று தங்களுடைய சினத்தை ஆற்றிக் கொண்டனர்.

1) இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் ''ஹாஷிம் கிளையைச் சேர்ந்த சிலரையும் மற்றும் சிலரையும் நான் அறிவேன். அவர்கள் நிர்பந்தமாக போருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்மிடம் சண்டை செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை. எனவே, ஹாஷிம் கிளையைச் சேர்ந்த எவரையும் நீங்கள் கொன்றுவிட வேண்டாம். மேலும், அபுல் பக்த இப்னு ஷாமையும் கொன்றுவிட வேண்டாம். அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபையும் கொன்றுவிட வேண்டாம். அவர் நிர்ப்பந்தமாகத்தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேள்விப்பட்ட உத்பாவின் மகன் அபூஹுதைஃபா ''என்ன! எங்களது பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அப்பாஸை மட்டும் விட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரைச் சந்தித்தால் வாளால் அவருக்கும் கடிவாளமிடுவேன்'' என்றார். இவ்வார்த்தையை நபி (ஸல்) கேள்விப்பட்டபோது உமரிடம் ''அபூஹப்ஸே! அல்லாஹ்வின் தூதருடைய சிறிய தந்தையின் முகத்தை வாளால் வெட்டுவது நியாயமாகுமா?'' என்று வருத்தப்பட்டார்கள். உமர் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! என்னை அனுமதியுங்கள். அபூ ஹுதைஃபாவின் கழுத்தை வாளால் வெட்டி வீசுகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் நயவஞ்சகராகி விட்டார்'' என்றார்கள்.

தான் கூறிய சொல்லை நினைத்து அபூஹுதைஃபா எப்போதும் கவலைப்படுவார். ''இந்த வார்த்தையைக் கூறிய அன்றிலிருந்து நான் நிம்மதியாக இல்லை. இந்த வார்த்தையின் விளைவை எண்ணி பயந்துகொண்டே இருக்கிறேன், அல்லாஹ்வே இறைவன் என்று நான் சாட்சியம் கூறுவதுதான் அந்தக் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக ஆகலாம்'' என்று அபூஹுதைஃபா (ரழி) ஆதரவு வைப்பார்.

அபூஹுதைஃபா (ரழி) அபூபக்ர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது யமாமாவில் நடந்த போரில் வீரமரணம் எய்தினார்.

2) மேலும் நபி (ஸல்), அபுல் பக்தயைக் கொலை செய்யக் கூடாதென்று தடுத்திருந்தார்கள். ஏனெனில், அவர் மக்காவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளித்ததில்லை நபி (ஸல்) வெறுக்கும்படியான எந்தவொரு காரியத்தையும் அவர் செய்ததில்லை. மேலும் ஹாஷிம், முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று எழுதப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை கிழிப்பதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

இவ்வாறிருந்தும் அபுல் பக்த போரில் கொல்லப்பட்டார். அதற்குக் காரணம், முஜத்தர் இப்னு ஜியாது (ரழி) என்ற நபித்தோழர் அபுல் பக்தயையும் அவரின் நண்பரையும் போல் சந்தித்தார். இவ்விருவரும் ஒன்றாக சேர்ந்து முஸ்லிம்களுடன் போர் செய்து கொண்டிருந்தனர். அப்போது முஜத்தர் ''அபுல் பக்தயே! உன்னைக் கொல்லக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் தடுத்திருக்கிறார்கள், எனவே, நீங்கள் விலகிவிடுங்கள்'' என்றார். அதற்கு ''எனது தோழரையும் கொல்லக் கூடாதென்று அவர் கூறியிருக்கிறாரா?'' என்றார். அதற்கு முஜத்தர் ''இல்லை. உன் நண்பரைக் கொல்லாமல் நாங்கள் விடமாட்டோம்'' என்றார். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் ஒன்றாகவே சாவோம்'' என்று அபுல் பக்த கூறினார். பின்பு முஜத்தருடன் அவர் சண்டையிடவே முஜத்தர் அவரைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

3) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நானும் உமையா இப்னு கலஃபும் மக்காவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே நண்பர்களாக இருதோம். பத்ர் போர் அன்று போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளுடன் உமையாவுக்கு அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது உமையா தனது மகன் அலீ இப்னு உமையாவின் கையை பிடித்தவனாக சரணடைவதற்காக நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்த உமையா ''என்னை நீ கைதியாக்கிக் கொள்ள வேண்டாமா? உன்னிடமுள்ள இந்த கவச ஆடைகளைவிட நான் சிறந்தவனல்லவா? இன்றைய தினத்தைப் போல் ஒரு நாளை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு பால் கொடுக்கும் ஒட்டகங்கள் வேண்டாமா? என்னை யாராவது சிறைப் பிடித்தால் நிறைய பால் கொடுக்கும் ஒட்டகங்களை பிணையாக நான் தருவேன்'' என்று கூறினான். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் உருக்குச் சட்டைகளைக் கீழே போட்டுவிட்டு அவ்விருவரையும் இரு கைகளில் பிடித்துக் கொண்டேன். அப்போது உமையா, ''தீக்கோழியின் இறகை தன் நெஞ்சில் சொருகியிருக்கும் அந்த மனிதர் யார்?'' என்று கேட்டான். ''அவர்தான் ஹம்ஜா'' என்றேன். அதைக் கேட்ட உமய்யா ''அவர்தான் எங்களுக்கு இப்போரில் நிறைய அழிவுகளை ஏற்படுத்தியவர்'' என்றான்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) தொடர்ந்து கூறுகிறார்கள்: நான் உமையாவையும் அவனது மகனையும் இழுத்துச் சென்றபோது உமையா என்னுடன் இருப்பதை பிலால் (ரழி) பார்த்து விட்டார். (இந்த உமையாதான் மக்காவில் பிலால் (ரழி) அவர்களுக்கு அதிகம் வேதனை தந்தவன்.) அவனைப் பார்த்த பிலால் (ரழி) ''இதோ... இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா! இவன் இன்று தப்பித்தால் என்னால் இனி தப்பிக்க முடியாது'' என்று சப்தமிட்டார். அதற்கு நான் ''பிலாலே சும்மா இரும். இவன் இப்போது எனது கைதி'' என்று கூறினேன். மீண்டும் பிலால் (ரழி) ''இவன் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது'' என்று அலறினார். அதற்கு நான் ''ஓ கருப்பியின் மகனே! நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லையா?'' என்றேன். அதற்கு மீண்டும் பிலால் (ரழி) ''இவன் தப்பித்தால் நான் இனி தப்பிக்கவே முடியாது'' என்று கூறிவிட்டு, மிக உயர்ந்த சப்தத்தில் ''அல்லாஹ்வின் உதவியாளர்களே! இதோ இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா இப்னு கலஃப்! இவன் தப்பித்தால் என்னால் தப்பிக்க முடியாது'' என்று கூறினார். முஸ்லிம்கள் இதைக் கேட்டவுடன் வளையத்தைப் போன்று எங்களைச் சூழ்ந்துகொண்டனர். நான் உமையாவைக் காப்பாற்ற முயன்றேன். அப்போது ஒருவர் உமையாவின் மகனை பின்புறத்திலிருந்து வெட்டவே அவன் தரையில் விழுந்தான். இதைப் பார்த்த உமையா உரத்த குரலில் கத்தினான். அதுபோன்ற சப்தத்தை நான் கேட்டதே இல்லை. உடனே நான் ''உமையாவே உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! இன்று என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாது. உனக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது. உனக்கு எந்தப் பலனையும் என்னால் செய்ய முடியாது'' என்றேன். அதற்குப் பின் முஸ்லிம்கள் அவ்விருவரையும் தங்கள் வாட்களால் வெட்டி அவர்கள் கதையை முடித்தனர். இதற்குப் பின் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ''அல்லாஹ் பிலாலின் மீது கருணை காட்டட்டும்! போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளும் போயின. அவர் எனது கைதிகளையும் கொன்றார்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

4) இப்போரில் உமர் இப்னு கத்தாப் (ரழி) தனது நெருங்கிய உறவினர் என்றும் பார்க்காமல் தனது தாய்மாமன் 'ஆஸ் இப்னு ஹிஷாம் இப்னு முகீரா'வைக் கொன்றார்கள். போர் முடிந்து மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கைதிகளில் ஒருவராக இருந்த அப்பாஸிடம் ''அப்பாஸே! நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது தந்தை கத்தாப் முஸ்லிமாகுதைவிட நீங்கள் முஸ்லிமாவதுதான் எனக்கு விருப்பமானது. அதற்குக் காரணம் நீங்கள் முஸ்லிமாவது நபி (ஸல்) அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்'' என்று கூறினார்கள்.

5) அபூபக்ர் (ரழி), இணைவைப்போருடன் வந்திருந்த தமது மகன் அப்துர் ரஹ்மானைக் கூவி அழைத்தார்கள். ''ஏ... கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே?'' என்றார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்,

ஆயுதமும் வேகமாக ஓடும் குதிரையும்...

வழிகெட்ட வயோதிகர்களைக் கொல்லும் வாளும்...

இவற்றைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை என பதிலளித்தார்.

6) நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து நிலைமைகளைக் கவனித்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளைக் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வாசலில் வாளேந்தி காவல் புரிந்த ஸஅது இப்னு முஆது (ரழி) முஸ்லிம்களின் இச்செயலைப் பார்த்து வெறுப்படைந்தார். ஸஅதின் முகத்தில் வெறுப்பைப் கண்ட நபி (ஸல்) ''ஸஅதே! இம்மக்கள் செய்வதை நீர் வெறுக்கிறீர் போலும்'' என்றார்கள். அதற்கு ஸஅது (ரழி) ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ் இணைவைப்பவர்களுக்குக் கொடுத்த முதல் சேதமாகும். எனவே, அவர்களிலுள்ள ஆண்களை உயிரோடு விடுவதைவிட அதிகமாக அவர்களைக் கொன்று குவிப்பதே எனக்கு மிக விருப்பமானது'' என்றார்.

7) இப்போரில் உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அஸதி (ரழி) அவர்களின் வாள் ஒடிந்து விடவே, அவருக்கு நபி (ஸல்) மரக்கிளை ஒன்றைக் கொடுத்து ''உக்காஷாவே! இதன் மூலம் நீர் போரிடுவீராக'' என்றார்கள். உக்காஷா நபி (ஸல்) அவர்களிடமிருந்து தனது கையில் வாளை வாங்கியவுடன் அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா போரிட்டார். அவ்வாளுக்கு 'அல்அவ்ன்' (உதவி) என்று பெயர் கூறப்பட்டது. இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள். இறுதியாக அபூபக்ர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸைலமாவுடன் நடந்த போரில் உக்காஷா வீரமரணம் எய்தினார்கள்.

8) போர் முடிந்ததற்குப் பின்பு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) தனது சகோதரர் அபூஅஜீஸ் இப்னு உமைரைப் பார்த்தார்கள். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் கலந்திருந்தார். மதீனாவாசிகளில் ஒருவர் அவரது இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த முஸ்அப் அவரிடம் ''நீங்கள் அவரை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவரது தாய் மிகுந்த செல்வமுடையவர். உங்களிடமிருந்து இவரை அதிக கிரயம் கொடுத்து விடுவிப்பார்'' என்றார்கள். இதைக் கேட்ட அவரது சகோதரர் ''எனது சகோதரனே! இதுதான் நீ எனக்காக செய்யும் பரிந்துரையா?'' என்றார். அதற்கு முஸ்அப் ''இவர்தான் எனது சகோதரர் நீ அல்ல!'' என்றார்கள்.

9) இணைவைப்பவர்களின் பிணங்கள் கிணற்றில் போடப்பட்டன. உத்பா இப்னு ரபீஆவின் பிணத்தைக் கிணற்றில் போடுவதற்காக இழுத்து வரும்போது, அதைப் பார்த்த அவனது மகனார் அபூஹுதைஃபா (ரழி) மிகுந்த கவலையடைந்தார். அதனால் அவரது முகமே மாறியது. அதை கவனித்த நபி (ஸல்), ''உமது தகப்பனுக்காக நீ கவலைக் கொள்கிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதரே! எனது தகப்பனின் விஷயத்திலும் அவர் கொலை செய்யப்பட்டதிலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், எனது தந்தை நல்ல அறிவும், புத்தியும், சிறப்பும் உடையவர். அவருக்கு இஸ்லாமின் நேர்வழி கிடைத்துவிடும் என்று ஆதரவு வைத்திருந்தேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. எனது இந்த ஆதரவுக்குப் பின் அவர் நிராகரிப்பில் மரணித்ததை நினைத்தே நான் கவலை அடைந்தேன்'' என்றார். நபி (ஸல்) அபூ ஹுதைஃபவை உயர்வாக பேசி, அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்.

இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

இப்போர் இறைநிராகரிப்பாளர்களுக்கு பெரிய தோல்வியாகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரிய வெற்றியாகவும் முடிந்தது. இப்போரில் முஸ்லிம்களில் முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) ஆறு நபர்களும், அன்சாரிகள் (மதீனாவாசிகள்) எட்டு நபர்களுமாக மொத்தம் பதினான்கு நபர்கள் வீரமரணம் எய்தினர்.

இணைவைப்பவர்களுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன. அவர்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எழுபது நபர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் மூத்த தலைவர்களாகவும் தளபதிகளாவும் இருந்தனர்.

போர் முடிந்து புறப்படும் முன் எதிரிகளில் கொல்லப்பட்டவர்களுக்கு அருகில் நின்று ''நீங்கள் உங்களது இறைத்தூதருக்கு மிகக் கெட்ட உறவினராக இருந்தீர்கள். நீங்கள் என்னைப் பொய்ப்பித்தீர்கள் மற்றவர்கள் என்னை மெய்ப்படுத்தினார்கள். நீங்கள் எனக்கு துரோகம் செய்தீர்கள் மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். நீங்கள் என்னை ஊரைவிட்டு வெளியேற்றினீர்கள் மற்றவர்கள் எனக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அவர்கள் அனைவரும் பத்ரின் கிணறுகளில் ஒரு கிணற்றில் போடப்பட்டனர்.

அபூதல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: பத்ர் போரன்று நபி (ஸல்) 24 குறைஷித் தலைவர்களின் சடலங்களை நாற்றம் பிடித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவார்கள். அவ்வாறே பத்ர் போர் முடிந்தப் பின் அவ்விடத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்றாவது நாள் தனது வாகனத்தை தயார் செய்யக் கூறினார்கள். தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்று அவர்களை அவர்களது தகப்பனாருடைய பெயருடன் அழைத்து ''இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! நிச்சயமாக எங்களது இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையாக பெற்றோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையாக நீங்கள் பெற்றீர்களா?'' என்றார்கள். அப்போது உமர் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் என்ன பேசுகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ''முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ! அவன் மீது ஆணையாக! நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை'' என்றார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: ''அவர்களைவிட நீங்கள் கேட்கும் திறன் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால் பதில் தர முடியாது'' என வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தோல்வியை மக்கா அறிகிறது

பத்ர் மைதானத்திலிருந்து இணைவைப்பவர்கள் விரண்டோடினர். பள்ளத்தாக்குகளிலும் மலைக்கணவாய்களிலும் சிதறினர். மக்காவின் பாதையைப் பயத்துடனே முன்னோக்கினர். வெட்கத்தால் மக்காவிற்குள் நுழைவதற்கே யோசித்தனர்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலையை முதன் முதலில் மக்காவாசிகளுக்குச் சொல்லியவர் ஹைசுமான் இப்னு அப்துல்லாஹ் குஜாம் என்பவர்தான். இவரிடம் மக்காவாசிகள் ''என்ன செய்தியுடன் வந்திருக்கிறாய்?'' என்றனர். அதற்கவர் ''உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல்கம் இப்னு ஹிஷாம், உமையா இப்னு கலஃப் இன்னும் பல குறைஷித் தலைவர்களும் கொல்லப்பட்டனர்'' என்று பல குறைஷித் தலைவர்களின் பெயர்களை வரிசையாக குறிப்பிட்டார். கஅபாவில் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருந்த ஸஃப்வான் இப்னு உமையா ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவனுக்கு புத்தி சரியில்லை. இவனைச் சோதித்துப் பார்ப்போம், இவனிடம் நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்று கேளுங்கள்! சரியாகக் கூறுகிறானா என பார்ப்போம்'' என்றார். அதேபோல் மக்கள் ''ஸஃப்வான் இப்னு உமைய்யா எங்கே இருக்கிறார்'' என்று ஹைசுமானிடம் வினவினர். அதற்கவர் ''இதோ! ஸஃப்வான் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் அமர்ந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரது தந்தையும், இவரது சகோதரரும் கொல்லப்படுவதை நான் பார்த்தேன்'' என்றார்.

நபி (ஸல்) அவர்களின் அடிமை அபூராபிஃ (ரழி) கூறுகிறார்கள்: நான் ஆரம்பத்தில் அப்பாஸ் (ரழி) அவர்களின் அடிமையாக இருந்தேன். அப்பாஸ் (ரழி) அவர்கள் வீட்டில் அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தனர். அதாவது அப்பாஸ் (ரழி), உம்முல் ஃபழ்ல் (ரழி) மற்றும் நான் ஆக அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தோம். ஆனால், அப்பாஸ் (ரழி) தான் முஸ்லிமானதை மறைத்திருந்தார். அபூலஹப் பத்ரில் கலந்துகொள்ளாமல் மக்காவில் தங்கியிருந்தான். பத்ருடைய செய்தியினால் அல்லாஹ் அவனது அகம்பாவத்தை அழித்து அவனை அவமானப்படுத்தினான். அச்செய்தியினால் எங்கள் உள்ளத்தில் துணிவும் வலிமையும் பிறந்தது. ஆனால், நானோ ஒரு பலவீனமானவன். ஜம்ஜம் கிணற்றுக்கு அருகிலுள்ள அறையில் அமர்ந்து அம்புகள் செய்வது எனது தொழிலாக இருந்தது. ஒரு நாள் நான் அம்புகள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். உம்முல் ஃபழ்லு எனக்கருகில் அமர்ந்திருந்தார். பத்ரிலிருந்து வந்த செய்தியால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். அதுசமயம் அபூலஹப் தனது கால்களை மிக மோசமாக பூமியில் தேய்த்தவனாக வந்து எங்களது அறையின் ஓரத்தில் அமர்ந்தான். அவனது முதுகு எனது முதுகைப் பார்த்தவாறு இருந்தது.

அப்போது ''இதோ! அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் வருகிறார்'' என்று மக்கள் கூறினர். அபூலஹப் அபூஸுஃப்யானிடம் ''எனக்கருகில் வா! உன்னிடம் உண்மையான செய்திகள் இருக்கலாம்'' என்று கூறினான். அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் அபூலஹபுக்கு அருகில் வந்து அமர்ந்தார். மக்கள் அவரை சுற்றி நின்றுகொண்டனர். அபூஸுஃப்யானிடம் அபூலஹப் ''எனது சகோதரன் மகனே! மக்களின் செய்தி என்னவானது?'' என்றான். அதற்கு அபூஸுஃப்யான் ''முஸ்லிம்களை நாங்கள் சந்தித்தபோது அவர்களுக்கு எங்களது புஜங்களைத் தந்தோம். முஸ்லிம்கள் நாடியவாறு எங்களைக் கொன்றனர் நாடியவாறு சிறைபிடித்தனர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமது மக்கள் இந்தளவு பலம் இழந்ததற்கு நான் அவர்களைக் குறை கூறவில்லை. வானத்திற்கும், பூமிக்கும் மத்தியில் சிறந்த குதிரைகளின் மீது வீற்றிருந்த வெள்ளை நிறத்தில் பலரை நாங்கள் பார்த்தோம். அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. எங்களால் அவர்களை எதிர்க்கவும் முடியவில்லை'' என்று கூறினார்.

அபூராஃபிஃ (ரழி) தொடர்ந்து கூறுகிறார்: நான் அறையின் ஓரத்தை விலக்கி, ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் வானவர்கள்'' என்றேன். இதைக் கேட்ட அபூலஹப், தன் கையை உயர்த்தி எனது கன்னத்தில் கடுமையாக அறைந்தான். நானும் அவன் மீது பாய்ந்தேன், அவனை எதிர்த்தேன். அவன் என்னை தூக்கி பூமியில் வீசினான். பின்பு என் மீது அமர்ந்து என்னை அடித்தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாத வகையில் நான் வலுவிழந்தவனாக இருந்தேன். எனது நிலையைப் பார்த்த உம்முல் ஃபழ்ல் கூடாரத்தின் ஒரு தடியை உருவி பயங்கரமாக அவனது தலையில் அடித்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ''ஏண்டா! இவரது எஜமானன் இல்லாததால் இவரை ஆதரவற்றவர் என்று நீ கருதிவிட்டாயா?'' என்று கேட்டார். அதற்குப் பிறகு அங்கிருந்து கேவலப்பட்டு அபூலஹப் எழுந்து சென்றான். இந்நிகழ்ச்சிக்குப் பின் ஏழு நாட்கள் கழித்து அல்லாஹ் அவனது உடலில் அம்மையைப் போன்ற ஒரு நோயை ஏற்படுத்தினான். அந்நோய் அவனைக் கொன்றது. அதாவது, இந்நோயை அரபியர்கள் மிக துர்க்குறியாக கருதியதால் அவனது பிள்ளைகள் யாரும் அவனுக்கருகில் நெருங்கவில்லை. அவன் செத்த பிறகும் அவனைப் புதைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்கள் தங்களை பழிப்பார்கள் என்று பயந்தவுடன் ஒரு பெரும் குழியைத் தோண்டி, ஒரு குச்சியால் அவனை அக்குழியில் தள்ளினர். பின்பு தூரத்தில் இருந்து கற்களை எறிந்து அக்குழியை மூடினர்.

இவ்வாறுதான் பத்ர் மைதானத்தில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியின் செய்திகளை மக்கா பெற்றது. இச்செய்தி அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் ஆனந்தமடையக் கூடாது என்பதற்காக கொல்லப்பட்டவர்கள் மீது ஒப்பாரி வைப்பதையும் மக்காவாசிகள் தடை செய்தனர்.

நகைச்சுவை செய்தி ஒன்றைப் பார்ப்போம்: அஸ்வத் இப்னு முத்தலிபின் மூன்று ஆண் பிள்ளைகளும் பத்ர் போரில் கொல்லப்பட்டனர். எனவே, அவர்களுக்காக அழ வேண்டுமென்று அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு கண் தெரியாது. ஒரு நாள் ஒப்பாரி வைக்கும் ஒரு பெண்ணின் சப்தத்தைக் கேட்ட அவர் தனது அடிமையை அனுப்பி ''என்ன! ஒப்பாரியிடுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதா? போரில் கொல்லப்பட்டவர்களுக்காக குறைஷிகள் அழுகிறார்களா? என்று பார்த்து வாரும். நான் எனது மகன் அபூ ஹகீமாவிற்காக அழவேண்டும். அவனது மரணத்தால் எனது உள்ளம் எரிந்து விட்டது'' என்று கூறினார். அவரது அடிமை அவரிடம் திரும்பி வந்து ''அது தனது ஒட்டகத்தை தொலைத்துவிட்ட ஒரு பெண்ணின் அழுகை'' என்றார். இதனைக் கேட்ட அஸ்வத் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் இக்கவிதைகளைப் படித்தார்.

அவள் ஒட்டகம் காணவில்லை என அழுகிறாளா?

அதற்காக கண்விழித்து தூக்கத்தைத் துறந்து விட்டாளா?

ஒட்டகத்திற்காக அழாதே! விதிகள் ஏமாற்றிய பத்ர் போருக்காக அழு!

ஆம்! பத்ரின் மீது அழு! ஹுசைஸ், மஃக்ஜும் கூட்டத்தினர் மீது அழு!

அழ வேண்டுமானால் அக்கீல் மீது அழு!

சிங்கங்களின் சிங்கம் ஹாரிஸின் மீது அழு!

ஆம்! இவர்களுக்காக நீ அழத்தான் வேண்டும்!

அனைவரையும் நீ பெயர் குறிப்பிடத் தேவையில்லை.

அபூ ஹகீமுக்கு நிகர் எவருமில்லையே!

என்ன கேடு? அவர்களுக்குப் பிறகு சிலர் தலைவராகி விட்டனர்!

பத்ர் என்றொரு தினம் இல்லையென்றால்...

அவர்கள் ஒருக்காலும் தலைவர்களாக ஆகியிருக்க முடியாது!!

வெற்றியை மதீனா அறிகிறது

முஸ்லிம்களுக்கு முழு வெற்றி கிடைத்தது. இந்த நற்செய்தி மதீனாவாசிகளுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களை மதீனாவின் மேட்டுப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஜைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை மதீனாவின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.

யூதர்களும், நயவஞ்சகர்களும் மதீனாவில் பல பொய்யான வதந்திகளைப் பரப்பினர். ''நபி (ஸல்) கொல்லப்பட்டார்கள்'' என்று பொய் பிரச்சாரம் செய்தனர். நயவஞ்சகர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகமான 'கஸ்வா'வில் ஜைது இப்னு ஹாரிஸா வருவதைப் பார்த்து ''நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார். அதற்கு ஆதாரம், இதோ... முஹம்மதின் ஒட்டகம். நாங்கள் இதை நன்கு அறிவோம். பயத்தால் என்ன கூறுவது என்றே ஜைதுக்கு தெரியவில்லை. இவர் போரில் தோற்று வருகிறார்'' என்று உளறினான்.

இரண்டு தூதர்களும் மதீனாவிற்கு வந்தவுடன் முஸ்லிம்கள் அவர்களைச் சூழ்ந்து அவர்கள் கூறும் செய்திகளைக் கேட்டனர். முஸ்லிம்கள் வெற்றி அடைந்தார்கள் என்ற செய்தி அவர்களுக்கு உறுதியானவுடன் மகிழ்ச்சி மிகுதியால் தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழங்கினர். மதீனாவில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இம்மகத்தான வெற்றிக்காக வாழ்த்துக் கூற பத்ரின் பாதையை நோக்கி விரைந்தனர்.

உஸாமா இப்னு ஜைது (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) தங்களது மகள் ருகையாவை கவனித்துக் கொள்வதற்காக அவரது கணவராகிய உஸ்மான் (ரழி) அவர்களுடன் என்னையும் விட்டுச் சென்றிருந்தார்கள். ருகையா (ரழி) இறந்துவிடவே அவர்களை அடக்கம் செய்து மண்ணைச் சமப்படுத்துகையில் ''பத்ர் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்'' என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது.