ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Saturday, January 17, 2015

[ரஹீக் 002] – தாருல் ஹுதாவின் அறிமுகம்

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் மறுமை நாள் வரை தொடரட்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சமுதாயம் என்பது பல தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு. முழுமையாக சீர்திருத்தம் பெற்ற மக்களை உயர் சமுதாயமாகவும், சீர்திருத்தம் பெறாதவர்களை தாழ்ந்த சமுதாயமாகவும் கருதுவது இயற்கை. ஆகவே, சமுதாயம் மேம்பட ஒவ்வொருவரும் தம்மை முழுமையாக சீர்திருத்திக் கொள்வதும், சமுதாயத்தைக் கெடுக்கும் அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதும் மிக அவசியம்.

அதனால்தான் சமுதாயத்தில் ஊடுருவியுள்ள சீர்கேடுகளை கண்டும் காணாமலிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக, நன்மையானவற்றை ஒருவருக்கொருவர் அறிவுறுத்திக் கொள்வதும் தீயவற்றிலிருந்து தடுப்பதும் சமுதாய மக்களுக்கு இருக்க வேண்டிய அவசியமான பண்பு என இஸ்லாம் இயம்புகிறது.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக, அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9 : 71)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது ஒரு தவறைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தனது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் (வெறுத்து விலகி விடட்டும்). இது ஈமானின் குறைந்தபட்ச அளவாகும். (ஸஹீஹுல் புகாரி)
மேலும் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசம் கொள்வதற்கும், கருணை காட்டுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் எடுத்துக்காட்டு ஓர் உடலைப்போல. உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன. (ஸஹீஹுல் புகாரி)
 

சமுதாயத்தின் இன்றைய நிலை

சிறியோர் முதல் பெரியோர் வரை நம்மிடையே வாழும் பெரும்பாலானவர்கள் சரியான மார்க்க ஞானமின்றி, முறையான வழிகாட்டலின்றி இருக்கிற ஒரு சூழலை நாம் பார்க்கிறோம்.

ஒழுக்கப் பண்பாடுகளாலும் ஓரிறைக் கொள்கையாலும் மனித சமுதாயத்திற்கே வழிகாட்டும் ஒரு முன்னணி மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது. ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துவதுடன் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மனித நேயத்தையும் ஒற்றுமையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஆனால், இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் இறைக்கோட்பாடு, வணக்க வழிபாடுகள், ஒழுக்க மாண்புகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரண்பட்டு நிற்கின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் இம்மையிலும் மறுமையிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் இறைக் கோபத்திற்கு ஆளாகி விடுவார்கள். மேலும், இவ்வுலகில் மற்ற சமுதாயங்களுக்கிடையில் தங்களது மிளிரும் தனித் தன்மைகளையும் இழந்து விடுவார்கள்.

சீர் செய்யும் முறை

”லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர்” என்ற இஸ்லாமின் அடிப்படையைக் கொண்டே இந்த சீர்திருத்தம் ஏற்பட முடியும். அதாவது, ஏக இறைவனாகிய அல்லாஹ் இறக்கிய மேன்மைமிகு குர்ஆனின் வழிகாட்டுதல் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிகு வாழ்வியல் நெறி ஆகிய இரண்டினால் மட்டுமே மனித குலம் சீர்பெற முடியும்.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். (அல்குர்ஆன் 33 : 71)

ஆகையால் இறையருளால் பெறப்பட்ட நற்பேறுகளை உயர்ந்த இப்பணிக்காக செலவிடுதல் நம்மில் ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

தோற்றம்

இந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை பொருத்தத்தை அடைய வேண்டுமென்ற தூய எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘தாருல் ஹுதா’.

அல்லாஹ்வின் அருளால் சமுதாய சீரமைப்புக்காக அயராது உழைக்கும் நல்லோர்களுடன் சேர்ந்து இத்தூய பணியை மென்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே இதன் இலட்சியமாகும்.

பணிகளும் தொண்டுகளும்

அழைப்புப் பணி

இதுவே இஸ்லாமின் அடிப்படையாகும். உலகில் இப்பணி இறைத்தூதர்கள் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவரின் மீதும் இப்பணி கடமையாக்கப்பட்டது. மேன்மைமிகு குர்ஆனும், சிறப்புமிகு நபிமொழியும் இதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இதன்படி மனித சமுதாயத்திற்கு இயன்ற அளவு அனைத்து வழிகளிலும் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதும், அதன் உயர்வுகளை விளங்கச் செய்வதும், இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வரும் சந்தேகங்கள், எதிர்வரும் கேள்விகள் அனைத்திற்கும் தகுந்த சான்றுகளுடன் பதிலளித்து தெளிவுபடுத்துவதும் தாருல் ஹுதாவின் தலையாய பணிகளாகும்.

கல்விப் பணி


இஸ்லாமை அறிய விரும்பும் சிறுவர், சிறுமியர், வாலிபர், முதியோர், ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் மேன்மைமிகு திருக்குர்ஆன், சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர் தகுதிக்கேற்ப கற்றுத் தருவது தாருல் ஹுதாவின் இரண்டாவது பணியாகும்.

நூல் வெளியிடுதல்

மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாய பேரறிஞர்களால் அரபி மொழியில் எழுதப்பட்ட நூல்களை தமிழிலும் ஏனைய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, அந்நூல்களை சலுகை விலையில் மக்களுக்கு வழங்குவது தாருல் ஹுதாவின் மூன்றாவது பணியாகும்.

உதவுதல்

அல்லாஹு தஆலாவே அனைவரின் தேவைகள், துன்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்பவன். மிகப் பெரிய வள்ளலாகிய அல்லாஹ் தன் சார்பாக உலகில் ஏழை, எளியோர், நலிந்தோர் ஆகியோன் துயர் துடைக்கும் வள்ளல் பெருமக்களுக்கு பெரும் வெகுமதிகளை ஈருலகிலும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். பிறர் துன்பங்களில் பங்கெடுப்பது, பிறர் தேவைகளை நிறைவேற்ற இயன்றவரை உதவுவது முஸ்லிம்களுடைய அடிப்படை பண்புகளாகும்.

இந்த உன்னத பணிக்காக ‘பைதுல்மால்’ (பொது நிதி) ஏற்பாடு செய்து இரக்கச் சிந்தையும், மார்க்கப்பற்றும் கொண்ட வள்ளல் பெருமக்களிடமிருந்து கடமையான, உபரியான தர்மங்களை பெற்று தேவையுடையோருக்கு உதவுவது தாருல் ஹுதாவின் நான்காவது பணியாகும்.

மேற்கூறிய பணிகளைத் தவிர, இஸ்லாம் முழுமையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் வரவேண்டும் என்பதற்காகவும், மனித சமுதாயங்களுக்குள் நல்லுறவும், அன்பும், கருணையும், சமூக புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இயன்றவரை தொண்டாற்றி, அப்பணி செய்வோருடன் இணைந்து பங்காற்றி, அல்லாஹ்வுக்காக தன்னை ஈந்துகொள்வது தாருல் ஹுதாவின் குறிக்கோளாகும்.

இப்பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து சிறப்பாக, திறம்பட நடைபெற, மேலும் அல்லாஹ்விடம் ஏற்கப்பட, தங்களின் பிரார்த்தனைகளில் நினைவுகூரும்படி அன்புடன் கேட்டுக்கொள்வதுடன், தங்களால் இயன்றவரை பங்குபெறுமாறும் அழைக்கிறோம்.

தாருல் ஹுதாவின் வெளியீடுகள்

1. ”அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை விளக்கம்” (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)

ஈமானுடைய அடிப்படைகளை மிகத் துல்லியமாக தக்க சான்றுகளுடன் விவரிக்கும் நூல்.

2. ”முன்மாதி முஸ்லிம்” (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமி)

சிறந்த முஸ்லிமுக்குரிய அழகிய பண்புகளை சரியான ஆதாரங்களுடன் விவரிக்கும் நூல்.

3. ”அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்” (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)

ஓர் இறை நம்பிக்கையாளர் தவிர்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பாவங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்.

4. ”தடுக்கப்பட்டவைகள்” (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)

செய்யக்கூடாது, தவிர்க்கப்பட வேண்டியது என்று அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழியிலும் வந்துள்ள அனைத்து விஷயங்களின் தொகுப்பு. வரிகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

5. ”அர்ரஹீக்குல் மக்தூம்” (ஆசிரியர்: அஷ்ஷைக் ஸஃபிய்யுர் ரஹ்மான், உ.பி., இந்தியா)

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு. ஹிஜ்ரி 1399 (கி.பி.1979), மக்கா முகர்ரமாவில் ”நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” குறித்து நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய கல்வி திறனாய்வு போட்டியில் முதல் பரிசு வென்ற நூல்.

6. ”தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்” (குர்ஆனின் இனிய, எளிய தமிழ் மொழிபெயர்ப்பு) (ஆசிரியர்: அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி)

நேர்த்தியான மூன்று (டெம்மி, மீடியம், பாக்கெட்) வடிவமைப்பில் குர்ஆன் வசனங்களை தலைப்புகள் வாரியாக தெரிந்து கொள்வதற்கு வசதியான மிக விரிவான அட்டவணையுடன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வெளியீடுகள்

1. ”ரியாழுஸ் ஸாலிஹீன்” (ஆசிரியர்: இமாம் நவவி அவர்கள்)

718 அரிய தலைப்புகளின் கீழ், ஆதாரப்பூர்வமான 1894 சிறப்புமிகு நபிமொழிகளின் தொகுப்பு. நமது வீடுகளிலும் இறை இல்லங்களிலும் அன்றாடம் படிப்பதற்கும் படித்து காண்பிப்பதற்கும் மிக அருமையான நூல்.

2. ”நுழைவாயில்” (ஆசிரியர்: அஷ்ஷைக் இப்றாஹீம் இப்னு முஹம்மது அல் பரீகான்.)

இஸ்லாமிய கொள்கைகளை மிக விரிவாக தக்க சான்றுகளுடன் விளக்கும் ஓர் ஆழமான நூல்.

3. ”அண்ணல் நபியின் அழகிய துஆக்கள்” (ஆசிரியர்: அஷ்ஷைக் அலாவுத்தீன் இப்னு ஸுஃப்)

காலை, மாலை, இரவு, பகல், சுகம், துக்கம் என ஒவ்வொரு காலத்திலும் ஓதி பயனடைய வேண்டிய ஈமானிய புத்துணர்ச்சி அளிக்கும் ஆதாரப்பூர்வமான துஆக்களின் தொகுப்பு.

தொடரும்..

சுட்டி: ரஹீக் ஆடியோ

No comments:

Post a Comment