ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Friday, April 3, 2015

[ரஹீக் 019]-இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது.

நபி (ஸல்) போர் முடிந்த பிறகு பத்ர் மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு போரில் கிடைத்த பொருட்கள் விஷயத்தில் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. கருத்து வேற்றுமை பலமாகவே, அனைவரும் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அதற்கிணங்க அனைவரும் தங்கள் வசம் இருந்த அனைத்தையும் நபியவர்களிடம் ஒப்படைத்தனர். பின்பு இப்பிரச்சனைக்குத் தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்.

இந்நிகழ்ச்சி பற்றி விரிவாக உபாதா இப்னு ஸாமித் (ரழி) கூறுவதைக் கேட்போம். அவர்கள் கூறுவதாவது:

''நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றோம். போரில் அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்து முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களில் ஒரு சாரார் எதிரிகளை விரட்டி அடிப்பதிலும் அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொல்வதிலும் மும்முரமாக இருந்தனர். இன்னொரு சாரார் எதிரிகளின் பொருட்களை ஒன்று திரட்டினர். மற்றுறொரு சாரார் நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்காமல் இருக்க அவர்களைச் சுற்றி பாதுகாத்தனர்.

இரவில் போர் முடிந்து மக்கள் ஒன்று சேர்ந்த போது பொருட்களை சேகரித்தவர்கள் ''நாங்கள்தான் பொருட்களை ஒன்று சேர்த்தோம். எனவே, அதில் வேறு யாருக்கும் எவ்வித பங்கும் கிடையாது'' என்றனர்.

எதிரிகளை விரட்டியவர்கள், ''எங்களைப் பார்க்கிலும் அதிகமாக உங்களுக்கு அதில் உரிமை இல்லை, நாங்கள்தான் எதிரிகளை துரத்தினோம், தோற்கடித்தோம். எனவே, எங்களுக்கே அது உரிமையானது. எங்களைவிட நீங்கள் அதற்கு உரிமையுடையவர்களாக இருக்க முடியாது'' என்றனர்.

நபியவர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தவர்கள், ''நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்கிடுவர் என்ற பயத்தால் நாங்கள் அவர்களை பாதுகாப்பதில் இருந்தோம். எனவேதான் உங்களுடன் எங்களால் செயல்படமுடியவில்லை. ஆகவே எங்களுக்கும் அதில் பங்கு வேண்டும்'' என்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்:

(நபியே!) 'அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருட்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: 'அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (அல்குர்ஆன் 8:1)

நபி (ஸல்), இந்த வசனத்திற்கேற்ப முஸ்லிம்கள் அனைவருக்கும் பொருட்களை பங்கு வைத்தார்கள். (முஸ்னது அஹ்மது, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

பொருட்களை பத்ர் மைதானத்திலேயே பங்கு வைக்கவில்லை. மாறாக, அனைத்து பொருட்களையும் ஒன்றுசேர்த்து அதற்கு அப்துல்லாஹ் இப்னு கஅபை பொறுப்பாக நியமித்தார்கள். பிறகு பொருட்களுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். செல்லும் வழியில் 'மழீக்' மற்றும் 'நாஜியா' என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள மணல் மேட்டுக்கருகில் தங்கினார்கள். அங்குதான் போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள். ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மீதமிருந்த அனைத்தையும் போரில் கலந்த அனைத்து வீரர்களுக்கும் சட்டப்படி பங்கு வைத்தார்கள்.

பிறகு புறப்பட்டு 'ஸஃப்ரா' என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கு நழ்ர் இப்னு ஹாஸைக் கொன்றுவிடுமாறு அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். காரணம், இவன் பத்ர் போரில் எதிரிகளின் கொடியை ஏந்தியவன். இவன் குறைஷி குற்றவாளிகளில் ஒரு பெரும் குற்றவாளி! இஸ்லாமுக்கு எதிராகப் பெரும் சூழ்ச்சிகள் செய்தவன். நபி (ஸல்) அவர்களுக்கு கடும் நோவினை செய்தவன்.

பிறகு 'இர்க்குல் ளுபியா' என்ற இடத்தை அடைந்தபோது உக்பா இப்னு அபூ முயீத்தையும் கொன்றுவிட ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். சிலர் அலீ (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு உக்பா செய்த தீங்கைப் பற்றி நாம் முன்பே கூறியிருக்கின்றோம். இவன்தான் நபி (ஸல்) தொழுகையில் இருந்த சமயம் அவர்களின் முதுகில் ஒட்டகத்தின் குடலைப் போட்டவன். நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக அவர்களின் கழுத்தைப் போர்வையால் இறுக்கியவன். அது சமயம் அபூபக்ர் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள். அவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளையிட்ட பின்பு அவன் நபியவர்களிடம் ''முஹம்மதே! எனது பிள்ளைகள் என்ன ஆவார்கள்?'' என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) ''அவர்களுக்கு நெருப்புதான்'' என்றார்கள். (ஸுனன் அபூதாவூது)

இவ்விருவரும் இதற்குமுன் செய்த குற்றங்கள் மிக மோசமானவை, மறக்க முடியாதவை. அதுமட்டுமல்ல இவர்கள் தங்களின் குற்றங்களுக்காக வருந்தவுமில்லை. இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இஸ்லாமிற்குக் கெடுதிகள் பல செய்வர். எனவே, இவர்களைக் கொல்வது அவசியமான ஒன்றே! கைதிகளில் இவ்விருவரைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) கொலை செய்யவில்லை.

வாழ்த்த வந்தவர்கள்

இரண்டு தூதர்களின் மூலமாக வெற்றியின் நற்செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் சந்திப்பு 'ரவ்ஹா' என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நிகழ்ந்தது. அப்போது அவர்களிடம் மதீனாவைச் சேர்ந்த ஸலமா இப்னு ஸலாமா (ரழி) ''நீங்கள் எங்களுக்கு எதற்கு வாழ்த்து சொல்கிறீர்கள்.? கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம். எனவே, எளிதில் அவர்களது கழுத்துகளை அறுத்தோம்'' என்று கூறினார். நபி (ஸல்) புன்முறுவல் பூத்து ''எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்'' என்றார்கள்.

மதீனாவின் தலைவர்களில் ஒருவரான உஸைத் இப்னு ஹுழைர் (ரழி) வாழ்த்து கூறும்போது: ''அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு வெற்றியளித்து உங்கள் கண்ணை குளிரச் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! நீங்கள் எதிரிகளுடன் போர் புரிய நேரிடும் என்று நினைத்து பத்ருக்கு வருவதிலிருந்து நான் பின்வாங்கவில்லை. மாறாக, வியாபாரக் கூட்டத்தைத்தான் நீங்கள் சந்திக்கச் செல்கிறீர்கள் என்று எண்ணினேன். ஆகையால்தான் உங்களுடன் புறப்படவில்லை. நீங்கள் எதிரிகளை சந்திக்க நேரிடும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நான் ஒருக்காலும் பின்வாங்கியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ''நீர் உண்மை கூறுகிறீர்'' என்றார்கள்.

இவ்வாறு பல தலைவர்களின் வாழ்த்துகளைக் கேட்டு, பதிலளித்தப் பிறகு நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்தார்கள். பெரும் வெற்றி பெற்று வரும் அவர்களை மதீனாவிலிருந்த எதிரிகளும், மதீனாவை சுற்றியிருந்த எதிரிகளும் அஞ்சினர். இஸ்லாமின் வெற்றியைக் கண்டு அதை உண்மை மார்க்கம் என அறிந்த பலர் மனமுவந்து இஸ்லாமைத் தழுவினர். மற்றொருபுறம் சில விஷமிகள் வேறு வழியின்றி தாங்களும் இஸ்லாமைத் தழுவுகிறோம் என்றனர். ஆனால் மனதுக்குள் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் வெறுத்தனர். அத்தகையோர்தான் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது நண்பர்களும் ஆவர். இந்த நயவஞ்சகர்கள் இஸ்லாமிற்குச் செய்த துரோகங்களை இந்நூலில் அவசியமான இடங்களில் நாம் கூறுவோம்.

நபி (ஸல்) மதீனாவிற்கு வந்த ஒரு நாள் கழித்து கைதிகள் மதீனாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தங்களது தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென உபதேசித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த உபதேசத்தை செயல்படுத்தும் விதமாக, கைதிகளுக்கு ரொட்டிகளை உண்ணக் கொடுத்து, நபித்தோழர்கள் பேரீத்தம் பழங்களைப் புசித்தார்கள்.

கைதிகளின் விவகாரம்


நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் கைதிகளைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்'' என்று கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் ''கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?'' எனக் கேட்டார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்'' என்று உமர் (ரழி) கூறினார்கள்.

அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

உமர் (ரழி) கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் ''அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) ''ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது'' என்றார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)

பல கைதிகளை நபி (ஸல்) ஈட்டுத் தொகை இல்லாமலே உரிமையிட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முத்தலிப் இப்னு ஹன்தப், ஸைஃபி இப்னு அபூ ஃபாஆ, அபூ இஜ்ஜா ஜும ஆவர். இந்த அபூ இஜ்ஜா உஹதுப் போரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சண்டையிட்டான். போரின் இறுதியில் கைதியாகப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதன் விவரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் வர இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுடைய மருமகன் அபுல் ஆஸும் கைதிகளில் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மகளார் ஜைனப் (ரழி) தனது தாய் கதீஜா (ரழி) தனக்களித்த மாலையை ஈட்டுத் தொகையாக அனுப்பினார்கள். ஜைனப் (ரழி) அவர்களின் மாலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்களது உள்ளம் இரங்கியது. தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலையிட அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர ''மகள் ஜைனப் (ரழி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். அவர் மக்கா சென்ற பிறகு ஜைனப் (ரழி) அவர்களை மதீனா அனுப்பினார். ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வர ஜைது இப்னு ஹாரிஸாவையும் மற்றும் ஒரு அன்சாரி தோழரையும் நபி (ஸல்) அனுப்பினார்கள். அவர்களிடம் நீங்கள் ''பத்தன் யஃஜஜ் என்ற இடத்தில் தங்கியிருங்கள். ஜைனப் அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கிருந்து அவரை அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். அந்த இருவரும் அவ்வாறே சென்று ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வந்தார்கள். ஜைனப் (ரழி) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற வரலாறு மிக துயரமான நிகழ்ச்சியாகும். இப்பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் கேட்போரின் உள்ளங்களை உருக்கிவிடும்.

கைதிகளில் சுஹைல் இப்னு அம்ர் என்பவரும் இருந்தார். இவர் இலக்கிய நயத்துடன் பேசும் புகழ் பெற்ற பேச்சாளர். சில சமயங்களில் இஸ்லாமிற்கெதிராக பிரச்சாரம் செய்வார். எனவே, ''அல்லாஹ்வின் தூதரே! இவனது இரண்டு முன்பற்களைக் கழற்றி விடுங்கள். இவன் அதிகம் பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எதிராக இவன் எந்தப் பிரசங்கமும் செய்யக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். உறுப்புகளைச் சிதைப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூடாது என்பதற்காகவும், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை பயந்தும் நபி (ஸல்) உமரின் இக்கோரிக்கையை நிராகரித்தார்கள்.

இப்போருக்குப் பின், உம்ரா செய்வதற்காகச் சென்ற ஸஅது இப்னு நுஃமான் (ரழி) அவர்களை அபூ ஸுஃப்யான் மக்காவில் சிறைபிடித்துக் கொண்டார். அபூ ஸுஃப்யானின் மகன் அம்ர் இப்னு அபூஸுஃப்யான் பத்ர் போரில் கைது செய்யப்பட்டு முஸ்லிம்கள் வசம் இருந்தார். ஸஅதை விடுவிப்பதற்காக அம்ரை அபூ ஸுஃப்யானிடம் சில முஸ்லிம்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அபூஸுஃப்யானும் தனது மகன் அம்ர் கிடைத்தவுடன் ஸஅதை விடுதலை செய்தார்.

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போரை விவரித்து குர்ஆனில் 'அல் அன்ஃபால்' என்ற அத்தியாயம் இறக்கப்பட்டது. நாம் கூறுவது சரியானால் ''இந்த அத்தியாயம் இப்போரைப் பற்றிய இறை விமர்சனம்'' என்று கூறலாம். வெற்றி பெற்ற பிறகு அரசர்களும் தளபதிகளும் போரைப் பற்றி கூறும் விமர்சனங்களிலிருந்து இந்த இறை விமர்சனம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

முதலாவதாக, முஸ்லிம்களுக்கு அவர்களிடம் இருந்த சில ஒழுக்கக் குறைவுகளை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களை உயர் பண்புகளால் முழுமைபெற செய்ய வேண்டும். குறைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும். மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதே!

இரண்டாவதாக, முஸ்லிம்கள் தங்களது வீரம் மற்றும் துணிவைப் பார்த்து தற்பெருமைக்கு ஆளாகிவிடக் கூடாது. மாறாக, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். தனக்கும் தனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவேதான் முஸ்லிம்களுக்கு மறைவிலிருந்து செய்த உதவியை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

மூன்றாவதாக,
இந்த ஆபத்தானப் போரை நபி (ஸல்) அவர்கள் எந்த இலட்சியங்களையும், நோக்கங்களையும் முன்னிட்டு சந்தித்தார்களோ அவற்றை விரிவாக அல்லாஹ் கூறுகிறான். அதன் பிறகு போர்களில் வெற்றி பெறக் காரணமாக அமையும் தன்மைகளையும், குணங்களையும் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடுகிறான்.

நான்காவதாக, இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், போரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். சத்தியத்திற்குப் பணிந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை.

ஐந்தாவதாக, போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான்.

ஆறாவதாக, போரிடுவது அல்லது சமாதானம் செய்து கொள்வது ஆகிய இவ்விரண்டின் அடிப்படைகள் மற்றும் சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். அத்தகைய ஒரு காலக்கட்டத்தை அப்போது இஸ்லாமிய அழைப்புப்பணி அடைந்துவிட்டது என்பதே அதற்குக் காரணம். அதன் மூலமே முஸ்லிம்கள் புரியும் போருக்கும் அறியாமைக்கால மக்கள் செய்த போருக்கும் வேறுபாடு ஏற்படும். முஸ்லிம்கள் பிறரைப் பார்க்கிலும் தனித்தன்மை பெற்று, குணத்திலும் பண்பிலும் மேலோங்கி விளங்குவார்கள். மேலும், உலக மக்கள் இஸ்லாமை ஒரு தத்துவ சிந்தனையாக (சித்தாந்தமாக) மட்டும் பார்க்காமல், தான் அழைக்கும் அடிப்படைகளை கொண்டு தன்னைச் சார்ந்தோரைப் பண்பட செய்யும் ஒரு வாழ்க்கை நெறியாக இஸ்லாமைப் பார்ப்பார்கள்.

ஏழாவதாக, இஸ்லாமிய நாட்டுக்குரிய அடிப்படை சட்டங்களை அல்லாஹ் நிர்ணயிக்கின்றான். அதாவது, இஸ்லாமிய அரசாங்கத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும், அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையில் சட்ட வித்தியாசங்கள் உள்ளன என்பதே அது.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. 'ஜகாத்துல் ஃபித்ர்' எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது, இதர பொருட்களுக்குரிய 'ஜகாத்' எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது.

பத்ர் போரில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் கொண்டாடிய நோன்புப் பெருநாளே முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெருநாட்களில் முந்தியதும் மிகச் சிறந்ததுமாகும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி எனும் கிரீடத்தை அணிவித்த பின்பு, அவர்களுக்கு அவன் வழங்கிய இந்தப் பெருநாள் எவ்வளவு அதிசயத்தக்கது! தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி ''அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்), லாயிலாஹஇல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)'' என்று சப்தமிட்டுக் கூறியவர்களாக வந்து, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத அந்த தொழுகையின் காட்சிதான் எவ்வளவு அற்புதமானது! அல்லாஹ்வின் உதவியையும் அளவிலா அருளையும் பெற்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டன. அவனது நேசத்தையும் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள துடியாய்த் துடித்தன.

இதைத்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தில் நினைவூட்டுகிறான்:

நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26)

பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள்

சற்று முன் நாம் கூறிய பத்ர் போரில்தான் முதன் முதலாக முஸ்லிம்களும் இணை வைப்பவர்களும் ஆயுதமேந்தி கடும் சண்டையிட்டுக் கொண்டனர். இப்போர் முஸ்லிம்களுக்கு உறுதியான வெற்றியைக் கொடுத்தது. இதை அனைத்து அரபுலகமும் அறிந்தனர். இப்போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் இதில் நேரடியாக சேதமடைந்த மக்காவாசிகள். அதாவது, இணைவைப்பவர்கள். அதற்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள். இவர்கள் முஸ்லிம்களின் வெற்றியையும் அவர்கள் மிகைத்து விடுவதையும் தங்களது மார்க்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய அடியாகவும் வீழ்ச்சியாகவும் கருதினர். ஆக, பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்ததிலிருந்து இணைவைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்கள் மீது கோபத்தாலும் ஆத்திரத்தாலும் கொந்தளித்தனர்.

(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! (அல்குர்ஆன் 5:82)

இந்த இருசாராருக்கும் மதீனாவிற்குள் சில இரகசிய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு இஸ்லாமைத் தவிர வேறு எங்கும் கண்ணியம் கிடைக்காது என்று உறுதியாக தெரிந்த பிறகு, தங்களைப் பெயரளவில் 'முஸ்லிம்கள்' என்று அறிமுகப்படுத்தினர். உண்மையில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் விட அவர்கள் முஸ்லிம்கள் மீது குரோதத்தால் குறைந்தவர்கள் அல்லர். அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது நண்பர்களும் ஆவர்.

மேற்கூறப்பட்ட மூன்று பிரிவினரைத் தவிர அங்கு நான்காவது ஒரு பிரிவினரும் இருந்தனர். அவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்த கிராம அரபிகள். இவர்களுக்கு குஃப்ர் (இறைநிராகரிப்பு), ஈமான் (இறைநம்பிக்கை) என்பதெல்லாம் ஒரு முக்கியமான பிரச்சனையல்ல. இவர்கள் மக்களின் செல்வங்களைச் சூறையாடுவதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வெற்றியால் கவலைக்குள்ளாகினர். மதீனாவில் முஸ்லிம்களின் வலிமையான அரசாங்கம் அமைந்துவிட்டால் தங்களால் கொள்ளைத் தொழிலைத் தொடர முடியாது என்று பயந்தனர். இதனால் முஸ்லிம்கள் மீது குரோதம் கொண்டனர். அவர்களுக்கு எதிரிகளாக மாறினர்.

பத்ரில் ஏற்பட்ட வெற்றி முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும், வலிமைக்கும் காரணமாக அமைந்தது போன்றே, பல வகைகளில் முஸ்லிம்களை மற்றவர்கள் பகைத்துக் கொள்வதற்கும் காரணமாக அமைந்தது. ஆகவே, ஒவ்வொரு கூட்டத்தினரும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான வழிகளைக் கையாள ஆரம்பித்தனர்.

மதீனாவிலும், மதீனாவைச் சுற்றிலும் மக்களில் சிலர் இஸ்லாமை வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக இரகசிய ஆலோசனைகளையும், சதித்திட்டங்களையும் தீட்டினர். ஆனால், யூதர்களில் ஒரு கூட்டமோ முஸ்லிம்களுக்கு எதிராக தங்கள் குரோதத்தையும், பகைமையையும் வெளிப்படையாகவே காட்டினர். மற்றொரு பக்கம் மக்காவாசிகளோ, தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு பழிவாங்கியே தீருவோம் முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அழித்தே தீருவோம் என்று எச்சரித்தது மட்டுமல்லாமல், அதற்கான முழு தயாரிப்பையும் பகிரங்கமாகச் செய்தனர்.

அவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்தது.

ஒளி பொருந்திய ஒரு நாள் வந்தே தீரும்!

அதன் பிறகு ஒப்பாரியிடும் பெண்களின்

அழுகையை நான் நீண்ட நாட்கள் கேட்பேன்!

ஆம்! அப்படித்தான். மக்காவாசிகள் மதீனாவின் மீது மிக மூர்க்கமான போர் ஒன்றை தொடுத்தனர். இதை வரலாற்றில் ''உஹுத் போர்'' என்று அழைக்கப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால் அவர்கள்மீது மக்களுக்கு இருந்த பயம் குறைந்தது.

இந்த ஆபத்துகளைப் முறியடிப்பதில் முஸ்லிம்கள் மிக முக்கிய பங்காற்றினார்கள். நபி (ஸல்) இந்த ஆபத்துகளைப் பற்றி எந்தளவு விழிப்புணர்வுடன் இருந்தார்கள் என்பதையும், அவற்றை முறியடிப்பதற்கு எந்தளவு முறையான திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதையும், அது விஷயத்தில் அவர்களின் வழி நடத்தும் மகத்தான திறமை எவ்வாறு இருந்தது என்பதையும் அவர்கள் மேற்கொண்ட செயல்திட்டங்கள் மூலமாக நன்றாகத் தெரிய வருகிறது.

பின்வரும் வரிகளில் அந்த செயல்திட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

ஸுலைம் குலத்தவருடன் போர்

பத்ர் போருக்குப்பின் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்த முதல் செய்தி ''ஸுலைம் மற்றும் கத்ஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்க தங்களது படைகளைத் திரட்டுகின்றனர்'' என்பதாகும். உடனே நபி (ஸல்) 200 வீரர்களுடன் அவர்களது பகுதிக்குள் திடீரெனப் புகுந்து 'குதுர்' என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், ஸுலைம் கிளையினர் தப்பிவிட்டனர். 500 ஒட்டகங்கள் அவர்கள் ஊரில் இருந்தன. அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதிலிருந்து ஐந்தில் ஒன்றை ஒதுக்கிவிட்டு எஞ்சிய 400 ஒட்டகங்களை, ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு ஒட்டகங்கள் வீதம் நபி (ஸல்) வழங்கினார்கள். மேலும் 'யஸார்' என்ற ஓர் அடிமையும் கிடைத்தார். அவரை உரிமையிட்டார்கள். அவர்களது ஊரில் மூன்று நாட்கள் தங்கிய பின்னர் நபி (ஸல்) மதீனா திரும்பினார்கள்.

பத்ரிலிருந்து திரும்பி, ஏழு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் இந்தப் போர் ஏற்பட்டது. ஆனால், சிலர் முஹர்ரம் மாதத்தின் நடுவில் ஏற்பட்டதென்று கூறுகின்றனர். இப்போருக்குச் செல்லும்போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஸிபாஉ இப்னு உர்ஃபுதா என்ற தோழரை தனது பிரதிநிதியாக ஆக்கினார்கள். சிலர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமைப் பிரதிநிதியாக ஆக்கினார்கள் என்றும் கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நபியவர்களைக் கொல்ல திட்டம்

பத்ர் போரில் தோற்றதால் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மக்காவாசிகள் கோபத்தால் கொதித்தனர். தங்களின் வீழ்ச்சிக்கும் இழிவுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் அந்த முஹம்மதைக் கொன்று விடுவதுதான் அனைத்திற்கும் சரியான தீர்வு என முடிவு செய்தனர். இதற்காக மக்கா நகர வீரர்களில் இருவர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர்.

உமைர் இப்னு வஹப் அல் ஜும மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா ஆகிய இருவரும் கஅபாவிற்கருகில் அமர்ந்தனர். இது பத்ர் போர் முடிந்து, சில நாட்கள் கழித்து நடந்ததாகும். இந்த உமைர், குறைஷி ஷைத்தான்களில் மிகப் பெரிய ஷைத்தானாவான். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் மக்காவில் அதிகம் நோவினை செய்தவர்களில் இவனும் குறிப்பிடத்தக்கவன். இவனது மகன் வஹப் இப்னு உமைரை முஸ்லிம்கள் பத்ர் போரில் சிறைப்பிடித்தனர். பத்ரில் கொலை செய்யப்பட்டவர்களையும், முஸ்லிம்களால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் ஸஃப்வானுக்கு உமைர் நினைவூட்டினான். அதற்கு ஸஃப்வான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்குப் பின் வாழ்ந்து ஒரு பலனும் இல்லை'' என்றான்.

அதற்கு, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உண்மையே கூறினாய். அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு கடன் சுமையும் எனக்குப் பின் சீரழிந்து விடுவார்கள் என்று நான் பயப்படும் குடும்பமும் எனக்கு இல்லையெனில் நேரில் சென்று முஹம்மதை நானே கொல்வேன். எனது மகன் அவர்களிடம் கைதியாக இருப்பதால் நான் அவர்களிடம் செல்வதற்கு அது ஒரு காரணமாகவும் இருக்கிறது'' என்றான் உமைர்.

ஸஃப்வான் இதை நல்ல சந்தர்ப்பமாகக் கருதி, ''உனது கடனை நான் நிறைவேற்றுகிறேன். உனது குடும்பத்தை எனது குடும்பத்துடன் நான் சேர்த்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் காலமெல்லாம் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். என்னிடம் இருக்கும் எதையும் அவர்களுக்கு நான் கொடுக்காமல் இருக்க மாட்டேன்'' என நயமாகப் பேசி, உமைரை இத்தீய செயலுக்குத் தூண்டினான்.

சரி! ''நமது பேச்சை மறைத்துவிடு. யாரிடமும் சொல்லாதே'' என்று உமைர் கூற, ''அப்படியே செய்கிறேன்'' என்றான் ஸஃப்வான்.

உமைர் தனது வாளைக் கூர்மைப்படுத்தி அதில் நன்கு விஷம் ஏற்றினான். அந்த வாளுடன் மதீனா புறப்பட்டான். கொலை வெறியுடன் அதிவிரைவில் மதீனா சென்றடைந்தான். நபி (ஸல்) அவர்களின் பள்ளிக்கு அருகில் தனது ஒட்டகத்தைப் படுக்க வைத்தான். அப்போது உமர் (ரழி) பள்ளிக்குள் முஸ்லிம்களுடன் பத்ர் போரில் அல்லாஹ் தங்களுக்கு செய்த உதவியைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். சரியாக உமர் (ரழி) அவர்களின் பார்வை உமைர் மீது பட்டது. ''இதோ நாய்! அல்லாஹ்வின் எதிரி! தனது வாளைத் தொங்கவிட்டவனாக வந்துள்ளான். இவன் ஒரு கெட்ட நோக்கத்திற்காகத்தான் வருகிறான்'' என்று சப்தமிட்டவராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று ''அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி உமைர், தனது வாளை அணிந்தவனாக இங்கு வருகிறான்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ''என்னிடம் அவரை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். உமர் (ரழி) அன்சாரிகளில் சிலரிடம் ''நீங்கள் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமருங்கள். இந்த கெட்டவனின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவனை நம்ப முடியாது'' என்று கூறியபின் உமைரின் வாளுறையை அவரது பிடரியுடன் இழுத்துப் பிடித்தவராக நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த நபி (ஸல்) ''உமரே! அவரை விட்டு விடுங்கள்'' என்று கூறி, ''உமைரே! இங்கு வாரும்'' என்றார்கள். அப்போது உமைர் ''உங்களின் காலைப் பொழுது பாக்கியமாகட்டும்'' என்று முகமன் கூறினார். அதற்கு நபி (ஸல்) ''உமைரே! உமது இந்த முகமனை விட சிறந்த முகமனாகிய சுவனவாசிகளின் 'ஸலாம்' என்ற முகமனைக் கொண்டு அல்லாஹ் எங்களை சங்கைப்படுத்தி இருக்கிறான்'' என்றார்கள்.

பின்பு ''உமைரே! நீர் எதற்காக இங்கு வந்தீர்'' என்று கேட்டார்கள். அதற்கு, ''உங்களிடம் இருக்கும் இந்த கைதிக்காக வந்திருக்கிறேன். அவருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்'' என்றார் உமைர்.

அதற்கு நபி (ஸல்) ''உமது கழுத்தில் ஏன் வாள் தொங்குகிறது'' என்று கேட்டார்கள். அவர் ''இந்த வாள் நாசமாகட்டும். இது எங்களுக்கு என்ன பலனை அளித்தது'' என்று கூறினார்.

நபி (ஸல்), ''என்னிடம் உண்மையை சொல். நீர் வந்ததன் நோக்கம் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ''நான் அந்த நோக்கத்தில்தான் வந்தேன்'' என்றார்.

அதற்கு நபி (ஸல்) ''இல்லை. நீயும் ஸஃப்வானும் கஅபாவிற்கு அருகில் அமர்ந்து பத்ரில் கொல்லப்பட்ட குறைஷிகளைப் பற்றி பேசினீர்கள். பின்பு நீ ''தன் மீது கடனும் தனது குடும்பத்தார்களின் பொறுப்பும் இல்லையெனில், தான் முஹம்மதை கொலை செய்து வருவேன் என்று கூறினீர்! நீ என்னைக் கொல்ல வேண்டுமென்பதற்காக உனது கடன் மற்றும் உனது குடும்ப பொறுப்பை ஸஃப்வான் ஏற்றுக்கொண்டான். ஆனால், இப்போது உனக்கும் உனது அந்த நோக்கத்திற்குமிடையில் அல்லாஹ் தடையாக இருக்கிறான்'' என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமைர் ''நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். வானத்தின் செய்திகளையும், உங்களுக்கு இறங்கும் இறைஅறிவிப்பையும் நீங்கள் எங்களுக்கு கூறியபோது உங்களை நாங்கள் பொய்யர் என்று கூறினோம். ஆனால் உங்களை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தபோது என்னையும் ஸஃப்வானையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்தான் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தான் என்று நான் நன்கறிகிறேன். எனக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனே இங்கு என்னை அனுப்பினான்'' என்று கூறி, இஸ்லாமின் ஏகத்துவத்தை மனமாற மொழிந்தார்கள். அதற்குப் பின், நபி (ஸல்) அவர்கள் ''உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலைச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

''பத்ரினால் ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் மறக்கும்படியான ஒரு நற்செய்தி வெகு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்'' என்று ஸஃப்வான் மக்காவாசிகளிடம் கூறுவான். மேலும் மதீனாவிலிருந்து வரும் வழிப்போக்கர்களிடமும் உமைரைப் பற்றி விசாரிப்பான். இறுதியாக ஒருவர் உமைர் முஸ்லிமாகி விட்டார் என்ற செய்தியை ஸஃப்வானுக்கு அறிவிக்க, அவன் அதிர்ச்சியால் உறைந்தான். ''அவருடன் பேச மாட்டேன், அவருக்கு ஒருபோதும் எந்த உதவியும் செய்ய மாட்டேன்'' என்று சத்தியம் செய்தான்.

உமைர் மதீனாவில் இஸ்லாமியக் கல்வியைக் கற்று, மக்கா திரும்பி அங்கு மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார். அவரது கரத்தில் பலர் இஸ்லாமைத் தழுவினர். (இப்னு ஹிஷாம்)

கைனுகா கிளையினருடன் போர்

யூதர்களுடன் நபி (ஸல்) செய்த ஒப்பந்தங்களைப் பற்றி இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம். அந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். முஸ்லிம்களில் எவரும் அந்த ஒப்பந்தத்தின் ஒரு எழுத்திற்குக் கூட மாறு செய்யாமல் நடந்தனர். ஆனால் மோசடி, ஒப்பந்தத்தை முறித்தல் மற்றும் துரோகம் செய்தல் ஆகியவற்றுக்கு வரலாற்றில் பெயர்போன யூதர்களோ தங்களின் இயல்புக்குத் தக்கவாறே நடந்தனர். குறுகிய காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சியை ஆரம்பித்ததுடன் அவர்களுக்குள் பழைய பகைமையையும் சலசலப்பையும் கிளப்பினர். மேலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்:

யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: 'ஷாஸ் இப்னு கைஸ்' என்ற வயது முதிர்ந்த யூதன் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லிம்கள் மீது கடினமான பொறாமையும் குரோதமும் கொண்டிருந்தான். அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்.. இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாமின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. ''இவ்வூரில் கைலா கூட்டத்தினர் அதாவது அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கிளையினர் ஒற்றுமையாகி விட்டனர். இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு தங்க முடியாது'' என்று கூறி தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் ''நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொள். பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு'' என்று கூறினான்.

ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இரு கூட்டத்திலிருந்தும் இருவர் மண்டியிட்டு வாய்ச் சண்டை போட, அதில் ஒருவர் நீங்கள் நாடினால் அந்தப் போரை இப்போதும் நாம் அப்படியே தொடங்கலாம் என்றார். மற்றவன் கூட்டத்தினர் ''வாருங்கள்! மதீனாவிற்கு வெளியில் ஹர்ராவில் சென்று நாம் சண்டையிடுவோம். ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியவாறு ஹர்ராவை நோக்கிக் கிளம்பினர். இரு கூட்டத்தினரும் கோபத்தால் பொங்கி எழுந்தனர். அவர்களுக்குள் கடுமையான சண்டை நடக்க நெருங்கி விட்டது.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் தங்களுடன் இருந்த முஹாஜிர் தோழர்களை அழைத்துக் கொண்டு அன்சாரிகளிடம் விரைந்தார்கள். அவர்களை நோக்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அறியாமைக் கால வாதங்களை நீங்கள் செய்து கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டினான். அதன் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினான். உங்களை விட்டு அறியாமைக்கால விஷயங்களை அகற்றி இருக்கின்றான். இறைநிராகரிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்து இருக்கின்றான். உள்ளங்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தி இருக்கின்றான். இதற்கு பின்புமா நீங்கள் சண்டை செய்து கொள்கிறீர்கள்?'' என்று அறிவுரை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் உருக்கமான உரையைக் கேட்ட அம்மக்கள் தங்களின் இச்செயலை ஷைத்தானின் ஊசலாட்டமே எனவும் தங்கள் எதிரியின் சூழ்ச்சியுமே எனவும் புரிந்து கொண்டு அழுதனர். அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினர் ஒருவர் மற்றவரைக் கட்டித் தழுவினார். பின்பு நபி (ஸல்) அவர்களுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அல்லாஹ்வின் எதிரி 'ஷாஸ் இப்னு கைஸ்'' உடைய சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு பாதுகாத்தான். (இப்னு ஹிஷாம்)
யூதர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்த குழப்பங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இது ஓர் உதாரணமாகும். இவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் தடைகளை ஏற்படுத்த பல வழிகளைக் கையாண்டனர். பல பொய் பிரச்சாரங்களைச் செய்தனர். காலையில் இஸ்லாமை ஏற்று, அன்று மாலையில் நிராகரித்து விடுவார்கள். இதனால் புதிய, பலவீனமான முஸ்லிம்களுடைய உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தினர். மேலும், தங்களுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு நெருக்கடி தந்தனர். முஸ்லிம்கள் தங்களுக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் காலையிலும் மாலையிலும் சென்று அந்த கடனைக் கேட்டுத் துன்புறுத்துவர். முஸ்லிம்களுக்கு இவர்கள் ஏதும் கொடுக்க வேண்டியிருந்தால் அதைக் கொடுக்காமல் மறுப்பார்கள். தங்களிடமுள்ள முஸ்லிம்களின் சொத்துகளை அநியாயமாகத் தின்று வந்தனர். முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுக்காமல் ''நீ உமது மூதாதையரின் மார்க்கத்தில் இருந்த போதுதான் இந்த கடன் எங்கள் மீது இருந்தது. நீ மதம் மாறியதால் இப்போது நாங்கள் அதனைக் கொடுக்க வேண்டியதில்லை'' என்று கூறுவார்கள்.

நாம் மேற்கூறிய நிகழ்வுகள் பத்ர் போருக்கு முன் நடந்தவைகள். இந்த யூதர்கள் நபி (ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்திருந்தும் அதை மதிக்காமல் நடந்தனர். இவர்கள் நேர்வழி பெறுவார்கள் என்பதற்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் இவர்களின் அக்கிரமங்களை நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சகித்து வந்தார்கள்.

கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்

பத்ர் மைதானத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மாபெரும் உதவி செய்தான். அதனால் முஸ்லிம்களைப் பற்றிய மதிப்பு, மரியாதை மற்றும் பயம், உள்ளூர்வாசிகள் - வெளியூர்வாசிகள் என அனைவரின் உள்ளத்திலும் ஏற்பட்டன. இது யூதர்களுக்கு வெறுப்பை ஊட்டியது. அவர்களது கோபத்தைக் கிளறியது. இதனால் வெளிப்படையாகவே முஸ்லிம்களை எதிர்த்தனர். அவர்களுக்குத் தீங்கு செய்தனர்.

யூதர்களில் 'கஅப் இப்னு அஷ்ரஃப்' என்பவன் முஸ்லிம்களுக்கு பெரிய எதிரியாக விளங்கினான். அவ்வாறே யூதர்களில் இருந்த மூன்று பிரிவினர்களில் கைனுகா கிளையினரே மிகக் கெட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மதீனாவினுள் வசித்தனர். சாயமிடுதல், இரும்பு பட்டறை, பாத்திரங்கள் செய்வது என்று பல தொழில்கள் இவர்கள் வசம் இருந்தன. இதுபோன்ற தொழில்களில் இவர்கள் இருந்ததால் இவர்களிடம் பெருமளவில் போர் சாதனங்கள் இருந்தன. மதீனாவிலிருந்த யூதர்களில் இவர்களே வீரமுடையவர்களாக விளங்கினர். யூதர்களில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்தவர்கள் இவர்களே.

அல்லாஹ் முஸ்லிம்களுக்கு பத்ரில் கொடுத்த வெற்றிக்குப் பிறகு இவர்களது அத்துமீறல் கடுமையானது. அராஜகம் அதிகரித்தது. இவர்கள் மதீனாவில் குழப்பங்களை ஏற்படுத்தினர். முஸ்லிம்களைப் பரிகாசம் செய்தனர். தங்களது கடைவீதிகளுக்கு வரும் முஸ்லிம்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இடையூறு அளித்தனர்.

இவர்களை ஓர் இடத்தில் ஒன்றிணைத்து நபி (ஸல்) அறிவுரை வழங்கினார்கள். நேர்வழிக்கும் நன்னெறிக்கும் அழைத்தார்கள். அத்து மீறல், பகைமை கொள்ளல், தீங்கு விளைவித்தல் ஆகியவற்றின் பின்விளைவைப் பற்றி எச்சரித்தார்கள். ஆனால், நபி (ஸல்) எச்சரித்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகாமல் அதிலேயே நிலைத்திருந்தனர்.

இதுபற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவதை கேட்போம்: நபி (ஸல்) பத்ர் போரில் குறைஷிகளைத் தோற்கடித்து மதீனா திரும்பிய பிறகு, கைனுகாவினரின் கடைவீதியில் அங்குள்ள யூதர்களை ஒன்று சேர்த்தார்கள். அவர்களிடம் ''யூதர்களே! குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படுவதற்கு முன் நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்றார்கள். அதற்கு அவர்கள், ''முஹம்மதே! போர் செய்யத் தெரியாத அனுபவமற்ற குறைஷிகளில் சிலரை போரில் கொன்று விட்டதால் நீர் மயங்கிவிட வேண்டாம்! நீர் எங்களிடம் போர் தொடுத்தால் நாங்கள் வலிமைமிக்க மனிதர்கள் என்பதையும், எங்களைப் போன்றவர்களை நீர் இதுவரை சந்தித்ததில்லை என்பதையும் அறிந்து கொள்வீர்!!'' என்று பதிலளித்தனர். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான். அதை நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: ''அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம். (பத்ர் போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் நிச்சயமாக உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களைத் தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.'' (அல்குர்ஆன் 3:12 , 13) (ஸுனன் அபூதாவூது)

கைனுகாவினரின் இந்த பதில் பகிரங்கமாகப் போருக்கு விடுத்த அழைப்பாகவே இருந்தது. இருப்பினும் நபி (ஸல்) தங்களது கோபத்தை அடக்கினார்கள். முஸ்லிம்களும் சகிப்புடன் நடந்தார்கள். இறுதி நிலை எப்படி முடிகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கைனுகாவினரின் துணிவு அதிகரித்தது. அவர்கள் பல வழிகளில் மதீனாவில் குழப்பம் விளைவித்து, தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடினர்.

இதுபற்றி இப்னு ஹிஷாம் (ரஹ்) அறிவிக்கிறார்: ஒரு அரபிப் பெண் தனக்கு சொந்தமான, ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் தோல் ஒன்றை விற்பதற்காக கைனுகாவினரின் கடைத் தெருவிற்கு வந்தார். விற்ற பிறகு அதன் கிரயத்தை எதிர்பார்த்து அங்கிருந்த பொற் கொல்லன் ஒருவரின் கடைக்கருகில் அமர்ந்தாள். அங்கிருந்த யூதர்கள் அப்பெண் தனது முகத்திலிருந்து பர்தாவை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், அதை அவள் மறுத்துவிட்டாள். அந்த பொற் கொல்லன் அப்பெண்ணின் ஆடையை அவரது முதுகுப்புறத்தில் அவருக்குத் தெரியாமல் கட்டினான்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அவர் அங்கிருந்து எழுந்தபோது அவரது ஆடை அகன்று அவரது மறைவிடம் தெரியவே குழுமியிருந்த யூதர்கள் சப்தமிட்டுச் சிரித்தனர். இதனால் அவர் வெட்கித் தலைக் குனிந்து கூச்சலிட்டார். இதை அறிந்த முஸ்லிம்களில் ஒருவர் பொற் கொல்லன் மீது பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டார். பொற் கொல்லன் யூதனாக இருந்ததால் யூதர்கள் அனைவரும் இந்த முஸ்லிமின் மீது பாய்ந்து அவரைக் கொன்று விட்டார்கள். அப்போது அந்த முஸ்லிமின் உறவினர்கள் மற்ற முஸ்லிம்களிடம் யூதர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றனர். இதிலிருந்தே முஸ்லிம்களுக்கும் கைனுகாவினருக்குமிடையில் சண்டை மூண்டது. (இப்னு ஹிஷாம்)

முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

இனியும் பொறுமைகாப்பது உசிதமல்ல என்பதால் நபி (ஸல்) அவர்கள் கைனுகாவினர் மீது போர் தொடுக்க முடிவு செய்தார்கள். மதீனாவில் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைத் தனது பிரதிநிதியாக நியமித்து விட்டு கைனுகாவினரிடம் புறப்பட்டார்கள். முஸ்லிம்களுக்குரிய கொடியை ஹம்ஜா (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள். கைனுகா கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களை பார்த்தவுடன் கோட்டைகளுக்குள் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அவர்களை நபி (ஸல்) முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை ஹிஜ்ரி 2, ஷவ்வால் 15 சனிக்கிழமை தொடங்கி 15 இரவுகள் (துல்கஅதா முதல் பிறை வரை) தொடர்ந்தது. அல்லாஹ் அந்த யூதர்களின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் அனைவரும் தங்கள் விஷயத்திலும் தங்களின் சொத்து, பெண்கள், பிள்ளைகள் விஷயத்திலும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இணங்குவதாய் கூறி, கோட்டைகளை விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அம்மக்களின் கரங்களைக் கட்ட உத்தரவிட்டார்கள்.

இந்நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை தனது நயவஞ்சகத் தன்மைக்கேற்ப செயல்பட்டான். நபி (ஸல்) அவர்களிடம் யூதர்களை மன்னிக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். ''முஹம்மதே! என்னுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினான். (பனூ கைனுகா, கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாக இருந்தார்கள்.) இப்னு உபை தனது இக்கூற்றை பலமுறை திரும்பக் கூறியும் நபி (ஸல்) அதைப் புறக்கணித்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பைக்குள் கையை நுழைத்துக் கொண்டு, அவர்களை வற்புறுத்தினான். நபி (ஸல்) அவர்கள் அவனிடம் ''என்னை விட்டுவிடு'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தில் ஏற்பட்ட கோபத்தின் மாறுதலை நபித்தோழர்கள் உணர்ந்தார்கள். மீண்டும் ''உனக்கென்ன நேர்ந்தது! என்னை விட்டுவிடு'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ஆனால், அந்நயவஞ்சகன் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தவனாக ''இவர்களில் கவச ஆடை அணியாத நானூறு நபர்கள், கவச ஆடை அணிந்த முந்நூறு நபர்கள் இவர்களெல்லாம் என்னைப் பாதுகாத்தவர்கள். இந்த அனைவரையும் ஒரே பொழுதில் நீர் வெட்டி சாய்த்து விடுவீரோ! எனது நண்பர்கள் விஷயத்தில் நீர் அழகிய முறையில் நடந்து கொள்ளாதவரை நான் உம்மை விடமாட்டேன். பின்னால் பிரச்சனைகள் ஏற்படுவது பற்றி இப்போதே நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினான்.

இப்னு உபை தன்னை முஸ்லிம் என்று கூறி ஒரு மாதம்தான் ஆகியிருந்தும் அவனிடம் நபி (ஸல்) மிக அழகிய முறையில் நடந்து, அவன் கேட்டக் கோரிக்கைக்கிணங்க யூதர்கள் அனைவரையும் விடுதலை செய்து மதீனாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அனைத்து யூதர்களும் ஷாமுக்குச் சென்றனர். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவர்களில் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்க்கும் பொறுப்பை முஹம்மது இப்னு மஸ்லாமாவிடம் வழங்கினார்கள். அவர்களுடைய பொருட்களில் இருந்து மூன்று வில்களையும், இரண்டு கவச ஆடைகளையும், மூன்று வாட்களையும், மூன்று ஈட்டிகளையும் தனக்கென எடுத்த பிறகு, ஐந்தில் ஒன்றை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மற்ற அனைத்தையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

'ஸவீக்' போர்

இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, பத்ர் போர் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். பத்ர் போர் முடிந்த பிறகு அதில் தனது இனத்தவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் முஸ்லிம்களை பழிவாங்கவும் ''முஹம்மதிடம் போர் செய்யும் வரை நான் என் மனைவியுடன் சேரமாட்டேன்'' என்று அபூ ஸுஃப்யான் நேர்ச்சை செய்தார். ஆகவே, முஸ்லிம்களைத் தாக்க அவர் திட்டம் ஒன்று தீட்டினார். அதாவது, அதில் செலவும் சிரமமும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களுக்குப் பாதிப்பு அதிகமாக ஏற்பட வேண்டும். இதனால் தனது சமுதாயத்தின் இழந்த மதிப்பை மீட்க முடியும், அதன் ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.

தனது இந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக இருநூறு வீரர்களுடன் புறப்பட்டு மதீனாவிலிருந்து 12 மைல்கள் தொலைவில் இருக்கும் 'சைப்' என்ற மலைக்கருகிலுள்ள கணவாயில் வந்து இறங்கினார். எனினும், மதீனாவின் மீது பகலில் பகிரங்கமாக போர் தொடுக்க அவருக்குத் துணிவு வரவில்லை. கொள்ளையர்களைப் போன்று மதீனாவின் மீது இரவில் தாக்குதல் நடத்த திட்டம் ஒன்று தீட்டினார். இரவானவுடன் மதீனாவுக்குள் புகுந்து ஹை இப்னு அக்தபை சந்திக்க வந்தார். ஹை இப்னு அக்தப் பயத்தால் கதவைத் திறக்கவில்லை. எனவே, அங்கிருந்து திரும்பி நழீர் இன யூதர்களின் தலைவன் ஸல்லாம் இப்னு மிஷ்கமிடம் வந்தார். அவனிடம் நழீர் இன யூதர்களின் செல்வங்கள் இருந்தன. அவனிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். அவன் அபூ ஸுஃப்யானை வரவேற்று நன்கு விருந்தோம்பல் செய்து மது புகட்டினான். மேலும், மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் செய்திகளையும் இரகசியமாகக் கூறினான். இரவின் இறுதியில் அங்கிருந்து வெளியேறிய அபூ ஸுஃப்யான் தனது படையின் ஒரு பிரிவை மதீனாவில் 'அல் உரைழ்' என்ற பகுதியில் கொள்ளையடிக்க அனுப்பினார். அந்தப் படையினர் அங்குள்ள பேரீத்தம் மரங்களை வெட்டி வீழ்த்தி எரித்தனர். அன்சாரிகளில் ஒருவரையும், அவரது ஒப்பந்தக்காரர் ஒருவரையும் கொன்றனர். அவ்விருவரும் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். இதற்குப் பின் அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மக்கா நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கவே, மதீனாவில் அபூலுபாபா இப்னு அப்துல் முன்திரைப் பிரதிநிதியாக நியமித்து, தங்களது சில தோழர்களுடன் அபூ ஸுஃப்யானையும் அவரது படையையும் விரட்டிப் பிடிப்பதற்குப் புறப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அதிவிரைவில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அவ்வாறு செல்லும்போது தங்களது பயணத்தை விரைவாக தொடரத் தடையாக இருந்த சத்து மாவு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வழியில் விட்டுவிட்டனர். நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் 'கர்கரத்துல் குதுர்' என்ற இடம் வரை சென்றும் அவர்களைப் பிடிக்க முடியாததால் மதீனா திரும்பினார்கள். வழியில் எதிரிகள் விட்டுச் சென்ற உணவுப் பொருள் மற்றும் சத்து மாவை தங்களுடன் எடுத்துக் கொண்டனர். அதில் சத்து மாவு அதிகம் இருந்ததால் அதை குறிக்கும் 'ஸவீக்' என்ற சொல்லை வைத்தே இந்த தாக்குதலுக்கு 'ஸவீக்' என்ற பெயர் வந்தது. (ஜாதுல் மஆது)

தீ அம்ர் போர்

இது ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது. உஹுத் போருக்கு முன் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களில் இதுவே பெரியதாகும்.

இப்போருக்கான காரணம் என்னவெனில், ஸஅலபா, முஹாப் ஆகிய கிளையினர் மதீனாவின் சுற்றுப்புறங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் போடுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபி (ஸல்) முஸ்லிம்களைத் தயார்படுத்தி 450 வீரர்களுடன் புறப்பட்டார்கள். புறப்படும் முன் மதீனாவில் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

வழியில் ஸஅலபா கிளையைச் சேர்ந்த 'ஜுபார்' என்பவர் முஸ்லிம்கள் வசம் சிக்கினார். அவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வர, நபி (ஸல்) அவருக்கு இஸ்லாமை அறிமுகப் படுத்தினார்கள். அவரும் இஸ்லாமைத் தழுவினார். அவர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காக நபி (ஸல்) தனது தோழர் பிலாலுடன் அவரை இணைத்து விட்டார்கள். அவர் எதிரிகளின் பகுதியைக் காண்பித்துக் கொடுக்க வழிகாட்டியாக முஸ்லிம்களுடன் வந்தார்.

மதீனாவின் படை வருவதைக் கேள்விப்பட்ட எதிரிகள் மலைகளின் உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள். அதுதான் 'தீ அம்ர்' என்று சொல்லப்படும் தண்ணீர் நிறைந்த இடம். அவ்விடத்தில் ஏறக்குறைய ஸஃபர் மாதம் முழுமையாகத் தங்கியிருந்தார்கள். கிராம அரபிகளுக்கு முஸ்லிம்களின் ஆற்றலை உணரச் செய்து, அவர்களது உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய அச்சமேற்படச் செய்தார்கள். பின்பு அங்கிருந்து நபி (ஸல்) மதீனாவிற்குக் கிளம்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

கயவன் கஅபை கொல்லுதல்

'கஅப் இப்னு அஷ்ரஃப்'- இவன் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் கடும் குரோதம் கொண்டவன். நபியவர்களுக்கு எப்போதும் நோவினை தருபவன். இவன் முஸ்லிம்களுடன் போர் தொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி வந்தான். இவன் யூதர்களில் நப்ஹான் பிரிவைச் சேர்ந்த 'தை' இனத்தைச் சேர்ந்தவன். இவனது தாய் யூதர்களில் நழீர் இனத்தைச் சேர்ந்தவள். இவன் பெரிய செல்வந்தனாக இருந்ததுடன் நல்ல அழகுடையவனாகவும் இருந்தான். இவன் அரபியில் நல்ல கவிபாடும் திறமையுடையவன். இவனது கோட்டை மதீனாவின் தென் கிழக்கில் நளீர் இன யூதர்களின் வீடுகளுக்குப் பின்னால் இருந்தது.

''முஸ்லிம்கள் பத்ரில் வெற்றி பெற்றனர், அங்குக் குறைஷிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டனர்'' என்ற செய்தி இவனுக்குக் கிடைத்தபோது ''என்ன இது உண்மையான செய்தியா? இவர்கள் அரபியர்களில் மிகச் சிறப்புமிக்கவர்கள் ஆயிற்றே, மக்களின் அரசர்களாயிற்றே, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது இவர்களைக் கொன்றிருந்தால் பூமியின் மேல் வசிப்பதைவிட பூமிக்குக் கீழ் சென்று விடுவதே மேல்'' என்று புலம்பினான்.

முஸ்லிம்கள் போரில் வெற்றி பெற்று விட்டனர் என்று அல்லாஹ்வின் எதிரியாகிய இவன் அறிந்தவுடன், நபியவர்களையும் முஸ்லிம்களையும் இகழவும், முஸ்லிம்களின் எதிரிகளைப் புகழவும் செய்தான். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டினான். இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மதீனாவிலிருந்து மக்கா சென்றான். அங்கு முத்தலிப் இப்னு அபூ வதாஆ என்பவனிடம் தங்கினான். பிறகு குறைஷிகளில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக இரங்கல் பாட்டுப் பாடி, அழுது பிரலாபித்து இணைவைப்பவர்களின் உணர்வுகளைத் தூண்டினான். நபியவர்களின் மீது குரோதத்தை மூட்டினான். மேலும், நபியவர்களிடம் போர் புரிய அவர்களைத் தூண்டினான். ஒருநாள் அபூ ஸுஃப்யானும் மற்றவர்களும் அவனிடம் ''உமக்கு எங்களது மார்க்கம் விருப்பமானதா? அல்லது முஹம்மது மற்றும் அவன் தோழர்களின் மார்க்கம் விருப்பமானதா? எங்கள் இரு சாராரில் யார் நேர்வழி பெற்றவர்கள்?'' என்று கேட்டனர். ''அதற்கவன் நீங்கள்தான் நேர்வழி பெற்றவர்கள். நீங்களே சிறந்தவர்கள்'' என்று பதிலளித்தான். இது குறித்து பின்வரும் இறைவசனம் இறங்கியது:

(நபியே!) வேதத்தில் சில பகுதி கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள், சிலைகளையும் ஷைத்தான்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து ''இவர்கள் தாம் இறைநம்பிக்கையாளர்களை விட மிக நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 4:51)

இதே நிலையில் மதீனா திரும்பினான் கஅப். அங்கு நபித்தோழர்களின் பெண்களை தனது கவியில் இகழ்ந்தும் பழித்தும் பாடி அவர்களுக்குப் பெரும் நோவினை செய்தான்.

இவ்வாறு இவனது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவே, ''கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை முடிப்பது யார்? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். இப்பொறுப்பை நிறைவேற்ற முஹம்மது இப்னு மஸ்லமா, அப்பாத் இப்னு பிஷ்ர், அபூ நாம்லா என்ற ஸில்கான் இப்னு ஸலாமா (இவர் கஅபின் பால்குடி சகோதரர் ஆவார்), ஹாரிஸ் இப்னு அவ்ஸ், அபூ அப்ஸ் இப்னு ஜப்ர் (ரழி) ஆகியோர் தயாரானார்கள். இந்தக் குழுவிற்குத் தலைவராக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) நியமிக்கப்பட்டார்.

நபிமொழி நூற்களில் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை நாம் இங்கு பார்ப்போம்:

நபி (ஸல்) ''கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை யார் முடிப்பது? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்'' என்றார்கள். முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு விருப்பமாக இருப்பின் நான் அவனைக் கொலை செய்கிறேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ''ஆம்!'' என்றார்கள். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் ''தங்களைப் பற்றி சில (மட்டமான) வார்த்தைகளை அவனிடம் கூற, நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும்'' என்றார். நபி (ஸல்) சரி என்று கூறினார்கள்.

இதற்குப் பின் முஹம்மது இப்னு மஸ்லமா கஅபிடம் வந்தார். இதோ... அவர்களின் உரையாடல்:

முஹம்மது இப்னு மஸ்லமா: ''இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் தர்மத்தைக் கேட்டு சிரமத்தில் ஆழ்த்துகிறார்.''

கஅப்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் விஷயத்தில் நீங்கள் அதிவிரைவில் சடைவடைந்து விடுவீர்கள்.''

முஹம்மது இப்னு மஸ்லமா: ''நாங்கள் இப்போது அவரைப் பின்பற்றியிருக்கிறோம். அவரது முடிவு என்னதான் ஆகிறது என்று பார்க்கும்வரை அவரை விட்டு விலகுவதை நாங்கள் விரும்பவில்லை. அது சரி! நீ எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மரக்கால் தானியங்களை கடனாகக் கொடுத்துதவு.''

கஅப்: ''சரி! தருகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக என்னிடம் அடைமானம் ஏதும் வையுங்கள்.''

முஹம்மது இப்னு மஸ்லமா: ''நீ எதைக் கேட்கிறாய்?''

கஅப்: ''உங்கள் பெண்களில் சிலரை என்னிடம் அடைமானம் வையுங்கள்.''

முஹம்மது இப்னு மஸ்லமா: ''நீ அரபியர்களில் மிக அழகானவனாயிற்றே. உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை அடைமானம் வைக்க முடியும்?''

கஅப்: ''சரி! உங்களது பிள்ளைகளை அடைமானம் வையுங்கள்.''

முஹம்மது இப்னு மஸ்லமா: ''எப்படி எங்கள் பிள்ளைகளை அடைமானம் வைப்பது? பிற்காலத்தில் அவர்களை யாராவது ஏசும்போது, இதோ இவன் ஒரு மரக்கால் இரண்டு மரக்காலுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன் என்று இழிவாகப் பேசுவார்களே! எனவே, நாங்கள் உம்மிடம் எங்களது ஆயுதங்களை அடைமானமாக வைக்கிறோம்.''

கஅப்: ''சரி''

முஹம்மது இப்னு மஸ்லமா: ''நாளை வருகிறேன்.''

கஅப் அங்கிருந்து புறப்பட்ட பின், நபித்தோழர் அபூ நாம்லாவும் கஅபைச் சந்தித்தார். அவரும் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) செய்ததைப் போன்றே செய்தார். கஅபிடம் பல கவிகளைப் பற்றி பேசிவிட்டு ''கஅபே! நான் ஒரு தேவைக்காக உன்னிடம் வந்திருக்கிறேன். அதை நீ பிறரிடம் கூறக்கூடாது'' என்றார். கஅப், ''அவ்வாறே நான் செய்கிறேன்'' என்றான். அதற்கு அபூ நாம்லா, ''கஅபே! இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் வந்தது எங்களுக்கு ஒரு சோதனையாக ஆகிவிட்டது. அரபியர்கள் எங்களைப் பகைத்துக் கொண்டனர், ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர் எங்களின் வியாபார வழிகளை அடைத்துவிட்டனர். இதனால் எங்களது பிள்ளை குட்டிகள் வறுமையில் வாடுகின்றனர் நாங்களும் பெரிய சிரமத்திற்குள்ளாகி விட்டோம்'' என்று கூறி, மற்ற விஷயங்களை முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) பேசியவாறே பேசினார். பேச்சுக்கிடையில் என்னுடன் எனக்கு வேண்டிய சில நண்பர்களும் இருக்கின்றனர். நான் அவர்களை நாளை உன்னிடம் அழைத்து வர நாடுகிறேன். அவர்களிடம் நீ வியாபாரம் செய்யலாம். அவர்களுக்கும் உன்னால் முடிந்த நன்மைகளையும் செய்'' என்று பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆக, முஹம்மது இப்னு மஸ்லமாவும் அபூ நாம்ளாவும் கஅபுடன் எதை நோக்கமாக வைத்து பேசினார்களோ அதில் வெற்றி கண்டனர். இவ்வாறு நாளுக்கு நாள் சந்திக்க இவர்களின் பழக்கம் நல்ல பலமடைந்தது. எனவே, இந்த இருவரும் தங்களுடன் ஆயுதங்களை எடுத்து வருவதை கஅப் தடை செய்யவிலை.

ஹிஜ்ரி 3, ரபீஉல் அவ்வல், பிறை 14 சந்திர இரவில் இந்த சிறிய குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அக்குழுவுடன் 'பகீஉல் கர்கத்' வரை வந்து ''அல்லாஹ்வின் பெயர் கூறி செல்லுங்கள்! அல்லாஹ்வே! இவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!'' என்று கூறி வழியனுப்பி வைத்தார்கள். பிறகு தங்களின் இல்லம் திரும்பி தொழுகையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதிலும் ஈடுபட்டார்கள்.

இவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபின் கோட்டைக்கு வந்தனர். அபூ நாம்லா (ரழி) அவனைக் கூவி அழைக்கவே அவன் அவர்களிடம் செல்ல எழுந்தான். அவனது மனைவி அவனிடம் ''இந்நேரத்தில் நீ எங்கு செல்கிறாய்? இந்த சப்தத்தில் இரத்தம் சொட்டுவதை நான் கேட்கிறேன்'' என்று கூறினாள். (அதாவது அவளின் உள் மனது நடக்கப்போகும் அபாயத்தை உணர்ந்துவிட்டது போலும்.)

அதற்கு கஅப், ''வந்திருப்பவரோ எனது சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், எனது பால்குடி சகோதரர் அபூ நாம்லாவும்தான். வேறு யாருமில்லை. சங்கைமிக்கவர் ஈட்டி எறிய அழைக்கப்பட்டாலும் கூட அதையும் ஏற்று அங்கு செல்வார்'' என்ற பழமொழியைக் கூறி, மனைவியைச் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்களை சந்திக்க இறங்கினான். அவன் நன்கு நறுமணம் பூசி இருந்தான். அவனது தலை நறுமணத்தால் கமழ்ந்து கொண்டு இருந்தது.

இது இப்படியிருக்க, அபூ நாம்லா தனது தோழர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி வைத்திருந்தார். அதாவது, ''கஅப் நமக்கு அருகில் வந்தால் அவனது தலை முடியை பிடித்து நான் நுகருவேன். அவனது தலையை நன்கு நான் பிடித்துக் கொண்டதை நீங்கள் பார்த்தவுடன் அவன் மீது பாய்ந்து அவனை வெட்டுங்கள்.'' இது அவர்களின் திட்டமாக இருந்தது.

கஅப் கீழே இறங்கி அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அபூ நாம்லா ''கஅபே! 'ஷிஅபுல் அஜுஸ்' வரைச் சென்று, மீதி இரவு அங்கு பேசிக்கொண்டு இருப்போமே'' என்றார். ''நீங்கள் விரும்பினால் அவ்வாறே செய்யலாம்'' என்று அவனும் கூறினான். அனைவரும் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்றனர். வழியில் அபூ நாம்லா, ''இன்றைய நறுமணத்தைப் போல் நான் எங்கும் நுகர்ந்ததே இல்லை'' என்றார். கஅப் இந்த புகழ்ச்சியில் மயங்கியவனாக ''என்னிடத்தில் அரபுப் பெண்களில் மிக நறுமணமுள்ள பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளுக்காகத்தான் இந்த நறுமணம்'' என்றான். அபூ நாம்லா, ''நான் உனது தலையை நுகர்ந்துகொள்ள அனுமதி தருகிறாயா?'' என்றார். அவன் ''அதிலென்ன! நுகரலாமே!'' என்றவுடன் தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து தானும் நுகர்ந்து கொண்டு தனது தோழர்களையும் நுகர வைத்தார்.

பின்பு சிறிது நேரம் சென்றவுடன் ''நான் மீண்டும் நுகரலாமா?'' என்றார். அவன் ''சரி!'' என்றவுடன் முன்பு போலவே இப்போதும் செய்தார்.

பின்பு சிறிது நேரம் சென்றவுடன் ''மீண்டும் நுகரட்டுமா?'' என்றார். அதற்கு அவன் சரி! என்றவுடன், தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து இறுக்க பிடித்துக் கொண்டு ''இதோ... அல்லாஹ்வின் எதிரி மீது பாயுங்கள்'' என்றார். அங்கிருந்த நபித்தோழர்கள் அவன் மீது வாட்களை வீசினர். ஆனால் அவன் சாகவில்லை. இதைப் பார்த்த முஹம்மது இப்னு மஸ்லமா தனது கூர்மையான கத்தியை எடுத்து அவனது தொப்புளுக்குக் கீழ் சொருகி, அவனது மர்மஸ்தானம் வரை கிழித்தார். அல்லாஹ்வின் எதிரி பெரும் சப்தமிட்டவனாக செத்து மடிந்தான். அவர்கள் அவனது தலையைக் கொய்து எடுத்துக் கொண்டனர். அவன் கத்திய கதறலில் அங்குள்ள கோட்டைகள் அனைத்திலும் விளக்குகள் எரிக்கப்பட்டன.

இக்குழுவினர் திரும்பினர். தோழர்களில் ஒருவரின் வாளால் ஹாரிஸ் இப்னு அவ்ஸ் உடைய காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டிருந்ததால் அவர் சற்று பின்தங்கி விட்டார். இக்குழுவினர் 'ஹர்ரத்துல் உரைஸ்' என்ற இடம் வந்த போது தங்களுடன் ஹாரிஸ் வராததைப் பார்த்தவுடன் அங்கு சிறிது நேரம் எதிர்பார்த்திருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைத் தேடி, ஹாரிஸும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு 'பகீஉல் கர்கத்' வந்தடைந்து அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினர். அவர்களின் சப்தத்தைக் கேட்ட நபி (ஸல்), தோழர்கள் அவனைக் கொலை செய்து விட்டார்கள் என்பதை அறிந்து அவர்களும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார்கள். பின்பு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தவுடன் ''இம்முகங்கள் வெற்றியடைந்தன'' என்று கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! தங்களது முகமும் வெற்றியடைந்தது'' என்று கூறி, அந்த ஷைத்தானின் தலையை நபி (ஸல்) அவர்களுக்கு முன் போட்டார்கள். அல்லாஹ்வின் எதிரி கஅபின் கதை முடிக்கப்பட்டதை நினைத்து நபி (ஸல்) அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள். ஹாரிஸின் கால் காயத்தைப் பற்றி அறியவே அதில் தங்களது உமிழ் நீரைத் தடவினார்கள். அவர் முழுமையாக சுகமடைந்தார். அதற்குப் பிறகு அவருக்கு வலி என்பதே இல்லை. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

தங்களின் தலைவன் கொல்லப்பட்டதை அறிந்த யூதர்களின் உள்ளங்களில் பயம் குடியேறியது. சுமூகமான நடவடிக்கை பலன் தராதபோது பலத்தைப் பயன்படுத்துவதற்கும் நபி (ஸல்) தயங்க மாட்டார்கள் என்று அறிந்தனர். எனவே, தங்களது தலைவர் கொல்லப்பட்டதற்காக கூச்சல், குழப்பம் ஏதுமின்றி அமைதியைக் கடைப்பிடித்தனர். முஸ்லிம்களுக்கு பணிந்து அவர்களுடன் செய்த ஒப்பந்தங்களை நிறைவேற்றி வாழ்ந்தனர். ஆக, சீறிக்கொண்டிருந்த விஷப் பாம்புகள் பொந்துகளுக்குள் விரைந்து சென்று பதுங்கிக் கொண்டன.

இவ்வாறு சில காலம் உள்ளூர் குழப்பங்களை விட்டு நிம்மதி பெற்றதை அடுத்து மதீனாவுக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள நபி (ஸல்) தயாரானார்கள்.

கைனுகா இன யூதர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், ஸவீக், தீஅம்ர் தாக்குதல்கள் மற்றும் கஅப் இப்னு அஷ்ரஃபின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகிவற்றின் மூலம் முஸ்லிம்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவ்வப்போது ஏற்பட்டு வந்த உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் விடுதலை அடைந்தனர்.

'பஹ்ரான்' போர்

இந்நிகழ்ச்சி ஒரு போர் ஒத்திகையாக இருந்தது. அதாவது, குறைஷிகளை எச்சரிப்பதற்காக ஹிஜ்ரி 3, ரபீவுல் ஆகிர் மாதம் முந்நூறு வீரர்களுடன் மக்காவிற்கு அருகில் உள்ள 'ஃபுர்வு' என்ற இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் 'பஹ்ரான்' என்ற இடத்திற்கு வந்து ''ரபீவுல் ஆகிர், ஜுமாதா அல்ஊலா'' ஆகிய இருமாதங்கள் நபி (ஸல்) தங்கினார்கள். ஆனால், அங்கு சண்டை ஏதும் நிகழவில்லை. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

ஜைதுப்னு ஹாஸாம் படைப் பிரிவு

பின்னால் வரும் உஹுத் போருக்குமுன் முஸ்லிம்கள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் இதுவே மிக வெற்றி பெற்றதாக அமைந்தது. இது ஹிஜ்ரி 3 ஜுமாதல் ஆகிராவில் நடைபெற்றது.

இதன் விவரமாவது: குறைஷிகள் பத்ர் போரினால் அளவிலா கவலையிலும் துக்கத்திலும் இருந்தனர். இந்நிலைமையில் அவர்கள் ஷாமுக்குச் செல்லும் வியாபாரப் பயணத்தின் கோடை காலம் நெருங்கியது. இப்பயணத்தை எப்படி பாதுகாப்புடன் மேற்கொள்வது என்ற மற்றொரு கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.

குறைஷிகள் இந்த ஆண்டு ஷாமுக்குச் செல்லும் வியாபாரக் குழுவின் தலைமைத்துவத்திற்கு ஸஃப்வான் இப்னு உமையாவைத் தேர்ந்தெடுத்தனர். முஹம்மதும், அவரது தோழர்களும் நமது வியாபார மார்க்கங்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி விட்டனர். அவருடைய தோழர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரது தோழர்கள் எப்போதும் கடற்கரைப் பகுதியை கண்காணித்து வருகிறார்கள். கடற்கரைப் பகுதியில் உள்ளவர்கள் முஹம்மதுடன் உடன்படிக்கை செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் அவருடைய மார்க்கத்தையும் ஏற்று இருக்கின்றனர். எனவே, நாம் எந்த வழியில் செல்வதென்றே புரியவில்லை. வியாபாரத்திற்குச் செல்லாமல் மக்காவிலேயே தங்கிக் கொண்டால் நமது முதலீடும் அழிந்து விடும். நமது வியாபாரம் கோடை காலத்தில் ஷாம் தேசத்தையும் குளிர் காலத்தில் ஹபஷாவையுமே சார்ந்துள்ளது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தபோது அஸ்வத் இப்னு அப்துல் முத்தலிப், ''இம்முறை கடற்கரை வழியாக செல்லும் பாதையைத் தவிர்த்து விட்டு இராக் வழியை எடுத்துக்கொள்!'' என்று ஸஃப்வானிடம் கூறினார். இப்பாதை மிக நீளமானது மதீனாவின் கிழக்குப் பக்கமாக வெகு தொலைவில் உள்ளது. இப்பாதை நஜ்து மாநிலத்தைக் கடந்து ஷாம் செல்கிறது. குறைஷிகள் இந்தப் பாதையை முற்றிலும் அறியாதவர்களாக இருந்தனர். எனவே, பக்ருப்னு வாயில் கிளையைச் சார்ந்த 'ஃபுராத் இப்னு ஹையா'னை வழிகாட்டியாகவும் பயண அமைப்பாளராகவும் ஆக்கிக் கொள்ள ஸஃப்வானுக்கு அஸ்வத் இப்னு அப்துல் முத்தலிப் ஆலோசனைக் கூறினார்.

இவ்வாறு, ஸஃப்வான் இப்னு உமையாவுடைய தலைமையில் குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் மக்காவிலிருந்து புதிய பாதையில் புறப்பட்டது. எனினும், இக்கூட்டத்தின் செய்தியும் அதன் பயணத் திட்டமும் வெகு விரைவில் மதீனாவிற்கு எட்டியது.

அது எப்படியெனில்: ஏற்கனவே மக்காவில் இருந்த 'ஸலீத் இப்னு நுஃமான்' என்ற முஸ்லிம் நுஅய்ம் இப்னு மஸ்வூதுடன் மது அருந்தினார். (இச்சம்பவம் மது ஹராமாக்கப்படுவதற்கு முன் நடந்ததாகும்.) நுஅய்ம் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. நுஅய்முக்கு நன்கு போதை ஏறியவுடன் இந்த வியாபாரக் கூட்டத்தைப் பற்றியும் அது எவ்வழியாக செல்கிறது என்பதையும் தன்னை அறியாமல் போதையில் உளற, உடனே வலீத் சபையிலிருந்து நழுவி மதீனா விரைந்தார். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து முழு விவரத்தையும் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள். 100 பேர் கொண்ட வாகனப் படையை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையின் கீழ் குறைஷிகளைத் தாக்க அனுப்பி வைத்தார்கள். ஜைது (ரழி) தங்களது வீரர்களுடன் விரைந்து சென்று, நஜ்து மாநிலத்தில் 'கர்தா' என்ற இடத்தின் நீர் தேக்கத்திற்கு அருகில் அந்த வியாபாரக் கூட்டம் தங்கியிருந்தபோது திடீரென அதன் மீது தாக்குதல் நடத்தி வியாபாரப் பொருட்களை கைப்பற்றினார்கள். ஸஃப்வானும் அக்கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக வந்திருந்த வீரர்களும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து ஓடினர்.

முஸ்லிம்கள் இக்கூட்டத்திற்கு வழிகாட்டியாக வந்த ஃபுர்ராத் இப்னு ஹய்யானைக் கைது செய்தனர். சிலர், ''இவரையன்றி மேலும் இருவரையும் முஸ்லிம்கள் கைது செய்தனர்'' என்றும் கூறுகின்றனர். முஸ்லிம் வீரர்கள் இந்த வியாபாரக் கூட்டத்திடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வெள்ளிகளை வெற்றிப் பொருளாக எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு வந்த பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் திர்ஹம் ஆகும். நபி (ஸல்) ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அதில் கலந்துகொண்ட வீரர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்.

பத்ர் போரினால் நீங்கா துயரத்தில் சிக்கியிருக்கும் குறைஷிகளுக்கு இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எஞ்சியிருந்த நிம்மதியையும் பறித்தது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து மட்டிலா கவலைக்குள்ளாயினர். அவர்களின் உள்ளங்கள் குமுறின.

இப்போது குறைஷிகளுக்கு முன் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று, தங்களது அடாவடித்தனத்தை நிறுத்திவிட்டு முஸ்லிம்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வது. இரண்டாவது மிகப்பெரிய அளவில் போர் தொடுத்து முஸ்லிம்களை வேரறுத்து, தங்களது பழைய மதிப்பையும் மரியாதையையும் தக்கவைத்துக் கொள்வது. இந்த இரு வழிகளில் குறைஷிகள் இரண்டாவது வழியையே விரும்பினர். ஆகவே, முஸ்லிம்களிடம் பழி வாங்க வேண்டும், முழு தயாரிப்புடன் சென்று அவர்களைத் தாக்க வேண்டும் என அவர்கள் பிடிவாதம் பிடித்தனர். இந்த பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்தது. இதுவும் இதற்கு முன் கூறப்பட்ட நிகழ்ச்சிகளும் உஹுத் போர் ஏற்படுவதற்கு வலுவான காரணங்களாக அமைந்தன.

No comments:

Post a Comment